December 7, 2023 12:22 am

சுவடுகள் 17 | உயர்திணை | டாக்டர் ரி. கோபிசங்கர்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

முதுமை காலத்தில் விடப்படும் கைவிடல்களும் கருணை இல்லாத பகட்டுகளும் மேலோங்கிய காலத்தில் முகத்தில் அறையும் வகையில் அமைந்த ஒரு வைத்தியரின் வாக்குமூலமும் ஆழ்மன ஏக்கமுமாக எழுந்த பதிவு இது.

வியாழக்கிழமை காலமை வழமை போல  முதல் நாள் அடிபட்டு, வெட்டுப்பட்டு, விழுந்து முறிஞ்ச எல்லாரையும் பாத்து முடிஞ்சு Ward ஆல வெளீல வரேக்க வாசலிலை ஒருத்தர் என்னை மறிச்சார். இவர் தான் ஏழாம் கட்டில் நோயாளியோட சொந்தக்காரர்  எண்டு நேர்ஸ் சொல்ல நானும் என்ன எண்டு  பாத்தன், இல்லை “நல்லம்மா ஏழாம் கட்டில் ,அவவுக்கு என்ன மாதிரி?, “ எண்டு கேட்டார். நான் நிலமையைச் சொன்னன். நீங்கள் யார் எண்டு என்டை கேள்விக்கு பதில் இல்லை, ஆனாலும் அவர் “பிள்ளைகள் வெளீல இருந்து கேக்கினம் என்ன மாதிரி “  எண்டு தொடர்ந்தார். ஒப்பிறேசன் செய்ய வேணும், அவவுக்கு இதயம் பலவீனமா இருக்கு, ரத்தம் காணாது, ஒழுங்கா மருந்து எடுக்காததால சீனியும் கூடவா இருக்கு ஆளும் சரியான weak உடல் தகுதி முன்னேறினாப்பிறகு தான் செய்யலாம், செய்யாட்டியும்  கஸ்டப்படுவா உத்தரிக்க விடேலாது எண்டு சொன்னன்.

அவர் போக  அடுத்ததா வந்தா ஒரு ஐம்பதை தாண்டின அக்கா, கிட்ட வர முதல் நாசியை முட்டிச்சுது perfume மணம், Excuse me எண்டு தொடங்கினா  எட்டாம் கட்டில்ல இருக்கிறது எங்கடை அம்மா தான் எண்டு விசாரிக்க  நானும் நிலமையைச் சொன்னன்.  “ஓம் டொக்டர் அம்மாவின்டை நிலமை விளங்குது, நாங்கள் மூண்டு பிள்ளைகள் எல்லாரும் வெளீல இருக்கிறம் மாறி மாறி வந்து அம்மாவைப் பாக்கிறனாங்கள், நீங்கள் முயற்சி செய்யுங்கோ மற்றது கடவுள் பாப்பார்” எண்டு கதைச்சிட்டு எங்களுக்கும் ஒரு நம்பிக்கயையும்  தந்திட்டுப் போனா. 

மூண்டு நாளா பல கேள்விகளும் சில பதில்களுமாய் போச்சுது. ஏன் பிள்ளைகள் இன்னும் வரேல்லையா எண்டு நான் திருப்பியும் கேக்க, இல்லை இப்ப வந்திட்டுப் போய் திருப்பியும் ஏதும் நடந்தா வாறது கஸ்டம் எண்டு யோசிக்கினம் அதான் எண்டு இழுத்துப்  பதில் தந்தவரை நிமிந்து பாத்திட்டு நடக்க, மீண்டும் அந்த perfume அக்கா, நாங்கள் ரத்தம் ஒழுங்கு படுத்தி இருக்கிறம் அம்மாவின்டை நிலமை முன்னேற ஒப்பிறேசனை செய்து விடுங்கோ எண்டு சொல்லீட்டு தன்டை அம்மாவின்டை  நிலமையை அறிஞ்சுகொண்டு போனா.

mbbs online counselling: எம்பிபிஎஸ் அட்மிஷனுக்கு ஆன்லைனில் கவுன்சிலிங்:  மருத்துவர் சங்கம் கிளப்பும் டவுட்! - doctors association demands to tn govt  on online counselling for mbbs ...

