June 7, 2023 5:33 am

இரண்டாம் உலகப் போரின் திரிபுபடுத்தப்பட்ட வரலாறும் உண்மையும் | ஐங்கரன் விக்கினேஸ்வரா

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

மேற்கத்தய ஊடகங்களால் மழுங்கடிக்கப்பட்ட உண்மையும் :

———————————————————
– ஐங்கரன் விக்கினேஸ்வரா

(இவ்வாரம் உலகின் பல பாகங்களில் “வெற்றித் தினம்“ -Victory in Europe Day- கொண்டாடப்பட்டு வருகிறது. இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி தோல்வியடைந்து, சரணடைந்த வெற்றியை பறைசாற்றும் நாளாகும்)

இரண்டாம் உலகப் போரின் இறுதியில் ஜெர்மனி தோல்வியடைந்து, சரணடைந்த செய்தி பரவி அமெரிக்காவிலும், மேற்கு ஐரோப்பாவிலும் 1945 மே 8ம் தேதி கொண்டாட்டங்கள் தொடங்கின. ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் ”வெற்றித் தினம்“ (VE Day – Victory in Europe Day) என்று தற்போது கொண்டாடப்படுகிறது. சோவியத் ரஷ்யாவிலும் , கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் மே 9 ம் தேதி வெற்றித்தினம் என்று பாரியளவில் கொண்டாடப்படுகிறது.

மேற்கும் – கிழக்குமாக, ஏன் முழு உலகமே ஓரணி திரண்டு போராடியே இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியை தோல்வியடையச் செய்தனர். ஆனால் இந்த வரலாற்று உண்மைகளை மழுங்கடித்து மேற்கத்திய ஊடகங்கள் ஒருபக்கச் சார்பாக வரலாற்றை திரிபுபடைத்து வெளியிடுகின்றனர்.

2020ம் ஆண்டில் இரண்டாம் உலகப் போர் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் கூட்டு நினைவகம் மீதான போர்வெற்றி தினத்தின் 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட வாஷிங்டனின் அறிக்கையில், நாஜி ஜெர்மனியை வென்றவர்கள் அமெரிக்காவும் பிரிட்டனுமே என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளமை பாரிய வரலாற்று திரிபும் பொய்மையுமாகும்.

இதனை கண்டித்து ரஷ்யா கண்டனம் தெரிவிக்கையில், மறுக்கமுடியாத பாத்திரத்திற்கு மரியாதை செலுத்தும் தைரியமோ விருப்பமோ அமெரிக்க அரசுக்கு இல்லை. வெள்ளை மாளிகையின் அறிக்கையின் வாயிலாக மாஸ்கோ, வாஷிங்டன் “இருதரப்பு உறவுகளுக்கு ஒரு புதிய வரலாற்று பிரச்சினையாக மாற்ற வேண்டாம்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போரில் சோவியத்- ரஷ்யாவின் தியாகத்தையும் பங்களிப்பையும் மேற்குலக ஊடகங்கள்(Western Media), குறிப்பாக அமெரிக்கா சார்பு ஊடகங்கள் எப்போதும் மறைத்தோ அல்லது குறைத்தே மதிப்பிட்டு வருகின்றன.

கோரமான நாஸி ஜெர்மனியை தோற்கடித்ததில் 27 மில்லியன் சோவியத் உயிர்களின் உன்னதத்தை – மதிப்பை கௌரவிக்காமல் தவறான வரலாற்றையே இந்த ஊடகங்கள் வெளிப்படுத்துகின்றன.

நாஸி ஜெர்மனியை தோற்கடித்த இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவும், பிரிட்டனுமே ஜேர்மனியை தோற்கடித்த வெற்றியாளர்களாக இந்த ஊடகங்கள் காலங்காலமாக குறிப்பிட்டு வருகின்றன.

ஏன், கீழைத்தேச ஆசிய நாடுகளிலும் இந்த ஆங்கிலேய வரலாற்றையே கண்மூடிக் கொண்டு வரலாற்று புரிதலின்றி போதிக்கின்றனர்.
இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியன் செய்த பங்களிப்பை அமெரிக்கா தரப்பு ஊடகங்கள் வேண்டுமென்றே அங்கீகரிக்கமல், வரலாற்றை திரிபுபடுத்தி வெளியிடுகின்றனர்.

வீரமிகு மார்ஷல் சூக்கோவ் :

பெர்லின் மீதான இறுதி தாக்குதலுக்கு தலைமை தாங்கி, ஹிட்லரின் இராணுவ தலைமையகமான ரெய்க்ஸ்டாக்கில் (Reichstag) வெற்றிச் செங்கொடியை ஏற்றிய ரஷ்ய மார்ஷல் சூக்கோவ் (Marshal Zhukov) பற்றி இன்றைய வரலாற்று நூல்களில் சிறிதளவும் கூறப்படுவதில்லை.

