செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் இனப் படுகொலையின் சாட்சியாக அமரதாஸின் ஒளிப்பட புத்தகம் | லண்டனில் வெளியீடு

இனப் படுகொலையின் சாட்சியாக அமரதாஸின் ஒளிப்பட புத்தகம் | லண்டனில் வெளியீடு

6 minutes read
அழைப்பிதழ்

இனப் படுகொலையின் சாட்சியாக அமரதாஸின் ஒளிப்பட புத்தகம் லண்டனில் வெளியீடு காண்கிறது. திரள் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறும் நிகழ்வில் பல்வேறு ஆளுமைகள் நூல் குறித்து உரையாற்றவுள்ளனர்.

நிகழ்வு குறித்த விபரம்

பேரழிவுகளோடு நிகழ்த்தி முடிக்கப்பட்ட ‘இலங்கை இறுதிப் போர்’ சார்ந்த மறைக்கப்பட்ட உண்மைகளையும் ஈழத்தமிழரது போர்க்கால வாழ்வியலின் பரிமாணங்களையும் போர் சார்ந்த பேரவலங்களையும் பிரதிபலிக்கும் வகையிலான ஒளிப்படப் பெருநூல், ‘THROUGH THE FIRE ZONES: PHOTOGRAPHS OF AMARATHAAS IN SRI LANKA’S WAR ZONES’ என்னும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள நூலின் வெளியீடு லண்டனில் இடம்பெறவுள்ளது.

இரத்தமும் வியர்வையும் கண்ணீரும் சிந்தி, உயிரைப் பணயம் வைத்துச் சுயாதீனமாக நான் உருவாக்கிய போர்க்கால ஒளிப்படங்கள் பலவற்றைப் பல்வேறு வழிகளில் இதுவரை வெளியிட்டிருக்கிறேன். போர்க்காலத்திலும் பின் போர்க்காலத்திலும் ‘அநாமதேயமாக’ (என் பெயரை அடையாளப்படுத்தாமல்) எனது போர்க்கால ஒளிப்படங்கள் பலவற்றை வெளியிடவேண்டியிருந்தது. பல்வேறு நாடுகளிலே போர்க்கால ஒளிப்படங்களின் காட்சிப்படுத்தல் நிகழ்வுகளை இதுவரை நடாத்தியிருக்கிறேன். கொடிய போர்க்காலத்தில் நான் உருவாக்கிய பல்லாயிரக்கணக்கான ஒளிப்படங்களுக்குள் இருந்து சில நூறு ஒளிப்படங்களைத் தேர்ந்தெடுத்து, இப்போது இந்த ஒளிப்படப் பெருநூலை உருவாக்கியிருக்கிறேன். பல்வேறு நெருக்கடிகள் மற்றும் பற்றாக்குறைகள் மத்தியில் இந்த நூல் சார்ந்து நீண்ட காலம் உழைக்கவேண்டியிருந்தது. 

இத்தகையதொரு ஒளிப்பட நூலின் தேவை குறித்தும் அதற்கான எனது பிரயத்தனங்கள் குறித்தும் நீண்ட காலமாகப் பொதுத்தளங்களிற் பேசிவந்திருக்கிறேன். நூலின் வடிவமைப்பு உட்பட, நூலாக்கம் சார்ந்த அடிப்படைப் பணிகள் அனைத்தும் 2021 மே மாதத்தில் நிறைவுபெற்றன. பொறுப்புணர்வையும் அர்ப்பணிப்பையும் மட்டுமல்ல, பெரும் பொருட்செலவையும் கோருகிற நூல் இது. பொருளாதார நெருக்கடிகளாலும் ‘கொரோனா’ பெருந்தொற்றுக் காலத்தின் புதிய நெருக்கடிகளாலும், பொது விநியோகத்திற்கான பிரதிகளைத் தயார் செய்யும் பணிகள் தாமதமாகிவிட்டன. 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இந்த நூலின் வெளியீட்டு நிகழ்வும் பொது விநியோகமும் ஐரோப்பாவிலே சாத்தியமாக்கப்படும்.

இலங்கை இறுதிப் போரில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழரது வாழ்வியலின் பரிமாணங்களை உண்மைத்தன்மையுடன் பிரதிபலிக்கும் பல நூறு ஒளிப்படங்களைக் கொண்ட இந்த நூலானது, 400 பக்கங்களில் நேர்த்தியான வடிவமைப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை இறுதிப் போர் நடைபெற்ற இடங்களையும் ‘பாதுகாப்பு வலயம்’ (No Fire Zone) என்று அறிவிக்கப்பட்டிருந்த இடங்களையும் அறிந்துகொள்வதற்கு உதவக்கூடிய தெளிவான வரைபடத்தையும் வேறெங்கும் இதுவரை வெளிவந்திராத அரிதான பல ஒளிப்படங்களையும் உள்ளடக்கிய நூல் இது. 

