Sunday, May 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே | சுவஸ்திகா ராஜ்பிரகாஷ்

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே | சுவஸ்திகா ராஜ்பிரகாஷ்

6 minutes read

‘தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே’ என்று  இரண்டு அடிகளில் தாய், தந்தை இருவரையும் கோர்த்துக்கொடுத்த கவிஞர் நா.முத்துக்குமார் அவர்களின் வரிகளில் தாயின் அன்பை விடவும் தந்தையின் அன்பு பெரிது என்றவொரு உண்மை வெளிப்படுகிறது.

கேட்பதற்கு எளிமையாக இருந்தாலும் அவர் கூறிய அந்த வரிகளில் ஆயிரம் அர்த்தங்கள் ஆழமாக புதைந்திருக்கிறது என்பதை நம்மால் புரிந்துக்கொள்ளமுடிகிறது. 

தாயை போல என் தந்தை என்னை பத்து மாதம் சுமக்கவில்லை. ஆனால் சுமந்துகொண்டிருக்கிறார் என்னை அவருடைய நெஞ்சில் ஆயுட்காலம் வரை.

தாயை போல எனக்கு மூன்றுவேளையும் உணவூட்டவில்லை. ஆனால் நான் உண்ணும் அந்த ஒருவேளை உணவிற்காக நாள் முழுதும் வேர்வை சிந்தி உழைக்கிறார் அவர்.

தாயை போல எனக்கு பாடம் சொல்லிதரவில்லை. ஆனால் பாலர் வகுப்பு முதல் கல்லூரி வரை என்னைப் படிக்கவைக்கிறார்.பாடசாலைக்குதும் அழைத்துச்செல்கிறார். 

தாயை போல தாலாட்டி என்னருகில் விசிறிக்கொடுத்தென்னை உறங்கவைக்கவில்லை. ஆனால் மின்விசிறியில் மெத்தையில் நாம் உறக்கம் கொள்ள அவர் பாய் போட்டு தரையில் கொசுக்கடியில் படுத்துக்கொள்கிறார்.

அடிக்கடி என்னை அதட்டியதில்லை. அடித்ததுமில்லை. படும் கஷ்டங்களை என்னிடம் பகிர்ந்துகொண்டதில்லை. அன்பை நேரடியாகத் தெரிவித்ததுமில்லை.ஏன் எந்நேரமும் கட்டித்தழுவியதுமில்லை. ஆனாலும் தெரியும் எனக்கு என் தந்தையைப் போல் எவருமே இல்லையென்று. எமக்கு வேண்டியதை தெய்வத்திடம் கேட்டு பெறுகிறோம்.

ஆனால் கேட்காமலேயே எனக்கு எது தேவையென்று பார்த்து பார்த்து கொடுக்கிறது நான் கண்ட தெய்வம். கவிஞர் கூறியதுபோல உண்மையிலேயே தெய்வம் தோற்றுவிட்டது என் அப்பாவின் முன்னால்.

எத்தனை கஷ்டங்களும்,காயங்களும் கண்டும் கூட சற்றும் கலங்காத என் தந்தையின் கண்கள் கண்ணீர் இரைப்பது இருமுறை தான்.

அது பிறந்த  அன்று என்னை தொட்டிலில் இருந்து முதன்முறையாக தூக்கும் போதும், சாதித்து மேடையேற்றி என் தந்தை இவரென்று நான் சொல்லி பெருமைப்படும்போதும்.

தந்தை என்றவொரு உறவு இல்லையென்றால் நாம் இருந்திருக்கமாட்டோம். படைத்தவன் இறைவனாக இருக்கலாம். ஆனால் படைப்பித்தவர் நம் தந்தையாகத்தான் இருப்பார். நம்மை காப்பவரும் அவர்தான்.

நல்வழிச்செல்ல நம்மை கண்டிப்பவரும் அவர்தான். தந்தையை போல அன்பும்,கரிசணையும்,பாதுகாப்பும் இந்த உலகத்தில் யார் தருவார்? அவரை விட சிறந்த ஆசானை நீங்கள்  கண்டதுண்டா? அவரின் அருமைப்பெருமைகளை வார்த்தைகளால் அடக்கிட முடியாது.

