April 1, 2023 6:37 pm

சிறுகதை | திருப்பம் | விமல் பரம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

வீடு அமைதியாக இருந்தது. நான் எனது அறையிலிருந்து படித்துக் கொண்டிருந்தேன். எவ்வளவு படித்தாலும் ஒன்றும் மனதில் பதியவில்லை. புயலுக்குப்பின் வருகின்ற அமைதி போல் அப்பா அம்மாவின் சண்டைக்குப் பின் வந்த  இந்த அமைதி எனக்குப் பிடிக்கவில்லை. ஸ்கூலால் வரும்போது அப்பா முன்  அறையில் புத்தகம் படித்துக்கொண்டிருந்தார். அம்மா தன் அறையில் கட்டிலில் படுத்திருந்தாள்.

என்னைப் பார்த்ததும்  எழுந்து,

“பசிச்சால் சாப்பிடு. நான் படுக்கப் போறன். தலையிடிக்குது.”  என்றாள்.

அம்மாவின் முகம் கோபத்தால் சிவந்திருந்தது.

“வேண்டாம்  எனக்குப் பசிக்கேலை.”  என்று சொல்லிவிட்டு என் அறைக்கு  வந்தேன்.

இன்றும் சண்டையா…  என் மனம் என்ன காரணத்துக்காக சண்டை போட்டிருப்பார்கள் என்று அலசிக்கொண்டிருந்தது. முன்பு எவ்வளவு சந்தோசமாகயிருந்தோம். லீவு நாட்களில் அடிக்கடி இடங்கள் சுற்றிப் பார்ப்போம்.  அங்கேயே சாப்பிட்டு விட்டு   வரும்போது தேவையான பொருட்களையும்   வாங்கிவருவோம். நான் ஆசைப்பட்டுக் கேட்பதைப் போட்டிபோட்டுக்கொண்டு  வாங்கித்தருவார்கள். அம்மா வேலைக்குப் போகத்தொடங்கிய பின்தான் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வரத்தொடங்கியது. எதற்கு எடுத்தாலும்,

“நானும் உழைக்கிறன். என் விருப்பப்படி நான் இருப்பேன் விரும்பியதை வாங்குவேன்”  என்று சொல்லுவாள்.

“தேவையானதை வாங்கினால் சரி” அப்பாவும் சில விஷயங்களில் விட்டுக்கொடுப்பார்.

வேண்டாம் என்று சொன்னதை வாங்கினால் கோபம் வந்துவிடும். சண்டைதான்.  அம்மா விட்டுக்கொடுக்கவே மாட்டாள்.  இன்று இவர்களின் சண்டையால் நான்தான் அதிகம் பாதிக்கப்படுகிறேன்.

அப்பா, அம்மா நான் மூன்று பேர் அடங்கியது தான் எங்கள் குடும்பம்.

லண்டனுக்கு நாங்கள் வரும்போது எனக்கு எட்டு வயது. ஊரில் அப்பாவின் குடும்பம் தாத்தா, பாட்டி சித்தப்பாக்களுடன் ஒன்றாக இருந்துவிட்டு வந்த எனக்கு இந்த தனிமை முதலில் தெரியாவிட்டாலும் இவர்கள் அடிக்கடி போடும்  சண்டையால் இப்பொழுது  பெரிதாகத் தெரிகிறது. இங்கு வந்தும் ஏழு வருடமாகி  விட்டது.

திடீரென்று அமைதியைக் கிழித்துக்கொண்டு மணிக்கூட்டின் மணிச்சத்தம் கேட்டது. பழைய கால பெரிய மணிக்கூடு. எத்தனை மணியோ அத்தனை தரம் அடித்துவிட்டு ஓயும். அப்பாவிற்கு  அபூர்வமான  பழைய  பொருட்கள் வாங்கிச்சேர்ப்பதில் ஆர்வமிருக்கிறது. அது அம்மாவிற்குப் பிடிப்பதில்லை.  இந்த மணிக்கூட்டுக்காகவும் சண்டை போட்டிருக்கிறாள்.

“மணிக்கூட்டில் நேரம் பார்த்தால் போதாதா… மணியடிச்சு  ஊரைக் கூட்ட வேணுமா…இரவு பகல் பாராமல் அடிச்சுக்கொண்டிருக்கு. நித்திரையும் கொள்ளேலாது”

“உனக்குப் பிடிக்காவிட்டால் காதை  மூடிக்கொள்.” அப்பா சொன்னார்.

