Sunday, May 5, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை ஈழ விடுதலைக்காகவும் குருதி சிந்திய மலையகம் | கி. அலெக்ஷன்

ஈழ விடுதலைக்காகவும் குருதி சிந்திய மலையகம் | கி. அலெக்ஷன்

3 minutes read

வடக்கு கிழக்கிற்கும் மலையகத்திற்குமான உறவு மிக நீண்டகாலமாக தொடர்கின்ற ஒன்று. 30வருட கால உள்நாட்டு விடுதலைப்போரிற்கு முன்பிருந்து அரசியல் ரீதியாக விளங்கி வந்த மலையகத்திற்கும் வடக்கு கிழக்கு தமிழர்களுக்குமான உறவு ஆயுதப்போரின் போது களத்தில் மலையகத்தமிழர்களும் பங்கெடுப்பதாக அமைந்தது.  இலங்கைப் பொருளதார மேம்பாட்டிற்காக குருதி சந்திய மலையக மக்கள் ஈழ விடுதலையிலும் தம் குருதியைச் சிந்தினர். அத்துடன் இலங்கைத் தமிழ் அரசியலின் துவக்கத்திலும் மலையகத்தின் பங்களிப்பிருந்தது வரலாறு. இருநூறு ஆண்டு கடந்த பின்பும் அந்த மக்களின் வாழ்வு இன்னமும் போராட்டம் நிறைந்ததாக இருப்பதே கசப்பான உண்மையாகும்.

யாழ் பல்கலையில் மலையகத்தியாகிகள் தினம்

அழகிய மலையக உருவாக்கத்திலும் ஈழப்போரிலும் தம் இன்னுயிர் ஈந்தவர்களை நினைவுகூறுகின்ற மலையக தியாகிகள் தினம் அண்மையில் யாழ்பல்கலையில் இடம்பெற்றது. யாழ் பல்கலைக்கழக அனைத்துப் பீட மாணவர்களும் திரண்டு மலையக தியாகிகளை நினைவுகூர்ந்த அந்த நிகழ்வு முக்கியமான திருப்பமாகவும் விழிப்புணர்வாகவும் நம்பிக்கையைத் தருகிறது.

யாழ் பல்பலைக்ககத்தில் கல்வி கற்கும் மலையக மாணவி ஒருவர் கூறுகின்றபோது “மலையகத்தியாகிகள் என்னும்போது இங்கே நாம் சிலரையே ஞாபகம் கொள்கின்றோம். ஆனால் தலைமன்னாரிலிருந்து நடைபவனியாக கொண்டுசெல்லப்பட்டு இப்போதுள்ள மலையகம் என்னும் அழகிய கட்டமைப்பை உருவாக்கும் வரை இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் மக்கள் மாண்டுள்ளனர் அவர்களும் மலையகத்தியாகளே…!!” என்று அழுத்தமாக எடுத்துரைத்தார்.

அத்துடன் “1818 இல் இருந்து இன்று வரை தொழிற்பாதுகாப்பு இன்றி மூன்று இலட்சம் பேர் இறந்திருக்கிறார்கள். இலங்கையில் தொழிற்பாதுகாப்பு இல்லாமல் ஒரு இனம் சாகிறது என்றால் அது மலையக மக்கள் தான்…  ஈழப்போராட்டத்தோடு ஒப்பிடும் போது 2009 இற்கு பின்புதான் மலையகவிவகாரம் பேசுபொருளாகியுள்ளது. ஈழப்போராட்டம் எனவரும்போது 1950இற்கு பின்பு வன்னியில் குடியேறிய மலையக மக்களில் எத்தனையோ மாவீரர்கள் இறுதி முள்ளிவாய்க்கால் வரை நின்று களமாடி மாவீரர்களாயுள்ளனர். அவர்களும் மலையக தியாகிகளே என்றும் அந்த மாணவி பேசியது அனைவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தது.

மலையகம் 200

மலையகம் 200 நிகழ்வுகள் பல இடங்களிலும் நடாத்தப்படுகின்றன. மலையகம்,கொழும்பு யாழ்ப்பாணம் என்பவற்றிற்கு அப்பால் இந்தியாவிலும் புலம்பெயர் நாடுகளிலும் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன. குறிப்பாக வடக்கு கிழக்கு வாழ் தமிழர்கள் மலையகத்தமிழர்களது விடிவிற்காக களத்தில் களமாடுகின்றனர். சிறகுகள் அமைப்பு யாழ்பல்கலைக்கழக மலையக மாணவ ஒன்றியத்துடன் இணைந்து செயற்படுத்திய நிகழ்வு,கிராமிய உழைப்பாளர் சங்கம் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நிகழ்த்திய நிகழ்வு, இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம் நிகழ்த்திய கண்காட்சி நிகழ்வு,தேயிலைச்சாயம் என்னும் தலைப்பில் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் ஏற்பாடு செய்த புகைப்படக் கண்காட்சி நிகழ்வு, யாழ் சிதம்பரநாதனின் பண்பாட்டு மறுமலர்ச்சிக்கூடம் நடாத்திய நிகழ்வு என‌யாவும் மலையக விடிவுக்காக வடக்கு கிழக்கு தமிழர்களது அர்ப்பணிப்புக்களை காட்டுகிறது.