தந்தை என்ற அந்த உயர்சொல்லில் இருக்கும் உன்னத அன்பின் அர்த்தத்தை பற்றிப் பேசும் போது என் நியாபகத்திலிருக்கும் ஒரு காணொலிதான் மனக்கண் முன் வந்து போகிறது.

நான் சிறுவயதில் பார்த்த ஒரு காணொலிப் பதிவு அது. பாடசாலையில் நடந்த செயலமர்வின் போது காண்பிக்கப்பட்டது இன்னும் என்நினைவிருக்கிறது. அந்த காணொலியின் நான் பார்த்த கதை இது தான்..!

திறந்திருக்கும் வீட்டுக்கதவுகளினூடாக வெளியே தெரிகிறது வீட்டு முற்றத்தில் ஒரு தோட்டம். அங்கிருந்த கதிரையில் இருவர் அமர்ந்திருக்கின்றனர். ஒருவர் வயதானவர்.

மற்றொருவர் இளைஞர். வயதானவர் அமைதியாக அமர்ந்திருக்க இளைஞர் பத்திரிகை வாசித்துக்கொண்டிருக்கிறார். இப்படியாக ஆரம்பிக்கிறது அந்த காணொலி.

தோட்டத்திலிருந்த சிறிய மரமொன்றில் ஒரு சிட்டுக்குருவி வந்து அமர்கிறது. அதை அந்த வயதானவர் கவனிக்கிறார். அந்தச் சிட்டுக்குருவியை பார்த்துக்கொண்டே ‘இது என்ன?’ என்று வயதானவர் இளைஞரிடம் கேட்கிறார். அதற்கு அந்த இளைஞர் ‘சிட்டுக்குருவி’ என்று கூறினார்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் அமர்ந்திருந்த அந்த சிட்டுக்குருவியைப் பார்த்து ‘இது என்ன?’ என்று அந்த வயதானவர் இளைஞரை கேட்க ‘ நான் தான் கூறினேனே.

அது சிட்டுக்குருவி’ என்று இளைஞரும் பதிலளித்தார். இப்போது அந்த சிட்டுக்குருவி மரத்திலிருந்து பறந்து தோட்டத்தின் தரையில் அமர்ந்துக்கொண்டது. மீண்டும் அதைப் பார்த்து, வயதானவர் ‘அது என்ன?’ என்று கேட்க ‘ அது சிட்டுக்குருவி. சிட்டுக்குருவி. சி…ட்…டு…க்…கு…ரு…வி’ என்று கோபம் கலந்த தொனியோடு அழுத்தமாகச் சொன்னார் இளைஞர்.

சற்று அமைதியாக இருந்த வயதானவர் அந்த இளைஞர் முகத்தைப் பார்த்து ‘அது என்ன?’ என்று சாதுவாக கேட்க அதற்கு அந்த இளைஞர் திடீரென தன் குரலை உயர்த்தி ‘ஏன் இப்படி செய்கிறீர்கள். நான் பல தடவைக் கூறிவிட்டேன். அது ஒரு சிட்டுக்குருவி சிட்டுக்குருவியென்று.

உங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லையா?’ என்று கோபத்தோடு கத்தினார். இதைக் கேட்டு அமைதியாக அங்கிருந்து எழுந்துசென்ற அந்த வயதானவரை பார்த்து ‘எங்கே போகிறீர்கள்’ என்று சத்தமாக கேட்டார் அந்த இளைஞர். அதற்கு பதில் எதுவும் கூறாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து வீட்டிற்குள் சென்றார் வயதானவர்.

வந்த சிட்டுக்குருவி பறந்துவிட்டது. இளைஞர் அப்படியே அமர்ந்திருக்க வீட்டிலிருந்து மீண்டும் தோட்டத்திற்கு வந்தார் வயதானவர் கையில் எதையோ எடுத்துக்கொண்டு. தான் எடுத்துவந்த புத்தகத்தை பிரட்டி ஒரு பக்கத்தை எடுத்து அந்த இளைஞர் கையில் கொடுத்து படிக்கச்சொன்னார். அந்த இளைஞரும் வாசிக்கத்தொடங்கினார்.

வாசித்து முடித்ததும் கண்கள் இரண்டும் கலங்கிநிற்க அந்த வயதானவரை கட்டித்தழுவிக் கொண்டார் அந்த இளைஞன். 

அதில் அப்படி என்ன எழுதப்பட்டிருந்தது? இளைஞர் வாசித்ததை சொல்கிறேன் கேளுங்கள்!

