மெக்சிகோவில் பரபரப்பு- 43 மாணவர்கள் கடத்தல்மெக்சிகோவில் பரபரப்பு- 43 மாணவர்கள் கடத்தல்

மெக்சிகோவில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் போதைப்பொருள் தொடர்பான வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இதுவரை 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதுடன், 22 ஆயிரம் பேர் வரை காணாமல் போயுள்ளனர்.

இந்தநிலையில் கியுரேரோ மாநில தலைநகர் சில்பான்சிங்கோ அருகே அமைந்துள்ள ஒரு ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சிலர், நிதி வசூலிப்பதற்காக கடந்த மாதம் 26-ந் தேதி இகுவாலா பகுதிக்கு சென்றனர். இவர்களை மாநகர போலீசார் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர்.

இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். பின்னர் சுமார் 43 மாணவர்களை போலீசார் தங்கள் வாகனத்தில் கடத்திச்சென்றனர். இந்த கடத்தல் மற்றும் மற்றொரு துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 22 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடத்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், ஏராளமான ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாருடன் இணைந்து அவர்களை பல்வேறு இடங்களிலும் தேடி வருகின்றனர். ஆனால் மாணவர்களை கண்டுபிடிப்பதில் அரசு மெத்தனம் காட்டுவதாக கூறி, கடத்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர் சில்பான்சிங்கோ நோக்கி பேரணி நடத்தினர். மேலும் அகாபுல்கோ செல்லும் சாலையில் மறியல் போராட்டமும் நடத்தினர். இந்த கடத்தலால் மெக்சிகோவில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

ஆசிரியர்