Monday, November 29, 2021

இதையும் படிங்க

நினைத்தாலே புல்லரிக்கும் நெடும்புகழன் நாளின்று | பாவலர் அறிவுமதி

காட்டையே கருவறை ஆக்கியேபுலிகளைப் பெற்றவன்பிறந்தநாள் போற்றுவோம் அறத்திலும் பிழைவிடாபுறத்திலும் பிசைகிடாஅண்ணன் நாள்ஆராரோ போற்றுவோம் வல்வெட்டித்...

இன்று நவம்பர் 26 | ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ்.பொ. நினைவுதினம் | முருகபூபதி

நனவிடை தோய்தல் குறிப்புகள் !                                                         எழுதியவர் - முருகபூபதி

பெயரெனும் காவியம் | தீபச்செல்வன்

வீட்டின் சுவர்களில்புகைப்படங்கள் இல்லைதெருக்களில் சிலைகள் இல்லைபள்ளிப் புத்தங்களிலும்மறைக்கப்பட்டது பெயர் படை நடத்திவெற்றிகள் நிறைத்த மண்ணில்எந்த தடயமும் இல்லை உமைப் பற்றியெந்த காவியமும்...

தமிழ்பெண் பொதுவெளி | தமிழீழத்தில் அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும் | நூல் வெளியீட்டு விழா

நூல் வெளியீட்டு விழா ஆய்வாளர் ந.மாலதி அவர்களின் 'எனது நாட்டில் ஒரு துளி நேரம்', 'விடிவிற்காய்', 'லத்தீன் அமெரிக்கா:...

செங்காந்தள் பூக்கள் | தீபச்செல்வன்

நினைவு பூத்திருக்கும் கற்களைவேர்களுடன் அகழ்ந்து உடைக்கையில்ஆடியது தேசம்.. கல்லறைகள் உடைக்கப்பட்டனமறுக்கப்பட்ட இருப்பிற்காய்ப்போராடி மாய்ந்தவர்களுக்குஉறங்க இடம் மறுக்கப்பட்டது

தாயம் | கமல் ஆபரன்

6~வேண்டிய எண் விழ நேர்பவள்தாயக்குட்டானில் ஓதுவதை விடவலிமை மிக்கதாய்என்ன மந்திரங்கள் இருந்து விடக்கூடும்? 5~தொலைந்துபோன சிவப்புக் காய்க்கு பதிலாக...

ஆசிரியர்

சின்னாசிக்கிழவனின் செங்காரிப்பசு | சிறுகதை | தாமரைச்செல்வி

சின்னாசிக் கிழவனின் செங்காரிப் பசு காணாமல் போய் இன்றுடன் இரண்டு மாதங்களாகி விட்டது. காலையில் கயிற்றை அவிழ்த்து வீட்டுக்கு பின்புறமிருக்கும் பற்றை வெளியில் மேய விட்டு விட்டு வந்து பின்னேரம் போய்ப் பார்த்தால் செங்காரியை காணவில்லை. வழக்கமாய் அது எங்கேயும் தூரமாய்ப் போகாது. மிகவும் சாதுவான பசு. அதைக் காணவில்லை என்றதும் சின்னாசிக் கிழவனுக்கு ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டுப் போய்விட்டது.

சீவியத்துக்கு இப்போதைக்கு ஆதாரமாக இருக்கும் ஒரே ஜீவன். இன்னும் இரண்டு வாரத்தில் கன்று போடும் நிலையிலுள்ள பசு. கன்று போட்டதும் எடுக்கும்

பாலை விற்று வரும் காசில் அரை வயிறாவது நிரம்பும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரம் பார்த்து எங்கேதான் போயிற்றோ.

அவனால் இரவுகளில் நிம்மதியாக உறங்க முடியவில்லை. பகலில் ஒரு வேலை செய்ய இயலவில்லை. எந்நேரமும் அதன் நினைவுதான். போதாததற்கு துரையனும் செந்தியும் “எங்கயாவது போய்த் தேடி எங்கட செங்காரியை கூட்டி வா அப்பு. இப்ப கண்டு போடுற நேரம். “.  என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். துரையன்தான் அதற்கு செங்காரி என்ற பெயரை வைத்திருந்தான். அதன் கழுத்திலேயே தொங்கிக்கொண்டு திரிவான்.

இப்போது அதை எங்கேயென்று போய் தேடுவது…..

குஞ்சுப்பரந்தன் பெரியபரந்தன் எல்லாம் தேடியாகி விட்டது. பொறிக்கடவை அம்மன் கோயிலடி சுற்றுப்புறமும் பார்த்தாகி விட்டது. பக்கத்தில் செருக்கன் வரைக்கும் பூநகரி வீதியில் குடமுருட்டி ஆறு வரைக்கும் அலைந்து திரிந்தாகி விட்டது. செங்காரியைப் பார்த்ததாக யாரும் சொல்லவில்லை.

செங்காரி மெல்லிய தவிட்டு நிறத்தில் இரண்டு கொம்புகளுக்கும் நடுவே உள்ளங்கையளவுக்கு வெள்ளை படர்ந்திருக்க பார்வைக்கு அழகாய் இருக்கும் பசு. கழுத்தில் முறுக்கிய கயிற்றில் ஒரு சிறு மணி கோர்த்து துரையன் கட்டி விட்டிருந்தான். அது நடக்கும் போது மணி சிணுங்கும் ஓசை கேட்பதற்கு இனிமையாய் இருக்கும்.

செங்காரிப்பசு வீட்டில் நிற்கும் நேரமெல்லாம் துரையனும் செந்தியும் அதைக் கட்டிப் பிடித்து விளையாடிக்கொண்டிருப்பார்கள். இப்போது அது காணாமல் போனதில் அவர்களுக்கும் அதிக கவலை இருந்தது. செங்காரிப்பசுவுக்கு என்ன நடந்திருக்கும் என்று யோசித்து யோசித்து சின்னாசிக் கிழவனுக்கு தலையே வெடித்து விடும் போலிருந்தது.

குடிசைக்கு வெளியே குளிர் காற்று வீசிக்கொண்டிருந்தது. இந்த ஐப்பசி கார்த்திகையில் எந்நேரமும் மழை பெய்யும் சாத்தியம் இருக்கிறது. ஆனாலும் பகலில் வெய்யில் எறித்துக்கொண்டிருக்கிறது.

