நயன்தாரா கணவரை காணவில்லை என்று ஒட்டப்பட்ட போஸ்டரால் சர்ச்சை எழுந்துள்ளது. அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் நாயகியாகி விட்டார் நயன்தாரா.
சிம்பு, பிரபுதேவா காதல் விவகாரம் அவரை அப்செட் ஆக்கியது. அடுத்து, ஆர்யாவுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். போதாக்குறைக்கு அவருடன் திருமணம் நடந்ததுபோல் ராஜா ராணி படத்துக்காக ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்கள்.
இதெல்லாம் முடிந்து இப்போது இன்னொரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். ஹிந்தியில் வித்யாபாலன் நடித்த படம் கஹானி. இப்படம் தமிழ், தெலுங்கில் அனாமிகா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இப்படத்துக்கு வித்தியாசமாக விளம்பரம் செய்வதற்காக, அனாமிகாவின் (நயன்தாரா) கணவரை காணவில்லை என்று பட நாயகனின் போஸ்டரை வரைபடம் போல் வரைந்து சென்னை முழுவதும் ஒட்டி உள்ளனர்.
இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்து மக்கள் கட்சி அமைப்பு, இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கணவரை காணவில்லை என்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் நிஜமானதல்ல. இதுபோல் ஒட்டி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கது.
அதை உடனே அகற்ற வேண்டும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பட இயக்குனர் சேகர் கம்முலா கூறும்போது, யாரையும் குழப்புவதற்காக இந்த போஸ்டர் ஒட்டப்படவில்லை. ஹிந்தியில் இப்படம் வெளியானபோதும் இப்படித்தான் விளம்பரம் செய்தோம். போஸ்டரின் முடிவில் இந்த நபரைபற்றி தகவல் தெரிந்தால் தயாரிப்பாளரை பேஸ்புக்கில் தொடர்பு கொள்ளுங்கள் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்