எங்களுக்கு காலமை எழும்பிறதுக்கு alarm தேவையில்லை, நாலரைக்கு நல்லூர் மணி அடிக்க நித்திரை கலைஞ்சா, ஐஞ்சு மணிக்கு அம்மன் கோயில் மணி எழுப்பி விட்டிடும். பாண்காரன்டை சத்தம் கேட்டா அதுக்குப் பிறகு படுத்தாலும் நித்திரை வராது. வீட்டு gateஇல கொழுவின பையில இருந்த பால்ப் போத்திலை எடுத்துக் கொண்டு வந்து மனிசீட்டைக் குடுக்க, பிள்ளைகளை எழுப்பிக்கொண்டருக்கிற மனிசி பேசிற பேச்சில பாதி எனக்கு மாதிரித் தெரிஞ்சாலும் தெரியாத மாதிரிப் பவ்வியமா இருந்தால் தான் இருக்கிற இடத்துக்குக் கோப்பி வரும்.
வேலைக்குப் போக முதல் மனிசி தந்த கோப்பியோட பேப்பரை விரிக்க, வழமைபோல முன்பக்கத்தில ஓரு ஓரத்தில மோட்டார் சைக்கிள் விபத்து, அந்த இடத்திலேயே ஒருவர் பலி மற்றும் இருவர் படுகாயம் , இனம் தெரியாத கும்பலின் தாக்குதலுக்கு உள்ளாகி மூவர் வைத்தியசாலையில் அனுமதி எண்டு வாசிச்சிட்டு சரி இண்டைக்கும் ward full எண்டு நினைப்போட வேலைக்குப் போய் உடைஞ்சது, முறிஞ்சது, வெட்டினது கொத்தினது எல்லாம் பாத்திட்டு ஒப்பிறேசன் தியட்டரில உடுப்பை மாத்தீட்டு நிக்க உங்களுக்கு call எண்டு யாரோ சொல்ல போய் phoneஐத் தூக்கினன்.
சேர் கொழும்பில இருந்து ஒரு கோல் connect பண்ணட்டே எண்டு exchange காரர் சொல்லி முடிய, ஒரு சின்னப் பிள்ளையை கொழும்பு ஆஸ்பத்திரீல இருந்து மாத்தினமாம் எண்ட சாரம்சத்தோட call cut ஆகீட்டுது.
அடுத்த நாள் ward round ல ஒரு ஆறு வயதுப் பிள்ளை “ஆ “ வெண்டு வாயைத் துறந்தபடி சிரிக்குதா அழுதா எண்டு கண்டு பிடிக்கமுடியாமல் ஒரு ஓவெண்ட சத்தம் போட்ட படி இருந்திச்சுது. இது தான் நேற்றைக்கு phone இல கதைச்ச பிள்ளை எண்டு விளங்கி அம்மா எங்க எண்டு கேக்க, அம்மா இல்லை, ஆக்கள் ஒருத்தரும் இல்லை இங்க நேர்ஸ் ஓட தான் பிள்ளை transfer ஆக வந்தது எண்டு மறுமொழி வந்திச்சது. தன்னையே தெரியாத பிள்ளையிட்டை என்னத்தை கேக்கிறது எண்டு யோசிக்க, ஒரு வகையில தன்னிலை அறியாதவனுக்கு ஒரு நாளும் பிரச்சினையில்லை அவனை வைச்சுப் பாக்கிறவனுக்குத்தான் பிரச்சினை எண்டு யோசிச்ச படி அடுத்த patient ஐ பாக்க இந்தக் குழந்தையை பற்றிய எண்ணம் மறந்து போச்சிது.
“அப்பா எவ்வளவு சரியில்லை இப்ப தான் கட்டினாப்பிறகு எங்களைச் சேக்கினம் எப்பிடியும் நாளைக்கு அந்த சாமத்தியவீட்டிக்குப் போவம்” எண்டு குணாளின்டை மனிசி சுசி நச்சரிக்க, வேண்டா வெறுப்பாத்தான் ஓம் எண்டான் குணாள். பஞ்சியோடையும் கொஞ்சம் சங்கடத்தோடையும் தங்கச்சியாரின்டை சாமத்திய வீடு எண்டு மாங்குளத்தில இருந்து வெளிக்கிட்டு மனிசியோடேம் பிள்ளை சியாம் ஓடேம் வந்தான் குணாள். புனர்வாழ்வு முகாமுக்க இருக்கேக்க வந்த பழக்கம் நெருக்கமாக ஒருத்தருக்கும் சொல்லாமல் ஓடிப் போய் கட்டி மாங்குளத்தில சின்னக்கடை போட்டு கொஞ்சம் இப்பதான் தலை நிமித்தத் தொடங்கி இருந்தான் குணாள்.
