Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் முள்பாதை | சிறுகதை | விமல் பரம்

முள்பாதை | சிறுகதை | விமல் பரம்

12 minutes read

சைக்கிளை விட்டு இறங்கி களைத்த முகத்தோடு வீட்டுக்குள் நுழைந்தான் சந்திரன். நேராகச் சென்று அறை மூலையிலுள்ள மரப்பெட்டியைத் திறந்தான். அதிலுள்ள பணத்தை எடுத்து தான் கொண்டு வந்த பணத்தோடு எண்ணினான். தொகையை வரவுசெலவுக் கொப்பியில் பதிந்து விட்டு பணத்தை எடுத்துக் கொண்டான்.

“ஆனந்தி பாங்க்கிக்கு போட்டு வாறன் அகிலுக்கு எப்பிடியிருக்கு”

படுத்திருக்கும் மகனின் நெற்றியில் ஓடிக்கோலோனில் நனைத்த துண்டால் ஒற்றிக் கொண்டிருந்தவள்

“காய்ச்சல் மாறுதில்லை. பனடோல் குடுக்க குறையுது திரும்ப உடம்பு நெருப்பாய் கொதிக்குது. கோரோனாவால ஆஸ்பத்திரிக்குப் போக பயமாயிருக்கு. கிளினிக் வைச்சிருக்கிற பசுபதி டொக்டரிட்ட போவம்”

குழந்தையின் நெற்றியில் கை வைத்துப் பார்த்தான் சூடு இருந்தது.

“பனடோலைக் குடு. இரண்டு மணியாச்சு பாங்கில காசைப் போட்டிட்டு வாறன்”

“உந்தக் காசை நாளைக்குப் போட்டால் என்ன”

“ஒவ்வொரு மாசமும் முதலாம் திகதி போட்டிடுவன். இந்தமுறை தேங்காய் வாங்கினவன் இழுத்தடிச்சு இப்பதான் தந்தான்”

சொல்லிக் கொண்டே சைக்கிளை மிதித்தான். மகனை நினைத்து கவலைப் பட்டாலும் பணத்தை இன்றே முதலாளியின் கணக்கில் போட்டு விடவேணும் என்ற தவிப்புத்தான் அதிகமிருந்தது.

விஸ்வமடுவிற்கு வந்து பல வருடங்களாகி விட்டது. இதுவரை சொந்தமாய் ஒரு காணியோ வீடோ எதுவுமில்லை. இருப்புக்கும் உழைப்புக்கும் இந்த இரண்டு ஏக்கர் தோட்டக்காணியை இவன் பொறுப்பில் விட்டு ஐந்து வருடங்களுக்கு முன் மகனுடன் கொழும்புக்குச் சென்ற முதலாளியை நன்றியோடு நினைத்தான். நினைவு தெரிந்த நாளிலிருந்து கிளிநொச்சி முருகன் கோயிலுக்கு அருகில் பெரிய கல்வீட்டிலிருக்கும் முதலாளியோடுதான் வளர்ந்தான். அப்பா அம்மா பற்றிய எந்த நினைவுகளும் இல்லை. இவரிடம் எப்பொழுது வந்தான் யார் கொண்டு வந்து விட்டார்கள் என்றும் இவனுக்குத் தெரியாது. ஏழு வயதில் வந்ததாக முதலாளி சொல்லுவார். வீட்டில் முதலாளியம்மா சொல்லும் வேலைகளைச் செய்து கொண்டிருந்தான். பள்ளிக்கூடத்திலும் சேர்த்து விட்டார்கள்.

அவர்களின் ஓரே மகன் அமுதன் இவனை விட பன்னிரண்டு வயது மூத்தவன். யாழ்ப்பாணத்தில் படித்துக் கொண்டிருந்தான். லீவுக்கு வீட்டுக்கு வருவான். முதலாளியின் மகன் என்ற நினைப்பில் இவனோடு சரிசமமாக கதைக்கமாட்டான். வேலைக்காரன்தானே என்ற எண்ணம் மனதில் ஊறியிருந்ததால் அவனோடு ஒத்து வராமல் போய்விட்டது. தந்தை சொல்லியும் அமுதனின் குணம் மாறவில்லை. முதலாளி சந்திரனிடம் அன்பாக இருந்ததால் அவருக்கு விசுவாசமாய் அவர் மனம் கோணாமல் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தான். அவர் போகும்போது சொன்னது நினைவுக்கு வந்தது.

“உன்னை நம்பித்தான் காணியைத் தந்திட்டுப் போறன். உன்ர காணி மாதிரி கவனமாய் பாக்கவேணும். நீ உழைச்சு வாற லாபத்தில நீயும் ஒரு தொகையை எடுத்துக் கொண்டு எங்களுக்கும் பாங்க்கில போட்டுவிடு”

அன்று சொன்னதை ஐந்து வருடங்களாக கணக்கு வைத்து தவற விடாமல் காப்பாற்றி வருகிறான்.

