Sunday, May 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை இலத்தீன் அமெரிக்காவில் வன அழிப்பை தடுக்கும் பூர்வகுடிகள் | ஐங்கரன் விக்கினேஸ்வரா

இலத்தீன் அமெரிக்காவில் வன அழிப்பை தடுக்கும் பூர்வகுடிகள் | ஐங்கரன் விக்கினேஸ்வரா

6 minutes read

சிலி நாட்டில் தேசிய இன விடுதலையை வேண்டிடும்
மப்புச்சே’ மக்களின் பூர்வீகத்தைமீட்கும் போராட்டம்!

——————————————————

     – ஐங்கரன்விக்கினேஸ்வரா

சிலி நாட்டின் தெற்கு பகுதியில் வாழும் பூர்வகுடி “மப்புச்சே” (Mapuche ) இனம். இந்த மக்கள் தங்கள் தேசிய இன விடுதலையை வலியுறுத்தி இன்றும் போராடி வரும் மக்களாக அறியப்படுகிறார்கள். ஆதிக்க, ஆக்கிரமிப்பு சுரண்டலுக்கு உள்ளான ஒரு இனம், இன விடுதலையை வலியுறுத்தி இன்றும் போராடி வருகிறார்கள்.

பூர்வீகத்தை மீட்கும் போராட்டம் :

மப்புச்சே மக்கள் மொத்த சிலி நாட்டின் மக்கள் தொகையில் 11% இவர்கள் உள்ளனர். மப்புச்சே இனமக்கள் சிலி நாட்டில் தெற்கில் “பயோ – பயோ” ஆற்றை எல்லையாகவும், மேற்கே பசிபிக் பெருங்கடலையும், கிழக்கே அர்ஜென்டினா நாட்டு எல்லையையும் கொண்டு “அரௌகேனியா பகுதியில்” (Araucania Region) வாழ்கின்றனர்.

விவசாயம் இவர்களுக்கு அடிப்படை பொருளாதாரமாக இருக்கின்றது. இவர்கள் மட்டுமின்றி இம்மண்ணின் பிற பூர்வகுடிமக்களான அய்மாரா, பாலிநேசியன், ரபானுய் இன்னும் பல பூர்வகுடி மக்களும் சிலி நாட்டில் வாழ்ந்து வருகின்றனர்.

சிலி மற்றும் அர்ஜெண்டாவில் வாழ்கின்ற மப்புச்சே  மக்களின் கலாச்சாரம் என்பது கி.மு 500 அல்லது 600க்கு முன்பானது என்று அகழ்வாராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன.

ஒடுக்கப்படும் பூர்வ குடிமக்கள் :

தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவை ஒட்டிய சிலி நாட்டின் தெற்கு பகுதியில் வாழும் பூர்வகுடி “மப்புச்சே” இனம். இந்த மக்கள் தங்கள் தேசிய இன விடுதலையை வலியுறுத்தி இன்றும் போராடி வரும் மக்களாக அறியப்படுகிறார்கள்.

காலனித்துவ சுரண்டலுக்கு உள்ளான ஒரு இனம் இன விடுதலையை வலியுறுத்தி இன்றும் போராடி வருகின்றது. ஏகாதிபத்திய நலனுக்காகவே மக்களுக்கு எதிரான அரசுகளும் சர்வாதிகாரிகளும் பல்வேறு நாடுகளில் உருவாக்கப்படுகின்றன.

உலகெங்கும் ஏகாதிபத்திய நலனுக்காக ஒடுக்கப்படும் பூர்வகுடி மக்களும், தேசிய இன மக்களும் தங்கள் உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் போராடி வருகின்றனர். குறிப்பாக இத்தகைய விடுதலை உரிமை போராட்டங்களை வல்லாதிக்க நாடுகளின் நலனுக்காக அந்தந்த நாடுகளில் இருக்கும் அரசுகள் ஒடுக்கிவருவது பன்னெடுங்காலமாக தொடர்ந்து வருகிறது.