பெடியனும் பிறந்து நாலு வருசத்திக்குப் பிறகு தான் இப்ப சித்தப்பா கூப்பிட யாழ்ப்பாணம் வாறான். தயங்கி வந்தவனுக்கு கொஞ்சக் காலமாய் விலத்தி நிண்ட சொந்தங்கள் எல்லாம் விரும்பி வந்து விசாரிக்க இதுதான் மனிசி இதுதான் பிள்ளை எண்டு எல்லாருக்கும் கொண்டே காட்டினான். என்ன சொல்லுவினமோ எண்டு வந்தவன், எப்பிடி இருக்கிறாய் எண்ட கேக்க சந்தோசமாய் எல்லாரோடேம் ஓடி ஓடிக் கதைக்கிறதை பாத்து மனிசி கண் கலங்கினதை கவனிக்காத மாதிரி இருந்தான்.
இரவுச் சாப்பாடும் எல்லாம் முடிஞ்சகையோட வெளிக்கிடுவம் எண்ட சொல்ல, சின்னம்மா “ வந்தனி நிண்டிட்டுப் போவன் “ எண்டு கேட்ட அன்பிற்கு, அடுத்த முறை வந்து ஒரு கிழமையா நிக்கிறன் எண்டு சொன்னபடி வெளிக்கிட்டான் குணாள். ஒரு பலகாரப் பையைக் கொண்டு வந்து சுசியின்டை கையில குடுத்திட்டு“ வீட்டை போய் நாவூறு சுத்திப்போடு “ எண்டு சின்னம்மா சொன்னதுக்கு தலையை ஆட்டின சுசீ, மடீல பிள்ளையை மெல்லவும் குணாளின்டை தோளை இறுக்கியும் பிடிச்ச படி மோட்டச்சைக்கிளில இருந்தாள். “எனக்கென்னவோ இப்பிடியே செத்தாலும் பரவாயில்லை அவ்வளவு சந்தோசமா இருக்கு” எண்ட படி மோட்டச்சைக்கிளை முறுக்கிப் பிடிச்சான் குணாள்.
என்ன நடந்தது இந்தப் பிள்ளைக்கு எண்டு விசாரிக்க, வவுனியா ஆஸ்பத்திரீல இருந்து போன மாசம் தலையில அடிபட்டது எண்டு கொழும்புக்கு அனுப்பின பிள்ளை அங்க திரும்பி அனுப்ப ஏலாது, எண்டு இங்க அனுப்பி இருக்கினம் எண்டு விளக்கம் கிடைச்சிது. இன்னும் தோண்டி விசாரிக்க போனமாசம் மாங்குளத்தில நடந்த accident கேஸ் இது, நடுச்சாமம் மோட்டச்சைக்கிள் நல்ல speed ஆப் போகேக்க குறுக்கால வந்த மாட்டுக்கு விலத்த முன்னால வந்த கள்ள மண் ஏத்தின டிப்பர் நேர அடிச்சதாம் எண்ட விபரம் கிடைச்சுது. அது மட்டும் இல்லை அப்பா அதிலயே சரி, அம்மா வவுனியா ICU இல இருந்து ஒரு கிழமையால சரி, பிள்ளைக்கு helmet ஒண்டும் போடாத்தால மூளைக்குள்ள bleeding கால் ரெண்டும் உடைஞ்சு கொழும்புக்கு அனுப்பினதாம் எண்டு முழு விளக்கமும் வந்திச்சுது.
