Saturday, May 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை மக்கள் நேசித்த ‘மக்கள் நேசன்’ மருத்துவர் அமரர் சிதம்பரநாதன் | மு.தமிழ்ச்செல்வன்

மக்கள் நேசித்த ‘மக்கள் நேசன்’ மருத்துவர் அமரர் சிதம்பரநாதன் | மு.தமிழ்ச்செல்வன்

6 minutes read

ஐயாவிடம் காட்டினால் வருத்தம் சுகமாகும் என நீண்ட வரிசையில் காத்திருந்து நோயை கூறி ஐயாவின் வார்த்தைகளை கேட்டு செல்வதற்கு என்றே வைத்தியசாலைக்கு ஒரு கூட்டம் வரும். ஐயா எழுதி வழங்கும் குளிசைகளை விட ஐயாவின் வார்த்தைகள் அவர்களின் நோயின் அரைவாசியை குணப்படுத்தியது என்றே கூறுமளவுக்கு ஐயா மக்களை நேசித்தார். அதனால்தான் அவர் அதிகளவான மக்களால் நேசிக்கப்பட்ட மருத்துவராக இருந்தார். இதனால்தான் சட்ட ரீதியாக ஓய்வுப்பெற்றாலும் இறுதிவரை ஒய்வுபெறாது மக்களுக்காக பணியாற்றிய மருத்துவராக மாறினார். அமரர் சிதரம்பரநாதன் அவர்கள்.

கிளிநொச்சியின் மருத்துவத்துறை வரலாற்றில் இடப்பெயர்விற்கு (2009ற்கு) முன்னர், இடப்பெயர்விற்குப் (2009 இற்குப்) பின்னர் என்று இரண்டு பிரதான காலப் பகுதிகள் உள்ளன.

மக்களுக்காகவே வாழ்ந்து மக்களைப் பற்றியே சிந்தித்து மக்களோடு மக்களாக நின்று சேவையாற்றிய மகான்கள் நிறைந்த காலப்பகுதியாகவே இடப்பெயர்விற்கு முன்னரான வன்னி மண் காணப்பட்டது.

இந்த இரண்டு காலப்பகுதிகளிலும் மக்கள் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருந்த மருத்துவத்துறையினரில் ஒருவர்தான் தான் அமரர் வைத்தியர் சிதம்பரநாதன் அய்யா அவர்கள்.

10.11.1931 ஆண்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் பிறந்த காலஞ்சென்ற வைத்தியர் சிதம்பரநாதன் அவர்கள் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார். கல்லூரிக் காலத்தில் சகல துறைகளிலும் சிறந்து விளங்கினார்.

வைத்தியத்துறையில் நுழைந்ததும் அக்காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தில் கடமையாற்றிய தனது மாமனார் ஆகிய மேஜர் தர்மலிங்கத்தைப் பின்பற்றி இலங்கை இராணுவத்தின் மருத்துவ அணியில் தொண்டர் படை அதிகாரியாக தமது மருத்துவ வாழ்வினை ஆரம்பித்தார்.

பதினாறு ஆண்டுகள் இலங்கை இராணுவ மருத்துவ அணியில் கடமையாற்றிய வைத்தியர் சிதம்பரநாதன் அவர்கள், பின்னர் அதில் இருந்து விலகி இலங்கையின் பல பாகங்களில் கடமையாற்றினார்.

இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை வைத்தியசாலை, மன்னாரின் மடு மற்றும் அடம்பன் வைத்தியசாலைகள், திருகோணமலையின் கந்தளாய் வைத்தியசாலை, குருநாகல் மாவட்டத்தின் கண்டாவ வைத்தியசாலை, ஆகியவற்றில் கடமையாற்றிய வைத்தியர் சிதம்பரநாதன் அவர்கள் பின்னாளில் கிளிநொச்சி மருத்துவத்துறையின் உயிர்நாடியாக விளங்கினார்.

