Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் சிறுவர் இலக்கிய கர்த்தா துரைசிங்கம் விடைபெற்றார்

சிறுவர் இலக்கிய கர்த்தா துரைசிங்கம் விடைபெற்றார்

9 minutes read

அஞ்சலிக்குறிப்பு 

 “நல்ல  நல்ல நூல்களே நமது சிறந்த நண்பராம் “ எனப்பாடிய  சிறுவர் இலக்கிய கர்த்தா   துரைசிங்கம் விடைபெற்றார் 

எழுதியவர்: முருகபூபதி (அவுஸ்திரேலியா)

சமகாலம், கொரோனா காலமாகியமையால், அஞ்சலிக்குறிப்புகள் எழுதும் காலமாகவும்  இது மாறிவிட்டது.  கடந்த 2020 ஆம் ஆண்டு தொடக்கம்  அடுத்தடுத்து எமது தமிழ்ச்சூழலில் பலரையும்  நாம் இழந்து வருகின்றோம்.

ஒருவருடைய மறைவுச்செய்தி  அண்மைக்காலத்தில் கிடைத்தால்,  “ என்ன நடந்தது..? அவருக்கும் கொரோனா தொற்றா..?  “  எனக்கேட்கும் நிலையில்தான் நாம் இருக்கின்றோம்.

கடந்த சில வருடங்களாக சில நோய் உபாதைகளுடன் காலத்தை கடத்திக்கொண்டிருந்த,  ஈழத்து இலக்கிய உலகில் சிறுவர் இலக்கியத்திற்காக தனது வாழ்நாளில் பெரும்பகுதியை செலவிட்ட  எழுத்தாளரும் முன்னாள் ஆசிரியர் – அதிபர் த. துரைசிங்கம் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கிடைத்ததும், அவரது சகோதரர்   எழுத்தாளர்  இளங்கோவனுடன் தொடர்புகொண்டு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துவிட்டே, இந்த அஞ்சலிக்குறிப்பினை எழுதுகின்றேன்.

இளங்கோவன் பிரான்ஸில் வசிப்பவர்.  இவரது குடும்பத்திலிருந்து எழுத்தாளர்கள் நாவேந்தன், சட்டத்தரணி தமிழ்மாறன், ஆகியோருடன் துரைசிங்கமும் நீண்ட காலமாக இலக்கியப்பிரதிகள் எழுதிவந்தவர்.

இலங்கையில் சப்த தீவுகள் என வர்ணிக்கப்படும்  பிரதேசத்தில்    வீதி மார்க்கமாகச்செல்லக்கூடிய புங்குடுதீவு, பல கலை, இலக்கிய ஆளுமைகளையும்  கல்விமான்களையும் எமக்கு தந்திருக்கிறது.

அவர்களில் துரைசிங்கமும் குறிப்பிடத்தகுந்த ஒருவர். 

நான் வீரகேசரியில் ஒப்புநோக்காளராக எனது பணியைத் தொடங்கிய காலத்தில்  இலங்கையின் பல பிரதேசங்களையும் சேர்ந்த நிருபர்கள் எழுதி அனுப்பும் செய்திகளை அச்சுப்பிரதியில் ஒப்புநோக்கும்போது,  குறிப்பிட்ட செய்திகளின் மூலப்பிரதிகளையும் பார்க்கவேண்டும் என்பது அவசியம்.

யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து அப்போது யாழ். நிருபர் செல்லத்துரையும்,  மானிப்பாயிலிருந்து அரசரட்ணமும், உடுப்பிட்டியிலிருந்து தில்லைநாதனும், புங்குடுதீவிலிருந்து துரைசிங்கமும் எழுதிக்கொண்டிருந்தனர். 

தினமும் இவர்களின் எழுத்துக்களை படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்து வந்தமையால்,  இன்றும் அவர்களின் எழுத்துவடிவம் மனக்கண்களில் தங்கியிருக்கிறது.

துரைசிங்கம் புங்குடுதீவு ஶ்ரீ கணேச மகா வித்தியாலயத்தில் முதலில் ஆசிரியராகவும் பின்னர் அதிபராகவும் பணியாற்றியவர்.

அத்துடன் பகுதிநேரமாக பிரதேச செய்திகளை வீரகேசரிக்கு எழுதி அனுப்பும் நிருபராகவும் பணியாற்றினார்.