ஒரு கிழமையால ஓப்பிறேசன் செய்து முடிய அவர் திருப்பியும் வந்தார், இப்ப என்ன மாதிரி எண்டு கேட்ட படி. நிலமை சரியில்லை பிள்ளைகள் வந்தா நல்லம் எண்டு சொல்ல, அப்ப நான் அவையை வரச் சொல்லிறன் எண்டு சொல்லீட்டுப் போக, பக்கத்து கட்டில் அம்மாவின்டை மகள் வந்து நன்றியை பார்வையால சொல்லீட்டுப்போனா.

அதுக்குப் பிறகு மூண்டு நாளால வாட்டில கொஞ்சம் சலசலப்பு . காலமை பாக்கிற நேரம் முடிஞ்சாப்பிறகு எப்பிடியோ யாரையோ பிடிச்சு உள்ள வந்து அதுகும் கும்பலாச சிலர் வந்து , நேர்ஸை ஆயிரம் கேள்வி கேட்டு , இல்லாத வசதிகளை விமர்சிச்சு , ஏன் நீங்கள் இப்பிடி இருக்கிறீங்கள் எங்கடை ஊரில(?)எண்டால் எல்லா வசதியும் இருக்கு எண்டு புகுந்த ஊர் பெருமையை கூட்டிச் சொல்லீட்டு , இன்னும் தமிழன் முன்னேறாததுக்கு காரணங்களையும் கண்டு பிடிச்சு எடுத்து விட்டிச்சினம் . அதோட மறக்காம வந்த நினைவாக தனியா selfie யும் , குறூப்பா  gulfie உம் எடுத்திட்டுப் போச்சினம் . முகத்தில பவுடர் , உடம்பெல்லாம் கிறீம் , கையில flower bouquet வைச்சு படம் எடுத்திட்டு , எடுத்த படத்தோட “ get well soon “ எண்டு  முகப்புத்தகத்தில போட்டு ஊரெல்லாம் காட்டி 20 பெரிவிரல், 30 கும்பிடு.. கொஞ்சம் கைதட்டல் வாங்கி, யாரார் என்னென்ன போட்டது எண்டு பூராயம் எல்லாம் நோண்டத் தொடங்கிச்சினம். வந்த புதுசில மூண்டு நேரமும்  வந்தவை மூண்டாம் நாத்து எப்பிடி நிலமை எண்டு கோல் எடுத்துக் கேட்டிச்சினம் . நாங்கள் ஒரு trip போறம் ஏதும் எண்டால் இந்த நம்பருக்கு எடுத்துச் சொல்லுங்கோ எண்டு போனவை திருப்பி வரேக்கையும் ஆச்சி அப்பிடியே இருந்தா.  எட்டாம் கட்டில் கார அம்மாவை ஒவ்வொரு நாளும் ஆள் மாறி மாறி அக்காவும் தங்கச்சி மாரும் நிண்டு பாத்து, ஏதோ கோயிலில அபிசேகம் வைச்ச எண்டு ஒரு நாள் வீபூதியோட பொங்கல் பிரசாதமும் கொண்டு வந்து தந்திச்சினம்.

இவ்வவளவு நாளும் டொக்டரை காணேல்லை வசதி சரியில்லை வாங்கு சரியில்லை எண்டு சொன்னவை இப்ப டொக்டர் எவ்வளவு நாள் தாங்கும் எண்டு கேக்கத்தொடங்கிச்சினம் . நிலமை சரியில்லை எண்டு திருப்பியும் சொல்ல , ஊரில சாத்திரீயாரிட்டை ஆச்சீன்டை குறிப்போட போச்சினம். அதோட அம்மாவின்டை குறிப்போட போன அக்காவும், மற்ற ஆச்சீன்டை பிள்ளைகளும் சாத்திரி குடுத்த நம்பிக்கையில ரெண்டு கிழமை ரிக்கற்றை பின்னுக்குப் போட்டிச்சினம் . 

ஏழாம் கட்டில் காரர் அதுக்குள்ள ஓரு பள்ளிக்கூட ஒன்று கூடல், கோயில் திருவிழா, சாமத்திய வீடு, birthday party எல்லாம் முடிச்சுப் போட்டு திருப்பி ஆஸ்பத்திரிக்கு வந்திச்சினம். இப்ப என்ன மாதிரி எண்டு கேட்டவைக்கு ஆச்சீன்டை நிலமையில மாற்றம் ஒண்டும் இல்லை வீட்டை கூட்டிக்கொண்டு போங்கோ எண்டு நேர்ஸ் சொன்னா. நாங்க எப்பிடி கொண்டே வைச்சுப் பாக்கிறது இங்கயே இருக்கட்டும் நிலமை மாறினா பாக்கிறம் எண்டு போனவையைப் பிறகு கண்டபடி காணக்கிடைக்கேல்லை. 

