இந்த மார்கழித் திங்கள் என்பது எமது முன்னோர்கள் வகுத்த முன்பனிக்காலத்தில் அமைந்துள்ளது. அதாவது விடி காலையில் பனி கொட்டும் மாதமாக இது உள்ளது.
மார்கழித் திருவாதிரை
இந்த முன்பனிப் பருவக் காலத்தில் சங்க இலக்கியங்களில் தை நீராடல் என்ற பெயரில் மார்கழி முழுமதி நாளில் அதாவது திருவாதிரை நாள் முதலாக தை முழுமதி நாள் வரை அதாவது தைப்பூசம் வரை பெண்கள் நோன்பு இருந்து நீர்நிலைகளில் நீராடினார்கள். ஒரு மாத காலத்துக்கு அவர்கள் இந்த நோன்பை புரிந்திருக்கின்றார்கள். நல்ல மழை பெய்யும் பொருட்டு இதைச் செய்திருக்கின்றார்கள்.
பரிபாடல் 11, 8
பரிபாடலில் நல்லந்துவனார் “அம்பா ஆடலில் ஆயத்தொடு கன்னியர்” என்று வரும் பாடலில் பாண்டிய நாட்டு பழக்கவழக்கங்களை நமக்கு தருகின்றார். ஆகமம் தெரிந்த அந்தணர் திருவாதிரை நாளில் விழா நடத்த, பெண்கள் நோன்பிருந்து நீராடுகின்றனர். இது தை நீராடல் என்ற பெயரிலேயே சங்க காலத்தில் வழங்கி வந்திருக்கின்றது. பெண்கள் தை நீராடல் எனப்படும் நோன்பை மேற்கொண்டு “நிலம் மழை பெற்று குளிர்க” என்று மகளிர் கூறி நீரில் மூழ்கி ஆடும் நீராடலை அம்பா ஆடல் என்று கூறுகின்றார்கள். அதாவது அம்பா என்பது அன்னை. சிறுமிகள் அன்னையுடன் சேர்ந்து வைகை ஆற்றில் நீராட வந்தனர் என்று நல்லந்துவனார் பாடுகின்றார். அத்தோடு பிற்காலத்தில் திருமண வயதில் இருக்கும் இளம் பெண்கள் நல்ல கணவன்கள் கிடைப்பதற்காக இறைவனை வேண்டி இந்த நோன்பை மேற்கொண்டார்கள் என்று தெரிகின்றது.
அகநானூறு 181
“மகளிர் கை செய்ப்பாவை துறைக்கண் இருக்கும்” என்ற பாடலில் நீர் பாயும் ஒரு பொய்கையில் பாவை செய்து மகளிர் நோன்பு இருந்து கடைசி நாளில் தாம் விளையாடிய பாவையை அந்தப் பொய்கை நீரில் இறக்குவர். அப்படிப்பட்ட வளங்களை உடைய தலைவன் இந்த பாட்டுடைத்தலைவன் என்கின்றார் பரணர்.
நற்றிணை 22
” வான் பெயர் நனைந்த புறத்த நோன்பியர்” என்று வரும் பாடலில் அந்த ஊரில் தினை நன்கு விளைந்துள்ளது. ஆண் குரங்கு ஒன்று தினைக் கதிரைக் கிள்ளிக்கொண்டு பாறை உச்சிக்கு கொண்டு சென்று சாப்பிட்டது. இது தைப் பிறப்பில் நீராடி நோன்பு முற்றியிருந்து உண்ணுதல் போல என்று உவமையாகக் கூறுகின்றார் புலவர்.
திருவெம்பாவை
மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில் இருந்தபோது அங்கிருந்த எல்லாப் பெண்களும் மார்கழித் திருவாதிரைக்கு முதல் பத்து நாட்கள் வீடுகள் தோறும் சென்று பெண்களை அழைத்து விடியற்காலையில் குளிர்ந்த நீர்த் தடாகங்களில் நீராடினார்கள். அதைக் கண்ட மாணிக்கவாசகர் திருவெம்பாவை அருளினார் என திருவாதவூரர் புராணம் கூறுகின்றது. இப்போது பெண்கள் நோக்கும் திருவெம்பாவை நோன்பின் கடைசி பத்தாம் நாளே திருவாதிரை ஆகும். ஆனால் வைணவர்கள் மார்கழித் திங்கள் முழுவதும் நோன்பிருப்பார்கள். திருவாதிரை நாளன்று இறைவனுக்கு பல்வேறு காய்கறிகளில் செய்யப்பட்ட களி படைப்பது இவர்களது வழக்கம். பண்டைய எமது முன்னோர்களின் விருந்தோம்பலையும் இது காட்டி நிற்கின்றது.
ஆனால் சங்க காலத்தில் மார்கழித் திருவாதிரை நாள் தொடங்கித் தை முழுமதி நாள் வரை ஒரு மாத காலத்துக்கு பெண்கள் நோன்பு இருந்திருக்கின்றனர்.
எட்டாம் நூற்றாண்டில் ஆண்டாளினால் கிடைத்த திருப்பாவையில் “மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் (திருவாதிரை நாளில்) நீராடப் போதுவீர் போதுவினோ நன்னெறியீர்” என்ற வரிகள், பரிபாடலை ஒட்டியே வருகின்றன.
அதே போலவே ஒன்பதாம் நூற்றாண்டில் மாணிக்கவாசகரினால் கிடைத்த திருவெம்பாவையும் இந்த மார்கழி நீராடலின் தொடர்ச்சியாகவே வந்திருக்கின்றன என்பது பரிபாடல் மூலம் புலனாகிறது.
ஆக மார்கழித் திருவாதிரை நாளில் தொடங்கித் தைப்பூசம் வரை நடைபெற்ற மார்கழி நீராடல் விழாவைப் பரிபாடல் மிகவும் பாரித்து நமக்குக் கூறுகின்றது.
இன்றைய கால கட்டத்தில் நாம் பார்த்தால் திருக்கார்த்திகைத் திருவிழா சீரழிந்து தீபாவளி பின்னால் தோன்றியது. அத்தோடு மார்கழி நீராடலும் கூட இன்று நிலை தடுமாறிப் போனது என்பதும் எமக்கு வேதனைக்குரிய விடையமே.
ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 15 | மருத மண்ணில் வாழ்ந்த மீன்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 14 | வரதட்சணை கொடுத்த ஆண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 13 | சங்க காலத்தில் தந்தையர் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 12 | சங்க காலத்தில் தமிழரின் உணவு முறை | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 11 | சங்க இலக்கியத்தில் போருக்கு எதிரான குரல் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 10 | சங்க இலக்கியத்தில் பெண்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 9 | மானம் மிக்க வீரம் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 8 | சங்க இலக்கியத்தில் தைத்திங்கள் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 7 | சங்க இலக்கியத்தில் ‘ஈழம்’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவு 6 | தமிழரின் பெற்காலத்தைப் பேசும் ‘பட்டினப்பாலை’ | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 05 | சிறுபாணாற்றுப் படையின் சிறப்புகள் |ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 04 | திருமண நிகழ்வும் விருந்தும் | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 03 | போரின் அறநெறி | ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்கப் பதிவுகள் 02: ஏழு அடிகள் விருந்தினர் பின்சென்று வழியனுப்பும் பண்பு: ஜெயஸ்ரீ சதானந்தன்
சங்க இலக்கியப் பதிவுகள் 01 கார்த்திகைத் தீபத் திருவிழாவும் செங்காந்தள் பூவும் | ஜெயஸ்ரீ சதானந்தன்