யோகாவின் பயனை மோடியிடம் கேட்டறிந்த ஒபாமா!யோகாவின் பயனை மோடியிடம் கேட்டறிந்த ஒபாமா!

யோகா பயிற்சி மேற்கொண்டு வரும் பிரதமர் நரேந்திர மோடியின் ஆற்றல் மற்றும் சுறுசுறுப்பைக் கண்டு வியந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அவரிடம் யோகா பற்றிய தகவல்களை கேட்டு தெரிந்து கொண்டார்.

இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை துணை அமைச்சர் நிஷா தேசாய் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அமெரிக்காவுக்கு அரசு முறை சுற்றுப்பயணமாக வந்திருந்த நரேந்திர மோடிக்கு, வெள்ளை மாளிகையில் அதிபர் ஒபாமா கடந்த திங்கள்கிழமை விருந்து அளித்தார். அப்போது, மற்றவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, பிரதமர் விரதம் இருக்கிறார் என அவர்கள் நகைச்சுவையாகக் கூறினர்.

கடுமையான பணிக்கு நடுவிலும் மோடி தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு, ஆற்றலுடனும் சுறுசுறுப்புடனும் செயல்படுவதைக் கண்டு ஒபாமா வியந்தார். மேலும் யோகா பற்றி கலந்துரையாட விரும்புவதாக மோடியிடம் ஒபாமா தெரிவித்தார். இதையடுத்து இரு தலைவர்களும் யோகா மட்டுமல்லாது பல்வேறு தனிப்பட்ட விஷயங்கள் குறித்தும் சிறிது நேரம் உரையாடினர் என தெரிவித்தார்.

யோகா பயிற்சி மேற்கொண்டு வரும் 64 வயதான மோடி, தனது அமெரிக்க பயணத்தின்போது ஐ.நா. சபையில் உரையாற்றினார். அப்போது, சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு பல நாடுகளும் ஆதரவு தெரிவித்தன. அமெரிக்க நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றத் தேவையான உதவியை செய்வதாக அதன் உறுப்பினர் துளசி கப்பார்டு தெரிவித்தார்.

ஆசிரியர்