சொந்த மண்ணிலே உரிமை மறுப்பு:

சொந்த நிலத்திலேயே மப்புச்சே மக்களின் குடியுரிமையும், தேசமும் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. அவர்களுக்கான உரிமை மறுக்கப்பட்டது. அம்மக்களின் மொழிக்கும் கலாச்சாரத்திற்கும் சிலி அரசு எந்த அங்கீகாரமும் வழங்கிடவில்லை.

இன்றுவரை தங்கள் இன உரிமைக்காகவும் நிலத்திற்காகவும் சிலி மற்றும் அர்ஜென்டினாவில் மப்புச்சே மக்கள் போராடி வருகின்றனர். அரௌகேனியா நிலப்பரப்பில் வாழ்ந்து வந்த இவர்கள் ஸ்பானிய காலனி ஆதிக்கத்தின் வரலாற்றில்  அரௌகேனியான்கள் (Araucanians) என்று அழைக்கப்பட்டனர்.

ஸ்பானிய காலனியத்தில் இருந்து சிலி விடுதலை பெற்றதை தொடர்ந்து 19ஆம் நூற்றாண்டு பிற்பகுதியில் ஐரோப்பிய மற்றும் “மெஸ்டிசோ” சிலியர்கள் மப்புச்சே மக்கள் வாழ்ந்து வந்த அரௌகேனியா பகுதியை ஆக்கிரமிக்க தொடங்குகின்றனர்.

காலனி ஆதிக்கத்தில் மக்கள் படுகொலை :

ஸ்பெயின் காலனிய தங்கச்சுரங்க பணியில் வேலை செய்த மப்புச்சே மக்கள் பலர் இறந்துபோனார்கள். ஸ்பெயின் காலனி அரசு தங்கள் படைகளில் மப்புச்சே மக்களை இணைத்து போரிட வைத்தனர். இதனால் மப்புச்சே மக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துபோனது.

ஸ்பெயின் காலனித்துவத்திற்கு பின்னர், மப்புச்சே இனத்தினர் வாழ்ந்து வந்த வளமான நிலத்தை அபகரிக்கவும், அந்நிலங்களில் விவசாய உற்பத்தியை பெருக்கிடவும் சிலி அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டது. 19ஆம் நூற்றாண்டில் காலனிய காலத்திற்கு பின்னர் சிலி நாட்டின் பணப்பயிர் தொழிலுக்கான நிலப்பரப்பு விரிவடைய தொடங்கியது.

இச்சூழலில் மப்புச்சே மக்கள் வாழும் வடக்கு அரௌகேனியா நிலப்பரப்பில் இன்றளவும் நில ஆக்கிரமிப்பு சண்டைகளும், வன்முறைகளும் சிலி அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகிறது. மேலும், மப்புச்சே மக்களின் பாரம்பரிய கல்வி முறைகளும் அரசினால்  ஒழிக்கப்பட்டுவிட்டது.

காடுகள் அழிப்பும் நில அபகரிப்பும்:

வரலாற்று ஆசிரியர்களின் தகவற்படி அரசின் நில அபகரிப்பு கொள்கை, பஞ்சம், நோய் தொற்று போன்ற காரணங்களால்  மப்புச்சே இன மக்கள் தொகை ஐந்து லட்சத்தில் இருந்து வெறும் இருபத்தி ஐந்தாயிரமாக  சுருங்கி போனதாக குறிப்பிடுகின்றார்கள். இதனால் எண்ணற்ற மப்புச்சே மக்கள் தங்கள் சொந்த நிலத்தைவிட்டு அகதிகளாக வெளியேறி வேறு இடங்களுக்கு இடம்பெயரும் அவலம் ஏற்பட்டது.

