Sunday, May 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாகவர் ஸ்டோரி சில்க் ஸ்மிதாவுக்கு கவர்ச்சியாக நடிப்பதில் ஆசை இருந்ததில்லை | டப்பிங் கலைஞர் ஹேமமாலினி

சில்க் ஸ்மிதாவுக்கு கவர்ச்சியாக நடிப்பதில் ஆசை இருந்ததில்லை | டப்பிங் கலைஞர் ஹேமமாலினி

3 minutes read
‘’அவளுக்கு நடிகை சாவித்திரி ரொம்பப் பிடிக்கும். அவங்களை மாதிரி நடிப்பில் சாதிக்க வேண்டும் என ஆசைப்பட்டாள். கவர்ச்சியாக நடிப்பது என்பது அவளோட ஆசை இல்லை.’’ என்று சில்க் ஸ்மிதாவை நினைவுகூர்கிறார், மூத்த டப்பிங் கலைஞர் ஹேமமாலினி.

இந்திய சினிமாக்களில் ‘கிளப் டான்ஸ்’ என்பது 70களில் தான் பிரபலமானது. தென்னிந்திய சினிமாக்களில் கிளப் டான்ஸுக்கு பெயர்பெற்ற நடிகைகள் என்றால், ஜெயமாலினி, அனுராதா, டிஸ்கோ சாந்தி என அந்த வரிசையில் பலர் இருந்திருக்கிறார்கள்.

அவர்களையெல்லாம் ஆண் ரசிகர்கள் விசிலடித்து வரவேற்றார்கள். ‘’என்னது இது… அரையும் குறையுமா,’’ என்று முகம் சுளிக்கும் பெண்களும் இருந்தார்கள்.

ஆனால் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் கூட, அந்த நடிகையின் ஆட்டத்தையும், அழகையும் ரசித்தார்கள் என்றால், அது சில்க் ஸ்மிதாவைப் பார்த்துத்தான். பெண்களையும் கவர்ந்திழுத்த கவர்ச்சி நடிகையாக வலம் வந்த சில்க் ஸ்மிதாவின் ஐஸ்க்ரீம் குரலுக்கு சொந்தக்காரர் வேறொருவர் என்றால் நம்புவது கடினம் தான். உண்மையில் அந்தக் குரலுக்கு உரிமையாளர், டப்பிங் கலைஞர் ஹேமமாலினி தான்.டிசம்பர் 2ஆம் தேதி சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, டப்பிங் கலைஞர் ஹேமமாலினி பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில், சில்க் ஸ்மிதா குறித்து, தனது நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார். அவரது பேட்டியில் இருந்து…

கேள்வி: இத்தனை ஆண்டுகளில், தமிழ் சினிமா எத்தனையோ நாயகிகளையும், நடிகைகளையும் அறிமுகப்படுத்தி அங்கீகரித்தாலும், சில்க் ஸ்மிதாவுக்கு ரசிகர்கள் மத்தியில் இருந்த வரவேற்பு பெரும்பாலானவர்களுக்கு இல்லை என்று சொல்லலாம். அப்படிப்பட்ட ஒருவருக்கு குரல் கொடுத்ததைப் பற்றி எப்படி உணர்கிறீர்கள்?

பதில்: ஒரு டப்பிங் கலைஞரா எனக்கு அது கூடுதல் சிறப்புதான். நான் எத்தனையோ கதாநாயகிகளுக்காக டப்பிங் பேசியிருக்கிறேன். அம்பிகா, ராதா, சுமலதா என தமிழிலும், மாதவி போன்ற நாயகிகளுக்காக தெலுங்கிலும், இன்னும் பல மொழிகளில் எண்ணற்ற கதாப்பாத்திரங்களுக்காகவும் பேசியிருக்கிறேன். ஆனால் இன்று வரையிலும்கூட, சில்க் ஸ்மிதாவை நினைவில்கொண்டு என்னைப் பேட்டி எடுக்கும் சூழல் இருக்கிறது என்றால், அதற்கு நான் சில்க் ஸ்மிதாவுக்கு நன்றி சொல்லி ஆக வேண்டும்.

