Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 16ஆவது ஐபிஎல் ஆரம்பப் போட்டியில் சென்னையை வீழ்த்தியது நடப்பு சம்பியன் குஜராத் டைட்டன்ஸ்

16ஆவது ஐபிஎல் ஆரம்பப் போட்டியில் சென்னையை வீழ்த்தியது நடப்பு சம்பியன் குஜராத் டைட்டன்ஸ்

4 minutes read

அஹமதாபாத், நரேந்திர மோடி விளையாட்டரங்கில் நேற்று வெள்ளிக்கிழமை (31) நடைபெற்ற 16ஆவது ஐபிஎல் ஆரம்பப் போட்டியில் முன்னாள் சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸை எதிர்த்தாடிய நடப்பு சம்பியன் குஜராத் டைட்டன்ஸ் 5 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அடுத்தடுத்த அத்தியாயங்களில் 3ஆவது நேரடித் தடவையாக சென்னை சுப்பர் கிங்ஸை குஜராத் டைட்டன் வெற்றிகொண்டது.

சென்னை சுப்பர் கிங்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட 179 ஓட்டங்கள் என்ற சற்று கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் 19.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.

வெற்றியை மாத்திரம் குறியாகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத்  டைட்டன்ஸ்  ஆரம்பத்திலிருந்தே ஒவருக்கு 9 அல்லது 10 ஓட்டங்கள் என்ற ரீதியில் குவித்துக்கொண்டிருந்தது.

ரிதிமான் சஹாவும் ஷுப்மான் கில்லும் 23 பந்துகளில் 37 ஓட்டங்களை விளாசி சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

சஹா 25 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த பின்னர் இம்ப்பெக்ட் ப்ளெயராக கேன் வில்லியம்சனுக்குப் பதிலாக களம் புகுந்த தமிழகத்தின் இளம்வீரர் சாய் சுதர்ஷன் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 22 ஓட்டங்களைப் பெற்றார்.

அத்துடன் ஷுப்மான் கில்லுடன் 2ஆவது விக்கெட்டில் 34 பந்துகளில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

கய்க்வாடின் பிடியை எல்லைக் கோட்டுக்கு அருகில் எடுக்க முயற்சித்த கேன் வில்லியம்சன் கட்டுப்பாடு இழந்து வீழ்ந்தால் அவரது முழங்காளில் உபாதை ஏற்பட்டது. அவருக்குப் பதிலாகவே இம்ப்பெக்ட் ப்ளேயராக சுதர்ஷன் துடுப்பெடுத்தாடினார்.

இந்தப் போட்டியில் உபாதைக்குள்ளான  அம்பாட்டி ராயுடுவுக்குப் பதிலாக முதலாவது இம்ப்பெக்ட் ப்ளேயராக சென்னை அணியில் துஷார் தேஷ்பாண்டே இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தார்.

இந்த வருட ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதல் தடவையாக இம்பெக்ட் ப்ளேயர் விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போட்டியில் தாக்கத்தை அல்லது திருப்பத்தை ஏற்படுத்தக் கூடியவராக இம்பெக்ட் ப்ளேயர் கணிக்கப்படுகிறார்.

எனினும் சுதர்ஷன் ஆட்டமிழந்ததும் 10 ஓவர்களுக்கு பின்னர் இரண்டு அணிகளுக்கும் இடையில் கடும் போட்டி நிலவ ஆரம்பித்தது.

இந்தப் போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டங்களை சரமாரியாகக் குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட குஜராத் அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா 8 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டம் இழந்தார்.

திறமையாக துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த ஷுப்மான் கில் 36 பந்துகளில் 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 63 ஓட்டங்களைக் குவித்து 15ஆவது ஓவரின் கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து விஜய் ஷன்கர் 27 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்படத் தொடங்கியது.

எனினும் தீப்பக் சஹார் வீசிய 19ஆவது ஓவரில் பெறப்பட்ட 4 உதிரிகள் உட்பட 15 ஓட்டங்கள் குஜராத் டைட்டன்ஸுக்கு திருப்பு முனையாக அமைந்தது.

கடைசி ஓவரில் வெற்றிக்கு தேவைப்பட்ட 8 ஓட்டங்களை ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டறி மூலம் ராஷித் கான் பெற்றுக்கொடுக்க குஜராத் டைட்டன்ஸ் வெற்றியை தனதாக்கியது.

ராகுல் தெவாட்டியா 15 ஓட்டங்களுடனும் ராஷித் கான் 10 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

சென்னை சுப்பர் கிங்ஸ் பந்துவீச்சில் ராஜ்வர்தன் ஹங்கர்கெக்கார் 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட முன்னாள்  சம்பியன்  சென்னை சுப்பர் கிங்ஸ் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 178 ஓட்டங்களைப் பெற்றது.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் சிறப்பான இணைப்பாட்டம் இடம்பெறாத போதிலும் ருட்டுராஜ் கய்க்வாடின் அரைச் சதமே அவ்வணியின் மொத்த எண்ணிக்கைக்கு வலுசேர்ப்பதாக அமைந்தது.

