Saturday, May 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைசிறப்பு கட்டுரை சமூக ஆரோக்கியத்துக்கு அவசியம் | இரா.கோசிமின்சமூக ஆரோக்கியத்துக்கு அவசியம் | இரா.கோசிமின்

சமூக ஆரோக்கியத்துக்கு அவசியம் | இரா.கோசிமின்சமூக ஆரோக்கியத்துக்கு அவசியம் | இரா.கோசிமின்

3 minutes read

உலகம் முழுவதும் ஜல்லிக்கட்டை கொண்டு செல்ல வேண்டும்

ஜல்லிக்கட்டு நடக்குமா? நடக்காதா? என ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், மாடு வளர்ப்போர் என அடித்தட்டு மக்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் வேளையில் அ.கி.தாசு எழுதிய ஜல்லிக்கட்டு அரசியல் என்ற சிறப்பான புத்தகம் மதுரையில் வெளியிடப்பட்டது.

தமிழர்களின் பாரம்பரியம் என்பதால் ஜல்லிக்கட்டை பாதுகாக்க வேண்டும் என பெரும்பாலானோர் கூறி வருகின்றனர். பாரம்பரியம் என்பதற்காக மட்டுமே தவறான விஷயங்களை எல்லாம் நாம் தொடர நினைப்பது தவறு. அதேபோல பாரம்பரியம் என்றாலே தவறானது தான் என்ற நவநாகரீகவாதிகளின் வாதங்களையும் ஏற்க முடியாது.

1960-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மிருகவதை சட்டத்துக்கு எதிராக ஜல்லிக்கட்டு இருப்பதால் அதனை தடை செய்ய வேண்டும் என ஜல்லிக்கட்டு எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். ஒரு மிருகத்தை பட்டினி போட கூடாது. காயங்கள் ஏற்படுத்த கூடாது. உடல்நலம் குன்றினால் பேணாமல் இருத்தல் கூடாது ஆகிய 3 முக்கிய அம்சங்கள் மிருகவதை சட்டத்தில் உள்ளன.

ஜல்லிக்கட்டை பொறுத்தவரையில் அதிக சத்தான உணவு வழங்கப்பட்டு அதிக அக்கறையோடு மாடுகள் பராமரிக்கப்படுகின்றன. காளையின் திமிலை அணைவது தான் ஜல்லிக்கட்டு விளையாட்டின் முக்கிய இலக்கண விதி. காயம் ஏற்படுத்துவதோ, வாலை கடிப்பதோ, அடிப்பதோ, மிதிப்பதோ விதிகளில் அடங்காது. காளை வளர்ப்போர் தங்கள் பிள்ளைகள் போலவே வளர்ப்பார்கள்.

காளையின் உடல்நிலை பாதிக்கப்பட்டால் அவரால் சாப்பிட கூட முடியாது. காளையை பீட்டா எழுப்பும் சட்டவிதிகளுக்கும், ஜல்லிக்கட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கபடி, ஹாக்கி, கால்பந்தாட்டம் என ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஒரு விதி உள்ளது. ஒரு வீரனை மற்றொரு வீரன் தாக்கினால் சம்பந்தப்பட்ட நபர் தான் தண்டிக்கப்படுவாரே தவிர விளையாட்டை தடை செய்வதில்லை.

குத்துச்சண்டையில் சக வீரர் தாக்கி இறந்த சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் அந்த விளையாட்டை தடை செய்யவுமில்லை. தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கவுமில்லை. கிரிக்கெட்டில் கூட வீரர் ஒருவர் உயிரிழந்தார். அதற்காக பணம் கொழிக்கும் கிரிக்கெட்டை தடை செய்வார்களா? ஆனால் ஜல்லிக்கட்டுக்கு மட்டும் தடை. மாட்டின் சுயவிருப்பத்தின் படி தான் ஜல்லிக்கட்டில் ஈடுபடுத்தப்படுகிறதா என சிலர் கேட்கின்றனர். அதற்கு விருப்பமில்லை என்பது உங்களுக்கு தெரியுமா? பால் கறக்க பசுவிடம் அனுமதி பெறப்படுகிறதா?

ஜல்லிக்கட்டு என்பது நம் சூழியல் சார்ந்த அங்கம். நம் முன்னோர் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள். 40 ஆண்டுகளுக்கு முன் சர்க்கரை வியாதி இல்லை. இன்று 40 வயதை தொட்டாலே சர்க்கரை வியாதி வந்துவிடுகிறது. பசுமைப்புரட்சி என்ற பெயரில் உரம், பூச்சிக்கொல்லி மருந்து போன்ற விஷங்களை பயிர்களில் கொட்டி அவற்றை உண்பதே முக்கிய காரணம்.

நம்மாழ்வாரின் கருத்துக்களை ஏற்றுக்கொண்ட பின் தற்போது இயற்கை விவசாயத்தை நோக்கி நாம் திரும்பி கொண்டிருக்கிறோம். இயற்கை விவசாயத்துக்கு நிலம், பயிர்கள் எல்லாம் இரண்டாம் கட்டம் தான். 2 நாட்டு மாடுகள் தான் முக்கிய ஆதாரம். இன்று ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளுக்காக பல்லாயிரம் செலவு செய்து விவசாயம் செய்கிறோம். போதிய லாபமின்றி விவசாயி மரணமடைவதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இயற்கை விவசாயத்தால் நாட்டுக்கே உணவளிக்கும் விவசாயியின் மரணத்தை தடுக்கலாம்.