லத்தீன் அமெரிக்க நாடுகளில், குறிப்பாக பிரேசில், காடுகளை அழித்து பணப்பயிர்களை வளர்க்கும் பெருநிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறியுள்ளது. இக்காடுகளில் வாழ்ந்து வரும் தொல் பழங்குடியினரை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் பணிகளை அந்நாடுகளின் மேற்குலக சார்பு அரசுகள் செய்து வருகின்றன.

இதற்கு எதிராக பல இடங்களில் பழங்குடி மக்கள் போராடி வருகின்றனர். மரங்களை வெட்டி ஏற்றுமதி செய்யும் பெருநிறுவனங்கள் சிலியின் ஆயிரக்கணக்கான ஏக்கர் வால்டிவியன் காட்டு நிலப்பரப்பு அழித்துள்ளனர். அந்நிலத்திற்கு ஒவ்வாத அந்நிய மரங்களான சவுக்கு மற்றும் தைல மரங்களை பயிர் செய்கின்றனர்.

சிலியில் இயற்கை கனிமவளம் :

சிலியில் குவிந்திருக்கும் இயற்கை கனிம வளங்களை குறிவைத்து வந்த ஸ்பானிய காலனிய வரலாற்றை தொடர்ந்து விடுதலை பெற்ற சிலியின் அதிகாரவர்கம் தீவிர முதலாளித்துவத்தை ஆதரித்து வந்தது.

3 ஆண்டுகளான தைல மரம் நாளொன்றுக்கு 20 லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சிவிடுகிறது.

மேலும், இம்மரங்களை வளர்க்க ஏராளமான இரசாயன உரங்களை கொட்டி நிலத்தை மலடாக்குவதாக மப்புச்சே மக்கள் குமுறுகின்றனர்.

இப்படியாக வளர்க்கப்படும் மரங்கள் சீனா, ஜப்பான், அமெரிக்கா, இத்தாலி மற்றும் உலகெங்கும் ஏற்றுமதியாகின்றது.

சர்வாதிகார அதிபர் அகஸ்டோ பினோச்சே:

சிலி நாட்டின் முன்னாள்  ராணுவ சர்வாதிகார அதிபர் அகஸ்டோ பினோச்சே (Augusto Pinochet 1973 – 1990) மப்புச்சே மக்களின் போராட்டத்தை ஒடுக்க தீவிரவாத தடுப்பு சட்டத்தை இயற்றினார்.

அந்த சட்டத்தை பயன்படுத்தி இன்றைய அரசும் போராடும் மப்புச்சே மக்களை ஒடுக்கி வருகிறார்கள். போராடி வரும் மப்புச்சே மக்களின் மீது தீவிரவாத பாதுகாப்பு சட்டம் பிரயோகப்படுத்துவதையும், போராட்டத்தின் நிலவரத்தை கண்டறிய ஐ.நா மன்றம் பென் எமெர்சன் என்ற அதிகாரியை சிலி நாட்டிற்கு அனுப்பி வைத்தது. அவர் ஆய்வு செய்து சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் தீவிரவாத தடுப்பு சட்டத்திற்கு எதிராக ஐ.நா மன்றம் தனது கண்டனத்தை  ஜீலை 2013ல் பதிவு செய்தது.

தங்கள் பூர்வீக நிலத்தை சிலி அரசிடம் இருந்து மீட்டு தங்களிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த பகுதிகளை தன்னாட்சி பிரதேசமாக அறிவித்திட வேண்டும் என்பதே மப்புச்சே மக்களின் கோரிக்கையாக உள்ளது.

மப்புச்சே இனவிடுதலைக்காக போராடும் அமைப்பு :

மப்புச்சே இன விடுதலைக்காக போராடும் “குவார்டினடோரா அறவுக்கோ மல்லேக்கோ”    ( Coordinadora Arauco Malleco – CAM ) எனும் அமைப்பாகும். இதன் தலைவர் 53 வயதான எக்டர் லைட்டுள் ( Hector Llaitul ) கல்லூரி மாணவராக இருந்த காலம் முதலே இடதுசாரி அமைப்புகளுடன் இணைந்து இயங்கி வருபவர்.

