Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் “கைக்கோல் கூறிய கதைகள் பல” | நூல் விமர்சனம் | கரூர் ஜெ.கார்த்திக்

“கைக்கோல் கூறிய கதைகள் பல” | நூல் விமர்சனம் | கரூர் ஜெ.கார்த்திக்

6 minutes read

நூல் விமரிசனம் என்பது எடுத்துக்கொள்ளும் நூலுக்கான விளம்பரம் அன்று; வணிகச் சாயலில் செயற்கை நுகர்விற்காய்த் திளைக்கும் விமரிசனத்தால் அப்படைப்பிற்கு எவ்வித சமூகப் பயனும் இல்லை. கொள்வதும் பெறுவதுமாகிய இலக்கிய உரையாடலில் எவ்வித அங்கமும் அவ்வாறான படைப்புகளுக்கில்லை. எனவே இலக்கியத்தின் காத்திரமானத் தன்மையை ஆய்ந்து அறிதல் என்பது வாசகனுக்கு முன் நிற்கும் பாரிய சவால். குறிப்பாகக் கவிதைகளில் இத்தகுப் பண்பைக் காண முயலுவது தண்ணீரிலிருந்து எண்ணையைப் பிரித்தறிய முற்படுவது போல. இது ஒரு புறம் இருக்கட்டும். நூல் விமர்சனம் செய்வதைப் பற்றி சிந்திக்கின்றதை விட, ஒரு நூலை எப்படியெப்படியெல்லாம் வாசிக்க வேண்டும் அல்லது எந்தெந்த நோக்கிலெல்லாம் வாசிக்க முயலலாம் என சிந்தித்தால்தான் ஆக்கியோரின் உழைப்பினையும், சமூகம் பற்றிய தேடலையும் ஓரளவேனும் அளவிட முடியும். இவ்வாறான வாசிப்பு, இந்த விமர்சனப் பணியினை ஒரு கலையாக எளிதாக மாற்றிக்காட்டிவிடும். நூலாக்குதலில் எழுத்தாளருக்கு இருக்கவேண்டிய பொறுமை, உழைப்பு முதலியவை வாசகருக்கும் வாசித்தலில், ஆய்தலில் இருத்தல் வேண்டும். அதே நேரம் முகிழ்நிலை எழுத்தாளர்களின் படைப்புகளின் பண்பை ஆய்வதற்கும், எழுத்துலகில் துறைபோகியோரின் படைப்புகளை ஆய்வதற்கும் இடையிலான இடைவெளி, திறனாய்வாளனாகிய வாசகனின் புரிதலெனும் சிந்தனை வேகத்தைச் சமநிலையில் வைத்திருக்காது. ஆனால் சில முகிழ் படைப்புகளில் முதிர்ச்சியான எழுத்தமைவும் சிந்தனைத் திரட்சியும் ஏற்படுவது எழுத்துலகில் எப்போதாவது நடக்கும் விந்தைகளில் ஒன்று. அண்மையில் அ.சாம் சஜின் ராஜ்-இன் ‘கைக்கோல் கூறிய கதைகள் பல’ கவிதைத் தொகுதியை நுகர்ந்தபோது இவ்வகை விந்தையை இனங்காண நேரிட்டது. 68 கவிதைகளை 80 பக்கங்களுக்குள்ளாக இச்சிறு கவிதை நூலை வெளிக்கொணர்ந்திருக்கிறார்.  உலகளாவிய முதலாளியச் சூழலில் ஏற்பட்டுள்ள நவ காலனிய ஆதிக்கங்களாவன, பல ஊடாட்டங்களைச் செய்தும் சமூகத்தின் அனைத்துக் கட்டுமானங்களையும் தங்களின் ஆதிக்க மையமாக நிறுவிக்கொண்டும் வருகின்ற இச்சூழலில், பிரச்சனைகளின் அல்லது பிரச்சனைகளாக உருவாக்கப்படுபவற்றின் வேரைக் கண்டறியும் பணியை முற்போக்கு இலக்கியவாதிகளே செய்துகொண்டு வருகின்றனர். இடதுசார்பான எழுத்து தம்முடையது எனத் தெரியாமலும் எழுதிவரும் எழுத்துலகத் தோழர்கள் பலரும் இன்று இயங்கிக்கொண்டிருக்கின்றனர். தோழர் சாம் சஜின் ராஜ்-இன் எழுத்துக்களும் பிரச்சனைகளை அணுகுவதிலும் அதற்கான தீர்வுகளைக் கண்டறிந்து நிலைநிறுத்துவதிலும் இடதுசார் இலக்கிய எழுத்துக்களைத் தான் பெரிதும் தம் நூலில் துணைக்கழைத்திருக்கிறார் என்பது, இந்நூலை  முழுமையாகப் படிப்பவர்களுக்குப் புலப்படும். ‘பிரிவுக்கொரு பசை பூசு’ என்ற கவிதையில் நாட்டின் எல்லைப் பிரிவுபட்டாலும் மக்கள் அனைவரும் கூட்டுக் குடும்பத்தினர்தான் என்று முன்னர் உணர்த்திவிட்டு,