மழைத் தூறல் முகத்தில் விழ வானத்தை நிமிர்ந்து பார்த்தான். கருமேகம் சூழ்ந்து வானம் இருண்டு இருந்தது. திடீரென மழை வரும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. குளிர் காற்று சுழன்றடித்து வந்து முகத்தில் மோதியது. எந்த நேரமும் மழை வரலாம் என்று தெரிய சைக்கிளின் வேகத்தை அதிகமாக்கினான்.

வீட்டுக்குத் திரும்பி வரும்போது மழை பெய்து கொண்டிருந்தது.

“மழை பெய்யுது. சைக்கிளில போகேலாது. ஓட்டோவை வரச் சொல்லுங்கோ” என்றாள் ஆனந்தி.

“ஓட்டோவா… மழை விடப் போவம்”

“மழை விட்டாலும் இந்த குளிர்காத்தில பிள்ளையை கொண்டு போகலாமே”

“என்னட்ட இருநூறுதான் இருக்கு. டொக்டருக்கும் ஓட்டோவுக்கும் குடுக்கவேணுமே உன்னட்டை ஏதாவது இருக்கா”

கேட்டவனை கோபமாக முறைத்தாள்.

“டொக்டரிட்ட போகவேணும் எண்டு தெரியும்தானே. இருக்கிற காசையெல்லாம் பாங்க்கில போட்டிட்டு வாறீங்கள். இப்ப என்ன செய்யிறது ஆரிட்ட கேக்கிறது”

“நாளைக்கு வாழைக்குலையள் வெட்டி சந்தைக்கு குடுக்கலாம். பக்கத்து வீட்டு கீதாக்காட்ட கேட்டுப்பார். கிடைச்சால் சந்தியில நிக்கிற ஓட்டோவை வரச்சொல்லு”

“பகல் இரவு பாராமல் இரண்டு பேரும் இந்தக் காணிக்கையிருந்து கஷ்டப்படுறம். அவசர தேவைக்கு கையில ஒண்டும் இருக்கிறதில்லை. எப்பவும் கஷ்டம்தான்”

கவலையோடு சொன்னவள் முகத்தில் மாஸ்க்கைப் போட்டுக் கொண்டு குடையோடு சென்றாள்.

கஷ்டம் என்ற சொல் அவனைக் காயப்படுத்தியது. சின்ன வயதிலிருந்து பல கஷ்டங்களை அனுபவித்து விட்டு வந்தவளை வசதியாக வைத்திருக்க வேண்டும் என்று முயற்சிக்கிறான் முடியவில்லையே.

இருக்கிற வீடு சொந்தமில்லை என்றாலும் கொஞ்சம் வசதியாக இருந்திருக்கலாம்.

முல்லைத்தீவுக்குப் போகும் பெரிய வீதியிலிருந்து விஸ்வமடுவுக்கு பிரிந்து போகும் பாதையின் முதல் காணி. முதலாளி வாங்கி திருத்தி கிணறு ஒன்று கட்டினார். சுற்றி வாழையும் ஒரு ஏக்கருக்கு தென்னங்கன்றுகளும் அரை ஏக்கருக்கு மிளகாய்ச் செடிகளும் வைத்தார். காவலுக்கு காணியின் முன் பக்க மூலையில் ஒரு குடிசை போட்டு வேலை செய்ய வந்த சின்னையா கிழவனை இருத்தினார். படித்துக் கொண்டிருந்த சந்திரன் பள்ளிக்கூடம் விட்டதும் தோட்டத்திற்கு வந்து வேலை செய்தான். நாளடைவில் தோட்ட வேலையை மனம் விரும்ப படிப்பில் கவனம் குறைந்தது. பத்தாவதோடு நின்று விட்டான். முழு நேரமும் தோட்டத்திலேயே நின்று உழைத்தான். ஈடுபாட்டோடு அவன் வேலை செய்வது முதலாளிக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது. அவனிடம் நம்பிக்கையும் வந்தது. தொடர்ந்து வேலை செய்ய முடியாமல் அடிக்கடி நோய்வாய்ப் பட்டு தளர்ந்துபோன சின்னையாப்பு தோட்டத்தை விட்டுப் போக முழுப் பொறுப்பும் அவனிடம் வந்தது. கிளிநொச்சியிலிருந்து வேலைக்கு வந்தவன் தன் உடமைகளோடு தோட்டத்தில் வந்து தங்கினான். ஒரு சதுர குடிசையாய் இருந்ததை ஒரு அறையும் விறாந்தையுமாய் நீட்டிக் கட்டினான். விறாந்தை மூலையில் அடுப்பு வைத்து சமைத்தான். திருமணமாகி குழந்தை பிறந்த பின்பும் இன்றுவரை மாற்றம் இல்லாமல் அப்படியேதான் இருக்கிறது குடிசை.

சிணுங்கல் சத்தம் கேட்டு படுத்திருக்கும் குழந்தையிடம் வந்தான். மூன்று வயது. துறு துறுவென்று எப்போதும் ஓடிக் கொண்டிருப்பவன் சுருண்டு படுத்திருப்பதைப் பார்க்க தாங்கமுடியவில்லை. குளிருக்காக நிலத்தில் தடித்த மட்டை போட்டு அதன் மேல் விரித்த பாயில் படுத்திருந்தான். மேலே நுளம்புவலை கட்டித் தொங்கவிட்டிருந்தது. பனடோல் கொடுத்து காய்ச்சல் விட்டிருந்தாலும் முகம் வாடியிருந்தது. தலையைத் தடவிக் கொடுத்தான். கண்களைத் திறந்து பார்த்த அகில் அப்பாவைக் கண்டதும் கைகளை நீட்ட அப்படியே வாரி அணைத்துக் கொண்டான்.

