Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா தேவா என்ற தேனிசையின் ஹார்மோனியம்

தேவா என்ற தேனிசையின் ஹார்மோனியம்

6 minutes read

ஒரு பக்கம் இசைஞானி. இன்னொரு பக்கம் இசைப்புயல். இடையே ஒரு தென்றலின் லாவகத்தோடு…. வருகிறது தேனிசைத் தென்றல்.

“விரலோ நெத்திலி மீனு…
கண்ணோ கார பொடி…
முகமோ கெளுத்தி மீனு
மனமோ சென்னாக்குனி
இது விலாங்குடா கையில் சிக்காதுடா…
இது ரெக்கை வெச்ச வவ்வாலுடா… ஹே அந்தோணி…… ஹே….. அல்போன்ஸ்….

சலோமியா…….. சலோமியா……..”

குத்து பாட்டில் கூட குயில் கூவ கண்டேன். ஒரு அடிமட்ட ரசிகனின் உதட்டசைவுக்கு பாட்டு போட்ட தேவாவின் இன்னிசை… இப்போதும் மனதுக்கு நெருக்கம் தான்… எப்போதும் மனதுக்குள் இருக்கும் தான்.

“வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி..
என் அக்கா மக வந்து நின்னா முன்னாடி..
எப்பவுமே காதல் ஒரு கண்ணாடி..
அதை உடைச்சிடாம பாக்கறவன் கில்லாடி…

என் அக்கா மக அஞ்சல…
நான் வெச்சேன் பாரு நெஞ்சில…
நாங்க ரெண்டு பெரும் பிஞ்சுல….
அட எங்கயும் போயி கொஞ்சல…”

கண்ணாடி முன் நின்று யார் வேண்டுமானாலும் வாயசைக்கலாம். மிக பெரிய கீர்த்தனை… பிராத்தனை எல்லாம் வேண்டாம். ரசனை இருந்தாலே போதும். எதுகை மோனையில்.. இசையின் கிளைகள் மலர்கள் செய்யும். அதில் குறிஞ்சி வகையும் வண்ணம் நெய்யும். தேவாவின் பலமே.. பட்டென மாட்டு கொம்பில்……வந்தமரும் இந்த மாதிரி பட்டாம் பூச்சிகள் தான்.

” கொத்தா சாவடி லேடி…. நீ கொயம்பேடு வாடி…”

வீதியில்.. இளமை ததும்ப போடும் குத்தாட்டம் இந்த இசையில். ஒரு நடுத்தர வாழ்க்கை முறை.. ஒரு அடித்தட்டு சந்தோஷத்தில் தேவாவின் பாட்டுகள் வானவில் பூக்க சொன்னது என்றால்… நான் நம்புகிறேன். பகல் சூரியனும் அல்ல. இரவு சூரியனும் அல்ல. அந்தி சூரியன்…. தன் நிறம் மறக்க சொக்கிக் கிடக்கும் சூரிய வட்டத்தில் ஒரு ஆசுவாசம் இருக்குமே அது தான் தேவாவின் இசை.

“சின்ன சின்ன ஊடல்களும்.. சின்ன சின்ன கூடல்களும்
மின்னல் போல வந்து வந்து போகும்…
மீனம்மா அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகம்….”

இந்த ஆச்சரியம் தான் தேவாவின் இசை. பனி மலையில் சறுக்கிக் கொண்டு செல்லும்… பளிங்கு மன சிதறல்கள். பொன்னுடல் தீண்ட தன்னுடல் மறக்கும் காற்றின் உருவமில்லா உணரல். இந்த அழகுணர்ச்சி தான் தேவா.

“நீ நடந்தால் நடை அழகு…. அழகு
நீ சிரித்தால் சிரிப்பழகு… அழகு
நீ பேசும் தமிழ் அழகு… அழகு
நீ ஒருவன் தான் அழகு…
நெற்றியிலே சரிந்து விழும் நீள முடி அழகு…
அந்த முடி கோதுகின்ற அஞ்சு விரல் அழகு ….”

தாலாட்டும் காதலை தள்ளாடும் தனிமையில் ரசிக்கலாம். இந்த பாடல் ஆரம்பிக்கையில்…

“தான னான தான னான……. தான னான தான னான…… தான னான தான னான ……..தான னான தான னான……தன தனனா தானனனா…..” என்று வரும் ஹம்மிங்… அசையாமல் அசைக்கும். இசையாமல் இசைக்கும். நீரோடைக்கும் குறைவான சந்தத்தில்… சாணக்கிய தந்திரம் இசையில் நிகழ்த்தியிக்கும் லாவகம்… கன்னக்கதுப்பு விரிய ஆச்சரியமூட்டும்.

