செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை அக்னெஸ் கலமார்டின் பயணம் : தமிழர்களுக்கு நீதியை பெற்றுத் தருமா!

அக்னெஸ் கலமார்டின் பயணம் : தமிழர்களுக்கு நீதியை பெற்றுத் தருமா!

5 minutes read

சிறிலங்கா அரசு முன்னெடுத்த யுத்தம், மனித குலத்திற்கு விரோதமானது. ஈழத் தமிழ் மக்கள் முகம் கொடுத்த இனவழிப்புப் போர், வார்த்தைகளினால் வருணித்துத் தீராதது. உலகில் குழந்தைகளுக்கு எதிராக மிகப் பெரிய அழிவுப் போரை சிறிலங்கா அரசு செய்திருக்கிறது.

நம்மில் பலரும் கூட அது குறித்து சிந்திக்காமல் இருக்கின்றோம். ஈழ இறுதிப் போரில் கொல்லப்பட்ட குழந்தைகளின் பட்டியலை தேடினால் பெருத்த அதிர்ச்சி இருக்கும். ஈழ இறுதிப் போரில் அங்கவீனமாக்கப்பட்ட குழந்தைகளைத் தேடினால் பெருத்த அதிர்ச்சி இருக்கும்.

அத்தோடு சிறிலங்கா அரச படைகளால் காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகள் குறித்த விபரங்களை தேடினாலும் பெரும் அதிர்ச்சி ஏற்படும். அண்மையில்  இலங்கை வந்த சர்வதேச மன்னிப்புச் சபையின் தலைவர் அக்னெஸ் கலமார்ட் (Agnes Callamard) அந்தக் குழந்தைகளுக்காயும் குரல் கொடுத்துள்ளார்.

முழந்தாளிட்டு அஞ்சலித்த அக்னெஸ் கலமார்ட்

அண்மையில் சர்வதேச மன்னிப்புச் சபையின் தலைவர் அக்னெஸ் கலமார்ட்  இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இதன்போது, அவர் தமிழர் தாயகத்திற்கும் வருகை தந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கெடுத்ததுடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் மாவட்ட ரீதியாக சந்திப்புக்களை மேற்கொண்டார்.

அக்னெஸ் கலமார்டின் பயணம் : தமிழர்களுக்கு நீதியை பெற்றுத் தருமா! | Agnes Calamard S Journey Bring Justice To Tamils

 

அத்துடன் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry )அவர்களை சந்தித்ததுடன் போராட்ட அமைப்புக்கள் சார்ந்த பிரதிநிதிகளையும் சிறிலங்காவின் அதிகாரிகளையும் சந்தித்துள்ளார்.

ஈழத் தமிழ் மக்கள் 2009ஆம் ஆண்டு சந்தித்த மிகப் பெரும் இனப்படுகொலைப் போரின் 15ஆவது ஆண்டு நினைவுநாள் அண்மையில் கடைப்பிடிக்கப்பட்ட நிலையில் அக்னெஸ் கலமார்ட் அம்மையார் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கெடுத்தமை இந்த ஆண்டு கவனத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு உரிய நேரத்திற்கு வருகை தந்திருந்த அக்னெஸ் கலமார்ட் அவர்கள், அங்கு பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து முழந்தாளிட்டு கொல்லப்பட்ட மக்களுக்காக அஞ்சலி செலுத்தினார்.

போர் இடம்பெற்ற சமயத்திலும் சரி, அதற்குப் பிந்தைய காலத்திலும சரி, போர் மற்றும் தொடர் இன அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக சர்வதேச மன்னிப்புச் சபை தொடர்ந்து குரல் கொடுத்து வந்திருக்கிறது.அந்த அமைப்பின் தலைவர் அக்னெஸ் கலமார்ட் இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களின் குரலை கேட்டதுடன், கொல்லப்பட்டவர்களுக்காக மக்களுடன் இணைந்து அஞ்சலி செலுத்தியமை மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியிருந்தது.