ஒளிப்படங்கள் சிலவற்றைத் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கான சிறு குறிப்புகள் அனைத்தும் ஆங்கில மொழியிலும், ஏனைய அறிமுகக் குறிப்புகள் அனைத்தும் ஆங்கிலம் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வழங்கப்பட்டு, சர்வதேச சமூகங்கள் மத்தியிலே எடுத்துச் செல்லக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட நூல் இது. 

இலங்கை இறுதிப் போர்க்காலத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மக்களோடு கூட இருந்து சுயாதீன ஊடகராக இயங்கிய அனுபவங்களுடனும் பாரபட்சமற்ற நிதானத்துடனும் ‘சாட்சி நிலை’ நின்று இந்த ஒளிப்படப் பெருநூலை உருவாக்கியிருக்கிறேன். என் வாழ்வின் மகத்தான பணிகளில் ஒன்றைப் பல்வேறு நெருக்கடிகளின் மத்தியிலும் அர்ப்பணிப்பு உணர்வோடு நிகழ்த்தி நிறைவுசெய்திருப்பதாக நம்புகிறேன். 

பலமான பொருளாதாரப் பின்னணியையோ அதிகார மையங்களின் செல்வாக்கையோ நிறுவன ரீதியான ஆதரவையோ நான் கொண்டிருக்கவில்லை. கொடிய போரின் ‘பலியாள்’ (victim) ஆகி, அரசியல் அகதியாகி அலைக்கழிந்துகொண்டிருக்கிற நான், சுயாதீன அடிப்படைகளில் இருந்து இந்த ஒளிப்படப் பெருநூலை உருவாக்கி வெளிக்கொணரும் செயன்முறையில் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் கொஞ்சமல்ல.

ஈழத்தமிழர் வரலாறு சார்ந்த ஆவணங்களும் இலங்கை இறுதிப் போர்க்காலத்தின் ‘போர்க்குற்றங்கள்’ பலவற்றை உறுதி செய்யக்கூடிய ஆவணங்களும் ஈழத்தமிழர் மீதான இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு ஆதாரங்களாக அமையக்கூடிய ஆவணங்களும் விடுதலைப் போராட்ட நடவடிக்கைகள் சார்ந்த ஆவணங்களும் இணைய வெளிகளில் இருந்து அழிக்கப்பட்டு வருகின்றன. அத்தகைய ஆவணங்கள், பல்வேறு தரப்பினராலும் வெவ்வேறு நோக்கங்கள் சார்ந்து இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன. ஒடுக்குமுறைச் சக்திகளின் சதிகளுக்கும் பாரபட்ச இழிவை மேற்கொள்ளும் அதிகார வர்க்கச் சட்டங்களுக்கும் துணை போகக்கூடிய இத்தகைய செயற்பாடுகளை முறியடிக்கும் வகையில், ஈழத்தமிழர் சார்ந்த அசலான ஆவணங்களையும் மெய்யான வரலாற்றையும் பேணிப் பாதுகாக்கும் பொறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டியுள்ளன. இத்தகைய பின்னணியில், இலங்கை இறுதிப் போர்க்காலத்தை நேரடியாகப் பதிவு செய்திருக்கும் ஒளிப்படங்களைக் கொண்ட இந்த நூலின் உருவாக்கமானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகிறது.

ஒளிப்பட ஊடகவியல் (photojournalism) சார் நோக்கு நிலையில், இந்த நூலின் சாத்தியப்பாடுகள் விசாலமானவை. ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில், இந்த நூலின் முக்கியத்துவம் பன்முகப்பட்டதாக அமையும். தமிழ்ச் சூழலில் ஒளிப்பட மற்றும் ஊடகவியல் சார் துறைகளைப் பொறுத்தவரையில் முன்னுதாரணம் அற்ற ஒரு நூலாக இது அமைந்திருக்கும் என்று கருதுகிறேன்.