குடிசைக்குள் புகை பிடித்த லாம்பு மெலிந்த சுடரில் எரிந்து கொண்டிருக்க சின்னாசிக்கிழவன் மரக்கப்புடன் சாய்ந்து அமர்ந்தபடி பக்கத்தில் உறங்கிக்கொண்டிருந்த துரையனையும் செந்தியையும் பார்த்துக்கொண்டிருந்தான்.

ஒல்லியாய் சிறிது கூனல் விழுந்த தோற்றத்தில் இருக்கும் சின்னாசிக்கிழவனுக்கு எழுபது வயதுக்கு மேலாகிறது. வாழ்வின் நெருக்கடிகள் ஏற்படுத்திய வலிகளின் வரிகள் முகத்தில் தாறுமாறாய் கோடுகளை பதித்திருந்தது. உறங்கிக்கொண்டிருக்கும் பதின்மூன்று வயது துரையனினதும் பதினொரு வயது செந்தியினதும் எதிர்காலம் என்னாகுமோ என்ற கவலையிலேயே ஒவ்வொரு நிமிடமும் கழிகிறது. ஒரு பழைய பாயில் பவளக்கொடியின் நைந்துபோன பழைய சேலையை விரித்து படுத்திருக்கும் அவர்களைப் பார்க்க நெஞ்சுக்குள் ஏதோ உருள்வது போலிருக்கிறது. அவன் கொஞ்சம் அசைந்து சேலையை எடுத்து அவர்களுக்கு போர்த்தி விட்டான்.

குஞ்சுப்பரந்தன் பின் பகுதியில் காட்டுக்கரையில் குடிசை போட்டு பல வருடங்களாக இருக்கிறார்கள். அவர்கள் குடிசைக்கு ஒரு புறம் கினியா மற்றும் ஈச்சம் பற்றைகள் படர்ந்திருக்க பாலை, விளாத்தி, புளியமரங்கள் நிற்கும் சிறு காடு. இந்த கார்த்திகையில் பரவலாக பூத்திருக்கும் கார்த்திகைப்பூக்கள். மறுபுறம் வயல் வெளிகள்.

பவளக்கொடியுடன் மகன் மருமகள் குழந்தைகள் என்று இந்தக் குடிசையில்தான் வாழ்க்கை கடந்திருக்கிறது. ஏழ்மை இருந்தாலும் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு இருந்தது. நெல் விதைப்புக் காலங்களில் வயல் வேலைக்கு, வேலி கட்ட, வாய்க்கால் வெட்டபோவது என்று ஏதாவது வேலை இருந்துகொண்டிருக்கும்.ஆனால் நாட்டுப்பிரச்சனை இராணுவ தாக்குதல் என்று வெடித்த போது எல்லாவற்றையும் இழந்து ஊர் ஊராய் ஓட வேண்டியிருந்தது. கடைசியாய் ஏற்பட்ட இடப்பெயர்வின் போது துரையனுக்கு மூன்று வயது செந்திக்கு ஒரு வயது. குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு சனங்களோடு சனங்களாக ஒவ்வொரு இடமாக ஓடிய போது பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமில்லை. பசி பட்டினியோடு உயிர்ப் பயமும் சேர்ந்து கொள்ள துயர்ப்பட்ட நாட்கள் அவை. சுதந்திரபுரத்தில் போய் இருந்த போதுதான் இடி விழுந்தது போல் அந்த நிகழ்வு நடந்தது. பெரும் சத்தத்துடன் காற்றைக் கிழித்துக் கொண்டு வந்து விழுந்து வெடித்த ஷெல் வீச்சுக்கு பயந்து பதுங்குகுழி தேடி ஓடியபோது ஷெல் பட்டு மகனும் மருமளும் அந்த இடத்திலேயே பலியாகிப் போனார்கள். மற்றவர்கள் சிறு சிறு காயத்தோடு தப்பிக்கொண்டார்கள். குழந்தைகளைக் கொண்டு சின்னாசிக்கிழவனும் பவளக்கொடியும் ஆட்களோடு சேர்ந்து அழுது கொண்டே ஒவ்வொரு இடமாக அலைந்து கடைசியாக செட்டிகுளம் போய் சேர்ந்தார்கள்.

அதன் பிறகு செட்டிகுளம் முகாமில் முள்ளுக்கம்பிகளுக்கு உள்ளே ஒரு வருஷம் இருந்துவிட்டு மீள்குடியேற்றம் என்று மீண்டும் ஊருக்கு வந்தார்கள். ஏதோ அந்த நேரம் பவளக்கொடி இருந்தபடியால் இந்தப்பிள்ளைகளை பார்த்து எடுத்து வளர்த்து விட்டாள். அவளுக்கும் முழங்கால் எலும்புக்குள் தொடர்ச்சியாய் வலி இருந்தது. ஷெல்லின் சன்னம் அதற்குள் இருந்து வலியைக் கொடுத்துக் கொண்டிருந்தது. சத்திரசிகிச்சை மூலம் அதை அகற்றுவதில் சிக்கல் இருப்பதாக வைத்தியர் கூறினார். கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்கு போவதும் மருந்து எடுப்பதுமாக கொஞ்சகாலம் அலைந்து திரிந்தார்கள். தொடர்ச்சியாக காய்ச்சல் வேறு வந்து பாடாய்ப்படுத்தியதில் அவளும் கண் திறக்காமல் கிடந்து ஒரு மழை நாளில் போய்ச்சேர்ந்து விட்டாள்.

அவள் போய் நாலு வருஷமாகிறது. இன்றைக்கு இந்த இரவில் மட்டுமில்லை எப்போது பவளக்கொடியை நினைத்தாலும் நெஞ்சு அடைத்துக் கொண்டு விடும். எத்தனையோ கஷ்டங்கள் இருந்த போதும் கூடவே வாழ்ந்தவள். அவள் இல்லாத நிலமை வாழ்வின் துன்பங்களை அதிகமாக்கி காட்டியது. ஏனணை என்னை விட்டுப் போனாய். ….. என்று நொந்து நொந்து அழத்தான் முடிகிறது. அவள் நினைவாய் இன்று மிச்சமிருப்பது அவள் உடுத்திய இரண்டு மூன்று நைந்து போன சேலைகள்தான். இப்போது யோசித்தாலும் மனப்பரப்பில் இருக்கும் அவள் முகம் மட்டுமே அவள் அடையாளமாக மிஞ்சியிருக்கிறது. அவர்களின் ஏழ்மை நிலை ஒரு போட்டோ எடுத்து வைத்திருக்கக்கூட அனுமதித்திருக்கவில்லை. நினைவுப் பரப்பிலிருந்து அவள் முகம் மறைந்து போனால் அவனுடனேயே அவளின் அடையாளமும் இந்த உலகிலிருந்து மறைந்து போய்விடும்.