1995 ஆம் ஆண்டில் தாம் இளைப்பாறிய பின்னரும் யாழ்ப்பாண மாவட்டத்தில் காணப்பட்ட காணப்பட்ட வைத்தியர் பற்றாக்குறையினை மனத்தில் கொண்டு; வட்டுக்கோட்டை மற்றும் மருதங்கேணி வைத்தியசாலை தொடர்ந்து தமது பணியினைச் செவ்வையாக வைத்தியர் சிதம்பரநாதன் அவர்கள் செய்துவந்தார்.

இறுதியாக கிளிநொச்சி மண்ணின் மகிமையால் நிரந்தரமாக கிளிநொச்சி மாவட்டத்திலேயே தங்கியிருந்து தமது மக்கள் தொண்டினை வைத்தியர் சிதம்பரநாதன் ஆற்றி வந்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இவரது கால் படாத வைத்தியசாலைகளே இல்லை எனும் அளவிற்கு எங்கெல்லாம் மக்களுக்கு வைத்திய உதவி தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் அவர் சென்று சேவை வழங்கினார்.

தமது சேவைக்காலத்தில் வெளிநோயாளர் பிரிவு பொறுப்பு வைத்தியர், வைத்தியசாலைப் பொறுப்பதிகாரி எனப் பல்வேறு மருத்துவ நிர்வாகப் பதவிகளை வகித்த அவர் தற்போதைய கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலை பிரதேச வைத்தியசாலையாக இருந்தபோது அதன் பொறுப்பதிகாரியாக கடமையாற்றினார். 90ம் ஆண்டுகளில் கிளிநொச்சி வைத்தியசாலை இடம்பெயர்ந்து அக்கராயன் வைத்தியசாலையில் இயங்;கிய காலப்பகுதியில் அன்னாரது சேவைகள் காரணமாக கடவுளுக்கு நிகராக மக்களால் கொண்டாடப்பட்டார்.

பின்னாளில் கிளிநொச்சி வைத்தியசாலை தரம் உயர்த்தப்பட்டு மாவட்டப் பொது வைத்தியசாலையாக மாறிய காலப்பகுதியில் அவ் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் பொறுப்பு வைத்தியராக பணிபுரிந்தார்.

2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிளிநொச்சி வைத்தியசாலை இடம்பெயர்ந்த காலப்பகுதியிலும், பின்னர் 2009 ல் ஆரம்பித்த மீள்குடியேற்ற காலத்திலும் வன்னிப் பிரதேசத்தின் பல வைத்தியசாலைகளில் வெளிநோயாளர பிரிவுகளில் கடமை செய்து மக்களைக் காத்தார்.

மீள்குடியேற்ற காலப்பகுதியில் தமது நண்பரான காலஞ்சென்ற வைத்தியர் கோபாலபிள்ளை அவர்களுக்கு உதவியாக மல்லாவியிலிருந்து உருத்திரபுரம் வரை நோயாளர்களைப் பார்வையிட்ட வைத்தியர் சிதம்பரநாதன் வன்னிப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடமாடும் மருத்துவ சேவைகளிலும் தமது சேவையினை வழங்கி உதவியவர் ஆவார்.

வைத்தியர் சிதம்பரநாதன் அவர்களது சேவையானது வன்னிப் பிரதேச மக்கள், சுகாதாரப் பணியாளர்கள், சுகாதார அமைச்சு மற்றும் மாகாண நிர்வாகத்தினர் ஆகியோரால் மெச்சப்பட்டமை வரலாறாகும்.

மீள் குடியேற்றத்தின் பின்னர் கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் வைத்தியர்களது எண்ணிக்கை கூடினாலும் வைத்தியர் சிதம்பரநாதன் அவர்களிடம் மருந்து எடுப்பதற்காக தனியாக ஒரு சனத்திரள் காத்திருப்பதை பலரும் கண்டிருப்பார்கள்.