தமிழருக்கான நீதி தோல்வி

போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி வழங்கும் செயற்பாட்டில் பன்னாட்டுச் சமூகமும் சிறிலங்கா அரசும் கூட்டுத் தோல்வி அடைந்துள்ளதாக அக்னெஸ் கலமார்ட் குற்றம் சுமத்தியிருந்தார்.

அத்துடன் நீதி வழங்கலில் சிறிலங்கா அரசு மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வருகின்றது என்றும் அழுத்தம் திருத்தமாக உண்மையை எடுத்துரைத்தார். போர் முடிவடைந்து 15 வருடங்கள் பூர்த்தியாகும் ஆண்டு என்பதால், நீதியை நிலைநாட்டுவதில் சர்வதேச மன்னிப்புச்சபையின் வகிபாகத்தை அறிந்துகொள்ளும் நோக்கில் இலங்கைக்கு வருகைதந்துள்ளதாக அவர் கூறியிருந்தார்.

அக்னெஸ் கலமார்டின் பயணம் : தமிழர்களுக்கு நீதியை பெற்றுத் தருமா! | Agnes Calamard S Journey Bring Justice To Tamils

இதன்போது, அதிபர், வெளிவிவகார அமைச்சர், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், சிவில் சமூகப்பிரதிநிதிகள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள், ஆர்ப்பாட்டக்காரர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனும் சந்திப்புக்களை நடத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விலும் பங்கேற்றமை பற்றி பேசிய அவர், நீதியைக்கோரி தொடர் போராட்டங்களை நடத்திவரும் அம்மக்களின் உத்வேகம் மற்றும் மீண்டெழும் தன்மை ஆகியவற்றைக்கண்டு தாம் மிகுந்த ஆச்சரியமடைவதாகவும் கூறினார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் பல்வேறு சந்திப்புக்களை நடடத்திய அக்னெஸ் கலமார்ட் சுமார் 60,000 க்கும் மேற்பட்டோர் வலிந்து காணாமலாக்கப்பட்டிருப்பதாகவும் ‘அவர்களுக்கு என்ன நடந்தது’ என்ற கேள்வியை ஒட்டுமொத்த இலங்கையும் கேட்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் காணாமலாக்குதல் என்பது மிகமோசமான, மிகக்கொடூரமான குற்றம் என்றுரைத்த அவர், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் சில வருடங்களோ அல்லது பல வருடங்களோ அல்லது பல தசாப்தங்களோ ஆறாத காயங்களுடன் வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகள்

இதேவேளை, முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் போது விடுதலைப் புலிகள் சரணடைந்த வேளையில் பல குழந்தைகளும் சரணடைந்தார்கள். கிட்டத்தட்ட எழுபது குழந்தைகள் இவ்வாறு சரணடைந்ததாக சொல்லப்படுகின்றது. அவர்கள் குறித்து சிறிலங்கா அரசு இதுவரை எந்தப் பதிலும் சொல்லாமல் மௌனமாகவும் கள்ளமாகவும் இருந்து வருகின்றது.

இந்த நிலையில்,  இலங்கை வந்திருந்த அக்னெஸ் கலமார்ட், அந்தக் குழந்தைகள் எங்கே என்று கேள்வி எழுப்பியுள்ளார். இறுதி போரின் போது படையினரிடம் சரணடைந்தவர்கள் கூட காணாமல் போயிருக்கிறார்கள்.

அக்னெஸ் கலமார்டின் பயணம் : தமிழர்களுக்கு நீதியை பெற்றுத் தருமா! | Agnes Calamard S Journey Bring Justice To Tamils

 

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் குடும்பமாக சரணடைந்தார்கள். அக்குடும்பங்களில் குழந்தைகளும் இருந்தார்கள். நான் அந்தக் குழந்தைகளின் புகைப்படங்களைப் பார்த்தேன். அந்தக் குழந்தைகள் எங்கே என்று அம்மையார் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த காலத்தில் சிறிலங்கா அரசு அமைத்த ஆணைக்குழுக்களின் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னிலையாகி காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து சாட்சியங்களை அளித்திருந்தார்கள்.

