Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை ஈரானை போருக்கு வலிந்து இழுக்கும் ட்ரோன் தாக்குதல் | ஐங்கரன் விக்கினேஸ்வரா

ஈரானை போருக்கு வலிந்து இழுக்கும் ட்ரோன் தாக்குதல் | ஐங்கரன் விக்கினேஸ்வரா

4 minutes read

இஸ்ரேலில் புதிய அதிதீவிர வலதுசாரி நெதன்யாகு அரசின்
ஈரானை போருக்கு வலிந்து இழுக்கும் ட்ரோன் தாக்குதல் !!
——————————————————
– ஐங்கரன் விக்கினேஸ்வரா

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அணு தொழில் நுட்பத்தை சிறிது சிறிதாக வளர்த்துக் கொண்டிருக்கும் ஈரான் மீது அமெரிக்காவோ, இஸ்ரேலோ அதிரடித் தாக்குதல்கள் எதனையும் தொடுக்குமா என வியந்து கொண்டிருக்கும் வேளையில் கடந்த வாரம் (28/1/23)சனிக்கிழமை இரவு ஈரான் ராணுவ தொழிற்சாலை மீது ட்ரோன் (Drone Attack) தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டுள்ளது.

இந்தத் தாக்குதல்கள், பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவின் கீழ், இஸ்ரேலில் புதிதாக நிறுவப்பட்ட அதி தீவிர வலதுசாரி அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட முதல் இராணுவ தாக்குதல் நடவடிக்கைகளாகும்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் கடந்த வாரம் நிகழ்ந்த பாலஸ்தீன ‘ஜெனின்’ படுகொலையைத் தொடர்ந்து கிட்டத்தட்ட உள்நாட்டுப் போர் மீண்டும் வெடிக்கும் அபாயத்தையும் இவ் அரசு ஏற்படுத்தி உள்ளது.

மத்திய கிழக்கின் பனிப்போர் :

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே பல காலமாக பனிப்போர் இருந்து வருகிறது. அத்துடன் இஸ்ரேலுக்கு எதிராக செயல்படும் தீவிரவாத அமைப்புகளுக்கு ஈரான் நாடு ஆயுதங்கள் வழங்கி வருவதாக இஸ்ரேல் நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகிறது.

பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்படாததாலும், லெபனானில் நடைபெறும் நிகழ்வுகளாலும்,
ஏற்கனவே வெகுவாகக் குழம்பிப் போயுள்ள மத்திய கிழக்கின் ஸ்திர நிலை, ஈரான் நாட்டின் ராணுவ தொழிற்சாலை மீது ட்ரோன் தாக்குதலுடன் மேலும் குழம்பிப் போகுமா என ஐயமுற வேண்டி உள்ளது.

கச்சாய் எண்ணெய் விலை உயருமா?

ஈரான், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அணு வல்லரசாக மாற எத்தணிக்கும் வேளையில் ராணுவ தொழிற்சாலை மீதான ட்ரோன் தாக்குதல் (Drone Attack) இரண்டு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து மேலும் பகைமையை உருவாக்கி வருகிறது.

ஈரானில் ராணுவ தொழிற்சாலை கட்டடத்தின் மீது ஆளில்லா விமானத் தாக்குதலை தொடர்ந்து சர்வதேச ரீதியில் கச்சாய் எண்ணெய் விலை உயர சாத்தியம் என்று உலகப் பொருளியலாளர்கள் கருதுகின்றனர்.

மத்திய ஈரானில் இஸ்ஃபர்ஹான் (Isfarhan) நகரில் உள்ள ராணுவ தொழிற்சாலை மேலான தாக்குதலில், இஸ்ரேல் ஏவிய வெடிகுண்டுகளுடன் மூன்று ட்ரோன்கள் வந்துள்ளதாகவும் அதில் இரண்டு ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு வெற்றிகரமாக அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஒரு ட்ரோன் மட்டும் ராணுவ தொழிற்சாலை மீது விழுந்து வெடித்ததாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் தொழிற்சாலையின் ஒரு பகுதியில் பெரிய அளவில் தீப்பற்றி எரிந்ததாக தகவல்கள் கூறப்படுகின்றன. ஆனால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

மத்திய ஈரானில் தாக்குதல் :

தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிலோமீட்டர் தொலைவில்
உள்ள இஸ்ஃபர்ஹான் (Isfarhan) நகரில் இருக்கும் ராணுவக் கட்டடத்தைக் குறிவைத்தே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக ஈரானியத் பாதுகாப்பு அமைச்சு கூறியது.

சர்வதேச ரீதியில் அநேக நாடுகளுக்கு எரிபொருளை வழங்கிக் கொண்டிருக்கும் இப்பிராந்தியத்தில் ஏற்படும் ஸ்திரமற்ற நிலைமை, குறிப்பாக ஈரான் மீதான தாக்குதல் எரிபொருட்களின் விலை மேலும் உயர வழி செய்யுமா என்றும் ஐயமுற வேண்டி உள்ளது. இது இன்றைய உலகில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கேள்வியாகும்.