அத்துடன் சோவியத் துருப்புகள் 1945 ஏப்ரலின் இறுதியில் புயலெனப் புகுந்து பெர்லினைக் கைப்பற்றிய வீரமிகு வரலாற்றை விட, ஆங்கில- அமெரிக்கர்களின் நோர்மண்டி (Normandy) தறையிறங்கியதையே பாரிய வெற்றியாக இந்த ஊடகங்கள் மிகைப்படுத்துவதையும் காணலாம்.

ஐரோப்பாவின் வெற்றி செய்தி ஏற்பட மூலகர்த்தா சோவியத் யூனியனின் மார்ஷல் கிரகோரி சூக்கோவ் ஆவார். இரண்டாம் உலகப் போரின் முடிவாக இத்தாலியில் 29 ஏப்ரல் அன்று நாஸிப் படைகள் சரணடையவும், இதன்பின் 30 ஏப்ரல் அன்று நாஸி தலைமையகம் ‘ரெய்க்ஸ்டாக்’ சோவியத் படைகளால் கைப்பற்றப்பட்டதற்கும் அவரின் நேரடிப் பங்களிப்பு அளப்பரியது.

மறைக்கப்பட்ட மார்ஷல் சூக்கோவின் வீரமிகு வெற்றிகரமான வரலாற்றுத் தகவல்கள் இன்றைய ஆங்கிலேய நூல்களில் இல்லை என்பது வருத்தத்திற்குரியது.

யாரிந்த மார்ஷல் சூக்கோவ் ?

சோவியத் யூனியனின் பிரபல்யமான மார்ஷல் சூக்கோவ் (டிசம்பர் 1, 1896-ஜூன் 18, 1974) ஜப்பானிய ஆக்கிரமிப்பை நிறுத்த, அன்றைய ரஷ்யத் தலைவர் ஜோசப் ஸ்டாலினின் செம்படையில் 1938முதல் மங்கோலிய-மஞ்சூரிய எல்லையில் ஜப்பானிய ஆக்கிரமிப்பை நிறுத்தும் பணியில், மார்ஷல் சூக்கோவ் சோவியத்தை காப்பாற்ற தொடர்ந்து போரிட்டு காசன் ஏரி போரில் வெற்றி பெற்றார்.

நாஸிகளின் ஜேர்மன் படைகளுக்கு எதிராக மாஸ்கோ, ஸ்டாலின்கிராட் மற்றும் லெனின்கிராட் ஆகியவற்றின் வெற்றிகரமான தாக்குதல்களுக்கு பொறுப்பேற்ற மார்ஷல் சூக்கோவ், இறுதியில் ஜெர்மனி பெர்லினில் வெற்றிகரமான செங்கொடியை ஏற்றியவரும் அவரே.

போருக்கு பின்னர் மாஸ்கோவில் மார்ஷல் சூக்கோவ் பல்வேறு இராணுவ பணிகளை மேற்கொண்டார். குருசேவ் ஆட்சிக்கு வந்த பிறகு, அவர் துணை அமைச்சராகி பின்னர் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு தலைமை தாங்கினார்.

மார்ஷல் சூக்கோவ் போருக்குப் பிறகும் ரஷ்ய மக்களுக்கு மிகவும் பிரபல்யமாக இருந்தார். 1939, 1944, 1945 மற்றும் 1956 ஆகிய ஆண்டுகளில் அவருக்கு சோவியத் யூனியனின் நாயகன் (Soviet Hero Award) விருது நான்கு முறை வழங்கப்பட்டது. மேலும் ஆர்டர் ஆஃப் விக்டரி (இரண்டு முறை) மற்றும் ஆர்டர் ஆஃப் லெனின் உட்பட பல சோவியத் விருதுகளைப் பெற்றார்.

அத்துடன் கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லெஜியன் டி’ஹானூர் (பிரான்ஸ், 1945) மற்றும் தலைமை தளபதி, லெஜியன் ஆஃப் மெரிட் (யு.எஸ்., 1945) உட்பட பல வெளிநாட்டு விருதுகளையும் பெற்றார். அத்துடன் 1969 இல் அவர் தனது சுயசரிதையான “மார்ஷல் ஆஃப் விக்டரி” எனும் நூலை வெளியிட்டு உலகம் போற்றிய வீரனாவார்.

ஓர் வரலாற்று நாயகனின் உண்மையான அர்ப்பணிப்பையும், தியாகத்தையும் புறக்கணித்து திரிபுபடுத்தப்பட்ட மேற்குலக ஊடகங்களின் செயலானது, எதிர்கால சந்ததியினருக்கு அப்பட்டமான பொய்களையே வரலாறு என போதிப்பது கவலைக்குரியதாகும், கண்டனத்துக்குரியதாகும்.

– ஐங்கரன் விக்கினேஸ்வரா

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்