சர்வதேச அழுத்தங்களை சமாளிக்க சிறிலங்கா அரசு இத்தகைய ஆணைக்குழுக்களை அமைத்து, அங்கு மக்கள் வந்து வாக்குமூலங்களை வழங்க பல தடைகள் அச்சுறுத்தல்களை ஏற்படுத்திய போதும் கூட, மக்கள் திரண்டு போரில் நடந்த அநீதிகள் குறித்து வாக்குமூலங்களை அளித்தனர்.

இந்த நிலையில் அந்த ஆணைக்குழுக்கள் குறித்து கருத்து கூறியுள்ள அக்னெஸ் கலமார்ட், அரசாங்கம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்த போதும், கடந்த 15 வருடகாலமாக இவ்வாறு உருவாக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் தோல்வியடைந்துள்ளது.

காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் போன்ற கட்டமைப்புக்கள் தோல்வி அடைந்திருப்பதாகவும், தீர்வை வழங்குவதற்கான அரசியல் தன்முனைப்பு அவற்றிடம் இல்லை என்றும் மக்கள் கூறுவதாகவும் குறிப்பிட்டார்.

சர்வதேச விசாரணை வேண்டும்

தமிழர்களுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ள அக்னெஸ் கலமார்ட், கடந்த கால மீறல்களை குறித்து ஆராய வெளிநாட்டு நீதிபதிகளுடன் கூடிய கலப்பு பொறிமுறை வரவேற்கத்தக்கது என்று கூறியிருக்கிறார். ஆனால் சிறிலங்கா அரசால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஏனெனில் கடந்த காலத்தில் நடந்த விசாரணைகள் யாவும் ஏமாற்று வித்தைகளாகவே உள்ளன.சிறிலங்கா  அரசு அமைத்த ஆணைக்குழுக்கள் தோல்வியடைந்துள்ளன என்று கூறும் அக்னெஸ் கலமார்ட், சர்வதேச விசாரணையை வலியுறுத்த வேண்டும் என்றுதான் மக்கள் கருதுகின்றனர்.

அக்னெஸ் கலமார்டின் பயணம் : தமிழர்களுக்கு நீதியை பெற்றுத் தருமா! | Agnes Calamard S Journey Bring Justice To Tamils

 

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்வதற்கான வாய்ப்பு மிகமிகக்குறைவு என்றும் உரோம் பிரகடனத்தில் கைச்சாத்திடுமாறு இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்கலாம் என்றும் அது ஒப்பீட்டளவில் சிறந்த மாற்றுத்திட்டமாக அமையும் என்றும் அக்னெஸ் கலமார்ட் அம்மையார் கூறியுள்ளார்.

எனினும் உண்மையோ, நீதியோ இறுதித்தீர்வை சர்வதேசத்தினால் வழங்க முடியாது என்றும் மாறாக அதற்கு அவசியமான நிதி, அரசியல் மற்றும் ஆலோசனைசார் உதவிகளை மாத்திரமே சர்வதேச சமூகத்தினால் வழங்க முடியும் என்றும் தீர்வு என்பது  இலங்கை மக்களுக்காக இலங்கையால் வழங்கப்படவேண்டும் என்றும் கூறியிருப்பதுதான், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மக்களுக்கு கடந்த கால அநீதிகள் தொடர்பில் சிறிலங்கா அரசு தீர்வை முன்வைக்கும் என்பதை அம்மையார் நம்புகிறாரா அப்படியெனில் அது அவரது பயணத்தின் தோல்வியான நம்பிக்கையாகவே இருக்கும்.

தீபச்செல்வன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More