“இந்த வீட்டிலை நானும் இருக்கிறன். எனக்கும் பிடிச்சதாய் வைக்க வேணும்.”

“உனக்குப் பிடிச்சதை நீ வைக்க நான் கேக்கிறனே…இவைகளின் அருமை உனக்குத் தெரியேலை..”

“புதுசு புதுசா எவ்வளவோ  வந்திருக்கு. ஏன் பழசுகளைக் கொண்டுவந்து வைச்சிருக்கிறிங்கள்”

அம்மா என்ன சொல்லியும் அப்பா கேட்கவில்லை  அந்தக் கோபத்தில் மணியடிக்கும் போதெல்லாம் அம்மாவும் கத்தத்  தொடங்கி  விடுவாள். அப்பா கண்டு கொள்வதேயில்லை. நாளடைவில் கத்தலும் குறைந்து விட்டது.  தொடங்கினாலும் அப்பாவின் முறைத்த பார்வையில் அடங்கிவிடுவாள்.

மணிக்கூடு எட்டுத்தரம் அடித்து ஓய்ந்தது. எனக்குப் பசித்தது. எழுந்து அறையை   விட்டு வெளியில் வந்தேன். அப்பாவைக் காணவில்லை.  அம்மா படுத்திருந்தாள்.

“அம்மா பசிக்குது. வாங்கோ சாப்பிடுவம். அப்பா எங்கே”

“எனக்குத் தெரியுமே…போகேக்கை சொல்லிப்போட்டே போறார்.”   அம்மா கோபத்துடன் பதில் சொன்னாள்.

“என்னம்மா நெடுகவும் சண்டை பிடிக்கிறியள்.” அம்மாவைப் பார்த்து கேட்டேன்.

அம்மா படக்கென்று எழுந்து,

“உனக்கு நான் சண்டை போடுறது தான் தெரியுது.  அப்பா என்ன சொன்னார் எண்டு தெரியுமே”

“அப்பா சொல்லுறதுக்கெல்லாம் நீங்கள் திருப்பிக் கதைக்கிறதாலதானே அம்மா சண்டை  வருகுது.”

“அப்ப அவர் என்ன சொன்னாலும் தலையாட்டுறதே”

“என்னம்மா நீங்கள். அப்பா சொல்லுறது பிழை எண்டால்  பொறுமையாய் அதைச் சொல்லுங்கோ. நீங்கள் கத்திறதால அப்பாவுக்குக் கோபம் வருகுது.”

“அவருக்குப் பொறுப்பில்லை. நான் பொறுப்பாய் ஏதாவது செய்தால் அதில பிழை கண்டுபிடிக்கிறது.”

“அப்பிடி என்ன நீங்கள் பொறுப்பாய்ச் செய்து அப்பா பிழை கண்டு பிடிச்சவர்.”

“இந்த முறை சீட்டு எனக்கு வந்தது.  அப்பாவிற்குச் சொல்ல அவருக்குக்கோவம்  வந்திட்டுது. கத்துறார்.”  என்றாள்  அம்மா..

எனக்கு திக்கென்றது.

“அம்மா! அப்பா சீட்டு கட்டவேண்டாம் எண்டு சொன்னவர். நீங்கள் ஏன் கட்டினீங்கள்.”

நாலு மாதத்துக்கு முன் அம்மா சீட்டு கட்டப்போறன்  என்று  சொன்னவுடனேயே  அப்பா,

“வேண்டாம் ஏமாத்தி காசு இல்லாமல் போகும். காசு சேர்க்க வேணுமெண்டால் பாங்க்கில் போட்டுச் சேர்.”   என்றார்.

“என்னோடு  வேலை செய்பவள் ஏமாற்றமாட்டாள்.   நான் கட்டப்போறன். நானும் உழைக்கிறன். உங்களிட்டை காசு கேட்கமாட்டன்.” என்றாள் பிடிவாதமாக.

“உழைக்கிற திமிரில கதைக்காத. எனக்கு விருப்பமில்லை. வேண்டாம்.”

