வலிமை வாய்ந்த புற ஊதாக் கதிர்கள் 90% கோவிட் – 19 வைரஸ் கிருமியை அழிக்கும் என்று வைராலஜிஸ்ட்கள் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்கள். புற ஊதாக் கதிர்கள் அரைமணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரத்துக்குள் சளி, இருமல் துளிகளில் உள்ள கொரோனா வைரசை அழிக்கும் என்றும் கூறியிருக்கின்றனர்.
அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் ஊரடங்கு படிப்படியாகத் தளர்த்தப்படுவதால் கோடைக்காலத்துக்குள் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தைத் தொடும் என்று எச்சரித்திருக்கிறார்கள் நிபுணர்கள். ஆனால், நோய்த் தொற்று பரவல் குறித்த பயத்தைப் போக்கும் விதமாக, சளி – இருமல் துளி ஆகியவற்றின் புறப்பரப்புகளில் உள்ள 90 % கோவிட் வைரசை சூரியக் கதிர்களில் உள்ள புறஊதாக்கதிர்கள் அழிக்கும் என்று ஆய்வகங்களில் ஆய்வு மேற்கொண்ட வைராலஜிஸ்ட் நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
வெவ்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சூரிய ஒளி கொரோனா வைரசை மொத்தமாக அழிக்கும் ஆற்றல் பெற்றிருக்கிறது. சூரிய ஒளியில் உள்ள புற ஊதாக்கதிர் பட்டால் ஆறு நிமிடத்தில் வைரஸ் மொத்தமாக அழிந்துவிடும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வெளியே செல்வது குறித்த பயத்தைப் போக்கும் விதத்தில், மக்களை வெளியே நடமாட அனுமதிப்பதை விடவும் லாக்டவுனில் வீட்டுக்குள் முடக்கி வைப்பது அதிக பாதிப்பை ஏற்படுத்தும். வெளியே நடமாடும்போது சூரிய ஒளி மூலம் நமது உடலில் உருவாகும் விட்டமின் – D நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிக வீரியத்துடன் செயல்படவைக்கும் என்று நம்புவதாக வைராலஜி நிபுணர்கள் அமெரிக்க ராணுவம், உணவு மற்றும் மருத்துத் துறை அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறார்கள்.
அமெரிக்க தேசிய உயிரியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்தவர்கள் நடத்திய ஆய்வில், “90 % கொரோனா வைரஸ் கோடைக்கால சூரிய வெளிச்சத்தில் ஆறு நிமிடத்திலும், குளிர்கால சூரிய வெளிச்சத்தில் 19 நிமிடத்திலும் சிதைவுறுகிறது” என்று கண்டறியப்பட்டுள்ளது.
இதே போன்று ஹார்வார்டு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் வறண்ட வானிலையில் ஆறு டிகிரி வெப்பத்தில் ப்ளூ உள்ளிட்ட வைரஸ்கள் 23 மணி நேரமும்; 32 டிகிரி வெப்பத்தில் ஒரு மணி நேரமும் உயிர் வாழ்கின்றன என்று கூறியிருக்கிறார்கள்.
ஆனால், சில ஆய்வாளர்கள் சூரிய வெளிச்சத்தில் கொரோனா வைரஸ் விரைவில் அழியும்; சூரிய வெளிச்சம் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். நுண்ணுயிரியலாளர் டாக்டர். கிளார்க் , “கோடைக்கால சூரிய வெளிச்சம் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் என்றால் சிங்கப்பூர், பிரேசில், புளோரிடா உள்ளிட்ட வெப்ப மண்டல பகுதிகளில் ஏன் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.