Saturday, May 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் மகாகவி இதழ் – பெரிதினும் பெரிது கேள்.. | ஹரணி

மகாகவி இதழ் – பெரிதினும் பெரிது கேள்.. | ஹரணி

5 minutes read

கவிஞர் வதிலைபிரபா இந்தப் பெயர் சிற்றிதழ் உலகில் குறிப்பிடத்தக்க அடையாளத்தையும் சிறப்பையும் பெற்று நிலைத்திருக்கும் பெயர். எனக்குத் தெரிந்த அளவில் கிட்டத்தட்ட முப்பதாண்டுகளுக்கும் மேலாகச் சிற்றிதழ் நடத்தி அதில் தொடர்ந்து தமிழ்க்கவிதையுலகிற்குத் தொண்டாற்றி வருபவர் என்று சொல்லலாம். அவருடைய தற்போதைய இதழ் மகாகவி. பாரதியின் அடைமொழியால் பெயர்பெற்ற இதழ். அக்டோபர் – திசம்பர் காலாண்டிதழ் வரப்பெற்று வாசித்து முடித்தேன். இதுகுறித்த கருத்துகளை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

பாரதியுரைத்ததுபோல் பெரிதினும் பெரிது கேள் எனும் தொடருக்கான நிறைவை இவ்விதழ் உள்ளடக்கம் எனக்குத் தந்திருக்கிறது. முழுக்கக் கவிதைகளால் நிரம்பி வழிகிறது. ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு தளத்தில் நகரவிடாமல் மனத்தை ஊடுருவி சற்றே அதிரவைக்கிறது. இதில் கவிதைக்கானப் பங்களிப்பைத் தந்திருக்கும் கவிஞர்களில் பெரும்பான்மை விழுக்காடு புதுக்கவிதைகளை வேறுதளத்தில் பரிமளிக்கச்செய்தவர்கள். அடுத்தக் கட்ட நகர்வுக்கான சிந்தனையை விதைப்பவர்கள். ஒவ்வொரு கவிதையும் சொல்லாடலில் ஒன்றையொன்று உணர்வுகளால் தகிக்கவைக்கின்றன. அது என்ன பொருண்மையாக இருந்தாலும் சரி.

அப்புறம் கொஞ்சம் கட்டுரைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, நூல் மதிப்புரைகள் எனவும் இதழில் நிறைந்து செழிக்கின்றன. நல்ல தரமான ஆர்ட் பேப்பரில் இதழ் முழுக்க அச்சிட்டிருப்பது அதிலுள்ள படைப்புகளுக்கானத் தகுதியை மேலும் உயர்த்திப்பிடித்துக் கௌரவிப்பதாய் நான் உணர்கிறேன்.

கவிஞர் பழநிபாரதியின் கவிதை நுழைவுவாசலில் தோரணமாய் இல்லை வாசலாகவே நிற்கிறது. அதுவும் பொன்வாசல் பொலிவாய். மேகங்களைக் கற்பனித்துச் சுவைகண்ட கவிதையுள்ளங்கள் நிறையவுண்டு. புகைப்பிடிப்பதை முரணாகவும், கடுமையாகக் கண்டித்தும் எழுதப்பட்ட கவிதைகளுக்கிடையே புகைவிடுதலைச் சித்திரப்படுத்திய கவிதை உலகத் தரத்தின் எந்த வரலாற்றுக்கும் பொருத்தமுடையதே. காலத்தைப்பிடரியாகக் கொண்ட புரவியாக, குளிரிலொடுங்கிய முயற்குட்டியாக, தந்தமறுந்து இறந்துகிடக்கும் களிறாக, நம்பிக்கையான ஒரு வெள்ளை ரோஜாவாக.. ஒரு புகைப்பிடிப்பவர் எவற்றையெல்லாம் கொல்லுகிறார் என்று ஒரு குடும்பத்தின் காலத்தை, முயற்குட்டியாய் உலவும் குழந்தைகளை, குடும்பத்தை நிலைநிறுத்தவேண்டிய யானையாக நிற்பவன் இறந்துபோவதாக.. இருப்பினும் முயன்றால் நம்பிக்கையுடன் இந்த வாழ்வை வெல்லமுடியும் என்கிற நம்பிக்கை ஒரு தூயவெள்ளை ரோஜாவாக.. என்றெல்லாம் நான் பொருள் புரிந்துகொள்கிறேன்.

