Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை யாழ்ப்பாணத்தின் வரவேற்பு ‘நல்லூர் வளைவு’

யாழ்ப்பாணத்தின் வரவேற்பு ‘நல்லூர் வளைவு’

8 minutes read

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோவிலின் பெருமையை அடையாளப்படுத்தும் வண்ணமும் யாழ்ப்பாணத்தின் “கந்தபுராணக் கலாசாரத்தினை” உலகிற்கு எடுத்தது கூறும் வண்ணம் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தின் தனிப்பெரும் அடையாளமாக விளங்கும் நல்லூரான் செம்மணி வளைவின் இறைமாட்சி வைபவம் கடந்த தைப்பொங்கல் தினத்தன்று (14.01.2021 வியாழக்கிழமை) தெய்வேந்திர முகூர்த்த நன்நேரத்தில் (நண்பகல் 12.00 மணிக்கு) தமிழ், சைவ பாரம்பரிய சிறப்பு வைபவங்களுடன் திறந்து வைக்கப்பட்டது.

எமது கலை கலாச்சார பண்பாட்டு அம்சங்கள் புலனாக வனப்புற அமைக்கப்பட்டுள்ள நல்லூரன் செம்மணி வளைவை பற்றி……

அழகு மிளிரும் அடையாளச் சின்னங்கள்.

வளைவுக் கட்டடக் கலை அம்சங்களை உள்வாங்கி அழகு படுத்தப்பட்ட அடையாளச் சின்னங்கள் உலகின் பல இடங்களிலும் அமையபெற்றுள்ளன. அவை அந்த அந்த பிரதேசங்களின் கலை, கலாச்சார, பொருளாதார, பண்பாட்டு, அம்சங்களைத் தெளிவுடன் பிரதிபலிப்பனவாக அமைந்துள்ளன.

யாழ்ப்பாணத்தின் வரவேற்பு வளைவு

யாழ்ப்பாணத்தில் A9 பாதையில் (கண்டி வீதி) செம்மணி பாலத்துக்கு அண்மையில் ‘யாழ்வரவு’ என்ற வரவேற்பு வளைவு கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது. அது எமது கலாச்சாரப் பின்னணி கொண்டு நிறுவப்பட்டுள்ளதுடன் அதன் உச்சியில் யாழ்ப்பாணத்தின் அடையாளச் சின்னமான ‘யாழ்’ வனப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் எமது உயர்வான விழுமியச் செயற்பாடான விருந்தினரை வரவேற்கும் இயல்புக்கமைவாக ‘வருக. யாழ்நகர் வரவு நல்வரவாகுக’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.அத்துடன் அதன் மறு பக்கத்தில் ‘நன்றி மீண்டும் வருக’ என்று எழுதி யாழ்ப்பாண சமூகத்தின் நன்றி- மறவாப் பண்பியல்பை வெளிப்படுத்தி வழியனுப்பி வைக்கின்றமை சிறப்பே.

யாழ்ப்பாணத்தில் புதிய அடையாள வாயிற் கட்டடம்

யாழ்ப்பாணத்தின் கலாசாரத்தினை ‘கந்தபுராணக் கலாசாரம்’ என்று விஷேடத்துரைப்பர் பண்டிதமணி கணபதிப்பிள்ளை ஐயா அவர்கள்,

யாழ்ப்பாண மக்கள் தம்மைக் காக்கும் கடவுளாக அனுதினமும் வணங்கி போற்றித் துதிக்கப்பட்பவர் “நல்லூர் கந்தசுவாமியார்” இவற்றை மனத்திருத்தி நல்லூர் கந்தசுவாமியாரின் அடியவர்கள் சிலர் யாழ்ப்பாண வாசலில் வரலாற்று முக்கியத்துவம் பெறும் ஸ்தானத்தில் புராதன இராசதானியின் குதிரைப்படைகள் அடிக்கடி அணிவகுத்துச் சென்ற வீதியில் கந்தபுராணக் கலாச்சார சிறப்பும், நல்லூர் கந்தன் பெருங்கோயிலுக்கு பக்தர்களை ஆற்றுப்படுத்தும் நோக்கும் கொண்ட கவினுறு அடையாள வாயிற் கட்டடம் ஒன்றை அமைக்க மனம் கொண்டனர்.அவர்களின் அவ் விருப்புக்கு கந்தசுவாமியாரின் அனுக்கிரகம் முழுமையாகக் கிடைத்தமையை உணர்ந்து மகிழ்ந்தனர்.

முருகப் பெருமான் கிருபையுடன் 2019 ஆம் ஆண்டு பூங்காவனத் திருவிழாவன்று காலையில் “நல்லூரான் செம்மணி” வளைவிற்கான அங்குராட்பணம் செய்யப்பட்டது. செம்மணி வீதியில் மாற்றுப் பாதை அமைக்கப்பட்டு வேலைகள் ஆரம்பமாகின. துரதிஷ்ட வசமாக மழையும், கொரோனவின் முடக்கமும் வேலையினை வேகமாகச் செல்லவிடாது தாமதப்படுத்தின. ஆறு மாத காலத்தில் நிறைவு செய்வதாகத் திட்டமிடப்பட்ட பணிகள் நீண்டு சென்றன.

