Friday, May 17, 2024

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைசிறப்பு கட்டுரை மைசூரு முதல் – 81 போயஸ் கார்டன் வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள்! – அத்தியாயம் 5 | மு. நியாஸ் அகமதுமைசூரு முதல் – 81 போயஸ் கார்டன் வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள்! – அத்தியாயம் 5 | மு. நியாஸ் அகமது

மைசூரு முதல் – 81 போயஸ் கார்டன் வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள்! – அத்தியாயம் 5 | மு. நியாஸ் அகமதுமைசூரு முதல் – 81 போயஸ் கார்டன் வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள்! – அத்தியாயம் 5 | மு. நியாஸ் அகமது

3 minutes read

‘நம் திட்டங்கள் குறித்தெல்லாம் விதிக்கு எந்தக் கவலையும் இல்லை’ என்பான் சீனப் பழங்குடி. வைணவ பின்னணியிலிருந்து வந்த அம்முவுக்கு விதி மீது நம்பிக்கை இருந்ததா என்றெல்லாம் தெரியாது. ஆனால், அம்முவின் திட்டங்கள் குறித்து காலம் கிஞ்சித்தும் கவலைகொள்ளவில்லை. அது, அவரின் திட்டங்களுக்குச் சம்மந்தமே இல்லாத… சொல்லப்போனால் கொஞ்சமும் விருப்பமே இல்லாத ஒரு வாய்ப்புடன் காத்திருந்தது.  ஆம், அது சினிமா வாய்ப்புதான்!

ஏற்கெனவே கூறியதுபோல், திரைப்படத் துறை குறித்த விருப்பம் கடுகளவு ஆசைகூட அம்முவுக்கு இருந்ததில்லை. சந்தியாவுக்கும் அப்படித்தான். மருத்துவர் அல்லது இந்திய ஆட்சிப் பணியாளர் ஆக வேண்டும் என்பதுதான் அம்முவின் விருப்பம். நன்றாகப் படிக்கவும் செய்தார். இதுகுறித்து சந்தியாவே பின்பு ஒரு பேட்டியில் கூறியுள்ளார். “என் மகள் அம்மு – ஜெயலலிதா – திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று நான் முதலில் விரும்பவில்லை. சிறு குழந்தையாக இருக்கும்போதே அம்மு எதையும் எளிதில் புரிந்துகொள்ளும் திறமையைப் பெற்றிருந்தாள். படிப்பில் அம்மு கெட்டிக்காரி. வகுப்பில் அவள்தான் முதல் மாணவி. படித்துப் பட்டம்பெற வேண்டும் என்ற ஆர்வம் அம்முவுக்கு இருந்தது. அவள் விரும்பியவாறு நிறையப் படிக்கட்டும் என்றுதான் நானும் எண்ணினேன்.”

ஆனால், அந்த விருப்பம் இறுதிவரை நிகழாமலேயே போய்விட்டது. கொஞ்சம் உன்னிப்பாகப் பகுத்தாய்ந்தால், அதற்கு சந்தியாவும் ஒரு காரணம்தான். ஆம், அவர் மட்டும் கடுமையாக மறுத்திருந்தால்…. இன்று அம்மு அப்போலோவில் ஒரு மருத்துவராகக்கூட ஆகி இருந்திருக்கலாம்… இல்லையென்றால், தமிழகத்தின் தலைமை ஆலோசகராக இன்று ஷீலா பாலகிருஷ்ணன் இருக்கும் இடத்தில் அம்மு இருந்திருக்கலாம். யார் கண்டது…?  ஹூம்… வாழ்க்கை விசித்திரமானதுதான்!

சரி வாருங்கள். முதல் சினிமா வாய்ப்புக்கு முன்பு… அம்முவுக்கு நடிப்பு சம்பந்தமாக வந்த வேறு வாய்ப்புகளைப் பார்ப்போம்.

வில்லன் ‘சோ’…!

சந்தியா எப்போதாவது அம்முவைத் திரைப்படப் படப்பிடிப்புக்குச் அழைத்துச் செல்வது உண்டு. ஒரு முறை, எம்.ஜி.ஆர் நடித்த ஒரு படப்பிடிப்புக்கு அழைத்துச்சென்று இருக்கிறார். அப்போது, அம்முவுக்கு 10 வயதுக்குள்தான் இருக்கும். சுட்டியாக விளையாடிக்கொண்டிருந்த அம்முவைப் பார்த்து, எம்.ஜி.ஆர்., “உன் பெயர் என்னம்மா…?” என்று கேட்டுள்ளார். அதற்கு அம்மு, ஆங்கிலத்திலேயே சரளமாகப் பதில் கூறியுள்ளார். ‘‘ஏன் உனக்குத் தமிழ் தெரியாதா’’ என்று எம்.ஜி.ஆர் கேட்க, அதற்கும் அம்மு, ஆங்கிலத்திலேயே பதில் சொல்லி உள்ளார். சிரித்துக்கொண்டே எம்.ஜி.ஆர் அந்த இடத்தைக் கடந்திருக்கிறார். அவருக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லைதானே… இந்த அம்முவைத்தான், பின்னாளில் இதே ஆங்கிலப் புலமைக்காக ராஜ்ய சபா உறுப்பினராக, டெல்லிக்கு அனுப்பப்போகிறோம் என்று.