சமீப நாட்களாக ஒரு இயலாத்தனம் சோர்வு தனக்கும் ஏற்பட்டு வருவதை அவனால் உணர முடிகிறது. முதுமையின் வெளிப்பாடாக இருக்கக்கூடும். நினைவு தெரிந்த காலத்திலிருந்து உழைத்து உழைத்து உரமேறிய உடம்புதான். இப்போது அந்த வேகம் குறைந்து கொண்டே வருகிறது. இப்போதெல்லாம் மண்வெட்டி பிடித்து மண் கொத்தினாலோ வரம்பு செதுக்கினாலோ களைப்பு வருகிறது. இந்த இயலாத்தனம் சின்னாசிக்கிழவனை மிகவும் பயமுறுத்தியது. இந்தப் பிள்ளைகள் வளர்ந்து ஆளாகும் வரை தான் இருந்திட வேணும் என்பதுதான் அவனது பிரார்த்தனை. பொறிக்கடவை அம்மனிடம் தினம் வேண்டும் வேண்டுதலும் அதுதான். சமீப நாட்களாக வயல் வேலைகளும் தொடர்ந்து கிடைப்பதில்லை. களை எடுக்கும் காலங்களில்தான் ஓரளவு வேலை செய்யக்கூடியதாக இருக்கும். யார் வீட்டுக்காவது வேலி அடைக்கவோ தேங்காய் பிடுங்கவோ போவதுண்டு. அப்படி ஏதும் உழைப்பு இருந்தால்தான் அரை வயிறேனும் நிரம்பும்.

மீள்குடியேற்றம் என்று திரும்ப வந்த நேரம் மரக்கப்புகளும் மேலே போட தகரங்களும் தந்திருந்தார்கள். அதை வைத்துத்தான் இந்த குடிசையை அமைத்துக்கொண்டான். மண் குழைத்து அரைச்சுவர் வைத்து காட்டுத்தடிகளினால் வரிந்து அடைக்கப்பட்ட குடிசை. பலவருடங்களாக இருக்கும் நிலம்தான். ஆனால் சொந்தம் கொண்டாட எந்த ஆவணமோ பதிவுகளோ இல்லாததால் மீள்குடியேற்றத்துக்கான வீட்டுத்திட்டம் அவனுக்கு கிடைக்க வில்லை. காலம் முழுக்க குடிசை சீவியம் என்று தலையில் எழுதி வைத்திருக்கிறதே என்ற ஆற்றாமை…. எதுவுமே செய்ய முடியாத இயலாமை…… எல்லாம் சேர்ந்துதான் அவனை ஒரேயடியாக தளரச்செய்து விட்டது. யோசித்து யோசித்து என்னதான் நடக்கப்போகிறது….

சின்னாசிக்கிழவன் எழுந்து போய் பானைக்குள் இருந்த தண்ணீரை பேணிக்குள் எடுத்து மள மளவென்று குடித்தான். இந்த குளிர் நேர இரவில் தாகம் எடுத்தது அவனுக்கு ஒன்றும் அதிசயமாக தெரியவில்லை. வயிற்றில் பசி இருந்தாலும் நா வரளத்தான் செய்யும் என்பதை அவன் அனுபவத்தில் உணர்ந்தவன். மறுபடி வந்து பாயில் அமர்ந்து மரக்கப்பில் சாய்ந்து கொண்டான். இப்போது என்ன நேரம் வரும் என்று யோசித்தான். எட்டரை ஒன்பது வரும். பக்கத்தே சின்னதாய் வாய்க்கால் ஓடுகிறது. அதில் தவளைகளின் கரக் கரக் என்ற சத்தம் கேட்கிறது. தூரத்தே இடிச்சத்தம் தேய்வாக கேட்கிறது. மழை வரப் போகிறதோ தெரியவில்லை. மழை பெய்தால் செங்காரி நனைந்து விடுமே…

எங்கே அலைகிறதோ… என்ர அம்மாளாச்சி நீதான் செங்காரியை எங்களிட்ட சேர்த்துவிட வேணும்.

மன பதை பதைப்பு நீராய் கசிந்து சுருக்கம் விழுந்த முகத்தில் கோடு கீறி இறங்கியது. வயிறு காந்தியது. எதை நினைத்தாலும் கடைசியில் நினைவு வந்து செங்காரியில் நிற்கிறது.

செட்டி குள முகாமிலிருந்து ஊர் திரும்பிய பின் இரண்டு மூன்று வருஷங்களாக எவ்வளவோ கஷ்டப்பட்டார்கள். முள்ளும் செடி கொடிகளும் படர்ந்திருந்த வயல் நிலங்கள் விதைக்கப்படாமல் காய்ந்து கிடந்தன. உழைப்புக்கு வழியில்லாமல் திகைத்துப் போயிருந்த நேரம்

ஊரில் உள்ள வளர்மதி ரீச்சர்தான் லண்டனிலிருந்த தன் சினேகிதியிடம் தாய் தகப்பனை இழந்த பிள்ளைகளுக்கு ஏதும் உதவி செய்யச் சொல்லி கேட்டு அந்தப் பெண் அனுப்பிய பணத்தில்தான் ஒரு பசு மாடு அவர்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தது.

அந்த பசு வந்து அடுத்த வருஷம் போட்ட கன்றுதான் செங்காரி. கன்றுக்குட்டியிலிருந்தே பார்த்துக் பார்த்து அருமையாய் வளர்த்த பசு..அதன் பால்தான் அவர்களின் வாழ்வாதாரமாக மாறிப்போனது.

பால் எடுத்து ஓவசியர் சந்தியில் கதிரேசனின் தேநீர் கடைக்கு கொண்டு போய் கொடுப்பான். இங்கிருந்து சந்தி இரண்டு மைல் தூரம். காலையில் நடப்பதில் களைப்பு தெரியாது. ஒரு போத்தல் பால் எண்பது ரூபா விற்கிறது. இரண்டு போத்தல் பாலை வாங்கிக்கொண்டு கதிரேசன் தரும் காசுக்கு பக்கத்து கடையிலிருந்து சமையலுக்கு தேவையான ஏதும் வாங்கி வருவான்.

