செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி பதவியேற்பு | ஆப்கானிஸ்தானின் புதிய அதிபர் செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி பதவியேற்பு | ஆப்கானிஸ்தானின் புதிய அதிபர்

ஆப்கானிஸ்தானின் புதிய அதிபர் வரும் செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி பதவியேற்பார் என்று தற்போதைய அதிபர் ஹமீத் கர்ஸாய் தெரிவித்துள்ளார்.

அந்நாட்டின் புதிய அதிபர் ஆகஸ்ட் மாதம் 2-ஆம் தேதி பதவியேற்றிருக்க வேண்டும். ஆனால், அதிபர் தேர்தலுக்கான முதல் சுற்றின் இறுதியில் பெரும்பான்மை வாக்குகள் பெற்றது யார் என்பது குறித்து தெளிவாக முடிவு தெரியவில்லை.

இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட இரண்டாவது சுற்று வாக்குப் பதிவின்போது, முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, ஆகஸ்ட் மாதம் புதிய அதிபர் பதவியேற்பு நிகழவில்லை.

இந்நிலையில், செப்டம்பர் 2-இல் பதவியேற்பு நடைபெறும் என்று தற்போதைய அதிபர் கர்ஸாய் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அதிபர் கர்ஸாய், ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா. பிரதிநிதி ஜான் கூபிஸ் ஆகியோர், அதிபர் தேர்வு தொடர்பாக சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து, அதிபர் மாளிகை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “”செப்டம்பர் 2-ஆம் தேதி புதிய அதிபரின் பதவியேற்புக்கு ஆப்கன் அரசு முற்றிலும் தயாராக உள்ளது. எக்காரணம் கொண்டும் இந்த தேதியில் மாற்றம் இருக்காது” என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியில் பொருளாதார நிபுணராகப் பணியாற்றிய அஷ்ரஃப் கனி, தலிபான்களுக்கு எதிராகப் போராடிய அப்துல்லா அப்துல்லா ஆகியோர் அதிபர் தேர்தலில் போட்டியிட்டனர்.

சுமார் 80 லட்சம் வாக்குகள் பதிவாயின. இரண்டாம் கட்டத் தேர்தலில் முறைகேடுகள் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அனைத்து வாக்குகளும் சரி பார்க்கப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 60 சதவீத வாக்குகள் சரி பார்க்கப்பட்டுள்ளன.

ஆசிரியர்