கவிஞர் அகத்தியனின் கவிதை சொல்லாடலில் சொக்க வைக்கிறது. அன்பைப்போதிக்கவும் விடுவிக்கவும் உணர்வுகளைக் கத்தியாகக் கொண்டுவிட்டால் அங்கே இரத்தமும் இல்லை வலியுமில்லை கருணையின் உச்சமதுதான். அன்பில்லாத வன்முறை என்பவர் நேசித்தலே வன்முறை என்கிறார். இரண்டின் துருவங்களிலும் ஆழமாக உள்ளிறங்கிப் பயணிக்கவேண்டியிருக்கிறது.

விக்ரமாதித்யன் நம்பி திசைமாறிய நதிபோல வாழ்வு என்கிறார். கொடிசுற்றி குழந்தை பிறப்பதால். வழக்கம்போல நம்பியின் கவிதைகள் நம்பிக்கையானவை. சுவையானவை.

படிமங்களில் கவிஞர் பிருந்தாசாரதி வாழ்வை வசப்படுத்துகிறார். ஒளியைத் தின்னும் மீன்களின் இமையா அமர விழிகளில் என்னைக் கண்டுகொண்டே தொடர்கிறது பாதை. கிணற்றுடன் வாழ்வு நடத்துபவருக்குப் புரியும். கிணற்று வாளியின் கயிறாய்த் தளர்ந்துபோய் இருந்த நினைவு. வாழ்க்கைக் கண்கட்டு வித்தைதான். வாழத்தெரிந்தவன் வித்தையும் செய்வான்.

சித்திரமும் மழைக்காலமும் எல்லோருக்குமான மழைக்காலத்தின் நினைவுகளில் புகுந்து சலசலவைக்கிறது. ஈரப்படுத்துகிறது. சிலிர்க்கவும் வைக்கிறது வட்டூர் அ.கு. ரமேஷ் கவிஞர் மனத்துள் பெய்கிறார்.

உணர்ச்சி வேறு உணர்வு வேறு என்பதுபோல இருளும் இரவும் வேறுவேறு என உவமைப்படுத்தும் கவிஞர் வதிலை பிரபா ஆழமான சொல்லாடலில் இருளையும் இரவையும் கணப்படுத்துகிறார். அந்த இரவிலும் அவளே திரி. அவளே நெருப்பு. பலரின் வாழ்வும் எண்ணமும் சூழலும் இப்படித்தான் யாருமறியாமல் அல்லது யாராலும் அறியப்படாமல் கழிந்துவிடுகிறது.

கவிஞர் பிரியா பாஸ்கரன் அழகியலாய் கவிதையுரைக்கிறார். உணர்தல் என்பது ஆம்பலையும் மிஞ்சிய கொள்ளை அழகாய் உவமிப்பது உருவத்திற்கும் அருவத்திற்குமான அழகியல் முரணாக. வாழ்வின் வாசம் ஒவ்வொருவருக்கும் வேறுவேறாக இருந்தாலும் உணர்தலின் சரியான நிலையில் ஒரே வாசமாகும் சூழலும் உருவாகும் என்பதையும் சொல்லாமல் சொல்கிறது.

எத்தனை முறை படித்தாலும் எத்தனை பேர் எழுதினாலும் நிலவு அலுப்பூட்டாதப் பொருண்மை. நம்முடைய விருப்பம்போல ஒரு குழந்தையுடன் சலிப்பில்லாமல் விளையாடுவதபோல கவிஞர் கூடல் தாரிக்கின் நிலா சேந்தி ஒவ்வொன்றும் உணர்வெங்கும் சுகப்படுத்துகிறது. மயிலிறகு கூச்சம்போலச் சொற்கள் வாசிப்பின் சுவையைப் பெருக்குகின்றன. நீரோடு கொஞ்சம் நிலாவையும் சிந்துகிறான். அபாரமான இடமிது. தேய்ந்தபிறகு வளரும் நிலாவினைவிடவும் இந்த வாழ்விற்கு நம்பிக்கையூட்டுவது வேறெதுவும் இல்லை. அவ்வளவுதான் சட்டென்று எளிமையாக அழகாக மனத்துள் தூவிவிட்டுப்போய்விடுகிறார் தாரிக்.

புதியவடிவம், புதிய பொருண்மை, புதிய சொல்லாடல், புதிய வெளிப்பாடு எனச் சமீபமாக அசத்துகிறவர் வலங்கைமான் நூர்தீன். உடலின் அணுவில் தூண்டிலிடுகின்றன சொற்கள். பிரமிடுகளாய் குத்திட்டு நிற்கும் முலைகள், கசிந்த பால் செரிடியன் தைலமாகயிருக்கலாம், கிளியோட்பாராவின் யோனி நஞ்சு நிரப்பப்பட்ட குப்பி. சொல்லுகிற முறையில் நூர்தின் புதிய அலையை அடிக்கிறார். ஆனாலும் ஆழமாக உணர்த்துகிறார் சமரசமின்றி.