“உனக்கு செய்யிறதுக்கும் கணக்கு பார்க்க வேண்டியிருக்கேடா செல்லம்”

தன்னையே நொந்து கொண்டான். வியர்வையால் நனைந்த சட்டையைக் கழற்றி ஈரத்துணியால் உடம்பைத் துடைத்து வேறு சட்டையை மாட்டினான். பிஸ்கட்டை பாலில் நனைத்து ஊட்டினான்.

ஓட்டோ சத்தம் கேட்டு ஆயத்தமாக வைத்திருந்த மாஸ்க்கை போட்டுக் கொண்டு பிள்ளையோடு வெளியில் வந்தான். மழை விட்டிருந்தது. டொக்டரிடம் போனார்கள். டோக்கன் நம்பர் எடுத்து இடைவெளி விட்டு வரிசையாய் நின்று காட்டினார்கள்.

“சாதாரண வைரஸ் காய்ச்சல்தான் விட்டிட்டுது. திரும்ப வந்தால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போங்கோ கோரோனாவா இல்லையா எண்டு சுவாப் ரெஸ்ட் செய்து சொல்லுவினம்”

ரெஸ்ட் என்றதும் பயம் வந்தாலும் காய்ச்சல் இல்லை என்பது ஆறுதலைக் கொடுத்தது. திரும்பி வர நேரமாகிவிட்டது. மழை இருட்டு ஆறு மணிக்கே பரவத் தொடங்கிவிட்டது. தெரு விளக்குகள் தந்த ஒளியில் நடமாட்டம் தெரிந்தது. களைத்துப் போய் மடியில் தூங்கி விட்ட அகிலோடு திரும்பி வந்து கொண்டிருந்தார்கள்.

வீட்டுக்கு வரும் பாதையின் இருமருங்கிலும் கம்பீரமாய் உயர்ந்து நிற்கும் வீடுகளைப் பார்த்துக் கொண்டு வந்தவன் ஒரு பெருமூச்சுடன் ஆனந்தியைப் பார்த்தான்.

“முதலாளி வீட்டில இருக்கேக்க சாப்பாட்டுக்கு குறையில்லை. தேவையானதை வாங்கித் தருவினம். நல்லநாள் பெருநாளுக்கு உடுப்பும் செலவுக்கு காசும் கிடைக்கும். கவலை இல்லாமல் சொல்லுற வேலையளைச் செய்து கொண்டு இருந்தன். தோட்டத்திற்கு வரேக்க எனக்கு பதினெட்டு வயசு. அதுக்குப் பிறகுதான் சம்பளம் போட்டு இரண்டு கிழமைக்கொருக்கா கையில காசு தருவார் என்ர செலவுக்குப் போதும். காசு சேர்த்து வைக்கவேணும் எனக்கெண்டு சொந்தமாய் ஒரு காணி வேண்டவேணும் எண்ட நினைப்பில்லாமல் முதலாளியோட இருந்திட்டன். காணி இருந்திருந்தால் என்ர பிள்ளை இப்ப கல்வீட்டில இருந்திருப்பான்”

எதையும் இலகுவாய் எடுத்துச் கொள்பவன் மனதில் இந்தக் கவலை வளர்ந்து கொண்டு வருவதை ஆனந்தி அறிவாள்.

“நாட்டில நடந்த சண்டையில எவ்வளவு உயிருகளும் சொத்துக்களும் அழிஞ்சிருக்குது. துரத்துப்பட்டு என்ன செய்யிறதெண்டு தெரியாமல் நடுறோட்டில நிண்டு மீண்டு வந்திருக்கிறம். எத்தனையோ கொடுமையளை அனுபவிச்ச சனங்களுக்கு கிடைச்ச நன்மை சொந்தக்காணி இருக்கிறவனுக்கு வீட்டுத்திட்டம் வந்தது. குடிசையாய் இருந்த வீடெல்லாம் இப்ப கல்வீடாய் மாறிட்டுது பார். ஒரு துண்டு நிலம் சொந்தமில்லாததால எங்களுக்கு கிடைக்கேல. சின்ன வயசில இருந்து உழைக்கிறன் ஒரு துண்டுக் காணி வாங்கேலாமல் போச்சே” குரல் உடைந்தது அவனுக்கு.

