எப்படி தம் மக்களுக்காக வாழ்ந்தார்கள் என்பதை இன்றைய இந்த தந்தையர் தின சிறப்பு நாளில் நாம் காணலாம்.
அகநானூறு 12
“எந்தையும் நிலன் உறப் பொறாஅன் சீறடி சிவப்ப” என்று தொடங்கும் இந்தப் பாடலைக் கபிலர் பாடுகிறார். இது தோழி கூறுவதாக அமைந்துள்ளது.
“எங்கள் தாய் தன்னுடைய கண்களை விட இவள் பால் மிகுந்த அன்பை உடையவர். எங்கள் தந்தை இவள் நிலத்தில் நடப்பதைப் பொறுக்காதவர். ஏடி மகளே! உன் சிறிய அடிகள் சிவக்க எவ்வாறு நடக்கின்றாய்”
என்று தந்தை கேட்பாராம். பிள்ளைகளோடு அதுவும் பெண் பிள்ளைகளோடு நமது மூதாதையரான தந்தையர் உயிராக இருந்திருக்கிறார்கள் என்று இந்தப் பாடல் வழி நாம் அறிந்து கொள்ளலாம்.
மகட்பாற்காஞ்சி
சங்க காலத்தில் பெண் தர மறுக்கும் மன்னர்களுக்கு எதிராகப் பெரும் போர்கள் நடந்திருக்கின்றன என்பது வரலாறு. புறநானூற்றில் மகட்பாற் காஞ்சி என்ற ஒரு துறை உள்ளது. இந்தக் காஞ்சித் துறையானது நிலையாமை பற்றி நமக்கு எடுத்துரைக்கின்றது. இதில் 20 பாடல்களை பல்வேறு புலவர்கள் பாடியிருக்கிறார்கள். மகளைக் கொடுக்க மறுத்துப் போர் புரிந்த மன்னர்கள் பற்றிய பாடல்கள் இவை.
தனது மகளைப் பெண் கேட்டு வரும் மன்னனுக்கு எட்டு வகையான ஒழுக்கங்கள் இருக்கின்றனவா என்று பார்த்திருக்கின்றனர். “இளமையும் வனப்பும் இல்லொடு வரவும்” என்று வரும் பாடலில் அன்றைய எமது தந்தையாரான மன்னர்கள், “இளமையும், அழகும் குடிப் பெருமையும், செல்வமும், அஞ்சா நெஞ்சமும், கல்வியும், தாம் வாழும் தேசத்தின் அமைதியை விரும்புதலும், குற்றமில்லா நுண்ணறிவும் ஆகிய எட்டுத் தகுதிகளையும் பார்த்தே தமது மகள்களைக் கொடுக்க விரும்பினர். அப்படி அந்த எட்டு ஒழுக்கங்களும் பெண் கேட்டு வரும் மன்னனுக்கு இல்லாத பட்சத்தில், பெண் கொடுக்க மறுத்திருக்கிறார்கள். ஆதலால் இவர்களுக்கு எதிராக பெண் கேட்டு வந்த மன்னன் போர் புரியும் பொழுது அஞ்சா நெஞ்சத்தோடு போராடி தமது மகள்களுக்காக மடிந்தும் இருக்கின்றார்கள்.
புறநானூறு 312
“ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே. சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே. வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே”
என்கிறார் பொன்முடியார் என்னும் சங்ககாலப் புலவர். கல்வி, அறிவு ஒழுக்கம் முதலியவற்றில் நிறைந்தவன் ஆக்குதல் தந்தைக்கு கடனே என்கிறார். தன்னை ஒறுத்து எம்மை ஆளாக்கிய தந்தையை ஒவ்வொரு பொழுதும் நாம் நினைந்து வாழ வேண்டும். இன்று மட்டும் எமக்குத் தந்தையர் தினம் அல்ல. எம் வாழ்நாளில் நாம் வாழும் ஒவ்வொரு நாளுமே தந்தையர் தினம் தான்.
“மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல் எனும் சொல்” என்கிறார் திருவள்ளுவர். மகன் தந்தைக்கு செய்யும் உதவியை யாதெனில் இவனுடைய பெற்றோர் இப்படிப்பட்ட மகனை பெறுவதற்கு என்ன தவம் செய்தனரோ என மற்றவர் பெருமைப்படும் விதம் இருக்க வேண்டும் என்கிறார். அப்படி அவர்கள் மற்றவர்கள் பெருமைப்படும் விதம் எம்மை வாழ்வில் உயர்த்திய அந்த தெய்வத்துக்கு நாம் என்ன செய்கிறோம் என்பதை நினைத்துப் பார்ப்போம்.
அப்பா என்கின்ற ஆசானை, அறிவை, அனுபவத்தை, அழகை, அற்புதத்தை, ஆண்டாண்டு காலமும் அன்பு செய்வோம். அனுதினமும் அவரைத் தொழுது நிற்போம்.
ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 12 | சங்க காலத்தில் தமிழரின் உணவு முறை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 11 | சங்க இலக்கியத்தில் போருக்கு எதிரான குரல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 10 | சங்க இலக்கியத்தில் பெண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 9 | மானம் மிக்க வீரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 8 | சங்க இலக்கியத்தில் தைத்திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 7 | சங்க இலக்கியத்தில் ‘ஈழம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 6 | தமிழரின் பெற்காலத்தைப் பேசும் ‘பட்டினப்பாலை’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 05 | சிறுபாணாற்றுப் படையின் சிறப்புகள் |ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 04 | திருமண நிகழ்வும் விருந்தும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்கப் பதிவுகள் 02: ஏழு அடிகள் விருந்தினர் பின்சென்று வழியனுப்பும் பண்பு: ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 01 கார்த்திகைத் தீபத் திருவிழாவும் செங்காந்தள் பூவும் | ஜெயஸ்ரீ சதானந்தன்