March 31, 2023 7:36 am

தீபச்செல்வனின் ‘பயங்கரவாதி’ | துப்பாக்கிகள் ஆளும் தேசத்தில் துணிச்சலான நாவல் | சுப்ரம் சுரேஷ்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னியில் ஒரு சிறுவர் இல்லத்தில் இருந்து சிறீலங்கா இராணுவதின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருக்கும் யாழ் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கற்கச் செல்லும் ஒரு மாணவனின் கதை. போரின் உக்கிரமும் அதனூடே இனவழிப்பும் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் மாணவர்களை மையப்படுத்தி ஒரு நாவலை எழுதியுள்ளார் தீபச்செல்வன். 

2002ம் ஆண்டுக்குப் பின்னரான சமாதான காலத்தில் ஈழதேசத்தை போர்மேகங்கள் மெல்ல மெல்ல சூழத்தொடங்கும் பொழுதுகளில் “பயங்கரவாதி” நாவல் ஆரம்பமாகி பேரவலங்களுடன் போர் முடிவுக்கு வரும் காலங்களில் நாவலும் நிறைவு பெறுகின்றது. 2021ம் ஆண்டு மார்கழி வெளிவந்த இந்த நாவல் பற்றி தனது உரையில் குறிப்பிடும்போது “எதிரில் துப்பாக்கி ஏந்திய இராணுவம் கண்காணிக்கும் தருணங்களில்தான் கிளிநொச்சி நகரப் பூங்காவிலிருந்து “பயங்கரவாதி” கதையின் முன் பக்கங்களை எழுதத் துவங்கினேன். அதே நகரத்தில் அமர்ந்தபடியே இறுதிப்பக்கங்கள் வரை தினமும் எழுதி முடித்தேன்.” இந்த வரிகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஈழத்தில் யுத்தம் முடிவுக்கு வந்து சுமார் பன்னிரண்டு ஆண்டுகளின் பின்னரும் ஒரு படைப்பாளி துப்பாக்கி  முணைகளுக்கு அஞ்சியே தனது எழுத்துக்களைப் படைக்க வேண்டிய சூழல். ஆனாலும் வலிசுமந்த, மறக்க முடியாது மனதுக்குள் உழன்றுகொண்டிருந்த காலப் பகுதியைக் களமாகக் கொண்டு இந்த நாவல் நகருகின்றது.

மாறன் என்ற கதாபாத்திரத்துடன் ஆரம்பமாகும் நாவல் அதே மாறனுடனே நிறைவு பெறுகின்றது. இடையில் போரினால் அல்லல் பட்டு சீரழிக்கப்பட்ட எத்தனையோ மாணவர்களின் சாட்சியாக மாறன் என்ற கதாபாத்திரம் கண்முன்னே எழுகின்றது. கதை நகர நகர மனம் கனமேறிக்கொண்டு போக அன்றைய காலத்தின் காட்சிகள் திரள் திரளாக கண்முன்னே தோன்றின. வடக்குக் கிழக்கில் திட்டமிட்டு கல்வியை அழிக்க நினைப்பவர்களுக்கு முதலில் அவர்களது பார்வை பல்கலைக்கழகங்களிலே பதிகின்றது. இந்த நாவலில் அதனை கன கச்சிதமாக நகர்த்தியிருப்பார் தீபச்செல்வன். பிற பிரதேசங்களில் இருந்து வந்த மாணவர்களின் உணவுப்பிரச்சனை, பொருளாதாரப் பிரச்சனை என்பது தொடக்கி பாதுகாப்பற்ற மாணவர்களின் வாழ்வும் அதன் மீதான பல்கலைக்கழக நிர்வாகத்தின் கையறு நிலைமையும் என பல விடையங்களை சுட்டிக்காட்டியிருகின்றார்.

