Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை இடர்காலத்தில் மண்பயனுறச் சேவைநல்கிய வைத்தியர் விக்கினேஸ்வரா | ச. லலீசன்

இடர்காலத்தில் மண்பயனுறச் சேவைநல்கிய வைத்தியர் விக்கினேஸ்வரா | ச. லலீசன்

2 minutes read

..

மக்கள் மருத்துவர் சுன்னாகம் டாக்டர் விக்கினேஸ்வராவின் ஓராண்டு நினைவு !

——————————————————-
செந்தமிழ்ச் சொல்லருவி
சந்திரமௌலீசன் லலீசன்

கடந்த வருடம் மறைந்த (22/02/22) மருத்துவர் டாக்டர் ப. விக்கினேஸ்வரா எங்கள் குடும்ப மருத்துவர்.
அவரது கைராசியின் மகத்துவத்தை உணர்ந்து சுன்னாகத்தில் உள்ள அவரது மருத்துவமனை நோக்கி, என் தாயாரின் ஊராகிய நீர்வேலி மக்களும் படையெடுப்பர். அவரிடம் சென்று கதைத்தவுடனேயே பாதி வருத்தம் மாறிவிடும் என்ற நம்பிக்கை பலரிடமும் இருந்தது. இது அவரது வாய்ராசி என்றுதான் நினைக்கிறேன்.

சுன்னாகம் புகழ் டாக்டர் ப. விக்னேஸ்வரா மண்பயனுறச் சேவை நல்கிய மக்கள் மருத்துவர் ஆவார். இடர்காலத்தில் அவர் நல்கிய மருத்துவப் பணிகளை யாழ்ப்பாணம் மண்ணும், மக்களும் என்றும் நினைவில் கொள்வர்.

எனது தந்தையின் ஊராகிய தென்மராட்சி சரசாலையில் நான் வசித்தபோதிலும் – சிறுவயதில் ஏற்படும் நோய்களுக்கு சுன்னாகத்தில் உள்ள டாக்டர் விக்னேஸ்வராவின் மருத்துவமனைக்கே எனது தாயார் என்னை அழைத்துச் செல்வார். அன்றுமுதல் நான் டாக்டரின் பார்வையில் சரசாலைத் தம்பி.

அந்த உறவு இணைப்பும் ‘சரசாலைத்
தம்பி’ என என்னை வாஞ்சையுடன் டாக்டர் அழைக்கக் காரணமாயிற்று. பாடசாலைக் காலத்தில் ஐங்கரனுக்கு இருந்த தமிழ் வேட்கை என்னை அவருடன் ஈடுபாடு கொள்ள வைத்தது. பாடசாலை மாணவனாக இருந்தபோதே அணையாத அறிவாலயம் என யாழ் நூலக எரிப்புக்கு எதிரான தனது கண்டனக் குரலைக் கவிதையாக ஐங்கரன் என்கிற தோழர் சார்ள்ஸ் படைத்திருந்தார். டாக்டர் கொண்டிருந்த தமிழ்ப்பற்று அவரது பிள்ளைகளிடம் விழுதெறிந்து கிளைபரப்பியமையைப் பலரும் அறிவர். டாக்டரின் பிள்ளைகள் புலம்பெயர்ந்து வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்தாலும் டாக்டர் வழியில் தாயகம் மீதான ஈர்ப்புடனேயே இன்றும் வாழ்கின்றனர். அதற்கு அவர்களது பரம்பரைப் பண்பில் உள்ள தாயகம் பற்றிய உணர்வே பிரதான காரணம் என்பேன்.

எனது நிகழ்வுகள் ஊடகங்கள் வாயிலாகப் பரவலடையத் தொடங்கியதும் டாக்டரும் எனது இரசிகரானார். சரசாலைத் தம்பி பேசுது… சரசாலைத் தம்பியின் பட்டிமண்டபம் என பலருக்கும் என்னை அறிமுகப்படுத்தினார். ஒரு தந்தையைப்போலத் தயையுடன் என்னை நோக்கினார். நண்பர் ஐங்கரன் ஊடாக எனது ஒவ்வொரு நகர்வுகளையும் நயந்து இரசித்தார்.

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக சுன்னாகத்தில் அவர் நல்கிய மருத்துவச் சேவையால் பயனுற்றோர் பலர் உளர். இடர்காலத்தில் மண்பயனுற சேவை நல்கிய மக்கள் மருத்துவர் நல்கிய மருத்துவப் பணிகளை யாழ்ப்பாணம் என்றும் நினைவில் கொள்ளும் என்றே நம்புகிறேன்.

செந்தமிழ்ச்சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன்
அதிபர், கோப்பாய் ஆசிரிய கலாசாலை

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More