September 21, 2023 1:07 pm

கர்நாடகத்தில் உயிர்க்கொல்லி வைரஸ் கோரதாண்டவம்: ஒரே நாளில் கொரோனாவுக்கு 87 பேர் பலி – சாவு எண்ணிக்கை 848 ஆக உயர்வு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

கர்நாடகத்தில் உயிர்க்கொல்லி வைரஸ் கோரதாண்டவம் ஆடி வருகிறது. கொரோனாவுக்கு பலியாகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் மாநிலத்தில் கொரோனாவுக்கு 87 பேர் பலியாகி உள்ளனர். பாதித்தவர் களின் எண்ணிக்கை 43 ஆயிரத்தை கடந்தது.
வைரஸ் பாதிப்பு 43 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இதில் பெங்களூருவில் மட்டும் பாதிப்பு 21 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் கர்நாடகத்தில் 2,496 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது புதிய உச்சம் இல்லை என்றாலும் கூட கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு தினசரி 2 ஆயிரத்தை கடந்து வருகிறது. கொரோனாவின் கோரதாண்டவம் அதிகரிப்பால் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 87 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பும் உயிரிழப்பும் கர்நாடகத்தில் அதிகரித்து வருகிறது. கொரோனா மரணங்களை கண்டு அரசு அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளது. கொரோனாவுக்கு இதுவரை 848 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 40 ஆயிரத்து 733 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் புதிதாக 2,496 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 43 ஆயிரத்து 229 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 17 ஆயிரத்து 390 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் நேற்று மட்டும் 1,142 பேர் அடங்குவர்.
புதிதாக கொரோனா பாதித்தோரில், பெங்களூரு நகரில் 1,267 பேர், மைசூருவில் 125 பேர், கலபுரகியில் 121 பேர், தார்வாரில் 100 பேர், பல்லாரியில் 99 பேர், கொப்பலில் 98 பேர், தட்சிணகன்னடாவில் 91 பேர், பாகல்கோட்டையில் 78 பேர், உடுப்பியில் 73 பேர், உத்தரகன்னடாவில் 64 பேர், பெலகாவியில் 64 பேர், விஜயாப்புராவில் 52 பேர், துமகூருவில் 47 பேர், பீதரில் 42 பேர், மண்டியாவில் 38 பேர், ராய்ச்சூரில் 25 பேர், தாவணகெரேயில் 17 பேர், பெங்களூரு புறநகரில் 14 பேர், சிக்பள்ளாப்பூரில் 13 பேர், கோலாரில் 11 பேர், சிவமொக்கா, குடகு, சித்ரதுர்காவில் தலா 10 பேர், கதக்கில் 9 பேர், சாம்ராஜ்நகரில் 8 பேர், ஹாசனில் 4 பேர், சிக்கமகளூருவில் 3 பேர், யாதகிரியில் 2 பேர், ராமநகரில் ஒருவர் உள்ளனர். ஹாவேரியில் மட்டும் யாருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை.
கர்நாடகத்தில் கொரோனாவுக்கு 87 பேர் பலியாகியுள்ளனர். இதில் பெங்களூருவில் 56 பேர், மைசூருவில் 4 பேர், கலபுரகி, தார்வார், தாவணகெரே, ஹாசனில் தலா ஒருவர், பல்லாரியில் 5 பேர், தட்சிண கன்னடா, பாகல்கோட்டையில் தலா 4 பேர், விஜயாப்புராவில் 3 பேர், ராய்ச்சூரில் 2 பேர், சாம்ராஜ்நகரில் 2 பேர், சிக்கமகளூருவில் 3 பேர், பீதரில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 848 ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடகத்தில் இதுவரை 8 லட்சத்து 79 ஆயிரத்து 822 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதில் நேற்று மட்டும் 23 ஆயிரத்து 674 மாதிரிகள் அடங்கும். 84 ஆயிரத்து 541 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். குணம் அடைந்தவர்கள் போக 25 ஆயிரத்து 839 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் பெங்களூருவில் மட்டும் 15 ஆயிரத்து 599 பேர் அடங்குவர். இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்