கேள்வி: சில்க் ஸ்மிதாவின் முதல் படத்திலிருந்தே நீங்கள்தான் டப்பிங் பேசியிருக்கிறீர்கள். அவருக்கு உங்கள் குரல்தான் பொருத்தமாக இருக்கும் என்பது எப்படி முடிவானது? அந்த சமயத்தில் என்ன நடந்தது?

பதில்: வேறொரு நடிகைக்கு உதவியாளராக(Touchup Girl) இருந்த விஜயலட்சுமி என்ற பெண்ணை நடிகர் விணு சக்ரவர்த்தி தான் அழைத்துவந்து நடிகையாக்கினார். அந்தப் பெண் தான் சில்க் ஸ்மிதா. வண்டிச்சக்கரம் எனும் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் அவர் அறிமுகமானார். அவருக்கு எனது குரல் தான் பொருத்தமாக இருக்கும் என்பதற்காக என்னை அழைக்கவில்லை. டப்பிங் பேசுவதற்காக சென்ற இடத்தில், அந்தப் பெண் கவர்ச்சியாக இருக்கிறாள், அவளுக்கு கவர்ச்சியான குரலில் பேசுங்கள் என, விணு சக்ரவர்த்தி கேட்டுக்கொண்டார். நான் அதை முயற்சித்தேன். அது நன்றாக வந்துவிட்டது. தோற்றம் மட்டுமல்ல, குரலும் கவர்ச்சி தான்
கேள்வி: சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து, படிப்படியாக வளர்ந்து கவர்ச்சி நாயகியாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார் சில்க் ஸ்மிதா. அதற்கு அவர் தோற்றம் மட்டுமல்ல, கவர்ச்சியான குரலும் ஒரு காரணம். அந்த வகையில், நீங்களும் காரணம் என்று சொல்லலாமா?

பதில்: அப்படியும் வைத்துக்கொள்ளலாமே தவிர, நான் தான் காரணம் என்று சொல்லிவிட முடியாது. ஏனென்றால், சில்க் ஸ்மிதா சாதாரணமாகப் பேசும்போதே அப்படித்தான் பேசுவார்(சில்க் போல பேசிக் காண்பிக்கிறார்). நான் அதை காப்பி அடித்தேன் என்று சொல்லலாம். அவ்வளவுதான்.

கேள்வி: கவர்ச்சி கதாப்பாத்திரங்கள் மட்டுமல்லாமல், அலைகள் ஓய்வதில்லை மாதிரியான சில படங்களில் சில்க் ஸ்மிதா, குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். அதற்கும் நீங்கள்தான் குரல் கொடுத்திருக்கிறீர்கள். அவருக்கே வேறு விதமாகப் பேசுவது எப்படி சாத்தியமானது?

பதில்: அது இயக்குநர்கள் விரும்புவதைப் பொறுத்தது. நான் சில்க் ஸ்மிதாவுக்கு மட்டுமே டப்பிங் பேசவில்லை. நிறைய பேருக்கு பேசியிருக்கிறேன். வயதான கதாபாத்திரங்களுக்கும் பேசியிருக்கிறேன். அதனால், சில்க் ஸ்மிதாவே வெவ்வேறு கதாப்பாத்திரங்களில் நடிக்கும்போது, அந்தந்த திரைப்படத்தின் இயக்குநர்கள் எப்படி வேண்டும் என்று கேட்டார்களோ, அப்படி பேசினேன். அது எனக்கு சிரமமாகத் தெரியவில்லை.

ஆடை வடிவமைப்பில் இருந்த ஆர்வம்
கேள்வி: சில்க் ஸ்மிதாவுடைய நடனமும் நடிப்பும் எந்தளவுக்கு ரசிகர்களை ஈர்த்ததோ, அதே அளவுக்கு அவருடைய ஆடை வடிவமைப்பும் பலரை ஈர்த்தது. மற்ற நடிகைகளின் ஆடைகளை விட, அவரது ஆடைகள் வித்தியாசமாக இருந்ததே, அவருக்கென பிரத்யேகமாக ஆடை வடிவமைப்பட்டதுண்டா?