நாங்களும் உறவுகளைத் தேடித் திரிய, தெரிஞ்சோ தெரியாமலோ எந்த உறவும் தேடி வரேல்லை . எப்பிடியோ இதைக் கேள்விப்பட்டு மகளையும் குடும்பத்தையும் தேடின ஒரு அம்மா வந்து பேரனக்கண்டு ஒப்பாரி வைக்கத் தொடங்கினா. “கட்டீட்டு விட்டிட்டுப் போனவள் ஒரேடியாப் போட்டாள் “ எண்டு , அம்மா புலம்பி முடிஞ்சு பேரப் பிள்ளையைப் பாத்து கேள்வி கேக்க அது வழமைபோல ஓஓஓஓ எண்ட படியே இருந்தது. அப்பிடியே என்டை மகள் சுசி மாதிரி இருக்கிறான் எண்ட படி எங்களைத் திரும்பிப் பாத்த அந்த அம்மாவுக்கு , நிலமையை விளக்கி மூளைப் பாதிப்பால இனி இந்தக் குழந்தை நடக்கிறது கஸ்டம் எண்டு சொன்னம். கொஞ்ச நேரத்தில திருப்பியும் வந்த அம்மா பிரச்சினை ஒண்டும் இல்லைத்தானே பேரன் நடப்பான் தானே எண்டு அப்பாவியாக் கேட்டா. உண்மையை பொய்யாக்கச் சொல்லி அந்த அம்மா கேட்ட கேள்விக்கு விடைசொல்லாமல் விலகினன்.
அடுத்த நாள் பிள்ளையின்டை சித்திக்காரி வந்து விளக்கம் கேட்டிட்டு நான் வைச்சுப் பாக்கிறன் எண்டு தன்டை வறுமைச்சுமையோட அவனையும் சுமந்து கொண்டு போனா. தாங்களாயே X-ray எடுத்த தயாபரன், ward doctor, nurse மார் எல்லாரும் சேந்து சேத்த காசை வற்புறுத்திக் குடுத்து விட்டம். கொஞ்சம் நாளால திருப்பிக் கிளினிக் வரேக்க சித்திக்காரீன்டை அரவணைப்பு கொஞ்சம் அந்தப் பெடியன்டை முகத்தில கொஞ்சம் வித்தியாசத்தை காட்டிற மாதிரி இருந்தது. தகப்பன்டை ஆக்கள் ஒருத்தரும் கேள்விப்பட்டும் வாறேல்லை நான் ஏலுமானவரை பாப்பன் எண்ட சித்திக்கு கலியாணம் பேசுப்படுதாம் எண்டு தாய் சொன்னா. திருப்பியும் யாரோ தந்த உதவியும் நன்றியும் கைமாற்றம் பெற்றன. கொரோனாவுக்கு முதல் கடைசியா வரேக்க ஆரோ சியாம் எண்டு கூப்பிட கண்விரித்துப் பாத்த மாதிரி இருந்திச்சுது.
இண்டைக்கும் அதே கோப்பி , வழமை போல காலமைப் பேப்பரைத் திறக்க , ரயில் கடவையில் டிப்பருடன் ரயில் மோதி இரு குழந்தைகள் பலி தந்தை படுகாயம் எண்ட செய்தியையும் பாத்திட்டு மறக்காம கடைசிப் பக்கம் IPL score ஐ வாசிக்கத் தொடங்கினன்.
Dr. T. கோபிசங்கர்
யாழப்பாணம்
சுவடுகள் இதுவரை வெளியான தொடர்கள்
சுவடுகள் 01 | இது ஒரு சுளகு மான்மியம் | டாக்கடர் ரி கோபிசங்கர்
சுவடுகள் 02 | புட்டு | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 03 | தடை தாண்டிய பயணங்கள் | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 04 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 05 | ‘கள்ள மாங்காயின் சுவை தெரியுமா?’ | மா(ன்)மியம் | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 06 | ஒரு குமரை கரை சேக்கிறது | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 07 | போதி மரம் | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 08 | பூதம் கிளம்பிச்சு | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 09 | ஆயிரம் பொய் சொல்லி | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 10 | கலியாணத்தண்டு மழை | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 11 | கனவிலேம் நித்திரை | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 12 | துடக்கில்லாத கற்கண்டு | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 13 | கம்மாரிசு | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 14 | ஹர்த்தால் | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 15 | அன்னபூரணி | டாக்கடர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 16 | இதில் போனால் சங்கடம் (இ.போ.ச) | டாக்கடர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 17 | உயர்திணை | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 18 | “அரிசிப் பொதியோடும் வந்தீரோ” | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 19 | பிளவு | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 20 | நீண்ட வரிசையில்… | டாக்டர் ரி. கோபிசங்கர்
சுவடுகள் 21 | கன்னிக்கால் | டாக்டர் ரி. கோபிசங்கர்