இவர் அகஸ்டோ பினோச்சே சர்வாதிகார அரசுக்கு எதிராக போராடியவர். 1998ல் மப்புச்சே தலைவர்களுடன் இணைந்து CAM போராட்ட அமைப்பை தோற்றுவித்தார். இந்த அமைப்பானது மப்புச்சே மக்களின் நிலங்களை, அரசு மற்றும் அரசின் ஆதரவு பெற்ற பெருநிறுவனங்களிடம் இருந்து மீட்பதை பிரதான கோரிக்கையாக முன்நிறுத்துகின்றது.

எக்டர் லைட்டுள் பலமுறை சிலி அரசாங்கத்தினால் தீவிரவாதி முத்திரை குத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக 2017ல் கைது செய்யப்பட்டார். இவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் அனைத்தும் சிலி ராணுவத்தால் கூறப்பட்ட பொய் குற்றச்சாட்டுகள் என நிரூபிக்கப்பட்டு ஓராண்டு சிறைவாசத்திற்கு பிறகு விடுதலையானார்.

வன அழிப்பை எதிர்த்து போராட்டம்:

CAM அமைப்பு வனஅழிப்பை செய்திடும் பெருநிறுவனங்களின் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்திட அந்நிறுவனங்களின் ரயில் மற்றும் சாலை போக்குவரத்தை தடுப்பது, தொழிற்சாலை எந்திரங்களை சேதப்படுத்துவது என முதலாளிகளுக்கும் அவர்களின் அரசுக்கு எதிராகவும் மூர்க்கமாக போராடி வருக்கின்றனர்.

அதே நேரம், CAM அமைப்புக்கு எதிராகவும், மப்புச்சே இன மக்களுக்கு எதிராகவும் சிலி அரசு தனது காவல்துறையையும், ராணுவத்தையும் ஏவி அவர்களின் நியாயமான போராட்டத்தை அடக்கி ஒடுக்கி வருகிறது.

சமத்துவ சமூகம் உருவாக வேண்டும் :

மப்புச்சே மக்களின் விடுதலை, மப்புச்சே நாட்டில் ஒரு சமத்துவ சமூகம் உருவாக வேண்டும் என்பதே எக்டரின் கனவாக உள்ளது.

2019ல் சிலி தலைநகரில் மக்கள் மெட்ரோ ரயில் கட்டண உயர்வுக்கு எதிராகவும், வளர்ந்து வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகவும் கடுமையான தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த தொடர் போராட்டத்தின் வெற்றியாக செபஸ்டியன் பினேராவின் அரசாங்கம் வெளியேற்றப்பட்டது.

இந்த அரசியலமைப்பு திருத்தம் மப்புச்சே மக்கள் கோரும் விடுதலைக்கு வழி வகுத்திடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதன் முடிவு எவ்வாறாக இருந்தாலும் மப்புச்சே மக்களுக்கான ஒரே தீர்வாக அம்மக்களின் விடுதலைக்காகப் போராடும் அமைப்புகள் முன்வைப்பது தனிநாடு என்பதே ஆகும். இந்த தீர்வுக்கான இலக்கை நோக்கிய மப்புச்சே மக்களின் பயணம் தொடரும் என்பதில் ஐயமில்லை!

பல அடக்குமுறைகளை எதிர்கொண்டதாலேயே அவர்களின் போராட்டத்தை தீவிரப்படுத்தியது. மப்புச்சே  இளைஞர்கள் தங்கள் பூர்வீக நிலங்களையும் தன்னாட்சி பிரதேச உரிமையையும் பெருவது மட்டுமே இதற்கான தீர்வாயக அமையும் என்று உறுதியாக நம்புகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More