Sunday, May 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு சூரியகுமாரின் அதிரடி சதத்தின் உதவியுடன் இலங்கையை நையப்புடைத்த இந்தியா தொடரை தனதாக்கியது

சூரியகுமாரின் அதிரடி சதத்தின் உதவியுடன் இலங்கையை நையப்புடைத்த இந்தியா தொடரை தனதாக்கியது

3 minutes read

இந்தியாவக்கும் இலங்ககைக்கும் இடையில்  ராஜ்கொட்டில் இன்று சனிக்கிழமை (07)   நடைபெற்ற 3ஆவதும் இறுதியுமான சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் சகலதுறைகளிலும் அபார ஆற்றல்களை வெளிப்படுத்திய இந்தியா 91 ஓட்டங்களால் வெற்றியீட்டி 2 – 1 என்ற  ஆட்டக் கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

சூரியகுமார் யாதவ்வின் ஆட்டம் இழக்காத அதிரடி சதம், அர்ஷ்தீப் சிங்கின் 3 விக்கெட் குவியல் என்பன இந்தியாவின் வெற்றியை இலகுபடுத்தின.

இந்த வெற்றியுடன் இருதரப்பு சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடர்களில் 7ஆவது தொடர்ச்சியான தடவையாக இந்தியா வெற்றிபெற்றுள்ளது. அத்துடன் கடந்த 11 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடர்களில் இந்தியா தோல்வி அடையாமல் இருக்கிறது.

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட தொடர்  2 – 2 என சமநிலையில் முடிவடைந்திருந்தது.

இந்தியாவில் முதல் தடவையாக சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடர் வெற்றியை ஈட்டவேண்டும் என்ற குறிக்கோளுடன் ராஜ்கொட்டில் களம் இறங்கிய இலங்கை சகலதுறைகளிலும் கோட்டைவிட்டு தொடரை பறிகொடுத்தது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இந்தியா, சூரியகுமார் யாதவ்வின் அபார சதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 228 ஓட்டங்களைக் குவித்தது.

தனது 45ஆவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் விளையாடிய சூரியகுமார் யாதவ் பெற்ற 3ஆவது சதம் இதுவாகும்.

போட்டியின் முதல் ஓவரிலேயே டில்ஷான் மதுஷன்கவின் பந்துவீச்சில் ஒரு ஓட்டத்துடன் இஷான் கிஷான் ஆட்டமிழந்தார் (4 – 1 விக்.).

அடுத்து ஜோடி சேர்ந்த ஷுப்மான் கில், ராகுல் திரிப்பதி ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 31 பந்துகளில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகம் ஊட்டினர்.

ராகுல் திரிப்பதி 16 பந்தகளை எதிர்கொண்டு 5 பவுண்டறிகள், 2 சக்ஸ்களுடன் 35 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

இதனைத் தொடர்ந்து ஷுப்மான் கில், சூரியகுமார் யாதவ் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 53 பந்துகளில் 111 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்திய அணியை பலப்படுத்தினர்.

ஷுப்மான் கில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகள் அடங்கலாக 46 ஓட்டங்களைக் குவித்தார்.

ஷுப்மான் கில், அணித் தலைவர் பாண்டியா (4), தீப்பக் ஹூடா (4) ஆகிய மூவரும் சீரான இடைவெளியில் ஆடுகளம் விட்டகன்றனர். (189 – 5 விக்.)

எனினும் சூரயகுமார் யாதவ், அக்சார் பட்டேல் ஆகிய இருவரும் மீண்டும் அதிரடியில் இறங்கி பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 20 பந்துகளில் 29 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 228 ஓட்டங்களாக உயர்த்தினர்.

சூரியகுமார் யாதவ் 51 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 9 சிக்ஸ்கள், 7 பவுண்டறிகள் உட்பட 112 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

அக்சார் பட்டேல் 9 பந்துகளில் 4 பவுண்டறிகள் அடங்கலாக 21 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காதிருந்தார்.

இலங்கை பந்துவீச்சில் டில்ஷான் மதுஷன்க 55 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக்  கைப்பற்றினார்.

229 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 16.4 சகல விக்கெட்களையும் இழந்து 137 ஓட்டங்களைப் பெற்று படுதோல்வி அடைந்தது.

இந்திய பந்துவீச்சாளர்களை முறையாக எதிர்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்ட இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் பெரும்பாலும் தவறான அடி தெரிவுகளினால் விக்கெட்களைத் தாரைவாரத்தனர்.

பெத்தும் நிஸ்ஸன்க (15), குசல் மெண்டிஸ் (23) ஆகிய இருவரும் 29 பந்துகளில் 44 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்த போதிலும் அதன் பின்னர் விக்கெட்கள் படபடவென சரிந்தன.

ஆரம்ப விரர்கள் உட்பட தனஞ்சய டி சில்வா (22), சரித் அசலன்க (19), தசுன் ஷானக்க (23) ஆகியோரைவிட வேறு எருவரும் இரட்டை இலக்க எண்ணிக்கையை எட்டவில்லை.

முதல் இரண்டு போட்டிகளில் இலங்கையின்  துடுப்பாடடம் சிறப்பாக அமைந்த போதிலும் இந்தப் போட்டியில் ஒட்டுமொத்தத்தில் தடுமாற்றம் நிறைந்ததாகவே அமைந்தது. பந்துவீச்சிலும் சரி துடுப்பாட்டத்திலும் சரி இந்தியாவுக்கு இலங்கையினால் ஈடுகொடுக்க முடியாமல் போனது.

இந்திய பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஹார்திக் பட்டேல், யுஸ்வேந்த்ரா சஹால் ஆகிய இருவரும் தலா 30 ஓட்டங்களுக்கு தலா 2 விக்கெட்களையும் உம்ரன் மாலிக் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆடடநாயகன்: சூரியகுமார் யாதவ், தொடர்நாயகன்: அக்சார் பட்டேல்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More