வீட்டில் அவர்களுக்கு பால்தான் காலைச்சாப்பாடு. துரையனும் செந்தியும் பாலைக்குடித்து விட்டு பாடசாலைக்கு போய் இரண்டரை மணிக்கு திரும்பி வந்துதான் ஏதும் சாப்பிடுவார்கள். முதல் தடவை போட்ட கன்று எட்டு மாதத்தில் வலி வந்து இறந்து போய் விட்டது. அடுத்த தடவை போட்ட நாம்பன் கன்றை பால் வற்றியதும் நாலாயிரம் ரூபாய்க்கு கதிரேசன் வாங்கியிருந்தான். அந்த காசு பலசரக்குக் கடனைக் கொடுக்கவும் சில நாட்கள் சாப்பிடவும் உதவியது.

செங்காரிப்பசு தன் பாட்டில் பின்னே இருக்கும் புல்தரவையில் மேய்ந்து விட்டு வரும். அதுக்கு தவிடு புண்ணாக்கு என்று மேலதிகமாய் எதுவும் கொடுப்பதில்லை. ஆனாலும் தன்னால் இயன்ற அளவு பாலை அது தந்து கொள்ளும்.

இனி படுத்துக்கொள்ளலாம் என்று சின்னாசிக்கிழவன் பாயில் சரிந்த நேரம் வெளியே “அப்பு … ணேய் அப்பு….” என்ற குரல் கேட்டது. பதறி எழுந்து குடிசையின் வாசல் தட்டியை திறந்து வெளியே வந்தான். வேலிக்கரையில் நிற்பது ஏரம்பன் என்று அந்த இருட்டிலும் புரிந்தது.

“என்னடா மோனை… இந்த நேரத்தில….”

“ணேய் அப்பு உன்ர செங்காரிப்பசு உருத்திரபுரம் கூழாவடிச்சந்திக்கு அங்கால சிவநகரில நிண்டதாம். கதிரேசண்ணை இண்டைக்கு மத்தியானம் கண்டவராம். சிவநகருக்கு திரும்பிற ரோட்டில ஒரு தேத்தண்ணிக்கடைக்கு பக்கத்தில ஆலமரத்துக்கு கீழ நிண்டதாம். உன்னை போய் பார்க்கட்டாம். சொல்லி விட்டவர். போய் பார் அப்பு.”

“அய்யோ என்ர அம்மாளாச்சி… நல்ல விசயம் சொன்னாயடா. நான் விடியவே போய் பார்க்கிறன் மோனை.”

ஏரம்பன் சைக்கிளை திருப்பிக்கொண்டு போய்விட்டான்.

மறுபடி வந்து படுத்தவனுக்கு மனம் பர பரவென்றிருந்தது. கதிரேசனுக்கு செங்காரியை வடிவாய் தெரியும். சரியாகத்தான் சொல்லுவான். சிவநகர் வரை அத்தனை தூரம் எப்படிப் போனதோ என்று நினைக்க மனம் பதறியது. அது வரை போய் திரும்பி வர வழி தெரியாமல் தவித்துக்கொண்டு அலைகிறதோ….

என்ர ஆச்சி…. நாளைக்கு வந்து உன்னைக் கூட்டி வந்திடுவன். …..

சின்னாசிக்கிழவனுக்கு செங்காரிப்பசு கிடைத்து விடும் என்ற எதிர்பார்ப்பில் கண்ணில் நீர் தழும்பியது.

இந்நேரம் கன்று போட்டிருக்கும். கன்றோடு கூட்டி வந்தால் பால் எடுத்து கடைக்கு கொடுக்கலாம்.

இரவு முழுவதும் உறக்கத்திக்கும் விழிப்புக்குமாக ஊசலாடிக் கொண்டிருந்தவன்அதிகாலையிலகாட்டுக்கரையில்கிளிகள், குயில்களின், கலவையான குரலொலியில் எழுந்து கொண்டான். அடுப்பின் சாம்பலை அப்புறப்படுத்தி காட்டுத்தடிகளை வைத்து நெருப்பை மூட்டினான். கேற்றிலில் நீரை நிரப்பி அடுப்பில் வைத்தான். வெறும் தேநீர் என்றாலும் குடித்து விட்டுப் போகலாம். திரும்பி வர எவ்வளவு நேரமாகுமோ…. அது வரையில் வயிறு தாங்காது. பக பகவென்று பசியில் காந்திக் கொண்டிருக்கும்.

பசியும் பட்டினியும் பழகிப்போன ஒன்றுதான். ஆனாலும் இப்போதெல்லாம் பசியை தாங்கிக்கொள்ள முடிவதில்லை. வயிறு சுருண்டு கொள்ளும் போதெல்லாம் கண்ணில் தண்ணி வந்து விடுகிறது. ஒரு வாய் உணவுக்காக மனம் ஏங்கிப்போகிறது. முதுமையும் இயலாமையும் கலவரத்தையே தருகிறது.

அந்த அதிகாலை நேரத்துக்கு சுடச் சுட தேநீர் குடித்தது தெம்பாக இருந்தது. தோளில் துண்டொன்றைப் போட்டுக்கொண்டு படுத்திருந்த துரையனை எழுப்பினான்.

“எங்கட செங்காரி சிவநகருக்க நிற்குதாம் மோனை. நான் போய் கூட்டி வாறன். நீ தங்கச்சியோட வீட்டில நில்.. என்ன..”

செங்காரி என்றதும் துரையன் நித்திரை கலைய விறுக்கென்று எழுந்து அமர்ந்தான்.

“ஓம் அப்பு. நீ எப்பிடியாவது கூட்டி வந்திடு. “

சின்னாசிக்கிழவன் வெளியே தெருவில் இறங்கி நடந்தான். சிறு மண் குறுணிகள் நெருடிய ஒழுங்கையில் வெறுங்கால்களோடு நடந்து தார்வீதியில் ஏறினான். தெரு வெறிச்சிட்டுக் கிட்ந்தது. தூரத்தூர சிறு சிறு வீடுகள். இப்போதுதான் பொழுது விடிந்து கொண்டிருந்தது. வானம் கருமுகில் கலைந்து நீலமாய் பரந்திருந்தது. இன்று வெய்யில் வரும் போல் தோன்றியது. இப்போதே போனால்தான் வெய்யிலுக்கு முதல் செங்காரியைப் பார்த்து கூட்டிக் கொண்டு திரும்பி வர முடியும். தார்வீதியிலிருந்து இடப்பக்கம் பிரிந்த கிரவல் வீதியில் திரும்பி நடந்தான்.