நோயாளர்களது மனதுக்கு உகந்தவாறு அன்பு, ஆதரவு, கண்டிப்பு என கலவையான தொனியில் உரையாடும் வைத்தியரை மக்கள் நாடிச் சென்றதில் வியப்பில்லை அல்லவா.

இவ்வாறு வைத்தியர் சிதம்பரநாதனிடம் மருந்தெடுக்க வந்த பலரை மருத்துவராக வரவேண்டும் என்ற சிந்தனையை மனத்தில் விதைக்கப்படும் அளவில் அவரது பண்பான அணுகுமுறை இருந்திருக்கிறது என்பதை கிளிநொச்சி வைத்தியசாலையின் சுவரில் தொங்கிய ஒரு அஞ்சலிக் குறிப்பு அடையாளம் காட்டியது.

கிளிநொச்சியைச் சேர்ந்த கொழும்பு பல்கலைக்கழக இறுதியாண்டு மருத்துவ மாணவர் ஒருவரால் வரையப்பட்டிருந்த அஞ்சலிக்குறிப்பு பின்வருமாறு இருந்தது ‘நான் அவரை எனது சிறுவயது முதல் அறிவேன். 2005 ஆம் ஆண்டிலும் அதற்குப் பின்னரும் அவரிடம் சிகிச்சை பெறுவது வழக்கம். தனிப்பட்டமுறையில் அவரே எனக்கு ஒரு முன்னுதாரணமாகவும் ஊக்கியாகவும் இருந்தார். நோயாளர்களுடன் மிக அன்பாகவும் அவர்களுக்கு அர்ப்பணிப்புடனும் சேவை செய்யும் ஒரு ஆன்மா அவர். எனது தந்தையார் எப்போதும் அவரை (வைத்தியர் சிதம்பரநாதனை) ஒரு கடவுள் என வர்ணிப்பதுடன், 90களில் இடம்பெயர்ந்த காலப்பகுதிகள் மற்றும் யுத்தம் இடம்பெற்ற நாட்களில் அவரது சேவைகள் குறித்த பலகதைகளை எங்களுக்கு கூறுவார். சிறுவர்களாக இருந்த எங்களுக்கு அந்தக் கதைகள் ஊக்கம் அளிப்பவையாகவே இருந்தன.அவருக்கு பின்னால் வரும் தலைமுறைகள் அவரை நினைவு கொள்வதற்கு உரிய தகுதியைக் கொண்டவர் அவர்’

மருத்துவசேவைக்கு மேலதிகமாக, ஆன்மீகத்துறையிலும் மிகுந்த நாட்டம் கொண்ட வைத்தியர் சிதம்பரநாதன் அவர்கள் சுகாதார சேவையாளர்களுக்கு ஊக்கியாகவும் கிளிநொச்சி வைத்தியசாலைக்குப் புதிதாக நியமனம் பெறும் வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்.

கிளிநொச்சி வைத்தியசாலையில் எந்த ஒரு நிகழ்விலும் அது ஆசிச் செய்தியானாலும் சரி அஞ்சலி நிகழ்வானாலும் சரி மும் மொழிகளிலும் சரளமாக கணீர் என்ற குரலில் வந்து விழும் வார்த்தைகள் தனிச் சுகம்.

சுதந்திர தினத்திற்கு தேசியக் கொடி ஏற்றவேண்டுமா, தைப்பொங்கலுக்கு பானையில் அரிசி போட வேண்டுமா எல்லாத்திற்கும் முதல்வரான முன்னிலைப்படுத்தப்பட்டவரே வைத்தியர் சிதம்பரநாதன் அவர்கள்.

‘ நீங்கள் நோயாளர்களுக்கான உங்களது கடமையைச் செய்யுங்கள் ஆனால் பலனை எதிர்பாராதீர்கள். பகவான் (சத்தியசாய் பாபா) உங்களைப் பாரத்துக் கொள்வார்’ என்பதே சுகாதாரப் பணியாளர்களுக்கு அவர் எப்போதும் வழங்கும் ஆலோசனையாகும்.

