Saturday, May 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா பெப்சி தொழிலாளர்களுக்கு குடியிருப்பு அமைக்க நடிகர் விஜய் சேதுபதி ரூ.1 கோடி நிதி உதவி

பெப்சி தொழிலாளர்களுக்கு குடியிருப்பு அமைக்க நடிகர் விஜய் சேதுபதி ரூ.1 கோடி நிதி உதவி

3 minutes read

பெப்சி அமைப்பின் தலைவராக இயக்குனர் செல்வமணி பொறுப்பேற்றப் பிறகு பல்வேறு நலத்திட்டங்களையும் உதவிகளையும் பெற்றுத் தந்தார்.

பெப்சி தொழிலாளர்களுக்கு குடியிருப்பு அமைக்க நடிகர் விஜய் சேதுபதி ரூ.1 கோடி நிதி உதவி

தமிழ் திரைத்துறையில் பெப்சி அமைப்பு இல்லாமல் ஒரு திரைப்படம் உருவாக சின்ன செங்கல்லைக்கூட எடுத்து வைக்க முடியாது. அப்படி 24 அமைப்புகள் இணைந்த பிரமாண்டமான தொழிலாளர்கள் கூட்டமைப்பு இது. இதில் இருக்கும் தொழிலாளர்கள் அனைவருக்குமே ஒரு நாள் படப்பிடிப்பு நடந்தால் தான் வருமானமே வரும். 

எப்போதெல்லாம் ஒரு தயாரிப்பாளர் பாதிக்கப்படுகிறாரோ அப்போது இந்த அமைப்பில் உள்ள ஒரு தொழிலாளரின் குடும்பம் பாதிக்கப்படும். வாடகை வீட்டில் வாழ்ந்து கொண்டு சூப்பர் ஸ்டார்களுக்கு மேக்கப் போடும் தொழிலாளர் ஒரு நாள் வேலை இழப்பைச் சந்தித்தாலும் வாடகை கொடுக்க முடியாத சூழல் உருவாகும்.

இப்படிப்பட்ட தொழிலாளர்கள் இணைந்த பெப்சி அமைப்பின் தலைவராக இயக்குனர் செல்வமணி பொறுப்பேற்றப் பிறகு பல்வேறு நலத்திட்டங்களையும் உதவிகளையும் பெற்றுத் தந்தார். 
கருணாநிதி முதல்வராக இருந்தபோது பையனூர் பக்கத்தில் பல ஏக்கர் நிலத்தை திரைத்துறையினருக்காகக் கொடுக்க அரசாணை பிறப்பித்தார். அந்த இடத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக வீடு கட்ட பல முயற்சிகள் எடுத்தும் அது நடக்கவில்லை. இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு மீண்டும் இந்த திட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள்.

இதற்காக விஜய் சேதுபதியைச் சந்தித்துப் பேசியதும் அவர் ஒரு கோடி ரூபாய் கொடுப்பதாகச் சொல்லியிருந்தார். தற்போது அதை நிறைவேற்றியிருக்கிறார் விஜய் சேதுபதி. இதற்கான விழா சென்னையில் நடந்தது. 

அப்போது விஜய் சேதுபதி பேசியதாவது: நான் திரைத்துறைக்கு வருவதற்கு முக்கியமான காரணம் என் தந்தையாரின் 10 லட்சம் கடன் தான். சிறிய வயதில் எனக்கு திரைப்படம் பார்க்கும் பழக்கமெல்லாம் இல்லை. துபாய்க்குச் சென்று சம்பாதித்து, கடனை அடைத்து விடலாம் என நினைத்தேன். அங்கு சென்று சம்பாதித்து, வட்டியை மட்டும் தான் கட்டினேன். அசலை கட்ட முடியவில்லை.
அதன் பிறகு வீட்டு வாடகை. இருபதாம் தேதி ஆனதுடன் எனக்குள் பதற்றம் தொற்றிக்கொள்ளும். அடுத்த மாதம் எப்படி வாடகை கொடுக்கப் போகிறோம் என்ற பதற்றம் தொற்றிக்கொள்ளும். அதன்பிறகு எந்தவித அறிவிப்பும் இல்லாமல் வீட்டு உரிமையாளர்கள் திடீரென்று வீட்டு வாடகையை உயர்த்தி விடுவார்கள். என்ன கணக்கு என்று தெரியாது. விலைவாசி உயர்வை விட, வீட்டு வாடகை உயர்வு தான் அதிகம். இதுதான் பதற்றத்தை ஏற்படுத்தும்.

இதனால் எப்பாடு பட்டேனும் ஒரு சொந்த வீடு வாங்கிவிட வேண்டும். அப்பாவின் ரூ.10 லட்சம் கடனை அடைத்துவிட வேண்டும். இந்த இரண்டு விஷயத்திற்காகத் தான் திரைத்துறையில் நடிக்கத் தொடங்கினேன். இங்கு வந்தால் பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்துடன் தான் நுழைந்தேன். இப்படித் தெரியாமல் தான் சினிமாவில் நடிக்கத் தொடங்கினேன். திட்டமிட்டு நடிக்க வரவில்லை. அப்படி ஒரு ஆசையும் இருந்ததில்லை.

விஜய் சேதுபதி

வீட்டு வாடகை என்பது மிகப்பெரிய பாரம். சில இடங்களில் ஏதோ பாகிஸ்தானில் குடி இருக்கிறோம் என்ற உணர்வு வரும். வீட்டு உரிமையாளர்கள் விதிக்கும் நிபந்தனைகள் அப்படி இருக்கும். நான் நடித்த ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் இடம் பெற்றது போல், துணிகாயப் போடக்கூடாது. சுவரில் ஆணி அடிக்கக் கூடாது. இப்படிப் பலபல புதிய புதிய நிபந்தனைகள் இருக்கும். உறவினர்கள் வரக்கூடாது. வந்தால் உடனடியாகத் திரும்பிச் செல்ல வேண்டும். அவர்கள் இங்கு குளிக்கக் கூடாது. என ஆயிரத்தெட்டு நிபந்தனைகளை விதிப்பார்கள்.

அதனால் சொந்த வீடு கனவு என்பது எல்லா தொழிலாளர்களுக்கும் இருக்கும் ஒரு கனவு. அந்தக் கனவு.. அந்த ஆசை.. இன்று நிறைவேறத் தொடங்குகிறது. கண்டிப்பாக இந்த கனவை என்னால் மட்டும் சுமக்க இயலாது. ஏனெனில் இதற்காகச் செல்ல வேண்டிய தூரம் அதிகம். அதனால் இந்த திட்டம் சிறப்பாகத் தொடங்கி, சிறப்பாக நிறைவடைய வேண்டும் என ஆசைப்படுகிறேன். ஆர்.கே.செல்வமணி கேட்ட ரூ.10 லட்சம் ரூபாய் தொகையை அலுவலகத்திற்குச் சென்றவுடன் காசோலையாகத் தந்து விடுகிறேன்.

இந்த கனவுத் திட்டத்தை நிறைவேற்றும் கட்டுமான நிறுவன உரிமையாளர் சுரேஷ்பாபு அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுடைய தொழிலாளர்களின் வீட்டினை தலைமுறை தலைமுறையாக உறுதியுடன் இருக்கும் வகையில் கட்டித் தரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இதற்காக எந்த சமரசத்தையும் மேற்கொள்ளாமல், தரமாக கட்டிடத்தைக் கட்டித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு விஜய் சேதுபதி கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More