கவிஞர் ராசி அழகப்பனின் கவிதை சிக்கலின்றி வாழ்வை உணரவைக்கும் கவிதை. காட்சியாக விரிகின்ற சொற்சித்திரங்கள். கடந்து வந்த தூரத்தின் நிழல். கணக்கின்றி ஓய்வெடுக்கும் அறம் போன்றவை. கவிதையின் முடிப்பில் ஒரு தீர்க்கம் இருக்கிறது. நடந்தவரே பயணிப்பர், பார்வைகளில் பலனில்லை. தடையின்றி வெல்பவர்க்கே வாழ்வு. சரிதான். போதும் சற்று நில் சொல்வதைக் கேள். அவ்வளவுதான். போ. என்று அழகாகச் சுட்டி அனுப்புகிறார்.

எங்கெங்கும் காணினும் சக்தியடா என்பதுபோல நீரெங்கும் அலைகிறது அலையும் நீரே உன் முகமாகிறது. கவிஞர் மு.முருகேஷின் கவிதை முத்திரை பதிக்கிறது.

கவிஞர ஆண்டன் பெனி கவிதைகள் எளிமையும் நேர்த்தியும் அழகும். சொல்கோர்வை எளிதாகிறது இவருக்கு. மூக்குத்திக்கான இருப்பிடத்தை வன்முறை அறியாத ஒரு பூ மொட்டால் (அழகான சிந்தனைத்தொடர்) துளையிட்டிருக்கலாம்தான். ஒரு சிணுங்கல், ஒரு கூச்சம், ஒரு அலறல், ஒரு வெட்கம், ஒரு புன்னகை யாவற்றையும் ஒரு நொடிக்குள் வேறெப்படி பெறமுடியும்? வாசிக்கும்போதே அனுபவிக்க வைக்கிறார் அந்தத் தருணங்களை.

கவிவிஜய் விவசாயத்தைப் போகிறபோக்கில் அவசியப்படுத்திப் போகிறார். விடியற்காலை, உழுத வயலின் பழுத்த, சேற்றின் வாசம். பழுத்த சேறு எத்தனைக் காதல் நிலத்தின்மீது கவி விஜய்க்கு. அருமை.

ஆங்கிலக் கவிஞன் இயற்கைக்கவி வேர்ட்ஸ் வொர்த் கவிதை வாசிப்பதுபோல இருக்கிறது கவிஞர் கா.ந.கல்யாணசுந்தரத்தின் இயற்கையைக் காட்சிப்படுத்தும் கவிதை. முடிக்கையில் தமிழ்ப் பண்பாட்டிற்குள் வந்துவிடுகிறார். ஈரமான உனது குடைக்குள் ஒரு இதயம் பயணிக்கிறது யாருக்கும் தெரியாமல் என்று.

ரசனையின் பரிமாணத்தைப் பேசும் கவிதைகள் கவிஞர் மணற்காடருடையவை. பேசிக்கொண்டேயிருக்கிறார்கள் பெண்கள் பெயரில் எழுதும் படைப்பாளிகள். பெண் படைப்பாளிகளல்ல. சுருக்கென்று சொல்லிப்போகிறார்.

கஸல் கவிதைகளுக்கென்று ஒரு நெகிழ்ச்சியான உணர்வுகளை வெப்பப்படுத்தும் வரலாறு உண்டு. கவிஞர் ஜின்னா அஸ்மியின் கஸல் கவிதைகள் நுட்பமான சொற்பெருக்கில் காதலை உணர்வுகளால் போர்த்தி கிறங்கவைக்கிறது. காதலில் நீந்தும் எனக்கு மீன் தொட்டியாகிவிடுகிறது கடல்.

கவிஞர் லிங்குசாமியின் கவிதைகளில் உச்சமானவை அரிசியைச் சுமந்துவரும் எறும்பு சிரிக்கிற மாதிரியே இருக்கிறது. ஐந்து முக விளக்கேற்றினாய் காண்கிறேன் சுடரேழு. இதேபோன்று கவிஞர் பிருந்தா சாரதியின் மீன்கள் உறங்கும் குளம், விண்மீன்களை ரசித்தபடி தூண்டில்காரன்.