அந்த வீதியில் இப்போது ஆள் நடமாட்டம் தெரிந்தது. பொறிக்கடவை அம்மன் கோவில் கடக்கையில் கோபுரம் பார்த்து

“என்ர அம்மாளாச்சி… என்ர செங்காரிப்பசு கிடைச்சிடவேணும்.” என்று கும்பிட்டு விட்டு நடந்தான்.

எதிரே வந்த குலசேகரம் “இந்த நேரத்தில எங்கயணை போறாய் “என்று கேட்டான்.

“செங்காரிப்பசு சிவநகரில நிண்டதெண்டு கதிரேசன் தம்பி சொல்லிச்சுது. அதுதான் பார்த்துவரப் போறன்”

“சரி போய் பார்த்து வா. நீயும்தான் எத்தினை நாளாய் அலையிறாய்…”

சின்னாசிக்கிழவன் தனக்கு தெரிந்த அத்தனை கடவுள்களுக்கும் நேர்த்தி வைத்துக்கொண்டே நடந்தான். கூழாவடி சந்திக்கு வந்த நேரம் சந்தி காலை நேர கலகலப்பில் இருந்தது. தேநீர் கடைகளை கடக்கும் போது வடை வாய்ப்பனின் மொறு மொறு வாசம் தெரு வரை வந்து மூக்கை நெருடியது.

நைந்து போன சாரத்தின் இடுப்பு மடிப்புக்குள் நாற்பது ரூபா இருந்தது. எதற்கும் இருக்கட்டும் என்று இருந்த காசை எடுத்து வைத்துக்கொண்டு வந்திருந்தான். பால் விட்ட தேநீர் வாங்கிக்குடிப்போமா என்று ஆவல் பட்ட மனதை அடக்கிக்கொண்டான்.

ஒரு பால்தேநீர் நாற்பது ரூபா. வேண்டாம் காசை செலவழிக்க வேண்டாம்.

சின்னாசிக்கிழவன் சிவநகர் பக்கம் திரும்பி ஏரம்பன் சொன்ன தேநீர் கடையையும் ஆலமரத்தையும் தேடி நடந்தான். கொஞ்ச தூரம் நடக்க கடையும் ஆலமரமும் தென்பட்டது. ஆலமரத்தின் அடியே கொஞ்சம் கொஞ்சம் சாணகம் காய்ந்து கிடப்பதைப் பார்க்க கதிரேசன் சரியாகத்தான் சொல்லியிருக்கிறான் என்று தெரிந்தது. தேநீர் கடைவாசலில் போடப்பட்ட வாங்கில் நாலைந்துபேர் அமர்ந்து தேநீர் குடித்துக்கொண்டிருந்தார்கள். சின்னாசிக்கிழவன் கடையின் உள்ளே நின்றவனிடம்

“தம்பி.. இந்தப் பக்கம் தவிட்டு நிறத்தில ஒரு பசு நிண்டதை கண்டனீங்களே…கொம்புக்கு நடுவில வெள்ளையாய் இருக்கும். “என்று கேட்டான்.

“ஒரு நாளைக்கு எத்தினை மாடுகள் ரோட்டில திரியுதுகள். எதை எண்டு ஞாபகத்தில வைச்சிருக்கிறது..”

அவனுக்கு காலை நேர வியாபார அவசரம்.

“கொஞ்சம் நினைவு படுத்தி சொல்லு மோனை. நேற்று இந்த ஆலமரத்தடியில நிண்டதாம். கூடவே கண்டும் நிண்டிருக்கும். “

“தெரியேலையணை. ரெண்டு மூண்டு மாடுகள் உதில நிண்டதுதான். தவிட்டு நிற மாட்டைப் பார்த்த நினைவு இல்லையே..”

சின்னாசிக்கிழவனுக்கு திக்கென்றது. சுற்றும் முற்றும் பார்த்தான். கண்ணுக்கெட்டிய தூரம் வரை முன் தெரு பின் தெருவில் எந்தப்பசுவையும் காணவில்லை.

“எதுக்கும் உதில நிண்டு பாரப்பு. காலமை நேரம் மாடுகள் மேய்ச்சலுக்கு போகுங்கள்.“

சின்னாசிக்கிழவனுக்கு இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை. ஏமாற்றமும் சோர்வுமாய் விழித்துக்கொண்டு நின்றான்.

அப்போது சைக்கிளில் கட்டிய பால்கானோடு வந்த மீசைக்காரன் பால்கானை இறக்கி கடைக்கார்ரிடம் கொடுத்து விட்டு கிழவனை மேலும் கீழும் பார்த்தான்.

“இந்த அப்பு தன்ர மாட்டை தேடிக்கொண்டு வந்திருக்குது. நேற்று இதில நிண்டதாம். தவிட்டுநிற பசுவாம். “

கடைக்காரன் பாலை வாங்கி தனது பாத்திரத்தில் ஊற்றிக்கொண்டே சொன்னான்.

மீசைக்காரன் கொஞ்சம் யோசித்தான்.

“அப்பு …..நேராய் கொஞ்ச தூரம் நடந்து போனால் ஒரு சந்தி வரும். அதுக்கு வலப்பக்கத்து ஒழுங்கையால கொஞ்ச தூரம் போய்ப்பார். அங்க அப்பிடி ஒரு பசுவை கண்டதாய் நினைவு. வழியில விசாரிச்சுக்கொண்டு போ.. ஆராவது பார்த்திருந்தால் சொல்லுவினம்.”

“நல்லது தம்பி”. குரல் தழும்ப சொல்லி விட்டு சின்னாசிக்கிழவன் விறு விறுவென்று நடந்தான்.

சந்தி வந்து வலப்பக்க ஒழுங்கையில் திரும்பி நடந்தான். வெறுங்கால்களில் மண் குறுணல்கள் நெருடியதையோ மெலிதாய் வெய்யில் சுட்டெரிக்கத்தொடங்கியதையோ கிழவன் உணரவில்லை. தோளில் இருந்த துண்டால் வேர்த்த முகத்தை துடைத்துக்கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தபடி நடந்தான். அநேகமான வீடுகளில் மாடுகள் நின்றன. தெருவிலும் நாலைந்து மாடுகள் நடந்தன.

