December 6, 2023 12:16 pm

சுவடுகள் 18 | “அரிசிப் பொதியோடும் வந்தீரோ” | டாக்டர் ரி. கோபிசங்கர்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஓரிடம் தேடி அலையும் பிஞ்சுக் கால்களின் ஏக்கமாகவும் மண்போல, மலை போல பொதி சுமந்த நினைவையும் நிவாரணங்களின் கண்ணீர் ருசியையும் பேசி போரின் இருண்ட காலத்தை நினைவுபடுத்தும் பதவு.

தம்பியவை பாடிறது தான் பாடிறியள் பக்திப்பாடாப் பாடுங்கோவன் என்று ஒரு பழசு நேயர் விருப்பம் வேற கேட்டிச்சுது. வாழ்க்கையில் குண்டு போட்ட பிளேன் மட்டும் பார்தத எங்களிற்கு நிவாரணம் போட்ட பிளேன் ஒரு அதிசயம் தான்.

முன் வீட்ட நிண்ட வேப்பமரம் அம்மாளாச்சி தான் கோட்டையில இருந்து அடிக்கிற செல்லும் குண்டும் படாம காப்பாத்திறா எண்டு எங்களை அம்மா நம்ப வைச்சிருந்தா. ஆனாலும் அதையும் தாண்டி இந்த பொதிக்குண்டு ஒண்டு வீட்டு ஓட்டையும் உடைச்சிக்கொண்டு விழுந்தது. அக்கம் பக்கம் எல்லாம் குண்டு எண்டு பார்க்க bomb squad கிருபாவும் அன்பழகனும் முன்னுக்கு போய் அது வெடிக்கிற குண்டு இல்லை எண்டு உறுதிப்படுத்தினதும் விடுப்பு ladies படை வெடிக்காத குண்டுப் (நிவாரணப்) பொதியில் என்ன இருக்கு எண்டு பிரிக்கத் தொடங்கியது. Double layer சாக்குப்பை 2 அடி உயரம் 1 1/2 அடி அகலத்துடன் , உள்ள பார்த்தால் வெடிச்ச சாக்குப் பைக்குள்ள மஞ்சள் பருப்பு, கோதம்பமா, வெள்ளைப்பச்சை அரிசி இருந்ததா ஞாபகம். அறுந்து போவாங்கள் அவ்வளவு உயரத்திலிருந்து போட்டா உடையாம என்ன செய்யும் எண்டு ஆச்சி கவலைப்பட்டது ஓட்டுக்கா பருப்புக்கா எண்டு விளங்கேல்லை. எங்களிற்கு விடியல் இந்தியாமூலம் மட்டும் தான் எண்டு நம்பின சிலர் மட்டும் இந்த நிவாரணக்குண்டை நம்பிக்கையோட பார்த்தார்கள்.

கிட்டர், புலேந்தி அம்மான் போன்ற உடல் வலியோரின் வீரமும் கடைசியாக திலீபனின் மன வலிமைப் போராட்டமும் வீணே போக, மீண்டும் அடிபாடு தொடங்கியது. திலீபனின் இறப்பின் பின் பலர் இயக்கம் போவாதாக பேசிய உணர்ச்சி வசனங்கள் அம்மாக்களின் கண்ணீர் counseling ல் கரைந்து விட, வழமை போல் நாம் என்ன செய்யிறது எங்க போறது என விவாதிக்க தொடங்கினோம். உங்கள் பாதுகாப்புக்கு நீங்கள் அருகிலுள்ள பாடசாலைக்கும் கோயிலுக்கும் போங்கோ எண்டு ரேடியோவில சொன்னதாக ஆக்கள் கதைச்சினம். எல்லா இடங்களும் இல்லை இன்ன இன்ன பள்ளிக்கூடங்கள் தான் எண்டு சிலர் வெருட்ட நாங்களும் பக்கத்தில இருக்கிற யாழ் இந்துக் கல்லூரிக்குப் போறத்திக்கு ஆய்த்தப்படுத்தினம்.