ஏன்…? இப்போது இந்தச் சம்பவம் என்றால்… இதே ஆங்கிலப் புலமைதான், அம்முவுக்கு நாடகத்தில் வாய்ப்புக் கிடைக்க காரணமாக அமைந்தது.

அப்போது, சென்னை சர்ச் பார்க் கான்வென்ட்டில் அம்மு படித்துக்கொண்டிருந்தார். ஒய்.ஜி.பார்த்தசாரதி,  ஆங்கில நாடகம் போடுவதற்கான வேலைகளில் இருந்தார். ஒரு பெண் கதாபாத்திரத்துக்கு மட்டும் ஆள் கிடைக்காமல் இருந்தது. எங்கெங்கெல்லாமோ தேடிப் பார்த்தார். அமையவே இல்லை. பின், நண்பர்கள் மூலமாக அம்மு குறித்து கேள்விப்பட்டு, சந்தியாவை அணுகுகிறார்கள். நாடகம் என்பதால் சந்தியாவும் சம்மதிக்கிறார்.  ஆங்கில மொழியை நன்கு அறிந்து சரளமாகப் பேசும் அம்முவுக்கு, அந்த நாடகத்தில் ஆங்கிலம் பேசத் தெரியாத பிரெஞ்சுப் பெண்ணின் வேடம் கிடைத்தது. இந்த நாடகத்தில் வில்லனாக நடித்தவர் சோ.

ஆங்கிலப் பட வாய்ப்பு!

இதே காலகட்டத்தில்தான் இந்திய ஜனாதிபதி வி.வி.கிரியின் மகன், சங்கர் கிரி தான் தயாரிக்கப்போகும் ஆங்கில ஆவணப் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஆங்கிலம் தெரிந்த ஒரு பெண்ணைத் தேடிக்கொண்டிருந்தார். இதுகுறித்து ஒய்.ஜி.பார்த்தசாரதியிடமும் சொல்ல… ஒய்.ஜி.பி சற்றும் யோசிக்காமல், அம்முவைப் பரிந்துரைத்து இருக்கிறார். சோ-வும் அம்முவின் நடிப்பை சங்கர் கிரியிடம் புகழ்ந்து கூறி, ‘‘உங்கள் ஆவணப் படத்தில் அம்மு சிறப்பாக நடிப்பாள்’’ என்று சொல்லி இருக்கிறார்.

சங்கர் சற்றும் தாமதிக்காமல், உடனே சந்தியாவைச் சந்தித்து, அம்முவை நடிக்கக் கேட்டு இருக்கிறார். ஆங்கிலப் பட வாய்ப்பு. அதுவும் ஜனாதிபதியின் மகன் தயாரிக்கும் படம். ஆக, சிறந்த வாய்ப்புதான்.

இருந்தாலும், அம்முவுக்குத் தயக்கம். “இல்லை… அம்மு சினிமாவில் நடிப்பதை நான் விரும்பவில்லை… அவளும் விரும்பமாட்டாள்…’’ என்று நாசூக்காக மறுக்க, சங்கர் விடுவதாக இல்லை. “படிப்புத்தான் முக்கியம். அது எனக்கும் புரிகிறது. உங்கள் மகளின் படிப்புக்கு இடையூறு ஏற்படாமல் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் படப்பிடிப்பை நடத்திக்கொள்கிறேன். நிச்சயம்… உங்கள் மகளுக்கும் இது ஒரு நல்ல பொழுதுபோக்காக இருக்கும்’’ என்று கேட்க, அரை மனதுடனே சம்மதிக்கிறார் சந்தியா.

‘எபிசில்’ (Epistle) படப்பிடிப்புத் தொடங்குகிறது.

கொஞ்சம் கொஞ்மாகத் திரைத்துறை, அம்மு வாழ்வை வியாபிக்கத் தொடங்கியது!

 

 

தொடரும்…

 

நன்றி : ஆனந்த விகடன்

 

முன்னைய பகுதி :

 

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-1-11-12-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-2-11-19-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-3-11-26-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-4-12-03-16/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More