எதிரே ஒரு வயதான பெண் வர. “அம்மா…. இந்தப் பக்கம் ஒரு தவிட்டு நிற பசு நிண்டதைக் கண்டனீங்களே…”. என்று கேட்டான்.

அந்தப் பெண் நின்று கிழவனைப்பார்த்தாள்.

“நீ சொன்ன மாதிரி ஒரு பசு இங்க திரியுதுதான். அந்த ஒழுங்கை முகப்பில இருக்கிற வீட்டில கேட்டுப்பார். அவடத்திலதான் பார்த்த நினைவாக் கிடக்கு..”

“சரி அம்மா. “

ஒழுங்கை முகப்பு வரை விறு விறு என்று நடந்தான்.

அந்த வீட்டு முற்றத்தில் நின்ற பெண்ணிடம் விபரம் சொல்லிவிசாரித்தான்.

“ஆற்ற பசு எண்டு தெரியேலை. ஒரு மாடு வந்து ஒரு மாதமாய் நிற்குது. எங்கட வீட்டு வேலிக்கரையில படுத்திட்டு பகலில போய் மேஞ்சிட்டு வரும். “

அந்தப் பெண்ணின் வார்த்தைகள் அந்தப்பசு செங்காரியாய் இருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

“எங்கையம்மா நிற்குது…” ஆவலோடு கேட்டான்.

“அந்தா வருகுது. அதுவோ பார் அப்பு “

அந்தப் பெண் காட்டிய பக்கம் பார்த்தவனுக்கு சப் பென்று போய்விட்டது. தவிட்டு நிற பசுதான். ஆனால் கொஞ்சம் குட்டையான வேறு பசு.

“உது இல்லை. என்ர பசுவுக்கு நெத்தியில வெள்ளை இருக்கும். “

ஏமாற்றத்தில் வார்த்தைகள் இறங்கிப்போய் வெளி வந்தன. வியர்வை வடிய வெயிலுக்குள் நிற்பவனை அந்தப் பெண் அனுதாபத்தோடு பார்த்தாள்.

“பக்கத்தில எங்கயாவது விசாரிச்சுப்பாரணை. “

ஒரு வினாடி என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டு நின்றான். எத்தனை நம்பிக்கையோடு வந்தான். இனி எங்கேயென்று தேடுவது… சட்டை அணியாத வெற்று தோளில் வெய்யில் சுடுவதையும் பொருட்படுத்தாமல் ஒழுங்கையில் திரும்பி நடந்து ஒரு பெட்டிக்கடை வாசலில் சிறிது நேரம் நின்றான். வாசலில் வைக்கப்பட்ட மண் பானைக்குள்ளிருந்து தண்ணீர் எடுத்து கட கடவென்று குடித்தான். கொஞ்சம் நிதானம் வந்தது.

பெட்டிக்கடையில் நின்றவர்களிடமும் கேட்டுப்பார்த்தான். இந்த ஊர் முழுக்க மாடுகள் நிற்குது. தேடிப்பார்…. என்றார்கள். தெருவாலும் மாடுகள் போய் வரத்தான் செய்கிறது.

அந்த கூட்டத்திலும் செங்காரியைத் தேடி பார்வை அலைந்தது.

பழையபடி அந்த ஆலமரத்தடி தேநீர்க்கடைப் பக்கமே போய் நின்று பார்க்கலாம் என்ற நினைவில் திரும்பி நடந்தான். இப்போது வெய்யிலின் வெம்மை அதிகரித்திருந்தது. மண் வீதியின் சூடு உள்ளங்கால்களை தகிக்க வைத்தது. நேற்று மப்பும் மந்தாரமுமாய் இருந்தது … இன்றைக்கு இந்த அனலடிக்கிறதே…..என்று நினைத்துக்கொண்டு போனவன் சட்டென்று நின்றான்.

இரண்டாவது ஒழுங்கை முகப்பில் ஒரு சிறுவன்….. அவனுக்கு துரையனின் வயதுதான் இருக்கும். சைக்கிள் வீதியில் சரிந்து விழுந்திருக்க கடையில் வாங்கியிருந்த பொருட்கள் மண் தரையில் சிதறிக் கிடக்க வீதிக்கரையில் அமர்ந்தபடி காலில் ரத்தம் வழிவதை கையால் துடைத்துக்கொண்டிருந்தான்.

“அடக்கடவுளே… என்ன தம்பி விழுந்திட்டியே…” என்று ஓடிப்போய் கையைப்பிடித்து தூக்கி விட்டான்.

“நான் விழுந்தா பரவாயில்லை அப்பு..வாங்கின அரிசி மரக்கறியள் எல்லாம் கொட்டுப்பட்டுப் போச்சே….”