“ . . . இதன் இடைவெளிகளில்

பாசக் காற்று வீசினால்

பாவி மனம் பொறுத்திருக்கும்!

ஆனால்,

பாகங்களின் நடுவில்

பாசிசப் பாசிகள் படிந்துகிடப்பதை

உணரும் பொழுதுகள் தொலைவு தான்!” (ப.13)

என்று இதில் பாசிஸ்டுகளின் நுண் அரசியலை உள்நுழைத்திருப்பதிலேயே இவர், வலதிற்கு எதிரான இடதுசிந்தனை கொண்டியங்குபவர் என்பதைக் கணிக்கலாம். கவிஞர் ஆங்கில இலக்கிய மாணவராக இருப்பதனால் இதுபோன்ற மேற்குலக வாதங்கள் பற்றி பரிட்சியம் எளிதாகவே இவருக்குக் கிடைத்திருக்கக்கூடும்.

இலக்கியங்கள் காலங்காட்டும் கண்ணாடி என்ற பழம் மேற்கோள் என்றென்றைக்கும் பொருந்தும். சமூகப் பிரதிபலிப்பை அதன் யதார்த்த இயங்கியல் வழி நிலைநிறுத்தும் இலக்கியங்கள் காலங்கடந்தும் பேசப்படும். அது நேர்மறை, எதிர்மறை என எதுவாகினும் விவாதங்களின் ஊடாக உயிர்ப்புடன் இருக்கும். சாம் சஜின் கவிதைகள் உயிர்ப்புடன் இருக்க ஏதுவானதா இல்லையா என்பதைக் கடந்து உயிர்ப்புடன் வைக்க வேண்டிய செயற்கைத் தேவை வாசகர்கள் மூலம் ஏற்படக்கூடும். அதற்கு இன்றைய சமகாலத்திய தீர்வெட்டப்படாத பிரச்சனைகளே அந்த வாய்ப்பினை வழங்கும். புறவியம், கடந்த அகவியக் காரணமாக அவர் கையாலும் சமூகப் பிரச்சினைகளுக்கான நுண்பார்வையும், வகைமையாக்கமும், குறியீடும்  அவ்வாய்ப்பைப் பிரகாசமாக அவருக்கு வழங்கியிருக்கிறது என்றும் கூற இயலும்.  ‘நிறங்கள் மாற்றம் கொள்ளும்’ என்ற கவிதையில்,

காதலின் நிறமென்ன?

யாரேனும் முன்வந்து விளக்குவீரா எனக்கு!

. . . . . . . . . . . . . . . .

ஆண்-பெண் இணைவதாலே

இங்கு காதல் பூக்குமா?