“கஷ்டப்பட்டு உழைக்கிறம் பலன் கிடைக்கும். இந்த முறையும் வாழையள் நிறைய வைச்சு இப்ப குலை போட்டிருக்கு. மிளகாய்ச் செடியளும் காயும் பழமுமாய் சிலித்திருக்குது. தேங்காய் விலையும் ஏறிட்டுது. வீட்டுக்குப் பக்கத்திலுள்ள இடங்களையும் விடாமல் கத்தரி வெண்டி பயித்தை எண்டு மரக்கறிகளும் வைச்சிருக்கு. லாபத்தில ஒரு பகுதியை ஐயாவுக்கு குடுத்திட்டால் எங்கட கையிலும் காசு மிஞ்சும். கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்து காணி வாங்கிடலாம். ஏன் கவலைப்படுறீங்கள்”

“சாண் ஏற முழம் சறுக்குதே. போன வருசம் காத்தும் மழையும் வந்து எல்லாம் போச்சே. அடிச்ச காத்துக்கு வாழைமரங்கள் முறிஞ்சிட்டுது மழைவெள்ளத்தில மரக்கறிதோட்டமே அழுகிட்டுது. செலவழிச்ச காசுமில்லாமல் நட்டப்பட்டம். தேங்காய் வருமானமும் குறைஞ்சிட்டுது. காணில இருக்கவிட்டதுக்கு கொஞ்சமாவது ஐயாவுக்கு குடுக்கவேணும் எண்டு கடன் பட்டு குடுத்தன். அந்தக் கடனை இந்தமுறை குடுக்க வேணும். குடுத்தால் எங்க மிஞ்சப் போகுது”

ஆதங்கத்தோடு சொன்னவனுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று அவளுக்கு தெரியவில்லை.

வீட்டுக்குள் நுழைந்ததும் குழந்தையைப் படுக்க வைத்தாள். நுளம்பு வலையை விரித்து படுக்கைக்குக் கீழே நாலு பக்கமும் செருகி விட்டாள்.

“பிள்ளையோட இருந்ததால ஒண்டும் சமைக்கேல. இருங்கோ நான் புட்டு அவிச்சு கறியும் வைக்கிறன்”

“மனமே சரியில்லை. ஆனா பசியெண்டு ஒண்டு இருக்கே”

“இண்டைக்கு காசு பணம் இல்லாட்டி என்ன உழைச்சால் நாளைக்கு வரும். கிடைக்கிற சாப்பாட்டை நிம்மதியாய் சந்தோஷமாய் சாப்பிடுவம். சாப்பிட நேரமில்லாமல் திட்டும் அடியும் வாங்கி வளர்ந்த எனக்கு இது போதும்” குரல் கம்மியது ஆனந்திக்கு.

கேற்றிலை எடுத்து தண்ணீர் வார்த்து கொதிக்க வைத்தாள். புட்டு குழைக்கிற பெட்டியை எடுத்து மாவை அளந்து போட்டாள். அவளின் கை பரபரவென்று வேலை செய்து கொண்டிருக்க மனம் அவள் கடந்து வந்த பாதையை அலசத் தொடங்கியது.

சின்னவயதில் அப்பாவோடு இருந்த நெருக்கம் அம்மாவிடம் இருந்ததில்லை. அவளைத் தூக்கி மடியில் வைத்து கொஞ்சியதில்லை. தம்பியிடம் விருப்பமானதைக் கேட்டு செய்பவள் அவளுக்காக ஒன்றும் செய்ததில்லை.

“பிள்ளையளுக்குள்ள பிரிவினை காட்டாத” அப்பா சொன்னாலும் கேட்கமாட்டாள்.

அப்பா இல்லாத நேரங்களில் அம்மாவின் வார்த்தைகளால் நொந்திருக்கிறாள். என்னை ஏன் வெறுக்கிறாள் என்று ஏங்கி காரணம் தெரிந்தபோது உடைந்து போனாள். அம்மா தன்னைப் பெற்றவள் இல்லை சித்தி என்பது பன்னிரண்டு வயதில் அப்பா போன பின்புதான் தெரிந்தது. அந்த நாளை மறக்கமுடியவில்லை.

அன்று வேலையால் வரும்போது புத்தகப்பை வாங்கி வருவதாக சொன்ன அப்பாவுக்காக காத்திருந்தாள்.

“அப்பா எப்ப வருவாரம்மா”

“அப்பாட்ட என்னடி கேட்டாய். உழைக்கிறதெல்லாம் உனக்கே செலவழிக்கிறார் கேட்டால் கோவம் வருகுது. இப்ப எங்கை போனாரோ” எரிச்சலோடு சொன்னாள்.

வெகு நேரமாகியும் அப்பா வரவில்லை. தான் ஆசைப்பட்டு கேட்டதை வாங்கி வராமல் வந்து விடுவாரோ என்ற பயம் எட்டிப் பார்த்தது.

அப்பாவோடு வேலைக்குப் போகும் வேலு மாமா கத்திக் கொண்டு ஓடி வருவது தெரிந்தது.

“அண்ணைக்கு பாம்பு கடிச்சிருக்கு வாயில நுரை வழிய வயலில விழுந்து கிடந்தார் அக்கா. நான் சாப்பாட்டுப் பெட்டியை விட்டிட்டுப் போட்டன் எண்டு எடுக்க வந்தனான் கண்டிட்டு கத்த ஆட்கள் ஓடி வந்து ஆஸ்பத்திரிக்கு தூக்கிப் போக வழியில ஆள் முடிஞ்சுதக்கா”

மூச்சு விடாமல் அவன் சொன்னதைக் கேட்டு தலை தலையாய் அடிச்சு அழும் அம்மாவைப் பார்க்க அவளுக்கும் அழுகை வந்தது.