இன்றைக்கிருக்கும் நவீன தொடர்பூடக சாதனங்கள் இல்லாத அக்காலப்பகுதியில்,  நமது பத்திரிகை ஊடகங்கள் தபால் சேவையையே பெரிதும் நம்பியிருந்தன.   உடனுக்குடன் செய்திகளை எழுதி,  இரவு காங்கேசன் துறையிலிருந்து புறப்படும் தபால் ரயிலுக்கு சேர்ப்பித்துவிடும்  சுறுசுறுப்பு யாழ். மாவட்ட நிருபர்களிடம் குடியிருந்தது.

தொடர்ச்சியாக பலரதும் எழுத்துக்களை அது செய்தியானால் என்ன, கவிதையானால் என்ன, கட்டுரையானால் என்ன கதையானால் என்ன, படித்துக்கொண்டிருக்கும் வாசகரால் அவற்றை எழுதிவருபவரது இயல்புகளையும்  புரிந்துகொள்ளமுடியும். 

இன்றும் பலரதும் எழுத்துக்களை பிழை திருத்தும் ஒப்புநோக்காளர் பணியை தொடரும் எனக்கு அதன்மூலம் அவற்றை எழுதியவர்களின் இயல்புகளும் புரியும்.

துரைசிங்கம் அவர்களின் எழுத்தை வைத்தே அவரது மென்மையான இயல்புகளை அன்றே புரிந்துகொண்டேன்.

இவரது சகோதரர்கள் நாவேந்தன்,  தமிழ்மாறன், இளங்கோவன் ஆகியோர் எழுத்துப்பணிகளுக்கு அப்பால், தீவிர அரசியல் ஈடுபாடு கொண்டிருந்தவர்கள்.   அதனால், அவர்களின் எழுத்துக்களில் அரசியல் நெடியும் மனித உரிமை சார்ந்த சிந்தனைகளும் பரவியிருக்கும்.

துரைசிங்கம் எப்பொழுதும் வருங்கால தலைமுறையினரான எமது குழந்தைகள் குறித்தே எழுதியும் பேசியும் வந்தவர்.  

உலகில் நல்லவைகள் யாவும் குழந்தைகளுக்கே என்றவர் மேதை லெனின்.  குழந்தை இலக்கியம் படைப்பவர்களுக்கு  குழந்தைகளின் உளவியலும் நன்கு தெரிந்திருக்கவேண்டும்.

தனது வாழ்நாளில் பெரும்பாலான நேரத்தை குழந்தைகள், மாணவர்களுடன் செலவிட்டிருக்கும் துரைசிங்கம்  அவர்களுக்காக எழுதினார்.   

 படைப்பு இலக்கியத்துறையில் மிகவும் சிரமமானது சிறுவர் இலக்கியம்தான்.  அதனை தொடர்ந்து முன்னெடுத்து வந்தவர் துரைசிங்கம்.

அதிர்ந்து பேசத்தெரியாத மென்மையான இயல்புகளைக்கொண்டிருந்தவர்.  இவரது சகோதரர்களுடன் ஓரளவு நெருக்கமாக நான் பழகியிருந்தாலும்,  இவருடன் உறவாடுவதற்கு எனக்கு சந்தர்ப்பங்கள் அதிகம் கிட்டவில்லை.

இறுதியாக  சில வருடங்களுக்கு முன்னர் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில்தான் இவரை சந்தித்தேன்.  ஒரு சில வார்த்தைகளுடனும் புன் சிரிப்புடனும் கடந்து சென்றார். 

நான் இலங்கையிலிருந்த காலப்பகுதியில் வீரகேசரியில் தினம் தினம் இவரது எழுத்துக்களில் எனது பார்வை ஊடுருவியிருக்கும்.  

அழகான கையெழுத்துக்கு சொந்தக்காரர்.  அத்துடன் செய்திகளை தெளிவாக எழுதியிருப்பார்.  ஆசிரிய பீடத்திலிருப்பவர்களுக்கு இவர் சிரமம் தந்ததில்லை.  தனது செய்திகளுக்கு பொருத்தமான தலைப்புகளும் இட்டிருப்பார்.

