Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் கல்முனை பூபால் ‘கவிமாமணி நீலாபாலன்’ காலமானார்!

கல்முனை பூபால் ‘கவிமாமணி நீலாபாலன்’ காலமானார்!

2 minutes read

கவிஞர் கல்முனை பூபால் என்ற
கவிமாமணி நீலாபாலன்
இன்று காலை காலமானார்…

– ஈழக்கவி

தமிழ்க் கவிதை இலக்கியப் பரப்பில் கடந்த நான்கு தசாப்தங்களாகப் பேசப்பட்டு வருகின்ற கவிஞர் கல்முனை பூபால் என்பவரே கவிமாமணி நீலாபாலன். புதிது புதிதான விடயத் தேடல்கள், அருமையாகவும் ஆழமாகவும் சொல்கின்ற சொல் ஆட்சி, படித்தவுடன் புரிந்து கொள்ளக் கூடிய விளக்கமான படிமங்கள், உணர்ந்த பின் பிரமிக்க வைக்கும் குறியீடுகள் என்றெல்லாம் எல்லோரும் விரும்பிப் படிக்கின்ற கவிதைகளை தரும் படைப்பாளர் நீலாபாலன்.

அவருடைய ஒவ்வொரு கவிதையிலும் உயிரிருக்கும். ஒவ்வொரு வரிகளிலும் பொருளிருக்கும், செய்யுள் நடையில் எழுதினாலும், அல்லது புதிதாகப் பிரசவித்தாலும் இவர் எழுதுவது கவிதை. அவை கட்புலனுக்குரியதாக செவிப்புலனுக்குரியதாக மாத்திரமல்லாது ஆழமான உணர்வுகளையும் தொட்டுப் பார்க்கும் ஆற்றலுடையவை.


பொருத்தமான படிமங்களோடு, மயக்கம் தராத குறியீட்டில் கவிதை மொழியினைப் புரிந்து கொண்டு உணர்வுபூர்வமான கவிதைகளைப் படைக்கும் அற்றல் நிறைந்த நீலாபாலன் கவிதை மொழிவதிலும் ஆற்றலும், ஆளுமையும் நிறைந்தவர். பல கவியரங்குகள் இவரது கவிதைப் பொழிவால் களைகட்டி யிருக்கின்றன.


இலக்கியத்துறையில் பன்முகத் திறமையாளரான இவர் கவிதை, சிறுகதை, குறுங்கதை, மெல்லிசைப் பாடல்கள் எழுதியுள்ளதுடன் திறனாய்வாளருமாவார். இவர் பதினைந்து நாடகங்களுக்கு மேல் எழுதி மேடையேற்றி பரிசுகள் பெற்றிருக்கின்றார். கவிமணி நீலாபாலன் மக்கள் கவிஞர். இலங்கை வானொலி தமிழ்ச் சேவையில் 1990 முதல் 1997 வரையான காலப் பகுதியில் இவர் தொகுத்து வழங்கிய ‘கவிதைக் கலசம்’ நிகழ்ச்சி வரலாற்று சிறப்பு வாய்ந்தது.


இதன் ஊடாக பல கவிஞர்களை உருவாக்கி உற்சாகப்படுத்திய தாய்க் கவிஞர் இவர். அது மட்டுமன்றி இலங்கை வானொலியில் ‘முத்துப் பந்தல்’ என்ற நிகழ்ச்சியின் ஊடாக பல இலக்கியவியலாளர்களை பேட்டி கண்டு அறிமுகம் செய்துள்ளார். இலங்கை வானொலி, ரூபவாஹினியில் பல நிகழ்ச்சிகளில் பங்குபற்றியுள்ள இவர், இதுவரை 80 கவியரங்குகளில் பங்குபற்றியுள்ளார். இலங்கை வானொலியில் பதினைந்து கவியரங்குகளை தலைமை தாங்கி நடத்தியுள்ளார்.


மலையக பெருந்தோட்டத் துறையில் காரியாலய முதல்வராக உத்தியோகம் பெற்று மலையகத்தையே புகுந்தகமாகவும் ஆக்கிக் கொண்டு, 1975ம் ஆண்டிலிருந்து நீலாபாலனாக தொடர்ந்து எழுதிவரும் ‘கல்முனைப் பூபால்’ 1980களில் உலக கவிதைப் போட்டியொன்றில் முதல் பரிசைப் பெற்றுக் கொண்டார்.
மலையகத்தில் பண்டாரவளை நகரில் கவிதைக்குப் பெருவிழா எடுத்து பல படைப்பாளர்களை பாராட்டி கௌரவித்தார். பாவரசர். கவிமணி, இலக்கிய வித்தகர், தமிழ்மணி, கவிதைப் பரிதி கலைத் திலகம், கலாபூசணம், கவிமாமணி என்று இருபத்திரண்டு பட்டங்கள், விருதுகள் பெற்றுள்ளார்.


ஊவா தமிழ்ச் சங்கத் தலைவராக, கல்முனை புதிய பறவைகள் கவிதா மண்டல முதல்வராக இருந்து வரும் இவரது நூல்கள் 2010இல் இலந்தைப் பழத்துப் பூக்கள், 2013இல் கடலோரத் தென்னை மரம் என நூலுருவாக்கம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செல்லையா பேரின்பராசா


தினகரன் வாரமஞ்சரி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More