மொத்த எண்ணிக்கை 14 ஓட்டங்களாக இருந்தபோது ஆரம்ப வீரர் டெவன் கொன்வே ஒரு ஓட்டத்துடன் ஆட்டம் இழந்தார்.

ருட்டுராஜ் கய்க்வாட், மொயின் அலி ஆகிய இருவரும் ஓட்;ட வேகத்தை அதிகரிக்கும் வகையில் துடுப்பெடுத்தாடினர். எனினும் மொயின் அலி 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அடுத்து களம் புகுந்த பென் ஸ்டோக்ஸ் சொற்ப நேரத்தில் 7 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

அடுத்ததாக அம்பாட்டி ராயுடுவும் 12 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

ஒரு புறத்தில் விக்கெட்கள் சரிந்துகொண்டிருக்க, மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த ருட்டுராஜ் கய்க்வாட் 92 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் களம் விட்டகன்றார். 50 பந்துகளை எதிர்கொண்ட அவர் 9 சிக்ஸ்கள், 4 பவுண்டறிகளை விளாசியிருந்தார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரவிந்த்ர ஜடேஜா ஒரு ஓட்டத்துட னும் ஷிவம் டுபே 19 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர்.

அணித் தலைவர் எம்.எஸ். தோனி 14 ஓட்டங்களுடனும் மிச்செல் செட்னர் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

குஜராத் பந்துவீச்சில் ராஷித் கான் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மொஹமத் ஷமி 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அல்ஸாரி ஜோசப் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: ராஷித் கான்

புதிய விதிகள்

இந்த வருட ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் புதிய விதிகள்   அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வருடத்திலிருந்து ஒவ்வொரு அணியும் தத்தமது பதினொருவரை நாணய சுழற்சியின் பின்னர் வெளியிடலாம் என்ற புதிய விதி அறிமுகமாகிறது.

நாணய சுழற்சியின் பின்னர் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்திக்கூடிய  பதில் விரர்களில் ஒருவரை (Impact player) பதினொருவர் அணியில் இணைக்க புதிய விதி அனுமதிக்கிறது.

முதலில் துடுப்பெடுத்தாடினால் மேலதிக துடுப்பாட்ட வீரர் ஒருவரையும் முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டால் மேலதிக பந்துவீச்சாளர் ஒருவரையும் இறுதி அணியில் இணைப்பதற்கு புதிய விதியில் இடம்வழங்கப்பட்டுள்ளது. இது போட்டியில் பெரிய தாக்கத்தை அல்லது திருப்பத்தை ஏற்படுத்துவதுடன விறுவிறுப்பையும் தோற்றுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த பதில் வீரர் பெரும்பாலும் இந்திய நாட்டவராக இருப்பார். ஒருவேளை இறுதி அணியில் 4 வெளிநாட்டு வீரர்களுக்கு குறைவாக இடம்பெற்றால் மாத்திரமே வெளிநாட்டு வீரர் ஒருவரை பதில் வீரராக களம் இறக்க முடியும்.

இந்த வருட ஆரம்பப் போட்டியில் இரண்டு அணிகளிலும் இம்ப்பெக்ட் ப்ளேயர்கள் விளையாடியிருந்தது விசேட அம்சமாகும்.

களத்தடுப்பில் கட்டுப்பாடு

சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் போன்று ஐபிஎல் போட்டிகளில் குறிப்பிட்ட ஓர் அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் 20 ஓவர்களை வீசத் தவறினால் அதற்கு தண்டம் விதிக்கப்படும். அதாவது போட்டியின் கடைசிக் கட்டத்தில் 30 யார் வட்டத்துக்கு வெளியே களத்தடுப்பில் ஈடுபடும் வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும்.

ஆரம்ப விழாவில் தமன்னா, ரஷ்மிக்கா

அத்தியாயமும் கண்கவர் நடனங்களுடன் கோலாகலமாக ஆரம்பமானது.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையிலான போட்டிக்கு முன்னர் மாலை 6.00 மணியளவில் ஆரம்ப விழா வைபவம் நடைபெற்றது.

பொலிவூட் நட்சத்திரங்களான தமன்னா பாட்டியா, ரஷ்மிக்கா மந்தன்னா ஆகிய இருவரும்  ஐபிஎல் ஆரம்ப விழா வைபவத்தில் நடன நிகழ்ச்சிகளில் கலந்துசிறப்பித்தனர்.

எம்.எஸ். தோனியையும் விராத் கோஹ்லியையும் தாங்கள் பெரிதும் விரும்புவதாகவும் அவர்கள் முன்னே நடனமாடுவது மகிழ்ச்சி தரும் எனவும் தமன்னாவும் ரஷ்மிக்காவும் ஆரம்ப விழாவுக்கு முன்னர் குறிப்பிட்டிருந்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More