வாழ்வியலின் செயல்பாடுகளின் நிகழ்வுகளைக் கவிதையாக்குவது கவிஞர் மு.முபாரக். வழக்கம்போல கொசுவின் மேல் கொண்ட கருணையைக் காட்சியாக்குகிறார். மகளைச் சாட்சியாக்குகிறார்.

என்றும் பச்சை என்பார்களே எவர் கிரீன் என்று அப்படியான கவிதை சௌவியின் தேநீர் கவிதைகள் . எப்பவும் படிக்கலாம். எப்பவும் நினைக்கலாம். தேநீர் அருந்தும்போதெல்லாம் நினைவு வரும். கூரியர் கொண்டுவருபவரைப் பற்றிப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே தளத்தில் நான் எழுதிய கவிதையும் இப்படித்தான்.

இந்த இதழின் இளையவர்களில் மிகமிக உச்சமாக நான்நினைப்பது கவிஞர் நாகநந்தினியின் கவிதை. இப்போதுதான் எழுதுகிறாரா என்றும் தெரியவில்லை. ஆனாலும் சொல் விளையாட்டு விளையாடியிருக்கிறார். அதிலும் பொருள்பொதிந்த கணங்களைக் கட்டி. சென் பவுத்தக் கவிதைகளை வாசிப்பதுபோல அதிர வைக்கிறார். மிகச் சிறந்த கவிதைக்குச் சான்றாக இக்கவிதையை நான் சொல்வேன். இதுகுறித்து தனியாக ஒரு கட்டுரை எழுதலாம். களைப்பாக இருக்கிறது. ஒவ்வொரு கவிதையும் என்னை எதுவோ செய்கிறது இதழ் முழுக்க. நன்றியும் மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் வதிலை பிரபா சார்.

இவ்விதழின் கட்டுரைகளில் இரண்டு கட்டுரைகள் முக்கியமானவை. ஒன்று இந்திரன் அவர்களின் அழகியல் குறித்த கட்டுரை. மனுஷ்யப்புத்திரன் கவிதைகள் குறித்த நஸ்புள்ளாஹ் கட்டுரை. எளிமையாக ஒன்றைச் சொல்வதற்கு மிகவும் துறைபோகுதல் வேண்டும். அதை மனுஷ்யப்புத்திரன் வெகு அலட்சியமாகக் கையாள்கிறார். அவரின் எந்தக் கவிதையும் எல்லோரும் வாசிக்கலாம் எல்லாவற்றையும் கடந்து. இந்திரன் அவர்களின் அழகியல் கட்டுரை காலத்தின் தேவை உணர்த்தும் கட்டுரை. நம்முடைய இலக்கியங்களைப் புரிந்துகொள்ள மேலைநாட்டுச் சூத்திரம் அவசியமற்றது. மேலும் அழகியலை ஒரு தத்துவச் சொல்லாடலாகவே அவசியம் உணரவேண்டும். இருபத்தைந்து ஆண்டுகளாகப் பாடம் எடுத்தவன் என்கிற நிலையிலும் சங்க இலக்கியங்களை முழுமையாக வாசித்து அதில் சொல்லாய்வு செய்தவன் என்கிற முறையிலும் நான் உணர்ந்தது யாதெனில் இன்பமாக இருந்தாலும் துன்பமாக இருந்தாலும் உணர்வின் பன்முகப் பரிமாணமாக இருந்தாலும் எவற்றையும் சொல்வதற்கும் மனசிலேற்றுவதற்கும் அழகியல் மிக முக்கியமானது என்பதையே சங்கஇலக்கியங்களின் உருவாக்கம் உணர்த்துகிறது என்பதை நான் புரிந்துகொண்டிருக்கிறேன். இந்தப் புரிதல் என்னுடையது மட்டுமே. இந்திரன் அவர்களின் தமிழ் அழகியல் நூல் இன்றைக்கும் தொடர்ந்து கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பெறல் வேண்டும் என்பதும் இக்கட்டுரையைச் சுருக்க அறிமுகமாகவும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இதழின் சிறுகதைகளில் மாற்றம் நல்ல சிறுகதை. ஒரு மெல்லிய உணர்வை அழகுறப் படம்பிடிக்கிறது.

வழக்கம்போலச் சிற்றிதழ்கள் வாசிப்பில் இன்றைக்கு மகாகவி இதழ் தொடர்ந்து மழைபொழியும் சூழலில் மனத்துள் நிறைய சிந்தனைத் துளிகளைப் பெய்திருக்கிறது. தொடர்ந்து பயணியுங்கள் வதிலைபிரபா சார் அகங்கனிந்த வாழ்த்துகள்.

ஹரணி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More