அழுது கொண்டே சொன்னான். சின்னாசிக்கிழவன் சைக்கிளை நிமிர்த்தி நிறுத்தி விட்டு கீழே விழுந்தவைகளில் எடுக்கக்கூடியவைகளை எடுத்து பைக்குள் போட்டு கொடுத்தான். “இந்தா மோனை..கவனமாய் பார்த்துப்போ. வீடு தூரமே….”
“இல்லை பக்கத்திலதான். “
சைக்கிளை உருட்டமுடியாமல் தடுமாறினான். “நீ நட. நான் கொண்டு வந்து விட்டிட்டு வாறன்.”
அவன் நொண்டியபடி அழுதுகொண்டே வர சின்னாசிக்கிழவன் சைக்கிளை உருட்டிக்கொண்டு நடந்தான். “ஏன் மோனை… அழுறாய்… தவறுதலாய் விழுந்ததுக்கு என்ன செய்யிறது. “
“இல்லை அப்பு….வீட்டில சரியான கஷ்டம். எங்களுக்கு அப்பா இல்லை. நான் சின்னப்பிள்ளையாய் இருக்கேக்க அவர் வள்ளிபுனத்தில ஷெல் பட்டு செத்துப்போயிட்டார். அம்மாதான் என்னையும் அக்காவையும் கஷ்டப்பட்டு வளர்க்கிறா காலமை அம்பாலியின்ர பாலைக்கொண்டு வந்து குடுத்திட்டு இந்த சாமான்களை வாங்கின்னான். இதுகளைக் கொண்டு போனால்தான் அம்மா சமைச்சுத் தருவா. அரிசி எல்லாம் கொட்டிப்போச்சே..”
“சரி சரி. அழாத….நான் உன்ர அம்மாட்ட சொல்லுறன். வா“
“இந்தா இதுதான் எங்கட வீடு.. வாங்கோ அப்பு “
பூவரசங்கதியால் போட்ட சிறிய காணியில் கிடுகால் அடைக்கப்பட்ட சிறிய குடிசை. மெலிந்த முகமும் நைந்த ஆடைகளுமாக நின்றவர்கள் அவன் அம்மாவும் அக்காவுமாக இருக்கலாம் என்று நினைத்தான். அந்த பெண் இவர்களைக் கண்டதும் சேலைத்தலைப்பில் கையைத் துடைத்துக்கொண்டு முன்னே வந்தாள்.
“ என்னடா செய்தனி இவ்வளவு நேரமும் “ என்றவள் இவனைக்கண்டதும் தயங்கி நின்றாள். சின்னாசிக்கிழவன் விபரங்களைச் சொன்னபோது
“பரவாயில்லை விடு. காலில ரத்தம் வருது பார். இங்கால வா”. என்று கூட்டிப் போய் முற்றத்தில் வாளியிலிருந்த தண்ணீரை எடுத்து கால்களை கழுவி விட்டாள்.
அந்தப் பெண்ணின் தோற்றத்தையும் குடிசையின் நிலமையையும் பார்த்த கிழவனுக்கு அந்தப் பையனின் பதறல் நியாயமானதாய் பட்டது.
நா வரண்டு கொண்டு வந்தது.
“ பிள்ளை கொஞ்சம் தண்ணி தாறியே மோனை. “
அவள் ஒரு செம்பில் தண்ணீர் கொண்டு வந்து தர வாங்கிக் குடித்தான்.
பையை எடுத்து பார்த்தவளுக்கு முகம் வாடி போனது. பதட்டத்துடன் கோபமும் கலந்து வெளிப்பட்டது. “சமைக்கிறதுக்கு பார்த்துக் கொண்டிருக்க எல்லாத்தையும் கொட்டிப்போட்டு வந்திருக்கிறாய். இப்ப என்னத்த சமைக்கிறது….”
“தவறுதலாய் விழுந்திட்டுது பிள்ளை…பெடியன் பாவம் என்ன செய்யும். அவனைக்கோவிக்காத….. ஏன் மோனை உங்களுக்கு வேற உதவியளும் இல்லையே…”
இரக்கத்தோடு கேட்டான்.
“ ஒருதரும் இல்லையப்பு. இடம் பேர்ந்து ஓடி ஓடி மனிசனையும் பறி குடுத்து படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறன். எல்லாம் எங்கட விதி. ஏதோ இந்த பாலை வித்துத்தான் ஓரளவு சீவியம் போகுது. இனி நாளைக்கு பால் எடுத்து வித்தால்தான் அடுத்த நேரச்சாப்பாடு“
அவர்களின் துயரம் தனது துயரமானது போன்ற வருத்தத்துடன் அவளைப்பார்த்துக்
கொண்டு நின்றான்.
அப்போது அவன் வழியில் விசாரித்த பெண் படலையடியில் நின்று
“என்னணையப்பு மாடு கிடைச்சுதே..” என்று கேட்டாள்.
“இல்லை மோனை”.
“ முதல் ஒழுங்கை கடையடியில நாலைஞ்சு மாடு நிற்குது. நெத்தியில வெள்ளை இருக்கிற தவிட்டு நிற மாடும் ஒண்டு நிற்குது. போய் பாரணை…”
“இந்தா இப்பவே போறன்”
கிழவன் பர பரப்புடன் “ அப்ப நான் வரட்டே பிள்ளை. பசு எங்கயாவது போயிடப் போகுது.” என்று அவசரமாய் திரும்பிய நேரம் குடிசையின் பின்பக்கம் பார்வை பதிந்தது. .
பனையோலை மேய்ந்த சிறு கொட்டிலில் நின்ற பசுவைக் கண்டதும் பகீரென்றது. கண்ணை வெட்டிப்பார்த்தான். செங்காரிப்பசு. பக்கத்தில் வெள்ளை நிற கன்றுக்குட்டி. செங்காரி முன்னால் போடப்பட்டிருந்த வைக்கோலை அசை போட்டுக்கொண்டிருந்தது.
என்ர ஆச்சி…. மனம் சந்தோஷத்தில் பட படவென்று அடித்துக்கொள்ள ஒரு எட்டு வைத்தான். அப்போது அந்தப் பெண் சொன்னாள்.
“ எங்கயிருந்தோ இந்தப்பசு வந்து இங்க கண்டு போட்டுது. இப்ப இதின்ர பாலை வித்துத்தான் எங்கட சீவியம் போகுது. பிள்ளையள் இப்பதான் ஓரளவு சாப்பிடுதுகள். இவன் அம்பாலி எண்டு பேரும் வைச்சிருக்கிறான். ஆனா சொந்தக்காரர் வந்து கேட்டால் குடுக்கத்தானே வேணும். “
“ஆ….. நான் அம்பாலியை குடுக்க மாட்டன். அது என்ர. “
சின்னாசிக்கிழவன் விக்கித்துப்போய் இருவரையும் மாறி மாறிப் பார்த்தான். கால்கள் துவண்டு தொய்ந்தன.
“ நீங்கள் மாடு தேடியே வந்தனீங்கள் அப்பு. இது உங்கட மாடோ பாருங்கோ..”
அவள் குரலில் சிறு கலக்கம் இருந்ததோ…..
சின்னாசிக்கிழவன் பரிதவிப்போடு பார்த்தான். தோள் துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டே “இல்லை மோனை.” என்றான்.
அவள் கண்களில் ஒரு நிம்மதி மின்னலாய் தெறித்ததை கவனித்தான்.
துக்கம் வந்து தொண்டையை அடைத்தது.
செங்காரி எங்க அப்பு என்று கேட்கப்போகும் துரையனுக்கு என்ன பதிலை சொல்லலாம் என்று யோசித்தவாறே சின்னாசிக்கிழவன் திரும்பி நடக்கத்தொடங்கினான்.

.

நிறைவு..

.

.

.

.