ஈழப்போர் சார்ந்த நாவல்கள் ஏராளமாக வெளிவந்த போதிலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை மையப்படுத்தி வெளிவந்த நாவல்கள் சிலவற்றையே அறியமுடிகின்றது. அந்த வகையில் தமிழ்நதியின் “பார்த்தீனியம்” நாவலை மறக்கமுடியாது. “பார்த்தீனியம்” நாவல் இந்திய இராணுவம் ஈழத்தில் இருந்த காலத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தையும் களமாகக் கொண்ட நாவல். சுமார் முப்பது ஆண்டுகளுக்கு மேலான ஈழ விடுதலைப்போரில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் காத்திரமான வகிபாகத்தினை கொண்டிருந்ததை மறுக்கமுடியாது. ஈழத்தில் போர் முனைப்புப்பெற்று இருக்கும் காலத்தில் இலங்கை படையினரின் கண்காணிப்பின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இருந்த காலத்தில் தமிழ் உணர்வுகொண்ட மாணவர்கள் எவ்வாறான ஆபத்துக்களை எதிர் கொண்டார்கள் என்பதினை தீபச்செல்வனின் “பயங்கரவாதி” நாவல் சிறப்பாகப் பதிவு செய்துள்ளது.

யுத்தம், சாவு, அவலம், பஞ்சம் என்று இருந்த காலதிலும் நண்பர்களுடனான நகைச்சுவை, மென்மையான காதல் என சூழலுக்குப் பழக்கப்பட்ட மனிதர்கள் விடியலுக்கான கனவுகளுடன் வாழ்ந்த காலத்தில் நகரும் இந்த நாவல் வன்னியில் விடுதைப்புலிகளின் செழுமையான கட்டமைப்புக்களையும் நிர்வாகத்தையும் ஓரளவு பதிவு செய்கின்றது. தீபச்செல்வனுக்கு “பயங்கரவாதி” இரண்டாவது நாவல் ஆனால் பதினேழாவது நூல். இவரது அனைத்து நூல்களிலும் தமிழ் தேசிய உணர்வு கசிந்தபடியே இருக்கும்.  

இவரது முதல் நாவலான நடுகல் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்து பலரது கவனத்தையும் பெற்றிருந்தமை அறிந்ததே. அண்ணன் தம்பிக்குமிடையிலான உரையாடலுடனான கதை நகர்வும் கிளிநொச்சியில் இடம்பெற்ற யுத்தகால இடப்பெயர்வும் கதைக்களமாக கொண்ட நாவல். ஒரு போராளி வீரச்சாவடைகின்றபோது அவரது குடும்பம் படும் வேதனையும் அஞ்சலிப்பதற்காக நடு கல்லைத் தேடும் மனநிலையும் வாசிப்பவர்களின் மனதை உருக்கும். நடுகல் நாவலிலும் யுத்தத்தினால் மக்கள் எதிநோக்கும் நெருக்கடிகளை படம் பிடித்துக்காட்டியுள்ளார். ஆனாலும் அந்த மக்கள் ஒரு வேட்கைக்காக அதை தாங்கி மீண்டும் மீண்டும் மீள்வதையும் சிறப்பாக சொல்லியுள்ளார். 

ஈழத்திலிருந்து வெளிவரும் போர்க்கால படைப்புக்கள் வெறும் இலக்கியப்படைப்புகளாக மட்டும் பார்க்கப்பட மாட்டாது, அவை அக்காலத்தின் வரலாற்று ஆவணங்களாகவும். அக்காலத்து வாழ்வியலின் பதிவுகளாகவும் பார்க்கப்படுகின்றது. கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக பல மாற்றங்கள் உருவாகியிருக்கலாம். வலிகளைக் கடந்து போயிருக்கலாம் ஆனால் அந்த வலிகளை மறக்கமுடியாது. 

இந்த நிலையில் பயங்கரவாதி நாவல் பெரு நிஜத்துக்கும் சிறு கற்பனைக்குமிடையில் கதை அமைந்திருப்பதாகவே நினைக்கலாம். தீபச்செல்வனும் அந்தக் களத்தில் பயணித்த அனுபவத்துடன் இதனை எழுதியது போன்று உணர முடிகின்றது. ஏனென்றால் இந்தக் காலப்பகுதியில்தான் இவர் அதே பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றிருந்தார். அந்த வகையில் இது நாவல் மட்டுமல்ல அக்காலத்துக்கான ஆவணப்பதிவும்கூட.

சுப்ரம் சுரேஷ் 

நன்றி: ஜீவநதி பெப்ரவரி இதழ்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்