புகழ் நலன் அல்லது பொருளாதார நலன் சார் நோக்கில், இந்த ஒளிப்பட நூல் உருவாக்கப்படவில்லை. இந்த நூல் சார்ந்த பணிகள் அனைத்தும், கொடிய போரிலே மோசமாகப் பாதிக்கப்பட்டும் நீதி மறுக்கப்பட்டும் அலைக்கழியும் ஈழத்தமிழினத்தின் ‘நலன்கள்’ சார்ந்து முன்னெடுக்கப்படும் தன்னார்வத் தொண்டுப் பணிகளாகும். இந்த நூல் சார்ந்த பெருஞ் செலவுகளை முழுமையாக மீளப் பெற முடியும் என்பதற்கான எத்தகைய உத்தரவாதமும் இல்லை. எனினும், பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் ‘Wide Vision Studio’ (கலைகள் மற்றும் ஊடகவியல் சார் சுயாதீன இயக்கம்) இந்த ஒளிப்படப் பெருநூலை வெளியிடுகிறது. இத்தகைய ஆவணப்படுத்தல் சார்ந்த பணிகளை, நிதி வளம் கொண்ட பொது நிறுவனங்கள் அல்லது பெரிய அமைப்புகள், ஆரோக்கியமான முறையில் முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும். இந்த ஒளிப்பட நூலானது, இந்த வழியில் யாரேனும் இயங்குவதற்கான தூண்டுகோலாக அல்லது முன்னுதாரணமாக அமையக்கூடும்.

இது, இலங்கை உள்நாட்டுப் போர் தொடர்பிலான அனைத்துத் தரவுகளையும் கொண்ட, ‘முழுமையான’ வரலாற்று நூல் அல்ல. இறுதிப் போர் சார்ந்த உண்மைத் தரவுகளையும் மறுதலிக்க முடியாத காட்சி ஆதாரங்களையும் கொண்ட வலுவான வரலாற்று ஆதார நூலாக இது அமைந்திருக்கும். ஈழத்தமிழ்ச் சமூகத்தின் வலிகளையும் தேவைகளையும் மெய்யான வரலாற்றையும் காட்சிக் கலை மூலம் சர்வதேச சமூகங்கள் மத்தியில் எடுத்துரைப்பது, இந்த ஒளிப்பட நூலின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

ஈழத்தமிழரின் போர்க்காலப் பாடுகளையும் அவல வாழ்வியலையும் இந்த நூல் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது. மட்டுமல்லாமல், பல்லாயிரக்கணக்கானோரது உயிர்த் தியாகங்களாலும் வெகுமக்கள் ஆதரவாலும் வளர்ச்சியடைந்து பல்வேறு அகப்புறக் காரணங்களால் அழிந்து போய்விட்ட விடுதலைப் போராட்டத்தின் பரிமாணங்களை உள்ளார்ந்து பிரதிபலிக்கிறது. இந்த நூலின் நிமித்தமாக, வருங்காலத்திலே புதிய நெருக்கடிகளும் ஆபத்துகளும் என்னைச் சூழக்கூடும். எது எப்படியிருந்தாலும், சுயாதீன ஊடகராகவும் கலைஞராகவும் அற வழியிலே தொடர்ந்து பயணிக்க வேண்டிய தேவை இருப்பதாக உணர்கிறேன். 

வெவ்வேறு நாடுகளில் இந்த நூலை அறிமுகப்படுத்தவும் விநியோகிக்கவும் வாங்கவும்  முன்வரக்கூடிய அன்பர்கள் அனைவருக்கும் முற்கூட்டிய நன்றியை மலர்த்துகிறேன். இந்த நூல் சார்ந்து எனக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய அனைவரையும் நன்றியோடு நினைவிற் கொண்டிருப்பேன்.

நீண்ட காலமாகப் பெரும்பாலும் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தேன். அதற்கு இரண்டு காரணங்கள் முக்கியமானவை. ஒன்று, ஒளிப்படங்களை நூலாக்கும் பாரிய பணிச்சுமை. இன்னொன்று, உடல் ரீதியிலான மோசமான பாதிப்பு. கணினி முன்னே நீண்ட நேரம் கதிரையில் அமர்ந்திருக்க முடிவதில்லை. பெரும்பாலான நேரம் படுத்தபடி இருந்து நூல் சார்ந்த பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதிக பரிச்சயமில்லாத நூலாக்கம் சார்ந்த நவீன தொழில் நுட்ப விடயங்களை வேண்டிய அளவிலே கற்றுக்கொண்டு, மடிக் கணினியைத் தேவைகளுக்கேற்ப உபயோகிக்க வேண்டியிருந்தது. இந்த நூலை உருவாக்கி முடிக்க, சில ஆண்டுகளை முழுமையாகச் செலவிட வேண்டியிருந்தது. அவற்றுள்ளே, பல இரவுகளை நித்திரையின்றி உழன்றபடியே கடக்கவேண்டியிருந்தது. மட்டுமல்ல, அடிக்கடி வலி நிவாரணிகளையும் தூக்க மாத்திரைகளையும் பாவிக்க வேண்டியிருந்தது. கொடிய போரில் இருந்து நான் தப்பிப்பிழைத்து வந்திருந்தாலும், உடலிலும் மனதிலும் போர் ஏற்படுத்தியிருக்கும் மோசமான பாதிப்புகளோடு தான் எஞ்சியுள்ள வாழ்வைக் கடந்து செல்லவேண்டியிருக்கிறது. 