Extend பண்ணின ரெண்டு கிழமை முடிய வந்தவை கொஞ்சம் காரசாரமாத் தொடங்கிச்சினம், நீங்கள் நிலமை சரியில்லை எண்டு எங்களை வரச்சொல்லீட்டு இப்ப என்னெண்டா எப்ப சீவன் போகும் எண்டு தெரியாது எண்டு சொல்லுறீங்கள், சாத்திரியாரும் பேக்காட்டிப் போட்டார் அவ்வுன்டை ஆயுள் ரேகை எப்பவோ முடிஞ்சு போட்டுது எண்டார் ஆனால் ஒண்டும் முடிஞ்ச பாடில்லை. எங்களுக்கு வேலை இருக்கு எத்தினை நாள் தான் நிக்கிறது ஓரு முடிவைச் சொன்னாத்தான் நாங்கள் plan பண்ணலாம் எண்டு சொல்ல, அவை என்ன பிளானை சொல்லினம்  எண்டு நேர்ஸ் மார் யோசிக்கத் தொடங்கிச்சினம். 

Maharashtra family faces social boycott for opposing virginity test | India  News,The Indian Express

இப்ப போட்டு திருப்பி செத்தவீடு, அந்திரட்டி எண்டு திருப்பித் திருப்பி வரேலாது. ஐயர் சொன்னவர் ஏதும் நடந்தாலும் ரெண்டு கிழமையிலயே எல்லாம் செய்யலாம் எண்டு ஆச்சி உயிரோட இருக்கேக்கயே அஃறினை ஆக்கிச்சினம் . அதுக்கிடேல  பக்கத்து எட்டாம் கட்டிலில இருந்தவின்டை மகள் வந்து ரிக்கற்றை வெட்டி விடுங்கோ நாங்கள் இனி வீட்டை கொண்டே வைச்சுப் பாக்கிறம் எண்டு வந்து கேட்டா. அம்மாவை மகள் கூட்டிக்கொண்டு போக ஆச்சியையும் நாங்கள் நிலமையைச்சொல்லி வீட்டை கொண்டே வைச்சு மூக்கால சாப்பாடு குடுக்கிறது எப்பிடி எண்டு விளங்கப்படுத்தி அனுப்பினம். 

ரெண்டு கிழமையால தையல் வெட்ட அம்மாவை மகள் கூட்டிக்கொண்டு வந்தா, இப்ப பரவாயில்லை கொஞ்சம் பிடிச்சுக் கொண்டு நடக்கிறா எண்டு சந்தோசப்பட்டு சொல்லீட்டுப் போனா. Ward round முடிச்சிட்டுப் பேப்பரைப் பாத்தா பேப்பரின்டை முழுப்பக்கத்தை  ஆச்சி ஆக்கிரமிச்சு இருந்தா, இரங்கல் செய்திக்கு ஐஞ்சு ஊரில இருந்து பத்துப்பேர் காசு குடுத்திருக்க வேணும், எல்லாரின்டை பேரும் நம்பரும் பெரிசா போட்டிருந்திச்சு. அஃறினை வாழ்ந்த ஆச்சி இப்ப மீண்டும் உயர்திணையா இருந்தா பேப்பரில. 

Dr. T. கோபிசங்கர்

யாழ்ப்பாணம். 

சுவடுகள் இதுவரை வெளியான தொடர்கள்

சுவடுகள் 01 | இது ஒரு சுளகு மான்மியம் | டாக்கடர் ரி கோபிசங்கர்

சுவடுகள் 02 | புட்டு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 03 | தடை தாண்டிய பயணங்கள் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 04 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 05 | ‘கள்ள மாங்காயின் சுவை தெரியுமா?’ | மா(ன்)மியம் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 06 | ஒரு குமரை கரை சேக்கிறது | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 07 | போதி மரம் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 08 | பூதம் கிளம்பிச்சு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 09 | ஆயிரம் பொய் சொல்லி | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 10 | கலியாணத்தண்டு மழை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 11 | கனவிலேம் நித்திரை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 12 | துடக்கில்லாத கற்கண்டு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 13 | கம்மாரிசு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 14 | ஹர்த்தால் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 15 | அன்னபூரணி | டாக்கடர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 16 | இதில் போனால் சங்கடம் (இ.போ.ச) | டாக்கடர் ரி. கோபிசங்கர்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்