Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை பேராதனைத் தமிழ்த்துறையின் வரலாற்றுச் சாதனை

பேராதனைத் தமிழ்த்துறையின் வரலாற்றுச் சாதனை

4 minutes read

பதினொரு மணிநேரம் சிறப்புற நிகழ்ந்த 5ஆவது சர்வதேசத் தமிழியல் மாநாடு

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை ஏற்பாடு செய்த ஐந்தாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு இம்மாதம் 15 ஆம் திகதியன்று இணையவழியூடாக, காலை 9 மணிமுதல் இரவு 8 மணிவரை வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்வாண்டின் ஆரம்பத்தில் இம்மாநாட்டினை நேரடியாக நடத்தத் திட்டமிட்டிருந்த போதும் உலகளாவிய ரீதியில் பரவிய கொரோனா பெருந்தொற்றினால் இலங்கையும் அடிக்கடி பொதுமுடக்கங்களை எதிர்கொண்டு இயல்புவாழ்க்கை பாதிப்புற்ற நிலையில், தமிழியல் ஆய்வு மாநாட்டினை இணையவழியில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

”ஈழத்தில் தமிழ் நாடக இலக்கியம்” என்பதைப் பிரதான தொனிப்பொருளாகக் கொண்டமைந்த ஐந்தாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாட்டுக்காக ஆய்வுக்கட்டுரைகள் பொதுவெளியில் கோரப்பட்ட போது, ஒழுங்கமைப்புக் குழுவினருக்குக் கிடைத்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் புலமையாளர் குழுவினால் கவனமாகப் பரிசீலிக்கப்பட்டு தரத்தின் அடிப்படையில் 29 கட்டுரைகள் மட்டுமே ஏற்கப்பட்டு, மாநாட்டில் அவற்றை அளிக்கை செய்வதற்கான அனுமதி ஆய்வாளர்களுக்கு வழங்கப்பட்டது. ஐந்தாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வுமாநாட்டின் வெற்றிக்கு, அதில் அளிக்கை செய்யப்பட்ட ஆய்வுகளின் உயர் தரம் முக்கியமான பங்கை வகித்தது.

 திருமதி ஆன் யாழினி சதீஸ்வரன் வரவேற்புரை நிகழ்த்த, மாநாட்டினைத் ஆரம்பித்து வைத்த தமிழ்த்துறையின் தலைவர் பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன் தலைமையுரையை ஆற்றினார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான பேராசிரியர் எம். டி. லமாவன்ச மற்றும் கலைப்பீடத்தின் பீடாதிபதியான கலாநிதி ஈ. எம். பி. சி. எஸ். ஏக்கநாயக்க ஆகியோர் முறையே பிரதம அதிதி, சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்டு உரையாற்றியதோடு, தமிழ்த்துறையின் இச்சிறப்பான முன்னெடுப்பினை வாழ்த்தி மகிழ்ந்தனர். அத்தொடக்க நிகழ்வில் இடம்பெற்ற ஆதார சுருதி உரையினை ஈழத்தின் நாடகவியல் புலமையாளரும் பேராசிரியருமான சி. மௌனகுரு நிகழ்த்தியிருந்தமை வெகு பொருத்தமான ஆரம்பமாகவும் சிறப்பானதாகவும் அமைந்தது. தொடக்க நிகழ்வின் இறுதியில் மாநாட்டின் இணை ஒருங்கிணைப்பாளரான கலாநிதி செல்லத்துரை சுதர்சன் நன்றியுரையை நிகழ்த்தினார்.

பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையானது, ஈழத்து தமிழ் நாடகத்துறைக்கு அரும்பணியாற்றிய பெருந்தகைகளை மதிப்புடன் நினைவுகூர்ந்து, அவர்களின் பெயர்களை தனது தமிழியல் ஆய்வு மாநாட்டின் அரங்குகளுக்குச் சூட்டியமை பலராலும் குறிப்பிட்டு பாராட்டப்பட்டது. சுவாமி விபுலானந்த அடிகள் அரங்கு, வண. கிங்ஸ்பரி தேசிகர் அரங்கு, பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை அரங்கு, பேராசிரியர் சு. வித்தியானந்தன் அரங்கு, பேராசிரியர் கா. சிவத்தம்பி அரங்கு, வித்துவான் க. சொக்கலிங்கம் அரங்கு என அமைந்த அவ் ஆய்வு அரங்குகளில், அரங்கத் தலைமையேற்ற தமிழ்நாட்டு நாடக ஆளுமைகளான திரு. ‘வெளி’ ரங்கராஜன், திரு.  அம்ஷன்குமார், திருமதி ப்ரசன்னா ராமசாமி, திரு. பிரளயன், முனைவர் கி. பார்த்திபராஜா, முனைவர் ஆர். ராஜு முதலானோரின் சிறப்புமிக்க ஆய்வரங்கத் தொடக்கவுரைகள் மாநாட்டின் புலமைத்தரத்தை மேலும் உயர்த்தியமை அவதானிக்கப்பட்டது.

தமிழியல் ஆய்வு மாநாட்டின் ஆறு அமர்வுகளிலும் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு அளிக்கைகள் மீது மதிப்பீட்டாளர்களால் விமர்சனக் கருத்துரைகள் ஆற்றப்பட்டமை சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும். பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் முன்னாள் தலைவர்களான பேராசிரியர் எம். ஏ. நுஃமான், பேராசிரியர் துரை. மனோகரன், பேராசிரியர் வ. மகேஸ்வரன் ஆகியோரும் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவரும் தற்போது சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி சோதிமலர் இரவீந்திரன், கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி சி. ஜெயசங்கர், தஞ்சாவூர் – தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் அயலகத் தமிழ்க்கல்வித்துறையின் தலைவர் பேராசிரியர் இரா. குறிஞ்சிவேந்தன் ஆகியோரும் மாநாட்டு அரங்குகளுக்கான மதிப்பீட்டாளர்களாகப் பணியாற்றினர்.

ஐந்தாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாட்டின் அமர்வுகள் இணையவழியில், காலை 10.30 க்கு ஆரம்பித்து எவ்வித இடையூறுமின்றி தொடர்ச்சியாக நடைபெற்று மாலை 7 மணியளவில் பல்கலைக்கழக கீதத்துடன் இனிதே நிறைவு பெற்றன. எட்டு மணித்தியாலங்களுக்கும் அதிகமாக இடம்பெற்ற அமர்வுகளில் உலகின் பல பாகங்களிலும் இருந்து அறிஞர்கள், ஆய்வாளர்கள், மாநாட்டின் ஆய்வுப்பொருளில் ஆர்வமுடைய ஆர்வலர்கள், மாணவர்கள் என பெருந்தொகையானோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

மேலும், இம்மாநாடு அதன் சிறப்பான ஒழுங்கமைப்புக்காகவும் பாராட்டுதல்களை பலதரப்பிலிருந்தும் பெற்றுக் கொண்டது. மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்களினதும் துறைத் தலைவரினதும் வழிகாட்டலில் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் விரிவுரையாளர்களான சைவப்புலவர் ஏ. அனுசாந்தன், திருமதி கே. கே. எஃப். நதா, செல்வி ச. மனோஜா, செல்வி கு. கோபிகா, திரு. வி. விமலாதித்தன், செல்வி பொ. மருதூரிணி, செல்வி ஜெலானி ஆகியோரின் கடுமையான உழைப்பும் அர்ப்பணிப்பும், ’அண்மைக்காலத்தின் தமிழியல் ஆய்வுக்காக இப்படியான தரம் மிக்க மாநாடு இடம்பெறவில்லை’ என்ற நற்பெயரை பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைக்கு கிடைக்கச் செய்துள்ளமை குறிப்பிடத் தக்கது.சுமார் பன்னிரண்டு மணிநேரம் தங்குதடையின்றிச் சிறப்புற நிகழ்ந்த இந்த 5ஆவது சர்வதேசத் தமிழியல் மாநாடு இலங்கைத் தமிழியல் வரலாற்றில் முத்திரை பதித்த ஒன்றாகும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More