இப்போதைக்கு பெடியளை மட்டும் இரவில பக்கத்தில இருக்கிற பள்ளிக்கூடத்தில் படுக்க விடுவம் எண்டு ஏகமனதாக ஏரியாவில எல்லாரும் முடிவெடுக்க, நாங்களும் யாழ் இந்துக் கல்லூரியில் தஞ்சம் புகுந்தோம். எல்லாரும் வெளிக்கிட நானும் மாட்டுத்தாள் பைக்குள்ள சாரத்தை சுத்திக்கொண்டு வெளிக்கிட, உனக்கு 14 வயசு தானே அவன் 16 எண்டு தானே சொன்னவன் எண்டு அம்மா மறிக்க அம்மம்மா உதவிக்கு வந்தா. இவன் பெரியவனிலும் பார்க்க உயரம் அவங்களிக்கு உயரம் தான் உறுத்தும் அவனையும் அனுப்பு எண்டு சொல்ல ஏதோ அமெரிக்கா விசா கிடைச்ச மாதிரி சந்தோசத்தோசம் எனக்கு.

6 மணிக்கே சாப்பிட்டிட்டு பெட்சீட்டும் சாரமும் எடுத்துக்கொண்டு படை கிளம்பியது. எங்களிற்கு அப்ப தலைவர் Rally captain, சிவசொரூபன். கடைசி நேரம் அம்மா எங்களை அனுப்ப கொஞ்சம் பிசகு பண்ண, “அன்ரி ஒண்டுக்கும் பயப்பிடாதேங்கோ நான் பார்த்துக்கொள்ளிறன்“ எண்டு அம்மாவை சமாளிக்க எல்லாரும் வெளிக்கட்டு school க்குள்ள போய் இடமும் பிடிச்சு இருந்தம். அது அப்ப இருந்த New building க்குப்பின்னால மேல flat குண்டு விழுந்தாலும் பட்டும் தெறிக்காது. Temporary யா வைரவரும் அங்க தான் இருந்தவர். நாங்கள் அவருக்கு company குடுக்க அவர் எங்களிற்கு காவல் தெய்வம். எங்களுக்கு எப்பவும் entertainment நவாஸ் என்கிற பாஸ்கரன், standup comedy, mimicry, story telling, எண்டு அவன் ஒரு All in all அழகுராஜா.

வட்டுக்கோட்டை சுப்பிரமணியத்தின்டை கதையில் இருந்து, birthday gift ஆ பலூன் கேட்ட கதை எல்லாம் இன்னும் முடிவு தெரியாம நாங்கள் இருக்கிறம்.இப்பிடி Schoolக்குப் போய் இடம்பிடிச்சுப்போட்டு பாடத்தொடங்கேக்க தான் அந்தக்குரல் தம்பியவை பக்திப்பாடாப் பாடுங்கோ எண்டு.

ஐஞ்சு நாள் போயிருப்பம். இரவில போட்டு காலமை வாறது இந்த ஐஞ்சு நாளா ஒண்டும் நடக்கேல்லை. ஆனால் ஆறாம் நாள் காலமை வீட்ட போய் மீண்டும் சாமி அறையில கொஞ்சம் படுப்பம் எண்டா, அம்மா விட்டாத்தானே கெதியெண்டு வந்து சாப்பிடு சத்தம் கிட்டக்கேக்கிது எண்டா. சரியெண்டு குசினிக்குள்ள போய் சாப்பாட்டில கை வைக்க, பெரிய சத்தம், தொடர்ந்து ஒரே புகை. ஓடிப்போய் bathroomக்குள்ள நிண்டனாங்கள். Bathroomக்க குளிக்கப் போனதிலும் பாக்க குண்டுக்கு பயத்தில போனது தான் கூட. அது தான் கன வீடுகளில வெட்டாத பங்கர்.சுத்தி வர சுவரும் மேல tank இருக்கிற படியாலும் குண்டுக்கு பாதுகாப்பு எண்டு நம்பிக்கையோட இருந்தனாங்கள். சத்தம் அடங்க வெளியில போய்ப்பார்ததா சாமி அறைக்குள்ள தான் செல் விழுந்திருக்கு. சாமிப்படத்துக்கும் வேப்ப மரத்திற்கும் மாத்திரம் no damage. சத்தம் பிலத்தும் கொஞ்சம் கிட்டவாயும் கேக்க என்ன உடைஞ்சது எண்டு பாத்து முடியமுதல் எல்லாரும் பள்ளிக்கூடத்தில் தஞ்சம் ஆனோம்.

