Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் கவிதை | ஒரு பேணியின் கதை! | அலெக்ஸ் பரந்தாமன்

கவிதை | ஒரு பேணியின் கதை! | அலெக்ஸ் பரந்தாமன்

1 minutes read
ஓர் ஆணிடம் பெண் என்ன எதிர்பார்க்கிறாள்?! - Kungumam Tamil Weekly Magazine

“””””””””””””””””””””””””””””””””””””””””””
எண்ணற்ற
ஆழ்மன வலிகளனைத்தையும் சுமந்தபடி…
அயர்ந்து கிடக்கிறது தெருவின் ஓரமாய்
அகவை
அறுபத்தொன்றுக்கான ஒரு யாசகப்பேணி!

அதன் இளவயதின் கனவுகள்
சீதனச்சேமிப்புக்காய் சிதைந்து போயின.
பருவச்சிறகுகளற்ற பாலைவனப் பயணியாக
தொடர்கிறது… இப்பொழுதும் அதன் பயணம்.

‘கொழுகொம்புகள்’ அற்ற நிலப்பரப்புகள்மீது பதியும் அதன்
பாதச்சுவடுகளூடாகத் தெரிகின்றன
பசியின் கொதிப்புகள்.

வெட்டைவெளிகளில்
மூடப்படாத புத்தகமாகிப்போன
அதன்வாழ்வெனும் கதையை
என்னைத்தவிர,
இங்கே வேறு எவராலும்
மொழி பெயர்க்க இயலாது.

மெழுகாய் உருகி…
ஊதுவர்த்தியாய் மணம் பரப்பி…
வெண்மல்லிகையாய் வாசம்வீசி…
விளக்காய் ஒளி கொடுத்துவிட்டு,
விரைந்து பின்னேபோன
தன் அகவைகளை மீட்டெடுக்க முடியாததாக
இன்று
ஒருதெருவின் ஓரத்தில்
துயில் கொள்கிறது அப்பேணி.

அந்திமக்கணக்கு
ஆருக்கும் தெரியாதவொரு சூட்சுமத்துள்
இருளுக்கும் அதன் தற்கால வாழ்வுக்கும்
இடைநிலை புரிபடுவதாயில்லை எனக்கு.
இருப்பினும்,
வேளை வரும்போது
கணக்கு முடிக்கப்படுவது நியதியன்றோ!

மெழுகாய் உருகி…
ஊதுவர்த்தியாய் மணம் பரப்பி…
வெண்மல்லிகையாய் வாசம்வீசி…
விளக்காய் ஒளி கொடுத்துவிட்டு
ஒருநாள்
உறக்கம்போல் கிடக்கும் உயிரற்று அப்பேணி
ஒரு தெருவில்… எங்கோ ஒரு மூலையில்!
**
(கூடப்பிறந்த பெண் சகோதரிகளுக்காய், அவர்கள்தம் சீதன சேகரிப்புக்காய்  தம் கனவுகளைத் தொலைத்தபடி… இழந்தபடி…
உழைத்துக்கொண்டிருக்கும் சகோதரர்களுக்காக…)

  • அலெக்ஸ் பரந்தாமன்,
       புதுக்குடியிருப்பு.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More