சென்னை அணி தோல்வி | காரணம் தோனியா?

சென்னை அணி தோல்வி - காரணம் தோனியா?

விளையாட்டில் வெற்றி மற்றும் தோல்வி மாறிமாறி வருவது இயற்கை. ஆனால், பொதுவாக வெற்றியை விட தோல்விக்கான காரணங்கள் அதிகமாக விவாதிக்கப்படும்.

முதல் போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்து இலக்கை எட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே அணி ) 2020 ஐபிஎல் தொடரில் வெற்றியுடன் தனது பயணத்தை தொடங்கியது.

இரண்டாவது போட்டியில் மீண்டும் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் நேற்று இடம்பெற்ற போட்டியில் தோல்வியடைந்தது.

சென்ற போட்டியில் சென்னை அணியின் சார்பாக சிறப்பாக விளையாடிய அம்பட்டி ராயுடு இரண்டாவது போட்டியில் உடல்தகுதி காரணமாக விளையாடவில்லை.

ஸ்மித், சஞ்சு சாம்சனை கட்டுப்படுத்த இயலாத பந்துவீச்சாளர்கள் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியின் தொடக்க விக்கெட்டை எளிதில் கைப்பற்றியபோதும்,

ஸ்மித் மற்றும் சாம்சன் நடத்திய வான வேடிக்கையை சிஎஸ்கே அணியால் கட்டுப்படுத்த முடியவில்லை.

சுழல்பந்து வீச்சாளர்களான ஜடேஜா மற்றும் பியூஷ் சாவ்லாவால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.

16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே தோல்வியடைந்த நிலையில், நிகிடி பந்துவீசிய இன்னிங்ஸின் கடைசி ஓவரில் 30 ரன்கள் எடுக்கப்பட்டது.

2 நோபால்கள் மற்றும் 1 வைட் அடங்கிய நிகிடியின் இந்த ஓவரில் 4 சிக்ஸர்கள் விளாசப்பட்டது.

இது ஆட்டத்தின் முடிவில் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது.

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 217 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்த போதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் பலரும் தங்கள் அணி வென்றுவிடும் என்ற நம்பிக்கையில் தான் இருந்தனர்.

5 ஓவர்களுக்கு பிறகு ஷேன் வாட்சன் ஆடிய அதிரடி ஆட்டம் ரசிகர்களுக்கு நம்பிக்கையை அளித்தது.

ஆனால், அது வெகுநேரம் நீடிக்கவில்லை. 7-ஆவது ஓவரில் அவர் ஆட்டமிழந்தார். அதை விட ஏமாற்றம், கடந்த போட்டியில் சிறப்பாக பங்களிக்காத முரளி விஜய் இம்முறையும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அதிக எண்ணிக்கையிலான இலக்கை துரத்தும் பின்வரிசையில் களமிறங்கி இறுதி கட்டத்தில் ஓட்டங்களை விளாசி அணியை வெல்ல வைப்பது தோனியின் பாணி.

ஆனால் தற்போதைய காலகட்டத்தில் அந்த பாணியை சற்று மாற்றிக் கொண்டு தோனி முன்னரே களமிறங்க இறங்கவேண்டும் என அண்மைகாலமாக ஒலித்து வரும் கருத்து, இந்த போட்டிக்கு பிறகும் எதிரொலித்தது. கவாஸ்கர் போன்றோரும் இந்த கருத்தை எடுத்து வைத்தனர்.

16 ஓட்டங்களில் தோல்வி என்ற நிலையில், தோனி ஆரம்பத்திலேயே களமிறங்கி இருந்தால் சிறப்பாக விளையாடி அதிக ஓட்டங்கள் குவித்த டூ பிளஸிஸ்க்கு பக்கபலமாக விளையாடி வெற்றி பெற வைத்திருக்கலாம் என்ற கருத்து சில ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

ஆசிரியர்