வாங்கில் படுத்திருக்கும் அப்பாவைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆனந்தி. வந்தவர்கள் அழுததிலிருந்து இனி அப்பா வரமாட்டார் என்பது புரிந்தது. புத்தகப்பையை வாங்கித்தராமல் போய் விட்டாரே இனி யார் வாங்கித் தருவார்கள். அம்மா வாங்கித்தரமாட்டாள். கேட்டால் அடிப்பாளே என்று நினைத்து அழுதாள்.

“அதிஷ்டம் கெட்டவளே முதல் அம்மாவை விழுங்கினாய். இப்ப அப்பனையும் விழுங்கி அநாதையாய் நிக்கிறியேடி” யாரோ சொல்லி அழுதது கேட்டது.

அதற்குப் பிறகு வந்த நாட்கள் அவளுக்கு நரகமாகவேயிருந்தது. அப்பா இல்லாதது அவளை பெரிதும் வாட்டியது. அம்மாவின் வெறுப்பு அதிகமாகி எதற்கெடுத்தாலும் ஏச்சும் அடியும்தான். சாப்பிடுற சாப்பாட்டை நிம்மதியாய் சாப்பிட்டதில்லை.

வீட்டில் கஷ்டமென்று படிப்பை நிறுத்தி தன்னுடன் வேலைக்கு அழைத்துப் போனாள் அம்மா. வேலைக்குப் போனாலும் அவளிடம் காசு இருந்ததில்லை.

ஒரு நாள் மிளகாய் பழங்கள் பிடுங்க ஐயாவின் தோட்டத்திற்கு வந்தபோதுதான் சந்திரனைக் கண்டாள். மற்ற தோட்டங்களை விட சம்பளம் அதிகமாய் தந்ததால் தொடர்ந்து அங்கேயே வேலைக்கு வந்தார்கள். எந்தநேரமும் திட்டிக் கொண்டிருக்கும் அம்மாவின் பயத்தில் தலை கவிந்தபடி வேலை செய்து கொண்டிருப்பாள். தானும் வேலை செய்து கொண்டு மற்றவர்களும் வேலை செய்கிறார்களா என்று கவனித்துக் கொண்டிருந்த சந்திரனின் பார்வை அவளிடம் பதிந்ததை அவள் கவனிக்கவில்லை.

அன்று அம்மா ஆனந்தியோடு பக்கத்து வீட்டிலிருக்கும் ஆச்சியும் வேலைக்கு வந்திருந்தா. ஆச்சிக்கு எழுவது வயதிருக்கும். உச்சி வெயிலில் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

“ஆச்சி இந்த வயசில வேலைக்கு வந்திருக்கிறீங்கள். பாக்கிறதுக்கு பிள்ளையள் இல்லையே”

சந்திரன் கேட்டான்.

“என்ர வயித்துக்கு நான்தானே உழைக்கவேணும் தம்பி. பிள்ளை வீட்டில இருந்தாலும் காசு குடுத்தால்தானே மருமோள் கஞ்சி ஊத்துவாள்” சொல்லியபடி பழங்களைப் பிடுங்கி கூடையில் போட்டுக்கொண்டிருந்தாள் ஆச்சி.

நிரம்பிய கூடையிலுள்ள மிளகாய் பழங்களையெல்லாம் படங்கில் கொட்டினான். ஆச்சியின் கை பிடித்து அழைத்து வந்து படங்கில் இருத்தினான்.

“இந்த வெயிலில நிண்டு வேலை செய்ய வேண்டாம் மயங்கி விழுந்து போவீங்கள். இருந்து கொண்டு பழங்களோட இருக்கிற பச்சை மிளகாயளை பொறுங்குங்கோ”

கூடையை எடுத்து அருகில் வைத்தான். இதைக் கவனித்த ஆனந்தி மெல்ல மெல்ல அவனையும் கவனிக்கத் தொடங்கினாள். வேலை செய்பவர்களின் மனம் நோகாமல் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவதும் அவர்களுக்கொரு பிரச்சனை என்றால் முன்னின்று முதலாளிக்குச் சொல்லி தீர்த்து வைப்பதையும் கண்டாள். அவன் இயல்பு அப்பாவை ஞாபகப்படுத்தியது. இறுகியிருந்த அவள் இதயம் மெல்ல இளகத் தொடங்கியது.

அன்று அம்மாவால் வேலைக்கு வரமுடியவில்லை. ஆனந்தியை அனுப்பியிருந்தாள். வேலை முடியும் நேரம் சந்திரன் வந்தான்.

“அம்மா ஏன் வரேல”

“பள்ளிக்கூடத்தில கலைவிழா. தம்பியோட போயிற்றா” என்றாள்.

“நீங்க ஏன் போகேல” பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தாள்.

