ஜெனிவா தீர்மானத்திற்கு எதிராக தமிழ் மக்களை தவறாக பயன்படுத்த முயற்சி | த.தே. கூ.ஜெனிவா தீர்மானத்திற்கு எதிராக தமிழ் மக்களை தவறாக பயன்படுத்த முயற்சி | த.தே. கூ.

வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் ஜெனிவா தீர்மானத்திற்கு எதிராக இருக்கின்றார்கள் என்பதை காட்டுவதற்கும் தமிழ் மக்களை பலிக்கடாவாக்குவதற்கும் ஒரு சாரார் முயல்கின்றார்கள். இவ்வாறானவர்களின் சதிவலைகளில் சிக்காமல் தமிழ் மக்கள் விழிப்போடு செயல்பட  வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பி. அரியநேத்திரன் தெரிவித்தார்.

கல்முனை பிரதேசத்தின் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்துவதற்கான ஆர்ப்பாட்டம் என்ற பேரில் எதிர்வரும் 9 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஜெனிவா மனித உரிமைகள் பிரேரணைக்கு எதிராக மக்களை திரட்டும் பணியில் ஒரு சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இச்செயற்பாட்டை விளக்கும் வகையில் ( இன்று 2014.03.06) தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் அவசர செய்தியாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றது.

இச்சந்திப்பில்  கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.அரியநேத்திரன் அங்கு கருத்து தெரிவிக்கையில் :-

இலங்கையில் நடைபெற்ற  போர்க்குற்றம்பற்றி சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். வடக்கு கிழக்கிலுள்ள மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு  வழங்கப்பட வேண்டும். இராணுவ மயமாக்கல் குறைக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியாகவுள்ளது. அதற்கான இராஜ தந்திர  நகர்வுகளை நாம் முன்னெடுத்துள்ளோம்.

தமிழ்தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்காக செய்வது உரிமை அரசியலாகும் சலுகை அரசியலல்ல. சலுகை அரசியலை எல்லோரும் செய்யலாம். ஆனால் உரிமை அரசியலை யாராலும் செய்ய முடியாது. இந்நாட்டில் கடந்த 6 ½ தசாப்தங்களாக நாம் உரிமை அரசியல் செய்து வருகின்றோம். அதன் பயனை இன்று சர்வதேசம் இலங்கை தமிழர்களின் குறிப்பாக வட கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் நலன் பற்றியும் தீர்வு பற்றியும் பேசுமளவிற்கு வந்துள்ளது. இதுவே எமது விடுதலைப் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.

சர்வதேச அரங்கில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களை பற்றி இன்று கதைக்குமளவிற்கு நிலைமை மாறியுள்ளது. அந்த வெற்றிக்கு  எம்மை கொண்டு சென்றவர்கள் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களாகும்.

இன்று ஜெனிவா மனித உரிமை பேரவையில்  சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை இறுதி நகலல்ல. அந்த நகலில் வரும் நாட்களில் கடுமையான சொற்பதங்கள் பாவிக்கப்படலாம். அல்லது குறைக்கப்படலாம். சர்வதேசம் ஒரு நாட்டின் மீது விசாரணைகளை முன்னெடுக்கின்றபோது அதனை கட்டம் கட்டமாகவே முன்னெடுக்க பார்க்கும். ஆகவே இறுதி இலக்கை அடையும் வரை தமிழ் மக்கள் உறுதியாக இருக்க வேண்டும்.

குறிப்பாக அம்பாறை மாவட்ட தமிழர்கள் பல இன்னல்களுக்கு முகம்கொடுத்த போதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்போடு அதன்  வெற்றிக்கும் தொடர்ச்சியான பங்களிப்பை நல்கி வந்துள்ளனர். இம்மாவட்டத்திலுள்ள  தமிழ் மக்களை பிழையான வழி நடத்தலில் இட்டு செல்ல  முயல்கின்றனர். இம்மாவட்டத்திலுள்ள பௌத்த பிக்கு ஒருவர் எமது கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலருக்கும் அச்சுறுத்தல் விடுத்துள்ளதுடன் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை கையிலெடுத்துக்கொண்டு மக்களை குழப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதற்கு புத்திஜீவிகள் எனக்கூறிக்கொள்ளும் சிலருக்கு அவர் பின்னால் செல்கின்றனர்.

அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டிய அதிகாரங்கள் அபிவிருத்திகள் என்பவற்றை செய்ய வேண்டியது அரசின் கடமையாகும். அபிவிருத்திகளுக்கு  தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு போதும் தடையாக இருந்தது இல்லை. இருக்கப்போவதும் இல்லை.

கல்முனை தமிழ்  பிரதேசங்களில் கல்முனை வடக்கு  பிரதேச செயலகம் தரம் உயர்த்துவதற்கான ஆர்ப்பாட்டம் ஒன்றை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடத்தவுள்ளதாகவும் அதில் சமுர்த்தி பெறும் சமுர்த்தி பெற தகுதியுடையோர்கள்  எல்லோரையும் கலந்து  கொள்ளுமாறும்  அவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாதவர்களின் முத்திரைகள்  சமுர்த்தி பணம் என்பன நிறுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஜெனிவா பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் அதற்கு எதிராக மக்களைத் திரட்டி  ஆர்ப்பாட்டம் செய்யும் முயற்சியாகவே இது நோக்கப்படுகின்றது. இதற்கு பின்னால் பௌத்த பிக்கு ஒருவரும் உள்ளார். சலுகைகள் வேண்டும் என்பதற்காக தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளை விற்கக்கூடாது  ஆர்ப்பாட்டங்களுக்கு மக்களை அழைப்பவர்கள் மக்களிடம் உண்மையைச் சொல்லி அழைக்க வேண்டும்.

ஜெனிவா தீர்மானத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவோம் வாருங்கள் என தெளிவாக கூறி கூப்பிடுங்கள். அதனை விடுத்து பிரதேச செயலகம் தரம் உயர்த்த போகின்றோம் வீதிக்கு பெயர்மாற்றப்  போகின்றோம் என பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து மக்களை கூப்பிட்டு பிழையாக வழிநடத்த வேண்டாம்.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ள இவ்வேளையில் எமது போராட்டத்தை வலுவிழக்கச்செய்யும் வகையில் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டங்கள் கருத்தரங்குகளில்  தமிழ் மக்கள் கலந்து கொள்வதை தவிர்க்க  வேண்டும்.

கடந்த 61 வருடங்களாக நிலவி வரும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிர்ந்தர அரசியல் தீர்வு கிட்டும் வரை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கரத்தை மேலும் பலப்படுத்த வேண்டும் என்றார்.

ஆசிரியர்