இல்வாழ்க்கையில் மனத்திற்கு உகந்த மனையாளாக வாய்ந்த அம்மையாரும் வைத்தியரின் மனம் அறிந்து வாழ்ந்தமை இக்கால இணையர்களுக்கு ஒரு முன்னுதாரணம்.

ஆண் மகவு ஒன்றும் பெண் மகவுகள் இரண்டுமாக நிறைவாக இருந்த குடும்பத்தில் இரண்டு பெண் மக்களும் திடீரென மறைந்தபோதும் கலங்காது தமது பேரப்பிள்ளைகளை தாயாக இருந்து காத்த பண்பு அவரது மன ஓர்மத்திற்கும் எதையும் தாங்கும் இதயத்திற்கும் ஒரு உதாரணமாகும்.

தமது இறுதிக் காலப்பகுதியில் யாழப்பாணத்தில் இருந்த தமது பூர்வீக இல்லத்தில் தங்கியிருந்த வைத்தியர் சிதம்பரநாதன் தமக்கு சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டதும் தேடி வந்தது கிளிநொச்சி வைத்தியசாலையையே.

தந்தையின் சுகவீனச் செய்தி கேட்டு கடல் கடந்து ஓடி வந்த மகனுடனுடனும், தம்மோடு கூடவே வந்த மனையாளுடனும் கடைசி இரண்டு தினங்களைக் கழித்த அன்புத் தந்தையான வைத்தியர் சிதம்பரநாதன் அவர்கள் நடத்திய இறுதி உரையாடல்கள் அவர் எவ்வளவு தூரம் எதிர்காலத்தினை கணிக்கும் ஆற்றலுடன் இருந்தார் என்பதற்கு உதாரணமாகி விட்டன.

13.01.2021 அன்று இரவு மனையாளை அருகில் அழைத்த வைத்தியர் சிதம்பரநாதன் அவர்கள் ‘ அம்மா ஒரு பத்து நிமிசம் என்னோட கதையுங்கோ’ என்று சொல்லியிருக்கிறார்.

‘ஏனப்பா திடீரெண்டு பத்து நிமிசம் கதைக்க சொல்லுறியள்’ என்று கேட்ட மனையாளுக்கு அவர் சொன்ன பதில் ‘ இந்தப் பத்து நிமிசமும்தான் நான் உங்களோட கதைக்கலாம். பிறகு நான் தில்லையில நடனமிடும் அம்பலத்தானிடம் போய்விடுவேன்’ என்பதாகும்.

அதன்பின்னர் நோயாளர் காவு வண்டியை அழைக்கும்படி மகனாருக்கு கூறிய வைத்தியர் சிதம்பரநாதன், தாம் இறுதிவரை நேசித்த கிளிநொச்சி வைத்தியசாலையில் 15.01.2022 காலை 6.30 மணியளவில் அமைதியாக இவ்வுலகை விட்டுச் சென்றார்.

கிளிநொச்சியில் பல மருத்துவர்களுக்கும் மருத்துவ மாணவர்களுக்கும் உதாரண புருசராக விளங்கிய கிளிநொச்சியின் மூத்த வைத்தியர் சிதம்பரநாதன் அவர்கள் தமது 91வது வயதில் அமரத்துவம் அடைந்தாலும் கிளிநொச்சி வைத்தியசாலை இருக்கும் வரை அவரது நினைவுகளும் நீண்டு நிலைத்து நிற்கும்.

‘நோயாளர்களுக்கான உங்களது கடமையைச் செய்யுங்கள் ஆனால் பலனை எதிர்பாராதீர்கள்’ என்ற வைத்தியர் சிதம்பரநாதனது அறிவுரையின்படி கிளிநொச்சி மாவட்டத்தின் சுகாதாரப் பணிக்குழாம் செயற்படுவதே அவர்கள் அன்னாருக்கு செலுத்தக்கூடிய உச்சபட்ச கௌரவமாகும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More