Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கீழடி நாகரீகம்: ஆறாம் கட்ட அகழாய்வு துவங்கியது

கீழடி நாகரீகம்: ஆறாம் கட்ட அகழாய்வு துவங்கியது

2 minutes read

கீழடி நாகரீகம்

மதுரைக்கு அருகில் உள்ள தொல்லியல் பகுதியான கீழடியில் ஆறாவது கட்ட அகழாய்வுப் பணிகள் இன்று முதலமைச்சரால் துவக்கிவைக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் மாதம் வரை இந்தப் பணிகள் நடைபெறுமெனத் தெரிகிறது.

மதுரை நகரிலிருந்து சுமார் 13 கி.மீ. தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள கீழடி கிராமத்தில் ஏற்கனவே நடந்த அகழாய்வுகளில் பழங்கால கட்டடத் தொகுதிகளும் தொல்பொருட்களும் கிடைத்திருக்கும் நிலையில், ஆறாவது கட்ட அகழாய்வு இன்று துவங்கப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டிலிருந்து 2017ஆம் ஆண்டுவரை முதல் மூன்று கட்ட அகழாய்வுகளை மத்தியத் தொல்லியல் துறை மேற்கொண்டது. இதில் 7818 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அதற்குப் பிறகு இங்கு ஆய்வு நடத்த மத்திய அரசு முன்வரவில்லை. இதையடுத்து அடுத்தகட்ட அகழாய்வுகளை தமிழக அரசின் தொல்லியல் துறையே நடத்த முன்வந்தது.

2018-19ல் 55 லட்ச ரூபாய் செலவில் நான்காவது கட்ட அகழாய்வை மாநில தொல்லியல் துறை நடத்தியது. இதில் 5820 தொல்பொருட்களும் பழங்காலக் கட்டடத் தொகுதிகளும் வெளிப்பட்டன. தமிழ் பிராமி எழுத்துகளுடன் கூடிய 56 பானை ஓடுகளும் குறியீடுகள் பொறிக்கப்பட்ட 1001 பானை ஓடுகளும் கிடைத்தன.

அதற்குப் பிறகு 47 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஐந்தாம் கட்ட அகழாய்வு நடத்தப்பட்டது. இந்த அகழாய்வில் சரியான இடங்களைத் தேர்வுசெய்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இதிலும் செங்கல் கட்டுமானங்கள், சுருள் வடிவிலான குழாய்கள் கண்டெடுக்கப்பட்டன. 900 தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக மதுரை உலகத் தமிழ் சங்க வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நான்காம்கட்ட அகழாய்வின் முடிவுகள் தமிழக அரசால் வெளியிடப்பட்டபோது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நான்காம் கட்ட ஆய்வில் கிடைத்த கரிமத்தை பீட்டா பகுப்பாய்வு ஆய்வகத்தில் பரிசோதித்தபோது, அது 2600 ஆண்டுகள் பழமையானது எனத் தெரியவந்தது. இந்த ஆய்வின் முடிவுகள், மாநிலத்தில் தொல்லியல் ஆய்வுகள் குறித்த கவனத்தை ஏற்படுத்தியது.

கீழடி நாகரீகம்

இந்த நிலையில் ஆறாம் கட்ட அகழாய்வை கீழடியிலும் அதற்கு அருகில் உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களிலும் நடத்துவதற்கு மாநில தொல்லியல் துறை முடிவுசெய்தது. இந்த இடங்களில் தரையை ஊடுருவிப் பார்க்கும் ரேடார், ஆளில்லா விமானம் ஆகியவற்றைப் பயன்படுத்தி சரியான இடங்கள் அடையாளம் காணப்படும்.

இவற்றில் கொந்தை ஒரு புதைமேடு என கருதப்படுகிறது. மணலூர், அகரம் ஆகியவை மக்கள் வாழ்ந்த இடங்களாகக் கருதப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக 120 ஏக்கர் பரப்பளவில் 50 லட்ச ரூபாய் செலவில் இந்த அகழாய்வுகள் நடத்தப்படும்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் உட்பட இந்தியாவில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்களும் சில வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களும் இந்த ஆய்வில் பங்கேற்கின்றன.

இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை, ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமணல் ஆகிய இடங்களிலும் அகழாய்வுகள் நடத்தப்படவிருக்கின்றன. மேலும், புதிய கற்கால இடங்களைக் கண்டறிய வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம் ஆகிய இடங்களில் தொல்லியல் கள ஆய்வை மாநில அரசு நடத்தவுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More