பூக்கலாம்!

ஆனால் அது ஒரு நிறம்தான்!

இங்கு, பாவை இருமணம் கலக்கலாம்!

ஈராண்மை ஓருடல் ஆகலாம்!

இருபால் இயக்க நீர்

இடம்பொருள் மாறலாம்!

மாறிய ஒவ்வொன்றும்

பல நிறத்தில் பூக்கலாம்!

பிடித்த பூக்களை மட்டும்

மலர விடும் மனங்களில்

இவையும் பூத்துப் பூங்காவாகட்டும்! (ப.12)

தன்பாலின ஈர்ப்பு அல்லது தன்பாலினக் காதல் பற்றி பேசும் கவிஞருக்குச் சமகாலச் சமூகத்தில் உள்ள பாலியம் தொடர்பான ஒன்றை நுணிகிப் பார்த்து, விவாதிக்கப்பட வேண்டியதாக வகைமைப்படுத்தி, இறுதியாக இச்சிக்கலுக்கானத் தீர்வை தம்முடைய பார்வையின் வழி குறியீடாக அமைத்து இலக்கிப்படுத்துகிறார். இந்த நூலின் ஒட்டுமொத்த வெற்றியைக் கணிக்க இந்த ஒற்றைக் கவிதையே போதுமென எண்ணுகிறேன். நுணிகிப்பார்ப்பதும், விவாதத்திற்கு வகைப்படுத்தலும், அதற்கான தீர்வு சொல்ல முற்படுவதும் ஆகிய இவற்றை அறிவார்ந்த அனைவராலும் சொல்ல இயலும். ஆனால் இலக்கியவாதின் எடுத்துரைப்பின் இறவாத்தன்மை அவரின் இலக்கியக் குறிப்படுத்துதல் மூலம்தான் தீர்மானிக்கப்படுகிறது என்பதே அமைப்பியம் வழிச் சிந்திக்கத் தூண்டும் கருத்தாக இருக்கிறது. க.பூரணச்சந்திரன் தனது ‘அமைப்பியமும் பின்னமைப்பியமும்’ நூலில் “பிரதி என்பது சங்கேதங்களால் உண்டாக்கப்பட்ட ஒரு கலாச்சார அமைப்பு” என்று குறிப்பிட்டிருப்பார். பிரதியைப் பொறுத்தவரை இலக்கியப்பிரதியாக ஏற்றம்பெறுகையில் குறியீடுகளை அமைப்பாக்கம் செய்வது தவிர்க்க இயலாதது. தொல்காப்பியரின் திணைக்கோட்பாடுகளில் வரும் முதல், கரு, உரிப் பொருட்கள் அனைத்தும் இலக்கியப்படுத்துதலுக்குத் தேவையான அமைப்பியக் குறியீடுகள்தாம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. குறியீடுகளைக் கையாள்வதில் சாம் சஜின் ராஜ் மேலுள்ள ஒரு எடுத்துக்காட்டுக் கவிதையில் முன்னைய இவ்இலக்கிய மரபின் சிந்தனையைத் தவறாமல் கடைபிடிக்கிறார். எந்த வண்ணித்திலும் உள்ள பூக்கள் பூக்கும் காட்சியை, இதன் இயற்கை என்னும் இயற்பியல் தன்மையை, பாலினங்களுக்கு இடையினான காதலுணர்விற்குக் குறியீடாக்குகிறார். எடுத்துரைப்பியலில் முன்னை இலக்கிய உள்வாங்கு மரபைப் பிரபலித்துத் தன் கவிதையியலுக்கும் தனக்குமான உறவை வலுப்படுத்தியிருக்கிறார். இந்நூலில், புழுதி (5), பிரிவுகளற்ற பிரிவு ஒன்று (ப.11), விரல் நடுவே பல காந்திகள் (ப.56), ஒரு வினா (ப.64) இந்த அமைப்பொழுங்கிலே அடர்த்தியாகப் பிரச்சனைகளைக் கவிஞர் விவாதிக்கிறார் – இலக்கியப்படுத்தியிருக்கிறார்.