அதுமட்டுமின்றி ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்து இருந்தாலும் தன் நாட்டில் உள்ள அணு ஆயுத வளம் பற்றி எப்போதும் மூடி மறைத்தே வருகிறது. இது தொடர்பாக இரண்டு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து கடும் பனிப் போர் இருந்து வருகிறது.

ஈரானின் முக்கிய அணு எரிபொருள் செறிவூட்டல் நிலையமான Natanz இஸ்பஹான் மாகாணத்தில் அமைந்துள்ளது. ஆனால் நகரத்திலிருந்து வெகு தொலைவில் இந்த நிலையம் அமைந்துள்ளது. மேலும், இது சமீபத்திய தாக்குதல்களின் இலக்காகத் தெரியவில்லை. ஒரு பெரிய விமானப்படைத் தளமும் ஈரான் விண்வெளி ஆராய்ச்சி மைய தளமும், ட்ரோன் தாக்குதலால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் குறைந்தபட்சம் ஒரு வெடிமருந்துக் கிடங்கு அல்லது தொழிற்சாலை உட்பட பல சிறிய இராணுவத் தொடர்புடைய வசதிகளும் இங்கு தாக்கப்பட்டு உள்ளதாக மேற்கத்தய செய்திகள் தெரிவித்துள்ளன.

சிஐஏ இயக்குனர் ஜெருசலேம் விஜயம் :

சிஐஏ இயக்குனர் வில்லியம் பேர்ன்ஸ் இஸ்ரேலிய அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக ஜெருசலேமுக்கு விஜயம் செய்ததை அடுத்து, இரண்டு நாள் உத்தியோகபூர்வ கூட்டங்களைத் தொடங்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனின் வருகையுடன் இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

கிழக்கு மத்தியதரைக் கடலிலும் இஸ்ரேலியப் பகுதியிலும் 7,500க்கும் மேற்பட்ட துருப்புக்களைக் கொண்ட மிகப் பெரிய அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டு இராணுவப் பயிற்சிகளை தொடர்ந்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈரானுக்கு எதிரான ஒரு பெரிய போரின் ஆரம்ப கட்டங்களில் வான் பாதுகாப்பு அமைப்புகளை அகற்றுவதற்கான முன்கூட்டிய தாக்குதல்கள் மற்றும் போர் விமானங்களுக்கு வான்வழி எரிபொருள் நிரப்புதல் உட்பட, முக்கியமானதாக இருக்கும் அமைப்புகளை சோதிக்கும் நடவடிக்கைகள் இப்பயிற்சியில் அடங்கும்.

சிஐஏ – மொசாட் இணைந்த தாக்குதல் :

இத்தாக்குதல் பற்றி இஸ்ரேல் பத்திரிகை ‘ஜெருசலேம் போஸ்ட்’
பின்வருமாறு எழுதியது:
‘அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் போன்ற இலக்குகளைத் தாக்குவதற்கு ஒரு வாரம் முழுவதும் இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனவே இந்தப் பயிற்சிகளுக்குப் பிறகு உடனடியாக அத்தகைய தாக்குதலை நடத்துவது அவர்களின் தீவிரத்தன்மைக்கு ஒரு செய்தியை அனுப்புவதாகும். தாக்குதலுக்கு சற்று முன்பு சிஐஏ இயக்குனர் வில்லியம் பர்ன்ஸ் இஸ்ரேலுக்குச் சென்றது, தாக்குதலைத் திட்டமிடும் சிஐஏ மற்றும் மொசாட் தலைவர்களுக்கு இடையே ஒரு சிறப்பு நேருக்கு நேர் சந்திப்பின் அவசியத்தை நிரூபிக்கும் என்று அவர்கள் நம்பினர்.”

இஸ்ரேலின் வரலாற்றில் புதிய நெதன்யாகு வலதுசாரி அரசாங்கம் பிற்போக்குத்தனமான விரிவாக்க நோக்கங்களை மிக அதிக அளவில் உறுதிப்படுத்தி பதவியேற்றுள்ளது. அதன் கொள்கைப் பிரகடன அறிக்கை, இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் யூத மக்களின் ‘பிரத்தியேக உரிமையை’ வலியுறுத்துகிறது.

நெதன்யாகு அவ்வாறு செய்யத் தேர்ந்தெடுக்கும் போது மேற்குக் கரையை முறையாக இணைப்பதற்கும், தற்போதைய இஸ்ரேலிய சட்டத்தின் கீழ் கூட சட்டவிரோதமான டஜன் கணக்கான அங்கீகரிக்கப்படாத குடியேற்றங்களை சட்டப்பூர்வமாக்குவதற்கும் உடன்படிக்கையின் அடிப்படையில் இந்த கூட்டணி அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

சமீப வரலாற்றில் உச்ச நீதிமன்றத்தை செயலற்றதாக்கி மற்றும் முழுமையான சர்வ அதிகாரத்தை பெறுவதற்கான இக்கூட்டணியின் அச்சுறுத்தலுக்கு எதிராக யூதர்கள் மற்றும் அரேபியர்கள் பங்கேற்ற மிகப்பெரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அரசாங்கம் ஏற்கனவே கண்டுள்ளது.





சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More