நாட்டு பசுவின் ஒரு கிராம் சாணத்தில் நிலத்தை உயிருள்ளவையாக மாற்றி, விதைகளுக்கு விளையும் சக்தியை தரும் நுண்ணுயிர்கள் 300 கோடியிலிருந்து 500 கோடி வரை உள்ளன. இயற்கை விவசாயம், இயற்கை சார்ந்த உணவுக்கு நாட்டு மாடுகள் முக்கியமெனில், நாட்டு மாடுகளை உற்பத்தி செய்ய காளைகள் முக்கியம். காளைகளை காக்க ஜல்லிக்கட்டு மிக முக்கியம். உரம், பூச்சி மருந்து விற்பனையால் லாபத்தை பெற நினைக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் ஜல்லிக்கட்டை ஒழிப்பதன் மூலம் இயற்கை விவசாயத்தை ஒழித்து மனிதனின் ஆரோக்கியத்தை கெடுக்க முயல்கின்றன.

பல லட்சம் கோடி செலவு செய்து ஒலிம்பிக் போன்ற விளையாட்டை நடத்துவதன் நோக்கம் குறிப்பிட்ட மிக சிலருக்கு பரிசளிப்பது மட்டுமல்ல. நாமும் பரிசு பெற வேண்டும் என உடற்பயிற்சி, விளையாட்டில் ஈடுபட்டு தங்கள் உடல் ஆரோக்கியத்தை பேணும் சிந்தனையை பிறருக்கு தூண்டுவதற்காக தான் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதையே ஜல்லிக்கட்டுக்கும் பொருத்தி பார்க்க வேண்டும். ஜல்லிக்கட்டு மூலம் காளைகள் சிறப்பாக பராமரிக்கப்படுகின்றன. காளைகளை அணைய வீரர்களும் தங்களை ஆரோக்கியமாக தயார்படுத்துகிறார்கள்.

உண்மையிலேயே மிருகங்களின் மீது அக்கறை கொண்டவர்கள் தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்த முயற்சிக்க வேண்டும். உலகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டால் விலங்குகள் மட்டுமின்றி உலக சமூகமே ஆரோக்கியமானதாக மாறும். நாட்டு மாடுகள் உயிரோடு இருப்பதால் தான் டீசல், உர விலைகள் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. உழவுத்தொழிலில் மாடுகளை ஒழித்துவிட்டால் இவற்றின் விலை மிகவும் அதிகரிக்கும். பாரம்பரிய மாடுகள் தான் பீட்டா, புளுகிராஸ் போன்ற அமைப்புகளின் முக்கிய எதிரி.

பிரான்சில் நடைபெறும் ஸ்பானிய காளை சண்டையை தடை செய்ய வேண்டும் என பீட்டா அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் இது எங்கள் தேசத்தின் பாரம்பரியம். இதை தடை செய்ய முடியாது என கூறி நாட்டைவிட்டே வெளியேற வேண்டும் என பீட்டாவுக்கு உத்தரவிட்டது நீதிமன்றம். பணக்காரர்கள் பங்குபெறும் குதிரைப் பந்தயத்தையோ, ஒட்டகப் பந்தயத்தையோ பற்றி பேசாமல் குதிரைகளை வைத்து வண்டி இழுத்து பிழைப்பு நடத்தும் ஏழைகளுக்கு எதிராக பேசுகிறார்கள்.

ஜல்லிக்கட்டு என்பது சுயம்வரம். அப்போது திறமையான காளைகள் அடையாளம் காணப்பட்டு பசுக்களுக்கு பொலிகாளைகளாக அனுப்பப்படுகின்றன. ஜல்லிக்கட்டு தடை வந்தபிறகு கால்நடைகளுக்கான இனவிருத்தி தமிழ்நாட்டில் குறைந்துவிட்டது. பாரம்பரிய விலங்குகளை பாதுகாப்போம் என ஐ.நா. அவையின் அங்கமான Conservation of Biological Diversity என்ற அமைப்பில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. ஆனால் அதற்கு நேர்மாறாக பாரம்பரிய இனங்களை காக்கும் ஜல்லிக்கட்டுக்கு நீதிமன்றம் தடை விதிக்கிறது. ஜல்லிக்கட்டை சாதிய விளையாட்டு என சிலர் கூறுகின்றனர். ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்துக்கு நேரடியாக சென்றால் இது சாதிக்கு அப்பாற்பட்டது என்பது தெரியும்.

சேவல் சண்டையை தடை செய்த பிறகு தான் பிராய்லர் கோழி வியாபாரம் சந்தையில் சிறப்பாக நடைபெறுகிறது. கள்ளுக்கு தடை விதித்ததால் 50 கோடியாக இருந்த பனைமரம் தற்போது 4.5 கோடியாக குறைந்துள்ளது. சாராய வியாபாரிகளின் ஆதிக்கம் பனைமரத்தின் எண்ணிக்கையை குறைத்துவிட்டது.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தால் சேவல், பனை மரங்களின் நிலையே நாட்டு மாடுகளுக்கும் ஏற்படும். மாடுகளின் இனப்பெருக்கத்துக்கு பன்னாட்டு நிறுவனங்களின் செயற்கை கருத்தரித்தலையே நம்ப வேண்டிய நிலை ஏற்படும். அதுவே உயிரியல் யுத்தத்துக்கான(Bio War) அறிகுறியாக அமையும். இதுபோன்ற பல்வேறு விளக்கங்களை ஜல்லிக்கட்டு அரசியல் என்ற புத்தகத்தில் கொடுத்துள்ள ஆசிரியர் அ.கி.தாசு பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.

 

– இரா.கோசிமின் –

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More