ஆர் வந்தாலும் பரவாயில்லை நான் இந்த கால் வழங்காத ரெண்டுயும் விட்டிட்டு வர மாட்டன் எண்ட ஆச்சியையும் ஏலாத ரெண்டு தாத்தா மாரையும் மட்டும் விட்டிட்டு நாங்கள் மட்டும் பள்ளிக்கூடத்துக்கு போனம் அகதியாய். அது தான் வாழ்க்கையில் எங்கள் அந்தஸ்த்தை மாற்றி முதல் முதல் அகதி ஆக்கினது. செல் மழைக்கு முதல் முதலாகப் பள்ளிக்கூடம் வந்து கனபேர் ஒதுங்கிச்சினம்.

அங்க இருந்த பதினைஞ்சு நாளில தழுசை சாப்பாடு, தலையாட்டி, கூப்பன் card க்கு மேலதிகமாக குடும்பப் பதிவு அட்டை எண்டு புதுசா எல்லாம் பாத்திட்டு இருக்க, கொஞ்சக் கொஞ்சப் பேரா வீட்டை வர விட்டாங்கள்.

திருப்பி வீட்டை வர வெளிக்கிட்டு வந்தால் வீட்டுக்கு போற ரோட் அடையாளம் தெரியாம இருந்திச்சிது. Chain block வெட்டி தார் கிளம்பின ரோட், இறைஞ்சு போய் இருந்த empty caps, ரேட்டுக்கு குறுக்கால மண் மூட்டை, செத்து மழைக்கு உடம்பு ஊதிப் போன ஒண்டு . அது நாயா மனிசனா எண்டு கிட்டப் போய் பாக்க பயத்தில அப்பிடியே நடந்தம்.

வீட்டை போனா நிவாரணப் பொதியை எடுத்துச் சமைக்கலாம் எண்ட நம்பிக்கையோட போய்ப் பாக்க, உதவும் எண்ட போட்ட பொதி வீட்டையும் உடைச்சுதோட தண்ணி ஊறிப் போய் பாவிக்கேலாமல் இருந்திச்சுது.

டாக்டர் T. கோபிசங்கர்

யாழ்ப்பாணம். 

சுவடுகள் இதுவரை வெளியான தொடர்கள்

சுவடுகள் 01 | இது ஒரு சுளகு மான்மியம் | டாக்கடர் ரி கோபிசங்கர்

சுவடுகள் 02 | புட்டு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 03 | தடை தாண்டிய பயணங்கள் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 04 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 05 | ‘கள்ள மாங்காயின் சுவை தெரியுமா?’ | மா(ன்)மியம் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 06 | ஒரு குமரை கரை சேக்கிறது | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 07 | போதி மரம் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 08 | பூதம் கிளம்பிச்சு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 09 | ஆயிரம் பொய் சொல்லி | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 10 | கலியாணத்தண்டு மழை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 11 | கனவிலேம் நித்திரை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 12 | துடக்கில்லாத கற்கண்டு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 13 | கம்மாரிசு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 14 | ஹர்த்தால் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 15 | அன்னபூரணி | டாக்கடர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 16 | இதில் போனால் சங்கடம் (இ.போ.ச) | டாக்கடர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 17 | உயர்திணை | டாக்டர் ரி. கோபிசங்கர்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்