ஈழவிடுதலையில் மலையகம்

தமிழீழ விடுதலைப்போரில் தமிழீழ விடுதலைப்போரில் தமிழீழ விடுதலைப்புலிகள் உள்ளிட்ட அனைத்து இயக்கங்களிலும் மலையக வீரர்கள் இணைந்துகொண்டார்கள். ஈழ விடுதலை அமைப்புக்களில் இடதுசாரி அரசியலை முன்னெடுத்த ஈபிஆர்எல்எப் மற்றும் ஈரோஸ் ஆகிய அமைப்புக்களில் மலையக இளைஞர்கள் அதிகளவில் இணைந்து களமாடினர். மலையக தமிழர்களை வடக்கு கிழக்கு பகுதிகளெங்கும் குடியேற்றியது PLOT அமைப்பு. இதனாலேயே வவுனியா நகரத்தை சிங்களமயமாக்கலில் இருந்து பாதுகாத்தவர்கள் மலையகமக்கள் எனக்கூறப்படுகிறது.

விடுதலைப்புலிகளது காலத்தில் வடக்கு கிழக்கு குறிப்பாக வவுனியா,முல்லைத்தீவு,கிளிநொச்சி மாவட்டங்களில் குடியேறிய மலையக வம்சாவழியினர் பலர் ஆயுதப்போரில் இணைந்து மாவீரர்களாயுள்ளனர். கப்டன் பூங்குயில்,மேஜர் சந்திரன்,மேஜர் நவம்,மேஜர் ஆதித்தன்,மேஜர் வலம்புரி,மேஜர் வித்தி, மேஜர் தங்கம்,கப்டன் ஆர்வலன் என்போர் அதில் முக்கியமானவர்கள். நவம் என்ற பெயரில் “நவம் அறிவுக்கூடம்” என காயமுற்ற போராளிகளுக்கான அறிவுக்கூடம் ஒன்றை புலிகள் நடத்தியிருந்தனர். மேஜர் சந்திரன் பெயரில் சந்திரன் பூங்கா ஒன்று கிளிநொச்சியில் நிறுவப்பட்டிருந்தது. கப்டன் பூங்குயிலின் நினைவுக்கல் புதுக்குடியிருப்பில் நிறுவப்பட்டிருந்தது. தளபதி பால்ராஜ் உட்பட 6200 மலையக வம்சாவழியினர் மாவீரர்களாகியுள்ளனர்.

வடக்கு கிழக்கு-மலையக உறவின் அவசியம்

ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் தமது அக ஆற்றலை மாத்திரம் வைத்துக்கொண்டு ஒடுக்குகின்ற பெரும்பான்மைக்கு எதிராக குரல் எழுப்பிட இயலாது. வரலாறும் இதற்கு பல உதாரணங்களை தந்துவிட்டுச்சென்றுள்ளது. இன ரீதியாகவும் வர்க்க ரீதியாகவும் ஒடுக்கப்படுகின்ற வெட்டவெளிச்சிறையாக உள்ள மலையகத்திற்கு வடக்கு கிழக்கு வாழ் தமிழர்களது ஆதரவு அதிமுக்கியமானது அதேபோலத்தான் வடக்கு கிழக்கு வாழ் தமிழர்க்கு மலையக மக்கள் .

ஓர் எல்லைக்கு அப்பால் தமது அரசியலை முன்னெடுக்க முடியாதுளள்ள மலையக மக்களினையும் மற்றும் வடக்கு கிழக்கு வாழ் தமிழர்களையும் இணைக்கின்ற செயற்பாடுகளிற்கு பல தடைகள் காணப்படினும் அவற்றை தகர்ப்பது முன்னேற்றகரமான தீர்விற்கு அத்தியாவசியமானது.

வடக்கு கிழக்கு மலையக தமிழர் ஒருங்கிணைவு இலங்கை அரசிற்கு அரசியல் நெருக்கடிகளை உண்டுபண்ணும். பிராந்திய அரசியல் என்னும் வகையில் பிராந்திய வல்லரசு இந்தியாவிற்கு தமது அரசியல் முன்னெடுப்புக்களை முன்னெடுக்க இவ் இணைவு தடையேற்படுத்தும். ‌இலங்கையில் நீண்ட காலமாகப் பிறையோடிப்போயிருந்த சிங்கள இனவாத அரசியலும் தமிழர்களது ஒருங்கிணைவால் ஆட்டம் காணும். ஆகவே எந்தவோர் காரணத்திற்காகவும் மலையகத்தமிழர்‌களையும் வடக்கு கிழக்கு தமிழர்களையும் ஒருங்கிணைந்திட இலங்கை அரசும் சர்வதேசமும் அனுமதிப்பதில்லை என்பது தெளிபு.

ஆயினும் மலையகம் எழுச்சியடைந்து வருகின்றது. கல்வியிலும் அரசியலிலும் மலையக எழுச்சி இன்னும் அதிகமாக வேண்டும். ஒடுக்கப்படுகின்ற தேசிய இனம் அரசின் பங்காளியாகவின்றி அதனால் தனித்தே வளர்ந்துவிட இயலாது என்பது அறிந்தது. மலையகத்தில் அந்த அரசியல் சூழலே அதிகம் நிலவுகிறது.  வடக்கு கிழக்குவாழ் தமிழர்களது அரசியற்கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதைப் போன்று,  மலையகத்தமிழர்களது அரசியல் உரிமைக்கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அதற்காக வடக்கு கிழக்கு குரல் கொடுப்பது கடமையும் உரிமையுமாகும்.

கி. அலெக்ஷன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More