பின்னாளில் துரைசிங்கம் படிப்படியாக சிறுவர் இலக்கியத்துறைக்குள் பிரவேசித்தவேளையில் நான் புலம்பெயர்ந்துவிட்டேன்.

அதன்பின்னர் இவரது கையெழுத்துக்களை பார்க்கும் வாய்ப்பு கிட்டாது போனாலும்,  இவர் எழுதிய நூல்கள் குறித்த செய்திகள் கிடைத்தவண்ணமிருந்தன.

நல்ல நல்ல நூல்களே நமது சிறந்த நண்பராம் எனத் தொடங்கும் இவரது பாடல் இனிமையான சந்தத்துடன் தொடங்கி முடிகிறது. 

தமிழ் மாணவர்களுக்காக இவர் எழுதிய நூல்கள் இலக்கிய ஆய்வாளர்களுக்கும் உசாத்துணையாகும். 

க. பொ. த. ( சாதாரண தர ) மாணவர்கள் தமிழ் மொழி இலக்கியப்பாட பரீட்சைக்குத் தோற்றும்போது, அவர்களுக்கு பயன்தரக்கூடிய கங்கையில் விடுத்த ஓலை என்ற நூலையும் எழுதினார்.

சிறுவர் கட்டுரைகள் , சைவநெறி ,    தமிழ் இலக்கியத் தொகுப்பு (வினா விடை)தமிழ் உரை நடைத் தொகுப்புதமிழ் செய்யுட் கோவை தமிழ் மொழியும் இலக்கியமும்  முதலான துறைகளில்  சில பாகங்களையும் எழுதி மாணவர்களுக்கு வரவாக்கினார்.  

நவராத்திரிப் பாமாலை, பாடம் புகட்டும் பழமொழிகள் பாட்டுப் பாடுவோம்  என்றெல்லாம் பலவகை நூல்களை படைத்திருக்கும் துரைசிங்கம் அவர்கள்  லெனினும் ஆசியாவும் என்றொரு நூலும்    Model Essays  என்ற ஆங்கில நூலும்  படைத்திருப்பவர்.

ஆசிரியர், அதிபர்,  கோட்டக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்விப் பணிப்பாளர்,  எழுத்தாளர்,  பத்திரிகையாளர், பன்னூலாசிரியர் என நன்கு அறியப்பட்டிருந்த     துரைசிங்கம் அவர்கள்        சிறுவர் இலக்கியத் துறைக்கான தேசிய சாகித்திய விருதினையும் வடக்கு கிழக்கு மாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சு, இலங்கை இலக்கியப் பேரவை, யாழ் இலக்கிய வட்டம், கொழும்பு விவேகானந்த சபை, கலாசார அலுவல்கள் அமைச்சு, மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்  முதலானவற்றின் விருதுகளையும் பெற்றவர்.  

இலக்கிய வித்தகர், கலாபூஷணம் முதலான பட்டங்களும் பெற்றவர்.

தனது 84 அகவையில் இம்மாதம்   23 ஆம் திகதி  கொழும்பில் மறைந்துவிட்டார்.

இவர் குறித்து இந்த அஞ்சலிக்குறிப்புகளை எழுதும்போது,  மனதில் சிறிய நெருடலும் வருகிறது.

துரைசிங்கம்  அவர்களை,  இலங்கையில் நீண்ட காலம் வெளிவந்த மல்லிகையோ, தற்போது வெளிவந்துகொண்டிருக்கும் இதர இலக்கிய இதழ்களோ அட்டைப்பட அதிதி கௌரவம் தரவில்லையே என்ற மனக்குறைதான் அந்த நெருடல். 

இதுவரைகாலத்தில் இவர் பற்றி நான் கூட எழுதவில்லையே என்ற குற்றவுணர்வுடன்தான்,  சிரம்தாழ்த்தி மன்னிப்புக்கோரி இந்த அஞ்சலிக்குறிப்புகளை எழுதுகின்றேன்.

ஈழத்தில் சிறுவர் இலக்கியத்திற்காகவும் மாணவர் சமுதாயத்திற்காகவும் தனது வாழ்நாட்களை அர்ப்பணித்த துரைசிங்கம் அவர்களின் படைப்புகளை நூலகம்  ஆவணகத்தில் பெற்று படிக்கலாம்.

—0—

letchumananm@gmail.com

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More