“இங்க வேலைக்கு வந்த நாளிலயிருந்து கவனிக்கிறன். உங்களைப் பற்றியும் விசாரிச்சன். முதலாளி கலியாணத்த செய் எண்டு சொல்லிக் கொண்டிருக்கிறார். எனக்கு எல்லாம் அவர்தான். உங்களைப் பற்றி சொன்னேன். உங்களுக்கு சம்மதம் எண்டால் உங்கட அம்மாவோட கதைக்கிறன் எண்டு சொன்னார்”

சொல்லி விட்டு அவள் முகத்தையே பார்த்தான்.

அவளால் நம்ப முடியவில்லை. பதில் சொல்லமுடியாமல் மனம் தத்தளித்தது. தன்னுடைய இந்த வாழ்க்கைக்கு விடிவு வருமா… வாராதா… தன் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்று கலங்கிக் கொண்டிருந்தவளுக்கு அவனின் வார்த்தைகள் இதமாய் இறங்க மனம் லேசானது. வாய் திறந்து பதில் சொன்னால் உளறிவிடுவேனோ என்ற பயத்தில் இறுக மூடிக் கொண்டாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் மெல்லிய சிரிப்போடு

“முதலாளிட்ட சொல்லுறன். அவர் வந்து கதைப்பார்” என்றபடி விலகிச் சென்றான்.

தான் சொல்லாமலே தன் சம்மதத்தை அவன் தெரிந்து கொண்ட சந்தோஷத்தை மீறி பயம் வந்தது. அம்மா என்ன சொல்லுவாள். சம்மதிப்பாளா…

பயந்தமாதிரி எதுவும் நடக்கவில்லை. இரண்டாம்நாள் முதலாளி வந்து கேட்டதும் முதலில் திகைத்த அம்மா முழு செலவும் அவர்களே பார்ப்பதாகச் சொன்னதும் சம்மதித்தாள்.

“என்ர தலையில கட்டிப் போட்டு அந்த மனுசன் போய்ச் சேந்திட்டுதே.. உன்னை வைச்சிருந்து நான் என்ன செய்யப் போறன் எண்டு பயந்தன். போடி போய் நல்லாயிரு” என்றாள்.

இன்று ஒரு பிடி சோறு சந்திரனால் நிம்மதியாக சாப்பிட முடிகிறது.

“ஆனந்தி சமையல் முடிஞ்சுதா” சந்திரனின் குரல் கேட்டது.

பார்த்தாள் கைகள் தன் வேலைகளை முடித்திருந்தது.

“சாப்பிட வாங்கோ” என்றாள்.

விடிய எழுந்ததும் இருவரும் தோட்டத்திற்கு வந்தார்கள். நேற்று பெய்த மழையில் நனைந்து சிலிர்த்துப் போய் நிற்கும் மரங்களைப் பார்க்க கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது. அன்று சந்தைக்குப் போகும் நாள். ஒன்பது மணிக்கு துரையின் உழவுயந்திரம் பெட்டியோடு வரும். ஆட்கள் வந்து வேலை செய்து கொண்டிருந்தார்கள். காய்ந்த செத்தல் மிளகாயை சாக்கில் போட்டு கட்டினார்கள். வாழைக்குழைகளை வெட்டி முற்றத்தில் அடுக்கினார்கள். விழுந்த தேங்காய்களை எடுத்து உரிக்கும் இடத்தில் குவிக்க இரண்டு பேர் பாரையில் உரித்து அவைகளை எண்ணி சாக்கில் போட்டுக் கட்டினார்கள். விழுந்த தென்னை ஓலைகளையும் எடுத்து வந்து அடுக்கினார்கள்.

“சங்கரன் அண்ணை முன்னூறு கிடுகு வேணுமெண்டு கேட்டவர். பின்னினது இருநூறு இருக்கு. கெதியாய் மிச்சத்தையும் பின்னிக் குடுக்கவேணும். ஓலைகளும் மழையில நனைஞ்சு பதமாய் இருக்கு. சந்தையால வந்து பின்னேரம் கிளிச்சுப் போடுறன். விடிய எழும்பி பின்னுவம்” என்றான் சந்திரன் ஆனந்தியிடம்.

மரத்திலிருந்து ஓலைகள் விழ அதை எடுத்து வந்து இரண்டாகக் கிழித்து இரவு தண்ணீரில் ஊறவிடுவான். விடிய எழுந்து இருவரும் பின்னுவார்கள். சந்திரனுக்கு தோட்டத்தில் வேலையிருந்தால் ஆனந்தி பகலில் நேரமிருக்கும் போது பின்னி முடித்து விடுவாள். சில வேலைகளுக்கு ஆட்களைப் பிடிப்பதில்லை.

“சந்தைக்குப் போக எல்லாம் ரெடி. துரையைக் காணேல. இப்ப போனால் குடுத்திட்டு கெதியாய் வந்திடலாம்”

முற்றத்தில் ஆயத்தமாய் இருக்கும் பொருட்களைப் பார்த்தான். அவர்களின் உழைப்பு. அதன் பயனைப் பார்க்கும்போது உண்டாகும் சந்தோஷத்திற்கு ஈடு இணையேயில்லை. இந்தமுறை லாபம் வரும். கடனைக் குடுத்திட்டு கொஞ்சத்தை பாங்கில போட்டு சேர்க்கவேணும். மனதில் நம்பிக்கை பரவியது சந்திரனுக்கு.

