Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சில நிமிட நேர்காணல் ‘யாழ் தேவி பாடல் ஈழத் தமிழரின் அடையாளம்’ | கவிஞர் வசீகரன் வணக்கம் லண்டனுக்குச் செவ்வி

‘யாழ் தேவி பாடல் ஈழத் தமிழரின் அடையாளம்’ | கவிஞர் வசீகரன் வணக்கம் லண்டனுக்குச் செவ்வி

4 minutes read

‘யாழ் தேவியில் நாங்கள் காதல் செய்வோம்…’ பாடல் வழியாக இலங்கையின் பட்டிதொட்டி எங்கும் அறிமுகமானவர் வசீகரன். ஈழத்தை பூர்வீகமாகக் கொண்ட வசீகரன், தன்னுடைய 17ஆவது வயதில் நோர்வேயிற்குப் புலம்பெயர்ந்தவர். காதல் கடிதம் என்ற ஆல்பம் வழியாக தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் பரீட்சியமான வசீகரன் நோர்வே சர்வதேச தமிழ் திரைப்பட விழாவை தொடர்ந்து நடாத்தி வருபவர். பாடலாசிரியர், கவிஞர், சமூக ஆர்வலர் எனப் பல முகங்களைக் கொண்ட வசீகரன் 18 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய காதல் கடிதம் ஆல்பம் பற்றியும் யாழ் தேவி பாடல் பற்றியும் அமைகிறது இச் சிறிய நேர்காணல்.

காதல் கடிதம் வசீகரன், யாழ் தேவி வசீகரன்.. இதில் எது உங்களுக்கு பிடித்தமான அடையாளம்?

என்னுடைய இரண்டு கண்களில் வலது கண்ணா இடது கண்ணா பிடித்திருக்கிறது? .. என்ற தொனியில் கேட்கிறீர்கள்… காதல் கடிதம் வசீகரன் பிடித்தமான அடையாளம் ஏன் என்றால் அதில் உள்ள பாடல்கள் அனைத்தும் எனது முதல் குழந்தைகள் போல. 

இருந்தாலும் கடைக்குட்டி யாழ்தேவியும், ஐந்தாவது பாடல் “பனங்காய்ப் பணியாரம்” எனக்கும் மெல்லிசைத் தேவன் உதயன் விக்டருக்கும் பெரும் அடையாளத்தை கொடுத்த பாடல்கள்.  

யாழ் தேவி பாடல் பெற்ற மகத்தான வெற்றியை நினைவுபடுத்துங்கள்?

இந்தப் பாடல் ஈழத்தமிழர்களின் அடையாளப் பாடலாக எப்போதும் இருக்க வேண்டும் என்று கணித்தே உருவாக்கினோம்.

அது போலவே நடந்தது. இன்று போல சமூக வலைத்தளங்கள் இல்லாத காலத்தில் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பரபரப்பையும், மக்கள் மனங்களில் நீங்காத இடத்தையும் இன்று வரையும் பிடித்து வைத்திருக்கின்ற பாடல். ஒரு படைப்பின் மூலமே நான் தமிழ் உலகம் முழுவதும் அறியப்பட்டேன். அது என் வாழ்நாள் முழுவதும் அதற்குப் பின்னும் தலைமுறை தலைமுறையாக “யாழ்தேவி” தொடர்வண்டி ஓடும் போது எல்லாம், அதில் பயன்படும் போதும் அனைத்து மக்களின் நினைவுகளைச் சுமந்து செல்லும் என்று நம்புகின்றேன். தாயகத்தில் உள்ள அனைத்து வானொலிகளும் தொடர்ந்து இன்றுவரையிலும் ஒளிபரப்பிக்கொண்டே இருக்கின்றார்கள் என்பது பெரிய மகிழ்ச்சி.  

காதல் கடிதம் ஆல்பத்தில் பணியாற்றியவர்கள் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..

இசைத்தோழன் உதயன் விக்டர் அவர்களை இணையதளம் வாயிலாக தேடிப்பிடித்தேன். அன்று அவரோடு ஏற்பட்டு நட்பு இன்று வரையும் நீடிக்கின்றது. 

