December 9, 2023 9:28 pm

காசாவில் கொல்லப்பட்ட பாலஸ்தீன பெண் கவிஞரின் கடைசிக் கவிதை

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

– ஐங்கரன் விக்கினேஸ்வரா

பாலஸ்தீனக் கவிஞர் ஹெபா அபு நடா இஸ்ரேல் படைகளின் குண்டுவீச்சால் படுகொலை செய்யப்பட்டார். பாலஸ்தீன பண்பாட்டு அமைச்சகம் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. 20/10/23 வெள்ளியன்று தெற்கு காசாவில் உள்ள கான்யூனிஸ் நகரில் உள்ள தன் வீட்டில் இருந்த கவிஞர் ஹெபா குண்டுவீச்சுக்கு இலக்காகி கொல்லப்பட்டார். அவருக்கு வயது 32. கதைகள், கவிதைகள், நாவல்கள் என எழுதிவந்த பாலஸ்தீனத்தின் சம கால முக்கிய பெண் எழுத்தாளர்.

பாலஸ்தீன இலக்கிய மரபு :

வரலாற்று ரீதியில் பாலஸ்தீனத்துக்கு என்று செறிவான இலக்கிய மரபு உண்டு. மிக நுட்பமான இலக்கண வரம்புக்கு உட்படுத்தப்பட்ட கவிதை வடிவங்கள், நாடகங்கள், நாவல்கள் பாலஸ்தீனத்தில் படைக்கப்பட்டுள்ளன. ஆனால் 1948ஆம் ஆண்டு இஸ்ரேல் தோற்றம் பெற்றபோது பாலஸ்தீன இலக்கிய வாழ்வு திடீரென்று மூச்சை இழந்தது.

ஆயினும் துண்டிக்கப்பட்ட உயிர் மூச்சு மீள சுவாசித்தது. போரின் தோல்வி, தோழர்களின் இழப்பு, சிறைக்காவல், சித்ரவதைக்கூடம், சிறுவர்கள் மீதான தாக்குதல், ஐக்கிய நாடுகள் சபையின் பாராமுகம், தாயகம் மீதான ஏக்கம் என கவிதையின் பாடுபொருள்கள் பாலஸ்தீனத்தில் மீள உயிர் பெற்றன.

பாலஸ்தீன எழுத்தாளர்கள் பலரின் எழுத்துலகின் மையத்தில் பாலஸ்தீனப் பேரழிவு தெளிவாக வெளிப்பட்டு உள்ளது. ஏதிலிகளாக்கப்பட்ட, குடிபெயர்ந்த, ஊனமாக்கப்பட்ட மக்களின் வாழ்வில் விழும் துயரப் பெருநிழலை பல்வகைப்பட்ட இலக்கிய வடிவங்களையும் புனைவு வகைமைகளையும் கையாண்டு உலகின்முன் சித்தரிக்க இவர்கள் முயற்சி செய்துள்ளனர்.

இத்தைய பின்னணியில் உருவாகிய இளங்கவி ஹெபா சவுதியின் மெக்காவில் அகதி முகாமில் 1991 பிறந்தவர். பின்னர் காசா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் இளநிலை உயிர்வேதியியல், அல் அகர் பல்கலைக்கழகத்தில் மருத்துவ உணவியல் முதுநிலை பட்டங்களைப் படித்தவர். உணவியலாளராகப் பணியாற்றிக்கொண்டே எழுத்திலும் விடாமல் செயலாற்றி வந்தார் ஹெபா.

இறந்து போகிறவர்களுக்கு ஆக்சிஜன் இல்லை

’இறந்துபோகிறவர்களுக்கு ஆக்சிஜன் இல்லை’ என்கிற இவரின் நாவல், 2017ஆம் ஆண்டில் சார்ஜா இலக்கிய விருதில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. தான் இறப்பதற்கு சில மணி நேரம் முன்னர் அவர் தன் முகநூலில் நாட்டு நிலவரத்தைப் பற்றி எழுதியது, படிப்போரை நெகிழ்ச்சி அடையச் செய்வதாக உள்ளது.

என் நண்பர்களின் பட்டியல்
சுருங்கி வருகிறது
நண்பர்கள்
சின்னச் சின்ன
சவப்பெட்டிகளாகிக் கொண்டிருக்கிறார்கள்
ஏவுகணைகளைவிட
வேகமாகப் பறந்திறக்கிற
அவர்களை
என்னால்
மீட்க முடியவில்லை
காக்க முடியவில்லை
எனக்கு அழ முடியவில்லை
எனக்கு
என்ன செய்வதென்றும்
தெரியவில்லை
ஒவ்வொரு நாளும்
என் நண்பர்களின் பட்டியல்
சுருங்கி வருகிறது
இது வெறும் பெயர்கள் அல்ல
வேறு பெயர்களிலும்
முகங்களிலும் இருந்த
அவர்களும் நானே
நானும் அவர்களே
அல்லாவே
மாபெரும் இச் “சா” விருந்தில்
நான் என்ன செய்யமுடியும்
எந்தக் கொம்பனாலும்
கனவிலுங் கூட
என் நண்பர்களை மீட்டுத் தரமுடியாது.

காசாவில் இஸ்ரேலிய குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட 32 வயதான பலஸ்தீனியப் பெண் கவி ஹெபா அபு நாடா எழுதிய கடைசிக் கவிதை மானுட வரலாற்றின் அவலமாக எல்லோர் மனதையும் உருகச் செய்கிறது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்