September 25, 2023 5:53 am

புதிய பிரிக்ஸ் நாணயம் உருவாக சாத்தியமா? | ஐங்கரன் விக்கினேஸ்வரா

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஐங்கரன் விக்கினேஸ்வரா

பிரிக்ஸ் (BRICS ) புதிய கரன்சியை வெளியிடுவது குறித்து 44 நாடுகள் ஆதரவு என்று தகவல்கள் தற்போது தெரிவிக்கின்றன. அமெரிக்க டொலருக்கு பதிலாக புதிய பிரிக்ஸ் நாணயத்தை (BRICS Currency) வெளியிடப்போவதாக ரஷ்யா நீண்ட காலமாக அறிவித்துள்ளது.

பிரிக்ஸ் கூட்டமைப்பின் 15-ஆவது மாநாடு தென்னாப்பிரிக்காவில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. பிரேஸில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளைக் கொண்ட ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மாநாடு ஜோகன்னஸ்பா்கில் செவ்வாய்க்கிழமை தொடங்கி 24-ஆம் தேதி வரை நடைபெற்றது.

தென்னாபிரிக்க பிரிக்ஸ் உச்சி மாநாடு சந்திப்பில் ரஷ்ய நாடு டாலருக்கு எதிரான போக்கை வலுப்படுத்தும் என்பது உறுதி. 44 நாடுகள் எதிர்கால BRICS நாணயத்தைப் பயன்படுத்தும் என்று ரஷ்யா நம்புகிறது. ஆயினும் இந்த பிரிக்ஸ் (BRICS summit) நாடுகளின் தென்னாப்பிரிக்க உச்சி மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிக்ஸ் தொடர்ந்து வலுப்பெறுமா ?

பிரிக்ஸ் நாடுகள் 2009லிருந்து உச்சி மாநாடுகளை நடத்தி வருகின்றன. பத்தாவது உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவில் ஜீலை 2018ல் நடைபெற்றது. உள்ளக வளர்ச்சி, வாணிகப் பிரச்சனைகள், உலகளாவிய அரசு நிர்வாகம், பகிரத்தக்க வளமை, நாடுகளின் அமைதி மற்றும் பாதுகாப்பு ஆகியவையே இந்த உச்சிமாநாட்டின் விவாதத் தலைப்புகள் ஆகும்.

பிரிக்ஸ் – BRICS நாடுகள் உலக மொத்த தேசிய உற்பத்தியில் 21 சதவீதம் பெற்றுள்ளன. கடந்த 15 ஆண்டுகளில் உலக GDPல் தனது பங்கினை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. உலக மக்கள் தொகையில் பிரிக்ஸ் நாடுகள் 43 சதவீதத்தை இருப்பிடமாக கொண்டுள்ளது.

தென்னாபிரிக்காவில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் அமெரிக்க டாலரை முறியடிக்க பிரிக்ஸ் நாணயம் அறிமுகப்படுத்த 44 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆயினும் இந்திய – சீனாவின் பொருளாதார வகிபாகம் மிக வலுமிக்க உறுதியாகவும் இருப்பதால், ரஷ்யாவின் வேண்டுதலுக்கு ஏற்ப, அமெரிக்க டாலருக்கு நிகரான நாணயத்தை அறிமுகம் செய்யும் சாத்தியக் கூறுகள் மிக அரிதாகவே காணப்படுகின்றன

பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு:

இந்த மாநாட்டின்போது பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் இடையிலான நேரடி சந்திப்பு நடைபெற்றது. பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் தலைவா்களுக்கு தென்னாப்பிரிக்க அதிபா் சிரில் ராமபோசா வழங்கிய இரவு விருந்திலும் பிரதமா் மோடி கலந்து கொண்டாா்.
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமா் நரேந்திர மோடியும், சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் நேரடியாக சந்தித்துப் பேசினர். சாமா்கண்டில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிலும், பாலி ஜி20 மாநாட்டிலும் இருவரும் நேருக்கு நோ் சந்தித்தனா் என்றாலும், அதில் பேச்சுவாா்த்தை இடம்பெறவில்லை.

ஜோகன்னஸ்பா்க் நகரில் நேரடியாக சந்தித்துப் பேசி, 2020 கல்வான் தாக்குதலுக்குப் பிறகு இரு தலைவா்களும் சந்திக்கும் நிகழ்வாக இது இருக்கிறது. இந்த மாநாட்டுக்கு இடையே சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, பிரதமர் மோடி சந்தித்து பேசி, எல்லை பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகருக்கு சென்ற வேளையில் அங்கு உள்ள வாட்டர்க்ளூஃப் விமானப் படை தளத்தில் தரையிறங்கிய மோடிக்கு அரசு மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்க துணை அதிபர் பால் ஷிபோகோசா மஷாடைல் அவரை வரவேற்றார்.

