அவுஸ்ரேலியாவிடம் போராடி தோற்றது இங்கிலாந்து!

இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், அவுஸ்ரேலியா அணி 19 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் அவுஸ்ரேலியா அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

மன்செஸ்டர்- ஓல்ட் ட்ரப்போர்ட் மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 294 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, கிளென் மேக்ஸ்வெல் 77 ஓட்டங்களையும், மிட்செல் மார்ஷ் 73 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில், ஜொப்ரா ஆர்செர் மற்றும் மார்க் வுட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், அடில் ராஷித் 2 விக்கெட்டுகளையும் கிறிஸ் வோக்ஸ் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 295 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து அணியால், 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்புக்கு 275 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் அவுஸ்ரேலியா அணி 19 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, சேம் பிளிங்ஸ் 118 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இதுவே அவரது ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சதமாகும். ஜோனி பேயர்ஸ்டொவ் 84 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

அவுஸ்ரேலியா அணியின் பந்துவீச்சில், ஆடம் செம்பா 4 விக்கெட்டுகளையும், ஜோஸ் ஹசில்வுட் 3 விக்கெட்டுகளையும், பெட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அவுஸ்ரேலிய பந்துவீச்சாளர் ஜோஸ் ஹசில்வுட் தெரிவுசெய்யப்பட்டார்.

ஆசிரியர்