என்று சொல்லிவிட்டு அப்பா வெளியில் போய் விட்டார்.  அன்று முழுவதும் அம்மா கோபத்துடன் முணுமுணுத்துக் கொண்டேயிருந்தாள். அடுத்தநாள் அதைப்பற்றி ஒன்றும் கதைக்கவில்லை. அத்துடன் பிரச்சனை  முடிந்துவிட்டது என்று நினைத்து நிம்மதியாயிருந்தேன்.  ஆனால் அப்பாவிற்குத் தெரியாமல் கட்டி காசையெடுத்துஇ தான் நினைத்ததை  செய்துவிட்டேன் என்று அப்பாவுக்குச் சொல்லுவா என்று எதிர்பார்க்கவில்லை.  தான் சொல்லியும் அம்மா கேட்கவில்லை என்று அப்பாவிற்கு கோபம் வந்திருக்கும். இன்றைய சண்டைக்கு இதுவே காரணமாகிவிட்டது.

கோபத்திலிருக்கும்  அம்மா என்ன சொன்னாலும் கேட்கமாட்டா.  சாப்பிடவும் வரவில்லை. நானே போய் உணவைச் சூடு பண்ணிச் சாப்பிட்டு விட்டு என் அறைக்குவந்து படுத்துக்கொண்டேன். படிக்கவும் மனமில்லை நித்திரையும் வரவில்லை.  இவர்களை நினைக்க கவலையாக இருந்தது.

விடிய எழுந்து வெளியில் வந்தபோது அம்மா வேலைக்குப் போக ஆயத்தமாகிக்  கொண்டிருந்தாள். அப்பா சமையலறையில் ரீ போட்டுக்கொண்டிருந்தார்.

இவர்களின்  கோபம்  தீர்ந்து சமாதானமாக எத்தனை நாளாகுமோ என்று நினைத்தபடி,

“அப்பா எனக்கும் ரீ ” என்றேன்.

“சரிஇ வா சேர்ந்து குடிப்பம்.” என்றார்.

அம்மா நிமிர்ந்து பார்த்துவிட்டு படக்கென்று தலையைத் திருப்பிக்கொண்டு  படியிறங்கிச்  சென்றாள்.

“அப்பாஇ நீங்கள் ஏன் அம்மா செய்யிறதைத் தடுக்கிறிங்கள். அதனால்தானே  நெடுகவும் சண்டை வருகுது. பொறுமையாய் சொல்லுங்கோவன்.”  என்றேன் மெல்லிய குரலில்.

“உன்ரை அம்மாவோட  பொறுமையாய் கதைக்கலாமே….முதல் நான் என்ன சொல்லுறன் என்று கேட்டால்தானே… நான் என்ன சொன்னாலும் திருப்பிக்  கதைக்கவேணும் எண்டு கதைக்கிறதால தானே சண்டை வருகுது. ஊரில இருக்கேக்கை சீட்டுக் கட்டித் துலைச்சது  போதாதே. வேண்டாம் எண்ட பிறகும்  கட்டினால் கோபம் வரும்தானே.”

“சரியப்பா இப்ப கட்டி காசும் வந்திட்டுது. இனி பேசாதேங்கோ “என்றேன்.

அப்பா நிமிர்ந்து என் முகத்தைப் பார்த்தார். ஆனால் ஒன்றும் சொல்லவில்லை.

“வேலைக்குப் போகிறேன்” என்று அப்பா போக நானும் ஸ்கூலுக்குப் போக ஆயத்தமானேன்.

மாலை நான் திரும்பி வரும்போது அம்மா அப்பா இருவரும் ரிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.இருவரையும் ஒன்றாகப் பார்த்தது சந்தோசமாகயிருந்தது. சமாதானமாகி விட்டார்கள். நானும் அவர்களுடன் சேர்ந்து கொண்டேன். இரவு  மூவரும் ஒன்றாகச்  சேர்ந்து சாப்பிட்டோம்.

” எனக்குச் சந்தோசமாயிருக்கு அம்மா.”  என்றேன்.

அப்பாவும் அம்மாவும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொண்டனர்.

“உமா வாற  கிழமை உன் பிறந்தநாள் வருகுது. அன்று என்ன  செய்ய நினைச்சிருக்கிறாய் சொல்லுடா” என்று அம்மா கேட்டதும் அதைப் பற்றிக் கதைத்துவிட்டு மனநிறைவுடன்  படுக்கப் போனேன்.  பிறந்தநாளும் வந்து சந்தோசமாகப்போனது. அம்மா ஒரு அழகான  நெக்லஸ் எனக்குத்   தந்தா. அப்பாவிடம் காட்டினேன்.