கட்டிட குழுமம் உற்சாகம் இழக்கவில்லை எல்லாத் தடைகளையும் வெற்றி கண்டு கருமமாற்ற முருகப்பெருமான் அவர்களுக்கு உதவினர். அனைவரதும் அயராத முயற்சியினால் இன்று யாழ்ப்பாணத்தின் வாயிலில் கம்பீரமாக எமது கந்தபுராணக் கலாசாரத்தை பிரதிபலித்து ஓங்கி அழகுறக் காட்சி தந்து நிற்கின்றது அந்தக் கவினுறு வாயிற் கட்டடம்.

புதிய வாயிற் கட்டடத்திலுள்ள சிறப்பம்சங்கள் சில…

இந்த வாயிற் கட்டடம் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று கந்தபுராணக் கலாசாரத்தைப் பிரதிபலித்து நல்லூர்க் கந்தசுவாமியாரின் அருட் கடாட்சத்தை வெளிப்படுத்தி பக்தர்களை ஆற்றுப்படுத்தி அமையப்பெற்றுள்ளது.

சிறப்பாக கொடுங்கை அமைப்புடன் கூடிய நுழைவாயில் அமைக்கப்பட்டு நடுவில் இரண்டு தளங்களைக் கொண்ட இராஜ கோபுரம் ஒன்று பண்டிகையில் ஐந்து கலசங்களை கொண்ட அமைப்புடன் நிறுவப்பட்டுள்ளது.

கட்டடத்தைப் பஞ்சாங்க வேலைப்பாடுகளுடன் அமைந்த நான்கு தூண்கள் தாங்கி நிற்கின்றன.

கோபுரத்தின் நடுவில் கிழக்கு நோக்கி சண்முகப் பெருமான் (ஆறுமுகசுவாமி) வள்ளி தெய்வயானை சமேதரராய் அமர்ந்து அருள் பாலித்தருள்கின்றனர்.

கோபுரத்தின் மறு பக்கத்தின் நடுவில் மேற்கு நோக்கி முத்துக்குமாரசுவாமி வள்ளி தெய்வயானையுடன் அமர்ந்திருக்கின்றனர்.

கோபுரத்தின் தெற்குப்பக்கத்தில் செல்வத்துக்கு அதிபதியான லக்க்ஷமியும்

வடக்குப் பக்கத்தில் கல்விக் கடவுள் சரஸ்வதியும் வீற்றிருக்கின்றார்கள்.

கோபுரத்துக்கு இருமருங்கிலும் தெற்கேயும் வடக்கேயும் இரண்டு தளத்துடன் கூடிய வட்டப் பண்டிகை அமைப்புக் காணப்படுகின்றது.

இவற்றை அடுத்து தெற்கு நோக்கியும் வடக்கு நோக்கியும் இரண்டு பழனியாண்டவர்கள் காட்சி தருகின்றார்கள்.

அதேபோன்று தென் கிழக்கிலும் வடமேற்கிலும் விநாயகர் அமர்ந்திருக்கின்றார்.

வடகிழக்கிலும் தென் மேற்கிலும் பாலமுருகன் குழந்தை வடிவில் காட்சிதருகின்றார்.

இராஜ கோபுரத்தின் இருமருங்கும் இரண்டு தளத்தில் அமைந்த சதுரப் பண்டிகை அமைப்புக் காணப்படுகின்றது.

சதுரப்பண்டிகையின் ஒரு பக்கத்தில் முருகன் தந்தைக்கு உபதேசம் செய்த காட்சியும்

மறுபக்கத்தில் அன்னை மகாசக்தியிடம் தீமைகள் அகற்ற முருகன் சக்திவேல் பெறும் காட்சியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அனைத்துப் பண்டிகைகளிலும் கோடிப் பூதங்களும் மயில் நந்தி போன்ற வாகனங்களும் காட்சியளிக்கின்றன.

வாயிற் தூண்களில் கிழக்கு நோக்கி வாயிற் காவலர்களும்

மேற்குப் பக்கம் காவடி ஏந்திய பக்தர்களும் காட்சி தருகின்றனர்.

வாயிலின் நடுவில் இரு பக்கமும் கஜலக்சுமியும் அவருக்கு இரு மருங்கும் சேவல் சிற்பங்களும் அமைக்கப்பட்டு உள்ளன.

யாழ்ப்பாணத்தின் தனித்துவமான கந்தபுராண கலாசாரத்தின் கலை பண்பாட்டு விழுமிய அம்சங்களை வெளிப்படுத்தி நிறுவப்பட்டுள்ள இந்த வாயிற் கட்டடம் எமது இருப்பை உறுதி செய்யும் அடையாளம். இதனைப் போற்றுவதும் பேணிப் பாதுகாப்பதும் எமது கடமை.

நல்லூர்க் கந்தரின் திருவிழாக் காலங்களில் வழமையாக வருகை தரும் காவடிகள். தூக்குக் காவடிகள் பறவைக் காவடிகள் எதிர்வரும் திருவிழாக் காலங்களில் இந்தக் கவினுறு வாயிலூடாக வருகை தரும் ரம்மியமான காட்சியினைப் பக்தியுடன் காணலாம்.

*கட்டுரை ஆக்கம் உதவி – கலாநிதி. திருநாவுக்கரசு கமலநாதன் (முன்னாள் பீடாதிபதி யாழ் தேசிய கல்வியற் கல்லூரி)

*புகைப்பட உதவி – திரு. ஐங்கரன் சிவசாந்தன் (புகைப்பட கலைஞர்)

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More