பதில்: அதைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். ஆடை வடிவமைப்பில் சில்க் ஸ்மிதாவுக்கு ஆர்வம் மிக மிக அதிகம். அந்தக் காலகட்டதில், கவர்ச்சி கதாப்பாத்திரங்களில் நடிப்பவர்கள், நடனம் ஆடுபவர்களெல்லாம், படக்குழுவினர் கொடுக்கும் ஆடைகளைதான் அணிய வேண்டும் என்பது கட்டாயம். ஆனால், அந்த விஷயத்தில் சில்க் ஸ்மிதாவுக்கு மட்டும் விலக்கு உண்டு. அவரது ஆடைகளை அவரேதான் வடிவமைப்பார். ஆங்கில பத்திரிகைகள், பழைய படங்கள் போன்றவற்றில் இருந்து குறிப்பு எடுத்து, தனக்கான ஆடைகளை தானே வடிவமைத்து பயன்படுத்துவார். அதற்கு இயக்குநர்களும் மறுப்பு சொன்னதில்லை.

‘டர்டி பிக்சர்’ படத்தில் டப்பிங் பேசாதது இதனால் தான்
கேள்வி: சில ஆண்டுகளுக்கு முன் விஜய் சேதுபதி நடித்த ரம்மி திரைப்பத்தின் ஒரு காட்சியில், புகைப்படத்தில் இருக்கும் சில்க் ஸ்மிதா பேசுவதற்கு நீங்கள் குரல் கொடுத்தீர்கள். ஆனால், அவரது வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட `டர்டி பிக்சர்` படத்திற்கு நீங்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை.

பதில்: அந்தப் படக்குழுவினர் என்னை அணுகினார்கள். ஆனால், எனக்கு அதில் விருப்பமில்லை என்று கூறிவிட்டேன். ஏனென்றால், அந்தப் படத்தில் உண்மை இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. சில்க் ஸ்மிதாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்தவை எனக்குத் தெரியும். அதனால், நான் அதை மறுத்துவிட்டேன். சில்க் ஸ்மிதா இறப்புக்கு பின்னர், பல்வேறு நடிகைகளுக்கு, அவர் போல டப்பிங் பேசுமாறு, பலரும் கேட்டுக்கொண்டார்கள். ஆனால், நான் சில்க்-க்கு பேசியதுபோல 100% யாருக்கும் பேசவில்லை.கேள்வி: சில்க் ஸ்மிதாவுக்கு உண்மையில் நடிப்பில் ஆர்வம் இருந்ததா? இல்லை, அவர் நடிக்க வந்தது தற்செயலானதா?

பதில்: அவருக்கு நடிப்பில் ஆர்வம் இருந்தது. ஆனால், கவர்ச்சியாக நடிப்பது அவருடைய எண்ணம் கிடையாது. சாவித்திரி அம்மாவை அவருக்கு ரொம்பப் பிடிக்கும். சாவித்திரி ஏற்று நடித்த கதாப்பாத்திரங்கள் போல், ஏற்று நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையை என்னிடம் கூட கூறியிருக்கிறார். ஆனால், கடைசிவரை அவருடைய அந்த ஆசை நிறைவேறவில்லை என்பதுதான் என்னுடைய வருத்தம்.

மேலும் பல கேள்விகளுக்கு சுவாரசியமான பதில்களை அளித்த டப்பிங் கலைஞர் ஹேமமாலினி, சில்க் ஸ்மிதா உள்ளிட்ட பல நடிகைகளுக்கு தான் டாப்பிங் பேசியத்தை நினைவுகூர்ந்ததுடன், பல்வேறு கதாப்பாத்திரங்களுக்கு பேசிய வசனங்களையும் பேசிக்காண்பித்தார். அவற்றையெல்லாம் காணொளி வடிவில் காணத்தவறாதீர்கள்.

நன்றி : வெப்துனியா.காம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More