துரையை எதிர் பார்த்துக் கொண்டிருக்க வாசலில் வந்து நின்ற காரிலிருந்து இறங்கி வந்த அமுதனைப் பார்த்து திகைத்தான் சந்திரன். அறிவித்துவிட்டு முதலாளிதான் வந்து காணியைப் பார்த்து விட்டுப் போவார். இன்று அறிவிக்காமல் முதலாளி வராமல் மகன் வந்திருக்கிறாரே.. ஏன் என்ற கேள்வி மனதில் ஓடியது.

“வாங்கோண்ணை. ஐயா வரேலையா.. சுகமாய் இருக்கிறாரா.. சொல்லாமல் வந்திருக்கிறீங்கள் ஆனந்தி அண்னைக்கு ரீ கொண்டுவா”

நாற்காலியை எடுத்து போட்டான்.

“குடிச்சிட்டுத்தான் வந்தனான்” என்றவனின் பார்வை சந்திரனை விட்டு முற்றத்தில் படிந்தது.

“உனக்கு நல்ல வருமானம்தான் வருகுது. ஆனால் நீ எங்களுக்கு தாற காசை ஒரு மாதம் ஒழுங்காய் போடுறாய் அடுத்தமாதம் குறைச்சுத் தாறாய். இந்த ஒரு வருசமாய் நீ அனுப்பினது சரியான குறைவு. கேட்டால் பஞ்சப்பாட்டு பாடுறாய். அப்பாவும் அதை நம்பி தோட்டத்தோட கஷ்டப்படுறான் பாவம் முந்தினமாதிரி லாபம் வாறதில்லை எண்டு சொல்லி கவலைப் படுறார்”

“அண்ணை செலவையும் வரவையும் எழுதி மாதம் முடிய கணக்குப் பார்த்து வாற லாபத்தைப் பிரிச்சு உங்களுக்கு அனுப்புறன். இப்ப வந்த நோயால நாங்கள் பட்ட கஷ்டம் உங்களுக்குத் தெரியும்தானே. கோரோனா பரவ உடன லொக்டவுன் போட்டிடுவாங்கள். தேவைக்கு பசளை மருந்து வாங்கேலாது. நோயில கருகிடும். விளைஞ்சதுகளையும் சந்தைக்கு கொண்டு போகேலாது. வாங்க சனமும் வீட்டுக்கு வராது. தேங்காயளை சேர்த்து வைக்கலாம். மரக்கறியளையும் வாழைக்குலையளையும் விக்கேலாமல் கண்ணுக்கு முன்னால அழுகிப் போச்சுதண்ணை. பார்க்க வயிறு எரிஞ்சுது. அந்தநேரம் சாப்பாட்டுக்கே கஷ்டமாயிருந்தது”

“தோட்டத்தில இருந்து கொண்டு சாப்பாட்டுக்கு கஷ்டம் எண்டு சொல்லுறாய். உன்னட்ட காணி தந்து அஞ்சு வருசமாச்சு. எவ்வளவு சேர்த்து வைச்சிருக்கிறாய். கேட்டால் இல்லை எண்டு பொய் சொல்லுவாய். எல்லாச் சாமானும் விலை ஏறிட்டுது. இருபது ரூபா வித்த தேங்காய் ஐம்பது ரூபா விக்குது. மிளகாயும் நல்ல விலை போகுது. நீ அப்பாவை ஏமாத்திறாய் இதுக்கு ஒரு முடிவு கட்டவேணும். யாழ்ப்பாணத்திற்கு அலுவலாய் வந்தனான் வந்து பார்த்திட்டுப் போவம் எண்டு வந்தது நல்லதாய்ப் போச்சு. இந்த மாதத்திலயிருந்து காசைக் கூட்டித் தா. காணியில்லை எண்டு காணி தந்தால் அதில விளையிறதில தர உங்களுக்கு மனம் வாறதில்லை”

சந்திரனின் மனம் வெந்து புண்ணானது. சொகுசாயிருந்து படித்து வேலை செய்பவர்களுக்கு நாங்கள் படுற கஷ்டம் விளங்காது. காரணம் சொன்னாலும் புரியாது என்று வேதனையோடு நினைத்துக் கொண்டான்.

“சரியண்ணை போடுறன்” என்றான் அமைதியாக.

“யாழ்ப்பாணம் போறன். அங்க என்ர சினேகிதப் பெடியள் இருக்கிறாங்கள். என்ர தோட்டத்தில விளைஞ்சது எண்டு குடுக்க நாலு வாழைக்குலை ஐம்பது தேங்காயளை காரில ஏத்திவிடு” சர்வ சாதாரணமாக சொல்லி விட்டுப் போனவனை மனம் பதற பார்த்தான். ஒரு நிமிடம்தான் பின் வாழைக்குலைகளையும் தேங்காய் சாக்கையும் மள மளவென்று ஏற்றத்தொடங்கினான். ஆனந்தி கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

அமுதன் போக துரை உழவு யந்திரத்தோடு உள்ளே நுழைந்தான். ஆனந்தியோடு கதைத்து மனதை ஆற்ற முடியாமல் அவசரமாய் பெட்டியில் எல்லாவற்றையும் ஏற்றிக் கொண்டு சந்தைக்கு விரைந்தான். அவன் போவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆனந்தி. சொந்தமாய் ஒரு இடம் கிடைக்கும்வரை சுடு சொற்களைத் தாங்கித்தானே ஆகவேண்டும். நிம்மதியான வாழ்க்கையை தந்தவனுக்கு அவன் ஆசைப்பட்டது கிடைக்கவேணும் என்று மனதார வேண்டிக் கொண்டாள்.