“டிசைன் நல்லாயிருக்கு. விலையாயிருக்கும்…” என்று அம்மாவைப் பார்த்துக்  கேட்டார்.

” உமாவுக்குப் பிடிச்சிருக்கு. விலையா முக்கியம்” என்றாள்  அம்மா.

“சரி கவனமாய் கொண்டு போய் வை. பாங்கில் வைச்சால் பயமில்லை.”

“செய்த எனக்குக் கவனமாய் வைக்கத் தெரியாதா..” அம்மா பட்டென்று சொன்னாள்.

அப்பா என்னைப் பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் உள்ளே போனார்.   உள்ளே போன அப்பா கையில்  சிறு பேப்பருடன் வெளியில் வந்தார்.

“இது நகை வேண்டிய றிசீட்டா….இவ்வளவு காசுக்கா நகை வேண்டினாய்.  உன்ரை சீட்டுக்காசு இவ்வளவு வராதே”.  அம்மாவைப்பார்த்துக் கேட்டார்.  அம்மா ஒன்றும் சொல்லவில்லை.

” சொல்லு எப்பிடி காசு வந்தது”  திரும்பவும் கேட்டார்.

“சீட்டுக்காசோடு கிறடிக் காட்டிலையும் எடுத்தனான்.” அப்பாவிற்கு கோபம் வந்துவிட்டது.

“வட்டிக்கு எடுத்துச் செய்தனியே. இருக்கிற காசுக்குத் தக்கதாய் செய்திருக்கலாம்  இல்லை கொஞ்சம் பொறுத்துச் செய்திருக்கலாம். எனக்குத்  தெரியாமல் உன் இஷ்டப்படி செய்யிறது.” கோபத்தில் அப்பா கத்தினார்.

“சொன்னாலும் காசு தரமாட்டியள் பிறகென்ன சொல்லுறது.”அம்மாவும் கோபத்துடன் பதில் சொன்னாள்.

“அம்மா பேசாமல் இருங்கோ. இப்பிடிச் சண்டை போட்டால் எனக்கு நகையும் வேண்டாம்..ஒண்டும்  வேண்டாம் ”   என்று சொல்லிவிட்டு  நான் என்அறைக்கு வந்த பின்பும் அவர்களின் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது.

அடுத்தநாள் அம்மா அறையை விட்டு வெளியில் வரவில்லை.அப்பாவின் இறுகிய முகத்தைப் பார்க்க பயமாகயிருந்தது. இருவருடனும் கதைக்கமுடியாமல்  தவித்துப்போனேன். தாத்தா பாட்டியின் நினைவு வந்தது. வழமை போல்  வீடு அமைதியாகி விட்டது. என் தேவைகளை நானே செய்துகொண்டு ஸ்கூலுக்குப் போய் வந்துகொண்டிருந்தேன்.  ஒரு கிழமையாகி விட்டது.

அன்று வெள்ளிக்கிழமை.

“உமா கோயிலுக்குப் போவமா… மனசுக்கு ஆறுதலாயிருக்கும்.” அம்மா கேட்டா.

எனக்குச்  சந்தோசமாகயிருந்தது.   அப்பாவும் சம்மதிக்க மூவரும் போக  ஆயத்தமானோம்.

அம்மா அந்த நகையை என்னிடம் போடும்படி தந்தா.

“கழுத்துக்கு பெரிசாயிருக்கு இப்ப வேண்டாம். நீங்கள்  போடுங்கோ” என்றேன்.

அம்மா அப்பாவைப் பார்த்துவிட்டு தான் போட்டுக் கொண்டு வந்தாள். கோயிலில் திருவிழா நடப்பதால் திரும்பி வர வெகு நேரமாகி விட்டது.  அப்பா தான் முதலில் கவனித்தார். அம்மாவின் கழுத்தில் நெக்லசைக் காணவில்லை.

“ஐயோ! என்ரை  நெக்லஸ் எனக்குத் தெரியாமல் எப்பிடிப்  போச்சு.” அம்மா பதறி அழத் தொடங்கினாள்.

“செய்த எனக்குக் கவனமாய் வைச்சிருக்கத் தெரியாதே எண்டாய். இப்ப நகையும் போய் களவாய்க் கட்டின  சீட்டும்போய் வட்டிக்கு எடுத்த கடன்தான் மிச்சம்.”  குத்தலாய் அப்பா சொன்னதைக் கேட்ட அம்மா ஆத்திரத்துடன் கத்தினாள்.