            பெண்ணியம், சாதிய எதிர்ப்பு, பாலியல், மரபின் மூலக் கட்டுடைப்பு என்று சமூக இயங்குதளத்தின் முரணிய பலவற்றை விவாதத்திற்குத் தம் கவிமொழி வழி நகர்த்திச் செல்லும் ஆர்வத்தைச் சற்றேனும் குறையாமல் மனத்திற்கும் உலகியலுக்குமான தொடர்பைத் தன் அனுபவங்களூடாகப் பகிரமுனைகிறார் கவிஞர். இந்நூலில் உள்ள தருணங்கள்(ப.23) என்னும் நெடியகவிதையைத் தன்வரலாறு போல விரித்துச் சொல்லுகின்ற விதம், அதில் கதைக்கு முற்றும் பொருத்தமில்லாத சிறு சிறு தருணங்களைப் பொருந்தி அலங்கரிக்கும் அழகியல் நேர்த்தி, பருவக்கால சிலிர்ப்புகள், வாழ்க்கை ஓட்டம், முதுமையிலும் முதிர்வாக முடிவுறும் காதல் ஏக்கம் என்று தனிமனித உள்ளக உணர்வுகளைப் காட்சிப்படுத்தும் தன்மை இந்நூலின் பக்கங்களை விடுபடாமல் படிக்கவேண்டுமென்ற உளத்தூண்டலை அளிக்கிறது. இந்தக் கவிதையை இப்படியாக முடிக்கிறார் கவிஞர்.

            “பெரிதும் புதிதற்ற இக்கதையும்,

          சிறிதும் தொடர்பற்ற பட்டணப் பொழுதுகளும்

          பல நெகிழ்ந்த நேரங்களின் பிணைப்பு.

          அன்பு, காதல், மனிதம்!

          இவற்றின் கேள்விகள் தான் அது!

          தருணங்களில் திளைத்திருப்போம்!” (ப.27)

இந்நூலில் ஆங்காங்கு சில எழுத்துப்பிழைகளும், சந்திப்பிழைகளும் இருப்பதைக் காணமுடிகிறது. மறுபதிப்பில் கவிஞர் நல்ல மெய்ப்பித்திருத்தனரை அணுகுதல் நலம்.

வாழ்வின் புறக்கட்டமைப்புகளையும் அகக்கட்டமைப்புகளையும் இயல்பான நோக்கில் கவிதையாக்கம் பெறவைப்பது ஒரே காலத்தில் சாத்தியம் இல்லை. வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு கோணத்தில் வெவ்வேறு மனநிலையில் தொடர்ச்சியாகச் சேர்க்கப்படும் நுகர்வுகளின் ஒத்துமொத்தமதிப்பிடுதான் ஒரு கவிதை நூல். சாம் சஜீநின் இந்நூலை அப்படியாகத்தான் பார்க்கிறேன். நீண்ட உழைப்பில் நிறைந்த இந்நூல் தமிழ்க்கவியாக்க மரபில் தனித்துவமாக நிலைக்கவேண்டும் என்பது என் அவா. இலக்கிய உலகம் ஏற்குமென நம்புகிறேன்!.

நூல் பெயர் : கைக்கோல் கூறிய கதைகள் பல!

ஆக்கியோன் : அ.சாம் சஜின் ராஜ்

நுவல் பொருள் : புதுக்கவிதை

பதிப்பகம் : எம்.ஜெ.பப்ளிகேஷன் ஹவுஸ், திருச்சி

பதிப்பாண்டு : 2022

விலை :உரூ.100/-

ஜெ.கார்த்திக், கரூர் (karthikjeyapal98@gmail.com)

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More