தாமரைச்செல்வி | அவுஸ்திரேலியா

.நன்றி : ஜீவநதி சஞ்சிகை

இதையும் படிங்க

பூக்களில் கந்தகம் இல்லை! | சி.கிரிஷாந்த்ராஜ்

சில காட்சிகளின்மீள் நிகழ்தலால்ஆவேசத்தில்எதிர்வினையாற்றஎத்தனிக்கும் நெஞ்சைதலையில் குட்டிக் குட்டிஅடக்கிக்கொண்டேஇருக்கிறோம்! சீருடை சூழ்ந்துகொள்ளஅன்றும்மண்டியிட்டமர்ந்தோம்…இன்றும்மண்டியிட்டமர்ந்தோம்… ஊதுபத்தி…கற்பூரம்…வாடுவதற்குள்நினைவுகூர்ந்து கண்ணீர் சிந்தகொஞ்சம்...

மூத்த அகதி | எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ள வாசு முருகவேலின் புதிய நாவல்

தமிழ் நாட்டின் ஸீரோ டிகிரி பதிப்பகம் தமிழரசி அறக்கட்டளை நடாத்திய நாவல் போட்டியில் ஈழ எழுத்தாளர் வாசு முருகவேல் எழுதிய மூத்த அகதி...

ஒரு கெரில்லாவின் இறுதிக்கணம் | தீபச்செல்வன்

வரிகளில் தேசக்கனவை எழுதியசீருடைகளை அணிந்தனர்நேற்றைய போரில் மாண்டுபோனவர்கல்லறைகளின் முன்னே தலைசாய்த்துஅமைதி வணக்கத்தை முடித்து நிமிர்ந்தனர் எல்லோருடைய அழுகையையும்துடைக்கும் அவர்களால்...

கல்லறைத்தெய்வங்களே| விமல்

அழகான பொழுதுகளாய்உங்கள் நினைவுகள் சுமந்த நடக்கின்றோம்- நாங்கள் ஈழக்கனவை இதயத்தில் சுமந்துஇளமை வாழ்வைத்துறந்த-எம்உள்ளம் நிறைந்த கடவுள் நீங்கள்

அப்பா | சிறுகதை | ஐ.கிருத்திகா

“இது அல்சைமர்….” அப்பாவை  பரிசோதனை  செய்த  டாக்டர்  நிதானமாக  கூறினார். காயத்ரிக்கு  அல்சைமர்  பற்றி  எதிலோ  படித்ததாக  ஞாபகம்....

உன் அகவை நாளுக்காக… : சமரபாகு சீனா உதயகுமார்

நிலவு எறிக்கும் வெளியில் இருந்துபறை ஒன்றினை அறைந்து வரவேற்கிறது ஒரு குழந்தை ஷெல்...

தொடர்புச் செய்திகள்

அப்பா | சிறுகதை | ஐ.கிருத்திகா

“இது அல்சைமர்….” அப்பாவை  பரிசோதனை  செய்த  டாக்டர்  நிதானமாக  கூறினார். காயத்ரிக்கு  அல்சைமர்  பற்றி  எதிலோ  படித்ததாக  ஞாபகம்....

சித்திரைச் செவ்வானம் | சிறுகதை | கவிஜி

அங்கே நிறைய முகங்கள் அவனுக்கு தெரிந்த முகங்களாக இருந்தன. சாவு வீட்டில் திருடனைப் போல உணர்ந்தான். இது அனேகமாக பத்தாவது முறையாக இருக்கலாம். யார் வந்தாலும்...

மனதின் ஓசை | சிறுகதை | விமல் பரம்

சித்திரை மாத வெயிலில் நிலம் காய்ந்து புழுதி பறந்து கொண்டிருந்தது. முற்றத்தின் இருகரையோரம் வளர்ந்திருந்த பூமரங்களுக்கு குழாய் பிடித்து தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தேன்....

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மருத்துவத்திற்காக நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி

பெண்கள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மருத்துவக் கல்வி பயில்வது சாதாரணமானது அல்ல. பெண்கள், படிப்பதற்கான உரிமை கூட மறுக்கப்பட்ட காலம் அது. பெண்கள்...

‘வயலின்’ என்றதும் நினைவுக்கு வரும் குன்னக்குடி வைத்தியநாதன்

‘வயலின்’ என்றால் முதலில் நினைவுக்கு வருவது, குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் தான். வயலின் இசையால், தனது ரசிகர்களை 61 ஆண்டுகளாக மெய்மறக்க வைத்து,...

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

நாடாளுமன்ற மாநிலங்களவையில் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு கண்டனம்!

சென்னை: நாடாளுமன்ற மாநிலங்களவையில் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து...

இலங்கையில் கோதுமை மாவின் விலை அதிகரித்ததால் பெருந்தோட்ட மக்கள் பாதிப்பு!

இச் சூழ் நிலையில் திடீரென 17 ரூபாய் 50 சதத்தால் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு இம் மக்களை மீண்டும் வறுமை கோட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு :மின்சார துண்டிப்பு இருக்காது!

இலங்கையில் எரிபொருளுக்கு போதிய அன்னியச் செலாவணி இல்லை என்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்திற்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை கூறினார். சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு...

இலங்கையில் 2025ஆம் காலப்பகுதியில் பட்டினி நிலைமை ஏற்படலாம்?

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாட்டினால் இலங்கையில் பெரும் பசி, பட்டினி நிலைமை ஏற்பட வாய்ப்புள்ளதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் த.இன்பராசா தெரிவித்துள்ளார். நாட்டின்...

இந்திய பெருங்கடலில் நடை பெற்ற 3 நாடுகளின் போர் ஒத்திகை பயிற்சி!

இந்தியா, இலங்கை மற்றும் மாலைத்தீவுகளைச் சேர்ந்த கடற்படையினர், தென் அரபிக் கடல் பகுதியில் போர் ஒத்திகையில் கடந்த இரண்டு நாட்களாக ஈடுபட்டனர். மூன்று நாடுகளைச் சேர்ந்த...

தமிழகத்தில் பயங்கர பிரளயம் ஏற்படும் | பெண் சாமியார் பேட்டி

திருவண்ணாமலையில் தினமும் 500 முதல் 1000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க முடிவு செய்துள்ளதாக பெண் சாமியார் ஸ்ரீ பவித்ரா காளி மாதா கூறினார்.

துயர் பகிர்வு