“ஏன் உங்கடை காசிலை கட்டினனானே… நான் உழைச்ச காசு இந்த வீட்டில எவ்வளவு காசு துலையுது. இதுவும் துலைஞ்சு போகட்டும் ”

a1 (3)

” அப்பா அம்மா நகை போன கவலையில இருக்க நீங்கள் பேசுறீங்கள்  விடுங்கோ ” நான் சொன்னதை இருவரும் கேட்கவில்லை.

“நீ தானே  எல்லாத்தையும்  துலைக்கிறாய்” என்று அப்பா சொன்னதும் அம்மாவுக்கு கோபம்  அதிகமாகிவிட்டது.

“மாதா மாதம் ஊருக்கு அனுப்பிற  காசும் துலைஞ்ச காசுதானே ” என்றாள்.

அப்பா திகைத்துவிட்டார்.

“எதைச் சொல்லுறாய். நான் அப்பா அம்மாவுக்கு அனுப்பிறதையா”

“அதுகளைத்தான். அதுகள் துலையாமல் இருக்கிறதாலை எங்கடை காசு துலையுது”

கோபத்தில் என்ன கதைக்கிறது என்று தெரியாமல் அம்மா சொன்னது கேட்டு அப்பாவுக்கு தாங்கமுடியாத கோபம் வந்து விட்டது.

“என்னடி சொன்னாய்” பாய்ந்து வந்து அம்மாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டார்.

“அடிக்கவும் தொடங்கியாச்சு. இனி அடிச்சுக்கொல்லுங்கோ” அம்மா கத்தி அழத்தொடங்கினாள்.

நான் நிற்பதையும் பொருட்படுத்தாமல் சண்டை போடும் இவர்களை விட்டு அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்தினேன்.   தாத்தா பாட்டியைப் பற்றி அம்மா சொன்னது கவலையாய் இருந்தது. அம்மாவிற்கு அவர்களைப் பிடிக்கிறதில்லை. நான் என்ன செய்வது. ஒன்றும் தெரியாமல் இரவு முழுவதும் அழுதுகொண்டிருந்தேன்.

விடிந்து விட்டது. பத்துத்தரம் மணியடித்து ஓய்ந்தது. வெளியில் வர மனமின்றி  கட்டிலில் படுத்திருந்தேன்.

“உமா…..உமா…”  அம்மாவின் குரல்.

வெளியில் வந்து அம்மாவைப்பார்த்தேன். கன்னம் வீங்கி கண்கள் சிவந்திருந்தது.

“அடியும் உதையும் வாங்கிக்கொண்டு என்னால இருக்கேலாது. நான் போறன்.”

” நெடுகவும் அடிக்கிறமாதிரி சொல்லுறாய்”  அப்பா அம்மாவிடம் சொன்னார்.

“அடிக்கத்தொடங்கியாச்சு இனி தொட்டதுக்கெல்லாம் கை நீளும். நான் போறன். இந்த நாட்டில தனிய என்னால இருக்கேலும்.”

” என்னம்மா சொல்லுறீங்கள் ” பதறிப்போய் கேட்டேன்.

“இனி சேர்ந்து இருக்கேலாது. நீ வளந்திட்டாய் நல்லாய் யோசி. என்னோடஇருக்கப் போறியா இல்லை அப்பாவோடையா … நீயே முடிவு எடு. நீ என்ன முடிவு எடுத்தாலும் எனக்குச்  சம்மதம்.”

அப்பாவைத் திரும்பிப் பார்த்தேன்.

“அம்மாவின் திமிரைப்பார். இனி என்னாலையும் சேர்ந்திருக்கேலாது எனக்கு நிம்மதி வேணும். ஆருடன் இருக்கப்  போறாய்   ” என்றார்.

“என்னைப் பற்றி யோசியாமல் சண்டை போட்டீங்கள். இப்ப பிரியப் போறீங்கள் என்னால உங்களை விட்டு இருக்கேலாது. ” எனக்கு அழுகை வந்தது.

“நீ ஆரோட  இருந்தாலும் விரும்பிற நேரம் வந்து பார்க்கலாம்.”

அம்மா சொன்னாள்.   அப்பாவும் தலையை ஆட்டினார்.

என் மனம் வேதனையால் துடித்தது.