“ஏய் நிலவே ஏய் நிலவே
நான் உன்னைத் தொட உன்னைத் தொட
விண்ணை அடைந்தேன்..”

என்று முகவரி படத்தில் ‘தல ‘ பாடுகையில்….உள்ளிருந்து கொப்பளிக்கும் தீரா வேட்கையை இசையாக்கி மழையாக பொழிந்திருப்பார் தேவா.

“பணம் கொஞ்சம் இருந்தாலும்
கொடுத்தா தான் மதிப்பு
நீ மகனென்றால் உன் தாயை
மதித்தால் தான் மதிப்பு….”

அருணாச்சலம் படத்தில்.. ‘அதாண்டா இதாண்டா’ பாட்டுக்கு தியேட்டரில் எழுந்து ஆட்டம் போட்ட நாட்களை தேவா என்ற கலைஞனுக்கே காணிக்கை ஆக்குகிறேன். கொண்டாட்டத்தின் கதவுக்கு பின் குத்த வைத்து அமர்ந்து தேநீர் குடித்துக் கொண்டிருக்கும் நம் சொந்தத்தின் சந்தம் அவர்.

“சட்டென்று சலனம் வரும் என்று ஜாதகத்தில் சொல்லலியே..
நெஞ்சோடு காதல் வரும் என்று நேற்று வரை நம்பலயே….
மனம் விரும்புதே… உன்னை உன்னை….”

என்று சிம்ரன் கண்களில் ஒளியாகி வெளி வரும் தேவாவின் இசையை கைக்குள் கொண்ட பட்டாம் பூச்சியின் குறுகுறுப்போடு உணர்கிறேன். வாசலில் அமர்ந்தே வீதி காணும் பிரம்மாண்டம் தான் அவர் பாடல்கள். பக்கத்து வீ ட்டு ஜன்னல் வழியே தெரியும் மூன்றாம் வீட்டு வாசலில் அந்த பாடல்கள் நிகழும்.

“அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்…
நீ என் மனைவியாக வேண்டும் என்று…
ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான்…
ஆயுள் வரை காத்திருப்பேன் என்று நானும் சொல்லி வந்தேன்…”

நாமும் தனுஷோடு சேர்ந்து காதலால் வாழ்ந்த அந்த நிமிடங்கள் தேவா என்ற இசை காதலன் வாரி வாரி நமக்கு கொடுத்ததல்லவா. கொடுக்க கொடுக்க எடுத்துக் கொள்ளவும் இசைக்குத் தெரியும். முன்னும் பின்னும் கனமில்லாத யானையென வரும் தேவாவின் இசை. தேக்கமற்ற நீரூற்றும்.. தேகமற்ற தேவ ஊற்றும் கலந்த கலவையில்….. அற்புதத்தை.. மிக அழகாக மஃப்சல் பேருந்தின் ஜன்னலோரத்தில் செய்து விடும் தேவா….. மனதுக்குள் மின்னல் மூட்டவும் தவறியதில்லை. அதே வருடத்தில் இன்னொரு முறை பூக்கும் குறிஞ்சி பூவென காதோரம் கசியும் இசைதான் இந்த பாட்டிலும்..

“மணிமேகலையே…..மணி ஆகலேயே……நீ தூக்கத்தை விட வேணும்…
மணமாகலயே…….மன வேதனைய நீ தீர்த்திட வர வேணும்..
அந்த வானத்துக்கு ஒரு வெண்ணிலவு… இந்த மேகத்துக்கு ஒரு பெண்ணிலவு….
உன் பாட்டு சத்தம் இனி கேக்கும் வரை….. இந்த நீல குயில் பாடிகிட்டுதானிருக்கும்…”

ஒரு கட்டத்தில்…. திரும்பும் பக்கமெல்லாம்.. தேவாவின் பாட்டு. இடையே தேவாவின் குரலில் ஊர்க்காரர் ஒருவரின் தன்னிச்சையான பாட்டை உணர்ந்தோம். ஒரு கடைசி பெஞ்சுக்காரனும் பாடலாம் போல ஒரு உவமை அவர். நம்பிக்கையின் கரகரப்பில்… ஹரஹரப்பிரியா கூட வந்திருக்கலாம்.