எனது ஒளிப்படப் பெருநூலானது பொதுவெளிக்கு வந்து பரவலாக்கம் பெற்ற பின்னர், அது சார்ந்து பேசுவதற்குப் பல விடயங்கள் இருக்கின்றன. நூலில் நான் சேர்த்திருக்கும் ஒளிப்படங்கள் சார்ந்த கதைகள், நினைவுகள், அனுபவங்கள் குறித்துப் பிரத்தியேகமாகப் பகிர்ந்துகொள்ள முடியும். நல்லெண்ணத்துடன் என்னை அணுகக்கூடிய யாரோடும் எது குறித்தும் உரையாடத் தயாராக இருக்கிறேன். உரையாடல் தொடரும்… 

2022-10-12

அமரதாஸ் 

குறிப்பு: இலங்கை இறுதிப் போர் முடிந்து பத்தாவது வருடத்தில் ‘THROUGH THE GREY ZONES’ என்னும் பெயரில் ‘Wide Vision Studio’ வெளியீடாக உருவாக்கப்பட்ட ஒளிப்பட நூல், சில காரணங்களால் வெளிக்கொணரப்படவில்லை. அதன் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக, இலங்கை இறுதிப் போர் முடிந்து பன்னிரண்டாவது வருடத்தில் ‘THROUGH THE FIRE ZONES’ என்னும் ஒளிப்படப் பெருநூல் ‘Wide Vision Studio’ வெளியீடாக உருவாக்கப்பட்டுள்ளது.

மேலதிகமாகச் சில குறிப்புகள்: எனது போர்க்கால ஒளிப்படங்கள் சார்ந்து, ‘கூட்டுக்களவாணிகள்’ சிலர் மோசமான உள்நோக்கங்களுடன் அவ்வப்போது சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறார்கள். என் பொதுப் பணிகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களில் ‘நண்பர்கள்’ சிலர் மௌனித்திருந்தனர். பொதுவெளியில் ‘நியாயம் பேசவேண்டிய’ சிலர் ‘மௌனம்’ காத்தனர். அத்தகைய சந்தர்ப்பங்களில், என்னையும் எனது பணிகளின் அவசியத் தேவைகளையும் புரிந்துகொண்டு எனக்கு ஆதரவளித்த சிலரை நன்றியுடன் நினைவிற் கொண்டிருக்கிறேன். வலிந்து உருவாக்கப்படுகிற சர்ச்சைகள் பற்றியெல்லாம் இப்போது அதிகம் பேசிக்கொண்டிருக்க அவசியமில்லை. எனக்கெதிரான அவதூறுகளைப் பரப்புகிறவர்களால் எனக்குத் தனிப்பட்ட முறையில் எத்தகைய பின்னடைவும் ஏற்படப் போவதில்லை. விரும்பியோ விரும்பாமலோ மோசமான அதிகார சக்திகளுக்குத் துணை போகக்கூடிய அத்தகைய விசமிகள், தம்மைத் தாமே அம்பலப்படுத்திக் கொள்வார்கள்.

பாதுகாத்து வைத்திருக்கவும் பரவலாக்கம் செய்வதற்கும் சிலரிடம் கொடுக்கப்பட்டிருந்த எனது போர்க்கால ஒளிப்படங்கள், கைமாறியும் திருடப்பட்டும் வேறு சில நபர்களால் முறைகேடாகக் கையாளப்பட்டுள்ளன. போர்க்காலத்திலும் பின்-போர்க்காலத்திலும் ‘அநாமதேயமாக’ வெளியிடப்பட்ட எனது ஒளிப்படங்கள் சிலவற்றை, வேறு நபர்களுடையவை போலச் சிலர் ‘காண்பிக்க’ முற்பட்டிருக்கிறார்கள். என் பெயரால், என்னால் வெளியிடப்படும் அனைத்து ஒளிப்படங்களும் என்னால் உருவாக்கப்பட்டமைக்கான நம்பகமான, உறுதியான ஆதாரங்களைக் கொண்டவை. அவற்றின் ‘காப்புரிமை’ என்னிடம் உள்ளது. அற வழியில் நான் முன்னெடுக்கும் சுயாதீனப் பணிகளை, எத்தகைய அதிகாரங்களாலும் அவதூறுகளாலும் சதி முயற்சிகளாலும் தடுத்துவிட முடியாது. மோசமான உள்நோக்கம் கொண்டவர்களால் மேற்கொள்ளப்படக்கூடிய அனைத்துச் சதிகளுக்கும் அவதூறுகளுக்கும் எனது ‘ஆக்கபூர்வச் செயல்கள்’ எதிர்வினைகளாக அமையும். 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More