“அம்மா நான் அப்பாவோட  இருந்தால் என்னை விட்டிட்டு இருப்பீங்களா…”

“இருக்கத்தானே வேணும். எப்பவும் நீ என்னிடம் வரலாம்.”

என் மனம்  இறுகிக்கொண்டு வந்தது. இருவரையும் உற்றுப் பார்த்தேன்.

“அம்மாவுக்கு அப்பா வேண்டாம் என்றால்…அப்பாவுக்கு அம்மா வேண்டாம் என்றால்…எனக்கும்   நீங்கள் இருவரும் வேண்டாம்.” என்றேன்.

” உமா என்ன  சொல்லுறாய்”  இருவரும் திகைத்து  விட்டனர்.

” நிம்மதி தேடிப்போகும் உங்களுக்கு நானும் பாரம்தானே..”

“தனிய நீ எப்பிடி….. படிக்கிற வயசு….வருமானமில்லை…என்னோடு இரு இல்லை…அப்பாவோடு இரு.”

அம்மா என் கையைப் பிடித்துக்கொண்டு சொன்னாள். நான் அவளின்  கையை உதறினேன்.

“எதற்கெடுத்தாலும்  சண்டை. எப்பவாவது அப்பாவுக்காக விட்டுக்கொடுத்து  இருக்கிறீங்களா…

அப்பாவும் பொறுமையாய் இருக்கிறதில்லை. கோபம் வந்தால் கத்திறது.  வெளிநாடு வந்தால் அவர்கள் போலவா இருக்க வேணும். தொட்டதற்கு எல்லாம் சண்டை, பிரிவு.

நீங்கள் சண்டை பிடிக்கிற நேரமெல்லாம் கவலைப்படுகிறது, கஷ்டப்படுகிறது   நான்தான்.  மனம்  விட்டுக் கதைக்கக் கூட ஆருமில்லை.    என்னைப் பற்றி உங்களுக்கு கவலையில்லை. எப்ப பிரியப் போறீங்கள் எண்டு சொல்லுங்கோ அன்று நானும் வீட்டைவிட்டுப் போறன் போனால் நீங்கள் சமாதானமானாலும் நான் திரும்பி வரமாட்டன்”. சொல்லிவிட்டு விக்கி விக்கி அழத்தொடங்கினேன்.

அப்பா திகைத்தபடி என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்..

அம்மா பதட்டத்துடன் “உன்னில அக்கறையில்லாமலா உனக்காக அப்பாவுடன் சண்டைபோட்டேன். காசு சேக்கிறது….நகை செய்யிறது….. ”

“வேண்டாம் அம்மா சண்டை போட்டு எனக்கு ஒண்டும் செய்ய வேணாம். எனக்கும் நிம்மதியில்லை. நிம்மதியில்லாத இடத்தில நானும் இருக்கமாட்டன்.  நானும் ஒரேயடியாய்ப் போறன்.” உறுதியான குரலில் சொன்னேன்.

அப்பா  எழுந்து அருகில் வந்தார். அவரின் கண்கள் கலங்கியிருந்தது.

ஆதரவாக  என்  தலை  மீது  கையை  வைத்துத் தடவிக்கொடுத்தார்.

“அழாதேம்மா….உன்னை எவ்வளவு கவலைப்பட வைத்துவிட்டோம். உனக்காக நாங்கள் எதுவும் செய்வோம்..உன்னை என்னாலும்   பிரியமுடியாது.”

என்று சொன்னபடி தன்னோடு அணைத்துக் கொண்டார். மறு கையால் அம்மாவைத் தன் பக்கம் திருப்பினார்.  அம்மா கண்களில் வழிந்த நீருடன் நிமிர்ந்து அப்பாவைப் பார்த்தாள். அவரின் கண்களில் வேதனை தவிப்பு தெரிந்தது. அதை புரிந்து கொண்ட அம்மா அப்பாவின் கையையெடுத்து தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு என்னைப்பார்த்து பாசத்துடன்  சிரித்தாள். அம்மாவின் அந்தச் சிரிப்பு ஆழமாய் என் மனதில் பதிந்து கொண்டது.  நானும் சந்தோசத்துடன் அப்பாவோடு அம்மாவையும்  சேர்த்து என்னோடு இறுக  அணைத்துக் கொண்டேன்.

 

 

நிறைவு…

 

– விமல் பரம் –

 

ஓவியங்கள் : இந்து | கனடா

 

நன்றி | ஒருபேப்பர் (லண்டன்)

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்