என் இளைய மகனுக்கு மூன்று வயதாகி சில நாட்களே ஆகிறது. நானும் அவனும் தோட்டத்திலிருந்த கதிரையில் அமர்ந்துகொண்டிருக்கும் போது நமக்கு முன்னால் ஒரு சிட்டுக்குருவி வந்து புல்லில் அமர்ந்துக்கொண்டது. அதைப் பார்த்த என் மகன் அது என்னவென்று 21 தடவை என்னிடம் கேட்டான்.

அவன் கேட்கும்போதெல்லாம் அது ஒரு சிட்டுக்குருவியென்று 21 தடவையும் நான் பதிலளித்தேன். அவன் எத்தனை தடவை கேட்டானோ அத்தனை தடவையும் அவனை கட்டித்தழுவிக் கொண்டே மீண்டும் மீண்டும் பதிலளித்தேன். பைத்தியக்காரனைப் போல் தெரிந்தாலும் என் செல்ல மகனுக்குள் பாசத்தால் நான் கட்டுப்பட்டேன். 

இது தான் அந்த பக்கத்தில் எழுதியிருந்த விடயம். இதைப் படித்த உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும். ஆம் அந்த வயதானவர் தான் அவரின் அருகிலமர்ந்திருந்த அந்த இளைஞரின் தந்தை. இந்த காணொலியை இயக்கியவர் கான்ஸ்டன்டின் பிலாவியோஸ். 

இந்த காணொலிக் கதையினூடாக அனைவருக்கும் ஒன்று மட்டும் தெளிவாக புரிந்திருக்கும். அது தந்தை என்றால் யார்? என்ற கேள்விக்கான பதில் தான். தற்சமயம் தேடிப்பார்த்தபோதுதான் சமூக வலைத்தளத்தில் மீண்டும் இந்த காணொலியைப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. (https://youtu.be/UVtm_fqGSng )  இந்த  Link ஐ க்ளிக் செய்து இக் காணொலியை பார்க்கலாம்.

இதனூடாக நான் அனைவருக்கும் ஒன்று கூற விரும்புகிறேன். தந்தையைப் போல சிறந்த நண்பன் இல்லை. அவரைப் போல் நல் ஆசானுமில்லை. சிறுவயதிலிருந்து நம்மை கண்ணிமைப்போல் காத்துவரும் அப்பாவை நம் உயிரிருக்கும் வரை காக்கவேண்டியது நம் கடமை. ஒவ்வொருவரும் தங்களுடைய தாயை நேசிப்பதைப் போலவே தந்தையையும் நேசிக்கவேண்டும்.

தாயின் அன்பு வெளிப்படுகிறது. தந்தையின் அன்பு மனதிற்குள் உறைகிறது. ஆனால் தக்க சமயத்தில் அது வெளிப்படும் போது தான் அவரின் உண்மையான பாசத்தையே நம்மால் புரிந்துக்கொள்ள முடிகிறது.

சிறுவயதில் நம் கைப்பிடித்து நடக்க வழி காட்டி, இளவயதில் நம் தோல்களை தட்டிக் கொடுத்து இந்த வாழ்க்கைப் பயணத்தில் நம் அருகிலேயே பயணித்த தந்தைக்கு வயதாகிவிட்டால் நாம் தான் நம் தோல்மீது அவர்கையைத் தாங்கிக்கொண்டு அவரின் மீது தூரத்தை கடக்க உதவ வேண்டும்.

ஒவ்வொருவரும் தந்தையை நேசித்திருந்தால் இன்று வீதிகளில் படுத்துறங்கும், அநாதை இல்லங்களில் அடைக்கலம் கொண்ட அப்பாக்கள் இல்லை. அனைவரும் உங்கள் தாய் தந்தையரை நேசியுங்கள்.!

என் உயிரணுவின் வரம் உன் உயிரல்லவா

மண்ணில் வந்த நான் உன் நகல் அல்லவா

காயங்கள் கண்ட பின்பே உன்னைக் கண்டேன்

காயங்கள் கண்ட பின்பே உன்னைக் கண்டேன்….!

                        – நா.முத்துக்குமார்-

என் அன்பான அப்பாவிற்கும்  அனைத்து அப்பாக்களுக்கும்  இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்!

சுவஸ்திகா ராஜ்பிரகாஷ்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More