ஸ்ரீ லங்கா பொதுஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ளரும், முன்னாள் பாது­காப்பு செய­லா­ள­ரு­மான கோத்­தா­பய ராஜ­பக்­ஷவை இலங்கை பிர­ஜை­யாக ஏற்றுக் கொள்­வதை தடுத்து உத்­த­ர­வொன்றைப் பிறப்­பிக்­கு­மாறு கோரி,  மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் தாக்கல் செய்யப்பட்ட ‘செட்­டி­யோ­ராரி’ எழுத்­தானை  மனு உயர் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷ போட்டியிட முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோட்டாபய ராஜபக்ஷவின் இரட்டை பிரஜாவுரிமை சான்றிதழை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி யசந்த கோதாகொட, அர்ஜூன ஒபேசேகர, மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த மனு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே குறித்த அறிவிப்பு வெளியானது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமையைச் சவாலுக்குட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சிவில் சமூக செயற்பாட்டாளர்களான பேராசிரியர் சந்ரகுப்த தேநுவர, காமினி வியாங்கொட ஆகியோர் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.

அமெரிக்க குடியுரிமையைக் கைவிட்டது தொடர்பான முறையான ஆவணங்களை வழங்காமல், இலங்கை தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டை கோட்டா பெற்றுக் கொண்டது சட்டவிரோதமானது என்றும் இவை செல்லுபடியற்றது என உத்தரவிடுமாறும் இந்த மனுவில் கோரப்பட்டது.

மேலும், இந்த வழக்கு நிலுவையில் உள்ள வரை, கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை குடியுரிமை கொண்டவராக அங்கீகரிக்க வேண்டாம் என உள்நாட்டு விவகார அமைச்சர் வஜிர அபேவர்த்தனவிற்கு உத்தரவிடுமாறும் மனுதாரர்கள் கோரினர்.

இந்நிலையில் இன்றுடன் மூன்று நாட்களாக தொடர்ந்து இடம்பெற்றுவந்த இந்த வழக்கை மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் தள்ளுபடி செய்தது.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டபாய ராஜபக்ஷ போட்டியிடுவதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருந்த இந்த வழக்கு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் தேர்தலில் போட்டியிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.