அமெரிக்கா தலைமையில் ஐ.எஸ். மீது விமானத் தாக்குதல் | ஆஸ்திரேலியாவும் இணைகிறது அமெரிக்கா தலைமையில் ஐ.எஸ். மீது விமானத் தாக்குதல் | ஆஸ்திரேலியாவும் இணைகிறது

இராக்கில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா தலைமையில் நிகழ்த்தப்படும் வான்வழித் தாக்குதலில் ஆஸ்திரேலியாவும் இணையவுள்ளது.

இதற்கான ஒப்புதலை அந்நாட்டு நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை அளித்தது.

இதுகுறித்து ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்போட் கூறியதாவது:

இராக் அரசின் வேண்டுகோளை ஏற்று, அந்நாட்டுப் படைகளுக்கு உதவும் வகையில், அங்கு விமானத் தாக்குதல் நிகழ்த்த நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

அதுமட்டுமின்றி, இராக் படைகளுக்கு ஆலோசனை வழங்குவதற்காக அங்கு ஆஸ்திரேலிய ராணுவ நிபுணர்களை அனுப்பவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இத்திட்டம் சட்டரீதியில் இறுதி வடிவம் பெற்ற பின்பு, ராணுவ நிபுணர்கள் இராக் அனுப்பப்படுவர்.

ஐ.எஸ். பயங்கரவாதிகளைத் தோற்கடிக்க இராக் படைகளால் மட்டுமே முடியும்.

எனினும், அந்தப் போரில் ஆஸ்திரேலியாவும், நட்பு நாடுகளும் இராக்குக்கு பக்கபலமாக இருக்கும்.

இராக்கில் விமானத் தாக்குதல் நிகழ்த்தும் ஆஸ்திரேலியாவின் முடிவு, மனித நாகரிகத்தை நிலைநாட்டும் உயரிய நோக்கில் எடுக்கப்பட்டதாகும்.

இந்த நடவடிக்கை சில வாரங்களுக்குள் முடிந்து விடாது. பல மாதங்கள்வரை நீடிக்கலாம் என்றார் டோனி அப்போட்.

ஆசிரியர்