அன்று வருவதாக அறிவித்து விட்டு வந்த முதலாளியோடு அமுதனும் வந்திருந்தான். வாழைக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த சந்திரனைப் பார்த்து நேராக அவ்விடத்துக்கு வந்தார்கள்.

“என்ன நீ தனிய வேலை செய்து கொண்டிருக்கிறாய். வேலைக்கு ஆக்கள் வரேலையோ” முதலாளி கேட்டார்.

“வாழைக்கு தண்ணி இறைக்கிற வேலை மட்டும்தான் ஐயா. மிளகாய், மரக்கறியெல்லாம் காய்ச்சு ஓஞ்சுபோச்சு.”

“வாழை மரங்களில குலை ஒண்டையும் காணேல. நான் வந்தபோது முத்தம் முழுக்க வாழைக்குலையள் அடுக்கியிருந்தாய். தேங்காய் குவியலும் கிடுகுக் கட்டுகளும் இருந்தது. நாங்கள் வாறது தெரிஞ்சு முதலே சந்தைக்கு குடுத்திட்டியா” அமுதன் கேட்டான்.

“எப்பவும் ஒரேமாதிரி வராதண்ணை. வாழையளுக்கு நோய் வந்து மருந்தடிச்சு இப்பதான் நல்லாய் வருகுது. இனி குலை போட்டு முத்த நாளெடுக்கும். தேங்காய் வருமானம்தான் வருகுது. வீடு மேய்ஞ்சதால கிடுகும் விக்கேலாமல் போச்சு”

“கேட்டால் ஏதாவது காரணம் சொல்லு. நான் நம்பமாட்டன். அப்பாவுக்கும் ஏலாமல் வருகுது அடிக்கடி வந்து போறது கஷ்டம். எனக்கு உதுகளெல்லாம் சரிவராது. காணியை விக்கப் போறம் அதுக்குத்தான் வந்தனாங்கள். காசை பாங்கில போட்டு நிம்மதியாய் இருந்தால் வட்டி தானாய் வரும். இந்த ஏமாத்து வேலைகள் இருக்காது”

மனம் பதற திடுக்குற்று அவனைப் பார்த்தான்.

சின்னவயதில் பார்த்தமாதிரியே இருக்கிறான் எங்களுடைய வலிகளை உணரவே மாட்டானா. கேட்ட பணத்தை அனுப்பியும் குறை சொல்லுறானே. திடீரென இப்படியொரு நிலமை வரும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. கடவுளே… காணியை வித்தால் எங்கள் நிலமை. பிள்ளையோடு எங்கே போவோம் இன்னொரு தோட்டத்தில் கூலியாகவா… நெஞ்சு வலிக்க முதலாளியைப் பார்த்தான்.

அமுதன் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தவருக்கு சந்திரனுக்கு வலித்ததைவிட அதிகமாக வலித்தது. சந்திரனின் பார்வையில் இருந்த தவிப்பை தாங்கமாட்டாமல் பார்வையைத் திருப்பி காணியைப் பார்த்தார். இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாய் சொந்தமாய் நினைத்து பராமரித்தவனை நடுறோட்டில் விடுவதா… விசுவாசமாய் இருந்தவனுக்கு நான் இருக்கும்போதே ஏதாவது செய்யவேணும். ஏற்கனவே முடிவு செய்ததை நினைத்துக் கொண்டார்.

“அமுதன் உனக்கு இரண்டுநாள் யாழ்ப்பாணத்தில வேலையிருக்கு எண்டாய் முடிச்சிட்டு வா நான் காணி விக்கிற அலுவலைப் பாக்கிறன். இப்ப நீ போய் காரை எடு நான் வாறன்” என்றார்.

அமுதன் போனதும் சந்திரனைப் பார்த்தார்.

“நாளைக்கு காலமை பத்துமணிக்கு நான் காணிக்கந்தோரில நிற்பன். நீ உன்ர அடையாள அட்டையை எடுத்துக் கொண்டு அங்க வா. காணியை விக்க முதல் நீ இருக்கிற வீட்டோட அரை ஏக்கரை உன்ர பெயரில பதியவேணும்” கனிவோடு சொல்ல

“ஐயா….”

அடுத்த சொல் சந்திரன் வாயிலிருந்து வரவில்லை. ஆனந்தி திகைத்துப் போய் நின்றாள்.

 

நிறைவு…

விமல் பரம்

 

நன்றி : பாலு மகேந்திரா நூலகம்

 

 

 

 

 

 

 

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More