செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இலங்கை கிரிக்கெட்டின் திட்டங்களில் பாரிய பின்னடைவு | பயிற்றுநர் மிக்கி ஆர்த்தர்

இலங்கை கிரிக்கெட்டின் திட்டங்களில் பாரிய பின்னடைவு | பயிற்றுநர் மிக்கி ஆர்த்தர்

4 minutes read

ஒழுக்காற்று விதிகளை மீறியமைக்காக மூன்று பிரதான வீரர்கள் தடைக்குட்பட்டதன் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட்டுக்கான இலங்கை கிரிக்கெட்டின் திட்டங்களில் பாரிய பின்னடைவு ஏற்பட்டது.

எனினும், அந்தப் பின்னடைவுக்கு மத்தியில் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்துக்கு தயாராகிவரும் இலங்கை அணியில் ஏனையவர்கள் இணைவதற்கான வாயில் திறக்கப்பட்டுள்ளதாக தலைமைப் பயிற்றுநர் மிக்கி ஆர்த்தர் தெரிவித்தார்.

ஐக்கிய இராச்சியத்திலும் ஓமானிலும் இந்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஐசிசி இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்குத் தயாராகும் பொருட்டு இலங்கை அணி, ஓமானில் 2 போட்டிகளில் விளையாடுவதற்கு இன்று பிற்பகல் ஓமான் நோக்கி புறப்படுவதற்கு முன்னர் மிக்கி ஆர்த்தர் இந்தக் கருத்தை நேற்று சனிக்கிழமை வெளியிட்டார்.

இங்கிலாந்துக்கான கிரிக்கெட் விஜயத்தின்போது ஒழுக்க விதிகளை மீறும் வகையில் டர்ஹாம் வீதியில் அலைந்து திரிந்த நிரோஷன் திக்வெல்ல, குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க ஆகிய மூவரும் தடைக்குட்பட்டமை மறக்க முடியாத ஒரு கசப்புணர்வு என மிக்கி ஆர்த்தர் குறிப்பிட்டார்.

‘அது இலங்கைக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டுள்ளது. ஆனால், தினேஷ் சந்திமால், பானுக்க ராஜபக்ஷ, சரித் அசலன்க, கமிந்து மெண்டிஸ் போன்ற வீரர்களுக்கு வாயில் திறக்கப்பட்டுள்ளது’ என மிக்கி ஆர்த்தர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் தற்போதைய இலங்கை குழாத்தில் இடம்பெறும் வீரர்கள் விரைவாக தம்மை தயார்படுத்திக்கொள்ளக் கூடியவர்களாகவும் எதற்கும் வளைந்து கொடுக்க கூடியவர்களாகவும் இருப்பது திருப்தி அளிப்பதாக அவர் மேலும் கூறினார்.

‘ஐக்கிய அரபு இராச்சியத்தில் தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நான் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றேன். ஏனெனில் அதே ஆடுகளங்களில்தான் இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளில் நாங்களும் விளையாடவுள்ளோம். 

எனவே, 2 வேகப்பந்து வீச்சாளர்கள், 2 சுழற்பந்து வீச்சாளர்கள், சகலதுறை வீரர்கள் மற்றும் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களில் பகுதிநேர சுழற்பந்து வீச்சாளர் ஆகியோருடன் போட்டிகளை எதிர்கொள்ள எண்ணியுள்ளோம். 

அந்த ஆடுகளங்களுக்கு ஏற்ப எமது அணியினால்  மாற்றிக்கொள்ள, வளைந்துகொடுக்க முடியும்’ என தலைமைப் பயிற்றுநர் ஆர்த்தர் தெரிவித்தார்.

‘ஒரு வாரத்துக்கும் மேலாக எமது துடுப்பாட்டம் குறித்து நாங்கள் கூடுதல் கவனம் செலுத்தினோம். அதற்கு கடுமையான பயிற்சிகளை வழங்கினோம். மூன்று பயிற்சிப் போட்டிகளில் விளையாடியதுடன் வீரர்களின் துடுப்பாட்ட திறன்களை மேம்படுத்த விசேட பயிற்சிகள் நடத்தப்பட்டது. 

எமது பந்துவீச்சும் களத்தடுப்பும் வெகுவாக முன்னேறியுள்ளது. எனவே, எமது துடுப்பாட்டம் பிரகாசித்தால் அது எமக்கு அநுகூலமாக அமையும்’ என்றார் அவர்.

ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் முதலாவது சுற்றில் (தகுதிகாண்) ஏ குழுவில் இடம்பெறும் இலங்கை தனது ஆரம்ப போட்டியில் நமீபியாவை அபு தாபியில் அக்டோபர் 18ஆம் திகதி எதிர்த்தாடவுள்ளது. 

அதனைத் தொடர்ந்து அயர்லாந்தை அபு தாபியில் 20ஆம் திகதியும் நெதர்லாந்தை ஷார்ஜாவில் 22ஆம் திகதியும் இலங்கை எதிர்த்தாடும்.

அக்டோபர் 17ஆம் திகதி முதல் நவம்பர் 14ஆம் திகதிவரை நடைபெறவுள்ள ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்பதாக 4 பயிற்சிப் போட்டிகளில் இலங்கை விளையாடவுள்ளது.

இலங்கையின் முன்னாள் அணித் தலைவர் டுலீப் மெண்டிஸை தலைமைப் பயிற்றுநராகக் கொண்ட ஓமான் அணியுடன் எதிர்வரும் 7ஆம் திகதியும் 9ஆம் திகதியும் 2 பயிற்சிப் போட்டிகளில் இலங்கை விளையாடும்.

உபாதை மற்றும் கொரோனாவிலிருந்து மீண்டு பூரண குணமடைந்துள்ள குசல் மெண்டிஸ், ஐபிஎல் போட்டிகளில்  தற்போது விளையாடிவரும் வனிந்து ஹசரங்க டி சில்வா, துஷ்மன்த சமீர ஆகியோர்   இந்தப் பயிற்சிப் போட்டிகளில் விளையாடமாட்டார்கள்.

ஹசரங்கவும் சமீரவும் இலங்கை குழாத்துடன் எதிர்வரும் 10ஆம் திகதி இணையவுள்ளனர்.

ஐசிசியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரண்டு பயிற்சிப் போட்டிகளில் அக்டோபர் 14ஆம் திகதியும் 16ஆம் திகதியும் இலங்கை விளையாடும்.

இலங்கை குழாத்தில் 23 வீரர்கள் 

ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண  கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு இலங்கை குழாத்தில் பெயரிடப்பட்டுள்ள 15 வீரர்களுடன் 9 வீரர்கள் மேலதிக வீரர்கள் இடம்பெறுகின்றனர்.

ஏற்கனவே 15 வீரர்கள் அடங்கிய குழாத்தில் பெயரிடப்பட்டிருந்த லஹிரு மதுஷன்க உபாதையிலிருந்து மீளாததால் அவர் நீக்கப்பட்டுள்ளார். அதன் பிரகாரம் குழாத்தில் 14 வீரர்கள் இடம்பெறுகின்றனர். 

அவருக்குப் பதிலாக யார் உலகக் கிண்ண குழாத்தில் இணைக்கப்படுவார் என்பது அக்டோபர் 10ஆம் திகதிக்கு முன்னர் தீர்மானிக்கப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்தது.

ஐசிசியின் அனுமதியுடன் மேலதிகமாக 9 வீரர்களை இலங்கை அணி அழைத்துச்செல்லவுள்ளது. இதற்கு அமைய மொத்தம் 23 வீரர்கள் இலங்கை குழாத்தில் இடம்பெறுகின்றனர்.

மேலதிக 9 வீரர்களுக்கான செலவினங்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஏற்கின்றது.

இலங்கை குழாம்

தசுன் ஷானக்க (தலைவர்), தனஞ்சய டி சில்வா (உதவித் தலைவர்), குசல் பெரேரா (விக்கெட் காப்பாளர்), தினேஷ் சந்திமால் (விக்கெட் காப்பாளர்), அவிஷ்க பெர்னாண்டோ, பானுக்க ராஜபக்ஷ, சரித் அசலன்க, வனிந்து ஹசரங்க டி சில்வா, கமிந்து மெண்டிஸ், சாமிக்க கருணாரட்ன, நுவன் ப்ரதீப், துஷ்மன்த சமீர, ப்ரவீன் ஜயவிக்ரம, மஹீஷ் தீக்ஷன.

மேலதிக வீரர்கள்: லஹிரு குமார, பினுர பெர்னாண்டோ, அக்கில தனஞ்சய, புலின தரங்க, பெத்தும் நிஸ்ஸன்க, மினோத் பானுக்க, அஷேன் பண்டார, லக்ஷான் சந்தகேன், ரமேஷ் மெண்டிஸ்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More