பிரதமர் டேவிட் கேமரூன் கவலை -“பிரிட்டன் – ஸ்காட்லாந்து பிரிவு பிரதமர் டேவிட் கேமரூன் கவலை -“பிரிட்டன் – ஸ்காட்லாந்து பிரிவு

பிரிட்டனிலிருந்து ஸ்காட்லாந்து பிரிந்து தனி நாடாகுமானால், அது மிகவும் வேதனையளிக்க கூடிய பிரிவினையாக இருக்கும் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் கூறினார்.

ஒருங்கிணைந்த பிரிட்டனின் கீழ் உள்ள ஸ்காட்லாந்து, முற்றிலுமாகத் தனி நாடாகப் பிரிய வேண்டுமா என்பது குறித்த வாக்கெடுப்பு வியாழக்கிழமை (செப். 18) நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஸ்காட்லாந்து பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், பிரிவினை ஏற்பட்டால், அது வேதனை மிகுந்ததாக இருக்கும் என்றார்.

மேலும் அவர் கூறியது:

பிரிட்டனின் பகுதியாக ஸ்காட்லாந்து தொடர வேண்டும் என எங்களுடைய இதயம் கூறுகிறது. ஆனால் தனி நாடாக வேண்டும் என்ற முடிவு ஏற்படுமானால், அது சோதனை முறையிலான தாற்காலிகப் பிரிவாக இருக்காது. பிரிவினை என்பது மிகுந்த வேதனையளிக்கும்.

இந்தப் பகுதியினரின் ஓய்வூதியம் முதல் கரன்சி வரை ஏராளமான பொருளாதார விஷயங்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகும். நமது ராணுவம் துண்டாடப்படும். இரு நாடுகளுக்கும் இடையே உருவாகும் புதிய எல்லைக்கோட்டைக் கடப்பது எளிதல்ல என்ற நிலை உருவாகும்.

சுதந்திர நாடு என்ற கரைந்து போய்விடக் கூடிய கனவை ஸ்காட்லாந்து மக்கள் ஏற்கக் கூடாது என விரும்புகிறேன் என்றார்.

பின்னணி: முற்காலத்தில் தனி நாடாக இருந்து வந்துள்ள ஸ்காட்லாந்து, 1603-ஆம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் முடியாட்சியின் கீழ் வந்தது. 1707-ஆம் ஆண்டு இங்கிலாந்துடன் ஏற்பட்ட உடன்படிக்கையின் கீழ், பிரிட்டனின் ஒரு பகுதியான பிறகு, ஸ்காட்லாந்து நாடாளுமன்றம் முடிவுக்கு வந்தது.

அதே வேளையில், சட்டம், கல்வி, மத அமைப்பு நிர்வாகம் ஆகிய துறைகளில் முன்னூறு ஆண்டுகளாக சுதந்திரமாகச் செயல்பட்டு வந்தது.

1997-ஆம் நடைபெற்ற வாக்கெடுப்பையடுத்து, அங்கு மீண்டும் நாடாளுமன்றம் அமைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஸ்காட்லாந்து தேசிய கட்சி ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து, பிரிட்டனிலிருந்து முற்றிலும் சுதந்திரம் பெற்ற தனி நாடாக வேண்டுமா என்பதற்கான வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.

ஆசிரியர்