இந்தியாவின் எதிர்கால ஒத்துழைப்பு:

ஜோகன்னஸ்பர்க்கில் பிரிக்ஸ் வர்த்தக அமைப்பின் தலைவர்கள் பங்கேற்ற கலந்துரையாடல், பிரிக்ஸ் தலைவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். பிரிக்ஸ் அமைப்பை விரிவுபடுத்தி, ஈரான், வங்கதேசம் ஆகிய நாடுகளையும் உறுப்பினர்களாக சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தென்னாப்பிரிக்க பயணத்துக்கு முன்பு, செய்தியாளர்களிடம் பிரதமர் மோடி கூறுகையில், எதிர்காலத்தில் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டிய துறைகள் மற்றும் அமைப்பு சார்ந்த வளர்ச்சியை மறுஆய்வு செய்ய பிரிக்ஸ் உச்சி மாநாடு பயனுள்ள வாய்ப்பை வழங்கும். வளர்ச்சியின் தேவைகள், பன்முகஅமைப்புகளின் சீர்திருத்தம் உட்படதெற்கத்திய நாடுகள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து ஆலோசிப்பதற்கான தளமாக பிரிக்ஸ் அமைப்பை நாங்கள் கருதுகிறோம்.
இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுடன் கலந்துரையாட ஆவலாக உள்ளேன்.

மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெறும் பிரிக்ஸ் – ஆபிரிக்கா மக்கள் தொடர்பு மற்றும் பிரிக்ஸ் பிளஸ் உரையாடல் நிகழ்விலும் பங்கேற்கிறேன். பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கும் பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாட உள்ளேன். ஜோகன்னஸ்பர்க்கில் சில தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதையும் எதிர்நோக்கியுள்ளேன் என மோடி தெரிவித்தார்.

இம்மாநாட்டில் முதல் நிகழ்வாக பிரிக்ஸ் தொழில் துறை குழுமத் தலைவா்களுடனான கருத்தரங்கு நடைபெற்றது. தற்போது பல்வேறு துறைகளில் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு வலுவடைந்துள்ளது. தெற்குலகின் பிரச்னைகளை விவாதிக்கும் முக்கியத் தளமாக பிரிக்ஸ் மாறியுள்ளது. தெற்குலக நாடுகளின் வளா்ச்சி, பன்னாட்டு அமைப்புகளின் சீா்திருத்தங்கள் உள்ளிட்டவை குறித்தும் பிரிக்ஸ் மாநாடுகளில் விவாதிக்கப்பட்டது.

புதிய நாடுகள் இணைவு:

பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு இடையே எதிா்காலத்தில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளை ஆராய்வதற்கு ஜோகன்னஸ்பா்க் மாநாடு வலிகோலியது. பிரிக்ஸ் கூட்டமைப்பில் சீா்திருத்தங்களைப் புகுத்துவது தொடா்பாகவும் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

பிரிக்ஸ் கூட்டமைப்பில் மேலும் பல நாடுகளை இணைத்துக் கொள்வதாக இந்த மாநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆா்ஜென்டீனா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஈரான், கியூபா, எத்தியோப்பியா, துருக்கி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது

உலக வங்கி மற்றும் அனைத்துலக நாணய நிதியம் ஆகியவற்றின் செல்வாக்கிற்கு நிகரான செல்வாக்கு கொண்ட அபிவிருத்தி வங்கி ஒன்றை உருவாக்குவது உட்பட முக்கியமான பல விஷயங்களைப் பற்றி கலந்துரையாடுவதற்காக பொருளாதார வளர்ச்சி அடைந்துவரும் நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்‌ஷ் தென்னாப்பிரிக்காவில் கூடின.

வேகமாக வளர்ந்துவரும் நாடுகளின் முதல் எழுத்துக்களைக் கொண்டு குறிப்பிடப்படும் சுருக்கப்பெயர் பிரிக்ஸ் (BRICS) பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகியவையே அந்த ஐந்து விரைவாக வளர்ந்து வரும் நாடுகள்.

பிரிக்ஸ் நாடுகள் இணைந்து சுமார்
$4.4. டிரில்லியன் அன்னிய இருப்பை பெற்றுள்ளது. சீனாவின் ஷாங்காய் நகரில் பிரிக்ஸின் தலைமை அலுவலகம் செயல்படுகிறது. இதன் உறுப்பினர் நாட்டு அரசாங்கங்கள் ஒன்று சேர்ந்து பிரிக்ஸ் மேம்பாட்டு வங்கி என்ற வங்கியை தொடங்கியுள்ளார்கள். இதற்கு புதிய மேம்பாட்டு வங்கி (The New Development Bank) என்ற பெயரும் உண்டு.

டாலரை முறியடிக்க BRICS நாணயம்:

தென்னாப்பிரிக்காவில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் அமெரிக்க டாலரை முறியடிக்க பிரிக்ஸ் நாணயம் அறிமுகப்படுத்த 44 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆயினும் இந்திய – சீனாவின் பொருளாதார வகிபாகம் மிக வலுமிக்க உறுதியாகவும் இருப்பதால், ரஷ்யாவின் வேண்டுதலுக்கு ஏற்ப, அமெரிக்க டாலருக்கு நிகரான நாணயத்தை அறிமுகம் செய்யும் சாத்தியக் கூறுகள் அரிதாகவே காணப்படுகின்றன.

-ஐங்கரன் விக்கினேஸ்வரா

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்