“காலமெல்லாம் காதல் வாழ்க” படத்தின் வெற்றியில் முக்கிய பங்கு தேவாவின் இசைக்கும் உண்டென்றால்… உண்மை இதழோரம் புன்னகைக்கும். பெரும்பாலும் தேவாவின் இசைமைப்பு என்றால் அந்த படத்தில் எல்லா பாடல்களுமே ஹிட் ஆகி விடும் ஒரு காலகட்டம் இருந்தது. இரண்டு ஜாம்பவான்கள் மத்தியில் நின்று அடித்தாடிய இசை ஆட்டக்காரர் என்றால் தகும். தளபதிக்கு ஆரம்ப கால முக்கியமான படங்களின் வெற்றிக்கு தேவாவின் இசை தோள் கொடுத்தது என்றால்… காலத்தின் அலை இசை கூடி செய்த நட்சத்திர உருவாக்கம் அது.

“ஊனம் ஊனம் ஊனம் இங்கே ஊனம் யாருங்கோ” என கேட்டது வேண்டுமானால் வடிவேலுவாக இருக்கலாம். ஆனால் அதற்கு இசை கோர்த்த வல்லுநன் தேவா.

தஞ்சாவூர் மண்ணென்று இன்றும் நாம் தலையாட்டுவது தேவா இசைக்குத்தான்.

“வாலி” படத்தின் வெற்றி…. ஆளுக்கு பாதி என்றால் பாதி இவருக்கும் தான். மௌத் ஆர்கன் வாசித்துக் கொண்டே கற்பனைப் பெண்ணிடம்.. முத்தமிடும் இசைக்கு யுத்தமிட்ட காலம்… இன்னும் கண்ணுக்குள். மின்னும் காதுக்குள்.

“சிவப்பு லோலாக்கு சினுங்குது சினுங்குது…
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது…
அம்மம்மா அம்சமா யானை மேல போறாம்மா…
கண் ஜாடை கை ஜாடை காட்டி காட்டி போறாம்மா…
ராஜஸ்தானின் சின்ன பொண்ணு ஏங்குது ஏங்குது…
கொம்பு தேனு…”

ராஜஸ்தான் மண்ணில் ஊடுறுவும் நினைவுக்கு வண்ணம் பூசிய இசையை… ‘காதல் கோட்டை’யில் கண்டோம். கண்களின் கோட்டையை காதல் செய்ய காதுகளின் கோட்டையை தேவா செய்தார்.

“ராசி தான் கை ராசி தான்.. உன் முகமே ராசி தான்….” என்று ரேவதி பாடுகையில்… விஜயகாந்த் வரும் போதெல்லாம் ஒரு நிம்மதியை தந்த “என் ஆசை மச்சான்” தேவாவின் நதியில்…. கருப்பு நிலா மிதந்து வந்த அற்புதம். நினைவோடைகளில் நீக்கமர உருண்டோடும் பேரன்பு.

மெல்ல நிகழும் நிழலின் நகர்தலை தேவாவின் இசையில் கண்டோம். தேவாவே இசை தான் போல. ஒரு ஏழை மகனின் வாய்க்குள் முனங்கும் குரல் அவருடையது. ஒரு விளிம்பு மனிதனின் வனங்களில் அவர் இசை ஒற்றையடி செய்யும்.

“முதன் முதலில் பார்த்தேன்… காதல் வந்தது….
என்னை மறந்து எந்தன் நிழல் போகுது…
என்னில் இங்கு நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை
எங்கே எந்தன் இதயம் அன்பே……வந்து சேர்ந்ததா….”

தேனில் குழையும் வண்டின் முனகல் என்று தான் நம்ப வேண்டி இருக்கிறது.

தொண்டைக்குள் கசியும் குரலில் காதலின் ரகசியம். இசையின் திசையெங்கும் மெல்ல சிறகடிக்கும் காதலிக்க ஆரம்பித்த பறவையின் இம்சை.

எத்தனையோ படங்கள். அத்தனையும் “புல்வெளி புல்வெளி தன்னில் பனித்துளி பனித்துளி ஒன்று தூங்குது தூங்குது பாரம்மா…” என்கிறது தேவா என்ற தேனிசையின் ஹார்மோனியம்.

– கவிஜி

நன்றி : கீற்று இணையம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More