நீண்ட நாட்களுக்கு பின்னர் யாழில் தளர்த்தப்படும் ஊரடங்கு; மக்களுக்கான அறிவுறுத்தல்கள்

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் போது சமூக இடைவெளியை பின்பற்றி யாழ்ப்பாண மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் விடுத்துள்ளார்.

யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. இதில் வைத்தே அவர் குறித்த கோரிக்கையினை விடுத்துள்ளார். மேலும் கூறுகையில்,

யாழ்ப்பாணத்தில் நாளை ஊரடங்கு சட்டம் அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிக நீண்ட நாட்களுக்கு பிற்பாடு இந்த ஊரடங்கு தளர்வு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு தளர்வின் போது பொது மக்கள் சுகாதார பிரிவினர் வழங்கியுள்ள அறிவுறுத்தல்களை கடைப்பிடித்து தங்களுடைய தனிமைப்படுத்தலையும், சமூக இடை வெளியினையும் பேணி அவர்கள் நடந்து கொள்வது மிக மிக அவசியமானது என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இன்று காலை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும்,

நாளை முதல் வட மாகாணம் முழுவதும் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட உள்ளது. ஆனாலும் நாட்டில் கொரோனா தொற்றும் வாய்ப்புள்ள அசாதாரண நிலை நிலவுவதன் காரணமாக பொது மக்கள் பின்வரும் விடயங்களை கடைப்பிடிப்பது அவசியமாகும்.

1. யாழ்ப்பாண மாவட்டத்தில் சமூக மட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கான பரிசோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் சூழ்நிலையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே வருபவர்களைத் தவிர ஏனையவர்கள் இயலுமானவரை வெளியில் நடமாடுவதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது.

மேலும் நாட்டில் கொரோனா அபாயம் முற்றாக நீங்கும் வரை ஏனைய மாவட்டங்களுக்குச் சென்று வெளியில் நடமாடுவதை இயன்றவரை குறைத்துக் கொள்ளுங்கள்.

மிகவும் அவசியமான தேவைகளற்று வெளியில் செல்வது, சிறு சிறு விடயங்களுக்காக பல தடவை வெளியில் செல்வது போன்றவற்றை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

2. மக்கள் நெருக்கமான இடங்கள், மக்கள் நெருக்கமான போக்குவரத்துச் சேவைகள் போன்றவற்றை இயன்றவரை தவிர்த்துக் கொள்ளுங்கள். தவிர்க்க முடியாத இடத்து அத்தியாவசிய தேவை கருதி வெளியில் செல்வதாயின் கட்டாயமாக ஒரு மீற்றர் சமூக இடைவெளியைப் பேணவும்

3. பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வாகனங்கள் அனைத்திலும் அனுமதிக்கப்பட்டுள்ள பயணிகளின் எண்ணிக்கையில் அரைவாசிப் பேர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். அனைத்து வாகனங்களையும் தினமும் கிருமித் தொற்று நீக்கத்துக்கு உட்படுத்தவும்.

4. அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், ஏனைய பொது மக்கள் அல்லது பணியாளர்கள் எனப் பலர் கூடக்கூடிய இடங்களில் பொருத்தமான, உரிய கைகழுவும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதுடன் அவற்றைக் கட்டாயமாக்கிக் கொள்ளவும் மேலும் தனிநபர்களுக்கிடையிலான சமூக இடைவெளியை பேணுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

5. ஒன்று கூடல்கள், கூட்டங்கள், சுற்றுலாக்கள், சமய நிகழ்வுகள், பொது வழிபாடுகள், கோயில் திருவிழாக்கள், விளையாட்டு நிகழ்வுகள், வீட்டு வைபவங்கள் போன்றவை மறு அறிவித்தல் வரை தடைசெய்யப்பட்டுள்ளன என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

6. நீண்ட நாள்களுக்குப் பின் ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளதால் பெருமளவானோர் முடி திருத்தகங்களை நாடவேண்டியிருக்கும். இங்கும் சமூக இடைவெளியைப் பேணவும்.

7. வெளியில் சென்று, வீட்டுக்குத் திரும்பும்போதெல்லாம் நன்றாக குளித்தல் நல்லது. ஆகக்குறைந்தது கைகளையாவது சரியான முறையில் ஓடும் நீரில் சவர்க்காரம் கொண்டு கழுவுங்கள்.

வீட்டில் உள்ளபோதும் அடிக்கடி கைகளை உரிய முறையில் கழுவுங்கள். மேலும் கண், மூக்கு, வாய், முகம் போன்றவற்றை கைகளால் தொடுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

8. உங்களுக்கு கொரோனா தொற்றுக்குரிய அறிகுறிகளாகிய தொண்டை நோ, வறட்டு இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏதும் ஏற்பட்டால் முகக் கவசம் அணிந்து கொண்டு உடனடியாக அருகிலுள்ள அரச வைத்தியசாலையை அணுகுங்கள்.

ஆசிரியர்