காதல் கடிதம் இசைத்தொகுப்பு  உருவான போது நான் இசைப்பாடல் உலகுக்கு புதியவன். என்னை முழுமையாக ஏற்றுக்கொண்டு, எனது வரிகளை உள்வாங்கி, என்னை பாடல்களை சிறப்பாக எழுதும்படி செதுக்கியவர் உதயன் அவர்கள். அது ஒவ்வொரு பாடல் உருவாக்கத்தின் போதும் தொடர்கின்றது. எழுதியது எழுதல் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒரு பாடல் சிறப்பாக வர எவையெல்லாம் தேவையோ அதற்காக இருவரும் உழைக்கின்றோம்.

என்னுடைய முதல் பாடலான “எழுது எழுது என் அன்பே” பாடலை  பாடகர் சிறினிவாஸ் அவர்களும், “யாரும் எழுதாத பாடல் எழுதத் தானே ஆசை” பாடலை பாடகர் உன்னிமேனனும், ஜீவராகவும்( பாடகர் கிருஷ்ணராஜின் மகள்) பாடியுள்ளார்கள்.

“ஈழப்பெண்ணே ஈழப்பெண்ணே ”  பாடலை மதுபாலகிருஷ்ணன், “உயிருக்குள் ஊர் சுற்றும்” பாடலை உன்னிகிருஷ்னன் அவர்களும்,  உங்கள் அனைவருக்கும் பிடித்தமான பனங்காய்ப் பணியாரம் பாடலை பாடகர் கிருஷ்ணராஜ் அய்யா அவர்களும், பாடகி அம்பிலி அவர்கள் எழுது எழுது என் அன்பே – பெண் குரலிலும் , ஒரு நதியின் பெயரோடு பிறந்தவளே பாடலை விதுபிரதாபனும், நிறைவாக யாழ் தேவியில் காதல் செய்தால் பாடலை சாம்.பி.கீர்த்தன் அவர்களும் பாடியுள்ளார்கள்.

இன்னும் பல பக்கவாத்தியக் கலைஞர்கள் பலரும் இதில் பணியாற்றியுள்ளார்கள். சிறப்பாக ஒலிப்பதிவாளர் ரி.எஸ்.கிருபாகரன் அண்ணாவையும் சொல்லவேண்டும்.

காதல் கடிதம் ஆல்பம் எப்படி காதல் கடிதம் திரைப்படம் ஆனது?

2003 இல் வெளியான காதல் கடிதம் இறுவட்டு பிரபல்யமானதை பார்த்துவிட்டு  ஏன் இதை ஒரு திரைப்படமாக உருவாக்கக் கூடாது என்று உதயன் அண்ணா சொன்னார். நாங்கள் இருவரும் சேர்ந்து தயாரிப்பாளரை தேட ஆரம்பித்தோம். இதற்கான கதையை இசையமைப்பாளர் உதயனின்  மனைவி வினோலியா நீதிதேவன் எழுதினார்.

அதன் பின்னர் இயக்குனர் சேரனிடம் உதயவியாளராகப் பணியாற்றிய முகேஷ் திரைப்படத்தை இயக்கினார். Waterfalls Movie Makers நிறுவனத்தினர் இத்  திரைப்படத்தை தயாரிக்க முன் வந்தார்கள்.  

காதல் கடிதம் இறுவட்டின் பெயரிலேயே இத் திரைப்படமும் உருவானது. காதல் கடிதம் திரைப்படத்தில் “யாழ் தேவி” பாடலை படப்பிடிப்புச் செய்வதற்கான அனுசரனையை சக்தி எப்.எம் வானொலி வழங்கியது என்றுமே நன்றியோடு நினைவு கொள்ளத்தக்கது.

இது தொடர்பாக மேற்கொண்டு அறிய விரும்பின் : இங்கே பார்வையிடவும் : 

http://kadhalkaditham.blogspot.com/

நேர்காணல் – பூங்குன்றன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More